இளையர் அறிவியல் களஞ்சியம்/மைக்ராஸ்கோப்

விக்கிமூலம் இலிருந்து

மைக்ராஸ்கோப் : இக் கருவி தமிழில் 'நுண் பெருக்கி’ என அழைக்கப்படுகிறது. நம் பார்வைக்குப் புலனாகாத மிக நுட்பமான பொருட்களைப் பலமடங்குப் பெரிதாகப் பெருக்கிக் காட்டும் கருவியாகும் இது. இவ்வாறு பல மடங்குப் பெரிதாகப் பெருக்கிக் காட்டும் இக்கருவியின் கண்ணாடி 'நுண்பெருக்காடி’ என அழைக்கப்படுகிறது.

நமக்குப் பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. இந் நோய்களுக்கெல்லாம் மூல காரணமாக அமைவது நோய்க் கிருமிகளாகும். இக் கிருமிகள் பலவும் நம் கண்னுக்குப் புலனாகாத அளவுக்கு மிக நுண்ணிய நுண்மங்களாகும். இவற்றைப் பல மடங்குப் பெரிதாகப் பெருக்கிக் காட்டும் கருவிகள் மூலமே இவற்றைக் காண இயலும். மைக்ராஸ்கோப் கருவி மூலம் இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கும் போது நோய்க்கிருமிகள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைத் தெளிவாகக் காண முடியும். நோய்க் கிருமிகளில் பல வகைகள்

நுண்பெருக்கிக் கருவி

உண்டு என முன்பே கூறப்பட்டுள்ளது. அதில் ஒருவகை 'பாக்டீரியா’ எனும் நோய் நுண்மங்களாகும். பாக்டீரியாக்களைப் பற்றி ஆராயும் இயல் 'பாக்டீரியாவியல்’ எனப்படும். இத்துறை இன்று வெகுவாக வளர்ந்துள்ள தென்றால் அதற்கு அடிப்படையாய் அமைந்திருப்பது மைக்ராஸ்கோப் உருப்பெருக்கிக் கருவியேயாகும். தாவரங்களின் வேர்ப்பகுதி, இலை போன்றவற்றின் நுண்ணிய பகுதிகளின் அமைப்பை அறிந்து கொள்ளவும் இக் கருவியே பெரிதும் பயன்படுகிறது.

அறிவியலின் அனைத்துப் பிரிவுகளின் ஆய்வுக்கும் மைக்ராஸ்கோப் மையக் கருவியாக அமைந்து வருகிறது எனலாம். இக் கருவி இரு வகைகளில் அமைந்துள்ளது. முதல் வகை ஒரே ஒரு குவிலென்சைக் கொண்டு அமைந்துள்ள சாதாரண மைக்ராஸ்கோப் ஆகும். இதன் மூலம் பார்வைக் குறைபாடுடையவர்கள் சிறிய எழுத்துக்களை பெரிதாக்கிப் படிக்கவும் மெல்லிய கைரேகைகளை சற்றுப் பெரிதாக்கிக் காணவும் இயலுகிறது. கடிகாரம் பழுது பார்ப்போர் கடிகாரத்தின் நுண்ணிய பாகங்களைப் பெரிதாக்கிக் காண்பதன் மூலம் எளிதாகப் பழுது பார்க்க முடிகிறது. ஆனால், சாதாரண மைக்ராஸ்கோப் மூலம் பொருட்களை ஒரளவுக்கே பெரிதாக்கிக் காண முடியும்.

கூட்டு மைக்ராஸ்கோப் எனும் கருவியே அதிக அளவில் ஆய்வுக்கும் பயன்படுகிறது. இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது கருவியில் அமைந்துள்ள குழாயின் இரு முனைகளில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் மேற்பகுதியிலுள்ளது கண்ணுக்கு அருகாக இருக்கும். மற்றவை ஆய்வுப் பொருளுக்கு அருகாக இருக்கும். ஆய்வுப் பொருளைத் தெளிவாகக் காணும் வகையில் லென்ஸ்கள் பொருத்தப்பட்ட குழாயை மேலும் கீழுமாகவோ அன்றி பக்கவாட்டிலோ எளிதாகத் திருப்பக்கூடிய அமைப்போடு இருக்கும். மேலும், பார்க்கும் ஆய்வுப் பொருள்மீது ஒளியை பிரதிபலிக்கக் கூடிய மற்றொரு ஆடி கீழே அமைந்திருக்கும். இந்தக்கூட்டு மைக்ராஸ்கோப் கருவி ஆய்வுப் பொருளைச் சுமார் 2,500 மடங்குப் பெரிதாக்கிக் காட்ட வல்லதாகும். இத்தகைய நுண் பெருக்கிக் கருவி முதன் முதலில் 1590-ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது. அதன் பின் இக்கருவிபல்வேறு மாற்ற திருத்தங்களுக்கு உட்பட்டு இன்றைய நவீன வடிவைப் பெற்றுள்ளது.

மைக்ராஸ்கோப் கருவியால் கூடக் காண முடியாத மிக மிக நுண்ணிய பொருளைப் பெரிதாக்கிக் காணவும் ஆயவும் மின்னணு நுண்பெருக்கிக் கருவியாகிய 'எலெக்ட்ரான் மைக்ராஸ்கோப்' கருவி தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நுண் பொருளை சுமார் இரண்டு இலட்சம் மடங்குப் பெரிதாக்கிக் காணமுடியும். இக்கருவியில் மைக்ராஸ்கோப்பில் உள்ளதுபோல் லென்ஸ்கள் ஏதும் இல்லை. மின்சாரக் காந்த மண்டலங்கள் இதில் லென்ஸ்கள் ஆற்றக் கூடிய பணியைச் செய்கின்றன. மின்னணுக் கற்றைகள் ஆய்வுப் பொருளை ஒளிரும் திரையில் வடிவு பெறச் செய்கின்றன. இவ்வடிவை ஒளிப்படமாகவும் எடுக்கவியலும்.

கூட்டு மைக்ராஸ்கோப் கருவியில் இரு கண்களாலும் பார்க்கும் வகையில் இரு கண் வில்லைகளும் இரு பொருள் வில்லைகளும் இருக்கும். இஃது, 'இணைப்பார்வை மைக்ராஸ்கோப்’ என்று அழைக்கப்படுகிறது.

இதேபோன்று உலோகத் தொழிலிலும் உலோகக் கலவைக் கூறுகளைக் கண்டறிய தனி மைக்ராஸ்கோப் உண்டு. இது உலோக மைக்ராஸ்கேரப் எனப்படுகிறது.