இளையர் அறிவியல் களஞ்சியம்/ரேடியம்
ரேடியம் : மருத்துவத்துறைக்குப் பயன்பட்டுவரும் உலோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ரேடியம் எனும் உலோகமாகும். இவ்வுலோகத்திற்குத் கதிரியக்கத் தன்மை உண்டு என்பதை 1898ஆம் ஆண்டில் கண்டுபிடித்தவர்கள் கியூரி தம்பதியினராவர்.
ரேடியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. நூற்றுக்கு மேற்பட்ட உலோகங்களில் ரேடியம் கலந்துள்ளது. குறிப்பாக யுரேனியம் அடங்கிய தாதுப் பொருட்களிலிருந்து ரேடியம் பிரித்தெடுக்கப்படுகிறது. அவற்றுள் யுரேனியத் தாதுக்கள், கார்னோடைட், டார்பனைட் போன்றவை முக்கிய யுரேனியப் பொருட்களாகும். ரேடியத்தைப் பிரித்தெடுப்பது மிகக் கடினமாகும். அளவும் குறைவேயாகும். ஒரு டன் தாதுவிலிருந்து அதிகபட்சமாக 218.மி./கிராம் ரேடியம் மட்டுமே பிரித்தெடுக்க முடியும். பிரித்தெடுக்கப்பட்ட ரேடியம் வெள்ளி போன்று பளபளப்பாகத் தோற்றமளிக்கும். இதனை 7000 வெப்பநிலையால் மட்டுமே உருக்கவியலும்.
ரேடியத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் உடலின் சதையையும் எலும்பையும் எளிதாக ஊடுருவி தீங்கு விளைவிக்க வல்லதாகும். எனவே, கதிரியக்கத் தன்மை வாய்ந்த ரேடியத்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். இல்லையெனில் உடலுக்கு மிகுந்த ஊறு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இதனாலேயே இதை எப்போதும் கண்ணாடிக்குழாய்களில் அடைத்து கனமான ஈயப் பெட்டிகளுக்குள் வைத்துப் பாதுகாத்துப் பயன்படுத்துகிறார்கள்.
பிற துறைகளைவிட மருத்துவத்துறைக்கே ரேடியம் பெரும் பயன் அளிக்கிறது. புற்று நோய் சிகிச்சைக்கு ரேடியம் தலைசிறந்த பொருளாகப் பயன்பட்டு வருகிறது. வண்ணப் பூச்சுகளுக்கு ஓரளவு பயன்படுவதோடு வேதியியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படக் கூடியதாக உள்ளது.