இளையர் அறிவியல் களஞ்சியம்/முதுகெலும்பில்லா உயிரினங்கள்
முதுகெலும்பில்லா உயிரினங்கள் : உலகில் உள்ள உயிரினங்களில் முதுகெலும்பில்லா உயிரினங்களே மிக அதிகம். சுமார் பத்து இலட்சம் உயிரினங்களில் எட்டு இலட்சத்துக்கு மேற்பட்டவை முதுகெலும்பற்றவைகளேயாகும்.
முதுகெலும்பு இல்லாத உயிரினங்களைப் பல பகுதிகளாகப் பகுத்துள்ளனர் உயிரியலார். அவற்றுள் புரோட்டோசோவா எனும் ஒரே உயிரணுவால் இயங்கும் இனம் மிக முக்கியமானதாகும். மற்ற உயிரினங்கள், செய்யும் சுவாசித்தல், உணவுண்ணல் உணவைச் சீரணித்தல், எஞ்சும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல் ஆகிய அனைத்துப் பணிகளையும் ஓரணுவுக்குள்ளாக இவை செவ்வனே செய்கின்றன. ஆனால், இத்தகைய ஓரணு உயிரினங்கள் அளவில் மிக நுண்மையானவைகளாக இருப்பதால் இவற்றை நுண்பெருக்காடி மூலமே காண இயலும். இவை நுண் உயிரினமாக இருப்பினும் இவற்றில் சிலவற்றின் மேற்பகுதி சற்று கடினத்தன்மை கொண்ட ஓடுகளால் அமையப் பெற்றவையாகும். இறந்த இந் நுண்ணுயிர்களின் தொகுதியே கடலில் கிடைக்கும் சீமைச் சுண்ணாம்பு ஆகும். புரோட்டோசோவா உயிரினங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டாய் பிரிந்து தனித்தனி உயிர்களாகப் பெருக்கமடைகின்றன. புரோட்டோசோவா உயிரினங்களில் முப்பதினாயிரம் வகைகள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள்.
முதுகெலும்பில்லா உயிரினங்களில் மற்றோர் வகை பவளப் பூச்சிகள், கடல் சாமந்தி,
ஜெல்லிமீன் போன்றவைகளாகும். நாடாப் புழு, ஈரல் புழு போன்றவை தட்டைப்புழுக்கள் எனும் வேறோர் வகையைச் சார்ந்தனவாகும். கொக்கிப்புழு, நாக்குப்பூச்சி, நரம்புச் சிலந்திப் புழு போன்றவை உருண்டைப்புழு எனும் மற்றோர் வகையைச் சார்ந்தவையாகும். வளையங்களாலான உடலமைப்பைக் கொண்ட மண்புழு, அட்டை போன்றவை வளையப் புழுக்கள் எனும் வகையைச் சார்ந்தனவாகும். மற்றும் கிளிஞ்சல், நத்தை போன்றவை கண்ணாம்புப் பொருளால் மூடப்பட்ட மெல்லுடலிகளாகும். அக்டோபஸ் எனும் எண்காலிகள் போன்றவையும் இத்தகையனவே. நட்சத்திர மீன், கடல் வெள்ளரி போன்ற கடல்வாழ் உயிரினங்களும் முதுகெலும்பில்லாதவைகளேயாகும். முதுகெலும்பில்லாத உயிரினங்களில் அளவால் மிகப் பெரியவைகளாக கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்டு போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
முதுகெலும்பில்லா உயிரினங்களில் நன்மை தருவனவும் தீமையைப் பயப்பனவும் உண்டு. பட்டுப்பூச்சி, தேனீ, அரக்குப் பூச்சி போன்றவை நன்மை செய்வனவாகும். மற்றவை ஏதேனும் ஒரு வகையில் மனிதருக்குத் தீங்கிழைப்பவைகளாகவே உள்ளன.