இளையர் அறிவியல் களஞ்சியம்/மோட்டார் சைக்கிள்
மோட்டார் சைக்கிள் : இது காலால் மிதித்துச் செலுத்தும் சாதாரண மிதிவண்டியைவிட பன்மடங்கு வேகமாக மோட்டார் விசையினால் இயங்கும் வண்ணம் அமைக்கப்பட்ட வாகனமாகும். இதில் முன் பின்னாக இரு சக்கரங்கள் உண்டு. இவற்றிற்கிடையே சிறு மோட்டார் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் பெட்ரோலை எரி பொருளாகக் கொண்டு விசையுடன் இயங்கும். என்ஜினுக்கு நேர் மேலாக ஒட்டுபவரின் இருக்கை உண்டு.
அதற்கு அடுத்து மற்றொருவர் உட்காருவதற்கும் இணைப்பு இருக்கை இருக்கும். மேலும் ஓரிருவர் அதிகமாக அதில் பயணம் செய்ய விரும்பினால் தனிச் சக்கரத்தோடு கூடிய இருக்கைப் பெட்டியை பக்கவாட்டில் இணைத்துக் கொள்வர்.
இதன் என்ஜினில் காற்றால் குளிரூட்டும் ஒன்றுமுதல் நான்குவரையில் சிலிண்டர் என்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். சவாரியின்போது அதிர்ச்சி உண்டாகாவண்ணம் சுருள்வில் (Spring), கவை (Fork) போன்றவைகளால் அமைக்கப்பட்டுள்ளது. என்ஜினோடு அமைந்துள்ள சங்கிலி (Chain) பற்சக்கரத்தோடு இணைந்து சக்கரங்களைச் சுழலச் செய்கிறது. சங்கிலியும் பற்சக்கரமும் தூசி அடையாமல் இருக்கும் பொருட்டு தகரப் பெட்டியால் மூடப்பட்டுள்ளது.
ஆஸ்டின் என்பவரால் 1868இல் முதன் முதலில் நீராவியால் இயங்கும் மோட்டாரைக் கொண்டு மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டது. இதைக் கையாள்வதிலும் இயக்குவதிலும் பல சிரமங்கள் ஏற்பட்டன. அதன் பின் இன்றைய வடிவமைப்போடு கூடிய மோட்டார் சைக்கிள் 1900இல் தான் உருவாக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மாற்றத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இன்று பல்வேறு வடிவினவாக உருப்பெற்றுள்ளன. இன்றைய மோட்டார்சைக்கிள் வசதி, வலிமை, வேகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையினவாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோலைக் கொண்டு 50 மைல் தூரத்திற்கு மேல் ஓடக் கூடிய மோட்டார் சைக்கிள்களும் உருவாக்கப் பட்டுள்ளன. அவைகளில் 100 மைல் வேகத்திற்குமேல் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிள்களும் உண்டு.
மோட்டார் சைக்கிளைவிட எளிய வாகனமாக அமைந்திருப்பது ஸ்கூட்டர் வாகனமாகும். இஃது இரண்டாம் உலகப் போரின் போது டி'அசானியே எனும் இத்தாலிய பொறியியல் வல்லுநரால் உருவாக்கப்பட்டது. குறைந்த அளவு பெட்ரோலில் அதிக தூரம் செல்லவல்லதாகும், பெண்கள் இயக்குவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. எனினும் எளிமை, சிக்கனம் கருதி ஆண்களும் இவ்வாகனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வகை வாகனங்கள் அனைத்தும் இன்று இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.