இளையர் அறிவியல் களஞ்சியம்/வானிலையியல்
வானிலையியல் : நாம் நாள் தோறும் தொலைக் காட்சியிலும் வானொலியிலும் அன்றைய வெப்ப நிலையின் அளவையும் மழை பெய்திருந்தால் மழையின் அளவையும் வானிலைச் செய்தியாகக் கூறுவதைக் கேட்டு வருகிறோம். அன்றைய வெப்ப, மழையளவோடு அடுத்த 48 மணி நேரத்தில் வானிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் முன்னறிவிப்புச் செய்வதையும் கேட்கிறோம். காற்று மண்டலத்தில் நிகழும் வானிலை மாற்றங்களைத் ஆய்ந்து கூறுவதே வானிலையியல் ஆகும்.
பண்டையக் காலத்தில் வானை அண்ணார்ந்து பார்த்து, அனுபவ அறிவின் அடிப்படையில் யூகமாக அனுமானிப்பதே வானிலை அறியும் போக்காக இருந்தது. பதினேழாம் நூற்றாண்டில் வெப்பமானி, பாரமானிக் கருவிகள் கண்டறியப்பட்ட பின்னரே வானிலையியல் முறையான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைய முடிந்தது.
வானிலைகளை முன்னதாக அறிவதன் மூலம், வெயில், மழை, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து தப்பும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட முடிகிறது. இதனால் பேரிடரும் பேரிழப்பும் தவிர்க்கப்படுகிறது.
இக்காலத்தில் ஏற்பட்டுள்ள அறிவியலின் விரைவான வளர்ச்சியின் விளைவாக வெயிலின் தகிப்பை துல்லியமாக அளந்தறிய கருவிகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் பெயர் 'வெயில்மானி' என்பதாகும். இதன் மூலம் ஒரு நாளின் குறைந்த அளவு வெப்பத்தையும்
அதிக அளவு வெப்பத்தையும் துல்லியமாக அளந்தறிய முடியும். இந்த அளவு 'செல்சியஸ்’ என்ற அளவால் குறிக்கப்படுகிறது. காற்றின் வேகம் "காற்று வேகமானி’ என்ற கருவியால் அளக்கப்படுகிறது. காற்றில் எந்த அளவுக்கு ஈரப்பதன் உள்ளது என்பதை அளந்தறிய "ஈரப்பதன் மானி’ என்ற கருவி பயன்படுகிறது. மழையின்போது எந்த
அளவு மழை பெய்துள்ளது என்பதை ‘மழை மானி’ எனும் கருவியால் அளக்கப்படுகிறது, அதே போன்று பனிப்பிரதேசங்களில் உறை பனியின் அளவைக் கண்டறிய உறைபனி மானி’ எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட கருவிகளைக் கொண்ட வானிலை ஆராய்ச்சி மையங்கள் முக்கிய நகரங்களிலும் உயர்ந்த மலை உச்சிகளிலும் நடுக்கடலிலும் நிறுத்தப்பட்டுள்ளகப்பல்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சேகரிக்கப்படும் வானிலைத் தகவல்கள் அன்றாடம் செய்தி பரப்புச் சாதனங்கள் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன.
இன்று புயல், பெருமழைக்கான அறிகுறிகளை செயற்கைக்கோள் வாயிலாகப் பெறப்படும் படங்கள் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் புயல், கடல், கொந்தளிப்புகளை முன்னரே நன்கு தெரிந்து முன்னெச்சரிக்கையுடன் மக்களும் விமானம் மற்றும் கப்பல் துறையினரும் நடந்து கொள்ள இயல்கின்றது. பனிப்பகுதிகளாகிய துருவப் பிரதேசங்களில் தானியங்கி வானிலை நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் தானாகவே இயங்கித் தகவல்களைத் திரட்டித் தந்து உதவுகின்றன. உலக நாடுகளின் கூட்டமைப்பான உலக வானிலை இயல் அமைப்பு இத்துறையில் உலகளாவிய முறையில் வானிலைத் தகவல்களைத் திரட்டித் தருகின்றது.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும் நிலத்தில் விதைப்பு அல்லது அறுவடை செய்யும் உழவர்களும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, எதிர்பாராத பெருஞ்சேதத்தைத் தவிர்க்க முடிகின்றது. புயற் சின்னம் காணப்படின் அதன் தன்மைக்கேற்ற எண்களோடு கூடிய எச்சரிக்கை கொடி துறைமுகங்களில் ஏற்றப்படும். இவ்வாறு வானிலையியல் மக்களின் அன்றாட வாழ்க்கைப் போக்கோடு இணைந்து செயலாற்றும் இன்றியமையாத துறையாக இன்று விளங்கி வருகிறது.