இளையர் அறிவியல் களஞ்சியம்/ரெயில்கள்

விக்கிமூலம் இலிருந்து

ரெயில்கள் : தரை வழிப்போக்குவரத்தில் பிற வாகனங்களைக் காட்டிலும் மிக விரைந்து செல்லவல்லவை ரெயில்களாகும். இதைத் தமிழில் 'தொடர் வண்டி’ என்றும் 'தொடர் இருப்பூர்தி' என்றும் கூறுவர்.

ஸ்டீவன்சன் உருவாக்கிய முதல் ரயில் என்ஜின்

ரெயில்கள். கண்டுபிடிப்பதற்கு முன்பே ரெயில் பாதைகளை அமைத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். முதன்முதலில் அமைக்கப்பட்ட ரெயில் பாதைத் தண்டவாளங்கள் மரத்தாலானவை. நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரிகளை மரத்தண்டவாளத்தில் நகரும் பெட்டிகளில் நிரப்பி குதிரையைக் கொண்டு இழுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் பழக்கத்திலிருந்து மரத்தண்டவாளங்களுக்குப் பதிலாக இரும்புத் தண்டவாளங்கள் 1788ஆம் ஆண்டு வாக்கில் அமைக்கப்பட்டன.

முதன்முதலில் தண்டவாளத்தில் ஓடக் கூடிய நீராவி ரெயில் என்ஜினை ரிச்சர்ட் டிரெவிதிக் என்பவர் கண்டறிந்து வடிவமைத்தார். 1804இல் கண்டுபிடிக்கப்பட்ட இதில் பல குறைபாடுகள் இருந்தன. இக்குறைபாடுகளை நீக்கி, தண்டவாளத்தில் ஓடக்கூடிய ரெயில் என்ஜினை ஸ்டீவன்சன் எனும் ஆங்கிலேயர் உருவாக்கினார். இதைக் கொண்டு நாற்பது கி.மீ. தூரம்வரை அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டினார். 1825ஆம் ஆண்டில் ஸ்டீவன்சன் உருவாக்கிய வடிவமைப்பின் அடிப்படையிலேயே இன்னும் நீராவி என்ஜின்கள் உள்ளன. ரெயில்களில் ஏற்றப்படும் பொருட்கள் மற்றும் மனிதர்களின் கன அளவுக்கேற்ப என்ஜின்களின் சக்கரங்கள் பலவகைகளில் உருவாக்கப்பட்டன.

நாளடைவில் நீராவிக்குப் பதில் மின்சக்தியைக் கொண்டு ஓடும் என்ஜின்கள் உருவாக்கப்பட்டன. இதனால் பல வசதிகள் ஏற்பட்டன.

முதலாவது இதில் கொதிகலன் இல்லை. நிலக்கரியோ நீராவி உற்பத்தி செய்ய நீரோ தேவையில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக புகையில்லை. மேலும், நீராவி உருவாகும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. மின்சார ரெயில்கள் நினைத்த மாத்திரத்தில் புறப்படவோ நிற்கவோ முடியும். சமதளத் தரைப் பகுதியில் மட்டுமல்லாது மலைமீது ஏறவும் தரையடி ரெயில்பாதையில் இலகுவாகச் செல்லவும் ஏற்றதாக அமைந்தது. மின்சார ரெயில் என்ஜின் நீராவி என்ஜினை விட அழகிய தோற்றமுடையதாகும்.

மின்சார ரெயில் என்ஜின் 1889ஆம் ஆண்டில் முதன்முதல் வடிவமைக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள எடின்பரோவுக்கும் கிளாஸ்கோவுக்குமிடையே ஒடத் தொடங்கியது. இன்று உலகின் பல பகுதிகளிலும் மின்சார ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அதன்பின்னர் 1925-வாக்கில் டீசல் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு உள்ளெரி என்ஜின் மூலம் மின்சாரத்தை உண்டாக்கி இயக்கும் டீசல் என்ஜின்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் இன்று இத்தகைய ரெயில்களே அதிக அளவில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஆசியாக் கண்டத்திலேயே முதன் முதலில் 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 16இல் பம்பாயிலிருந்து 82 கி.மீ. தூரத்திலுள்ள தாணே எனும் பகுதிக்கு ரெயில் பாதை அமைத்து ரெயில்கள் ஓடத் தொடங்கி, பின்னர் படிப்படியாக நாடெங்கும் ரெயில்பாதைகளை அமைத்து ரெயில்கள் ஓடலாயின. தொடக்கத்தில் ரெயில்கள் ஆங்கிலக் கம்பெனிகளால் ஓட்டப்பட்டன. விடுதலைக்குப் பின் ரெயில்வே துறை அரசுத் துறையாக ஆகிவிட்டது.

நகரங்களில் தரை வழிப் போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

நவீன ரயில்வண்டி

அதைச் சமாளிக்கப் பல நாடுகளில் பூமிக்கு அடியில் தரையடி ரெயில் பாதைகள்

தயராகவுள்ள புதிய ரெயில் பெட்டிகள்

அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அத்தகைய தரையடி ரெயில்பாதை கல்கத்தா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. சில நகரங்களில் தரைக்கு மேலாக மேம்பால ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய மேம்பால ரெயில்பாதை சென்னை நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

சமதளப் பாதையில் செல்லும் ரெயில்களைப் போன்றே மலைப் பாதையில் செல்லும் ரெயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ள. ஆனால், மலை ரெயில் பாதை தரை ரெயில் பாதையைவிட சில விஷயங்களில் மாறுபட்டிருக்கும். முதலாவது மலையில் உயரமாக ஏறும்போது சக்கரங்கள் வழுக்கி விடாமல் இருக்க தண்டவாளங் களுக்கு இடையே பற்களோடு கூடிய மூன்றாவது தண்டவாளம் நடுவாக அமைக்கப் படுகிறது. மலை ரெயில்கள் கூடியவரை பளு குறைந்தனவாக அமைக்கப்படுகின்றன. பளு குறைந்த என்ஜினோடு ஒரு சில பெட்டிகளே இணைக்கப் படுகின்றன. மலை ரெயில் என்ஜின்கள் பின்புறமிருந்து இணைப்புப்பெட்டிகளை மேல் நோக்கித் தள்ளிச் செல்லும்,

இந்தியாவில் சித்தரஞ்சன் ரெயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் எல்லாவகை என்ஜின்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. காசியில் உள்ள ரெயில் என்ஜின் தொழிற்சாலையில் டீசல் மின்சார என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சென்னையில் உள்ள ரெயில் பெட்டித் தொழிற் சாலை எல்லாவகை ரெயில் பெட்டிகளையும் தயாரிக்கின்றது.