இளையர் அறிவியல் களஞ்சியம்/வார்ப்பு வேலை

விக்கிமூலம் இலிருந்து

வார்ப்பு வேலை : இஃது ஆங்கிலத்தில் 'கேஸ்டிங்' என்று கூறப்படும் 'வார்ப்பு’ தொழில் இன்றைய தொழில் துறையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. நமக்குத் தேவையான வடிவிலும் அளவுகளிலும் உலோகத்தை உருக்கி, அதற்கென வடிவமைக்கப்பட்ட அச்சில் வார்த்து தேவையான பொருளைப் பெறுவதே வார்ப்பு ஆகும். வார்ப்புத் தொழில் பண்டு தொட்டே நம் நாட்டிலும் சீனா, எகிப்து, கிரேக்க, ரோம நாடுகளிலும் இருந்துவந்துள்ளது. பன்னெடுங்காலமாக வார்ப்புத் தொழில் ஒரு அருங்கலையாவே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இன்று வார்ப்படத் தொழில் மிகச் சிறந்த தொழில்நுட்பத் திறத்துடன் நவீன கருவிகளைக் கொண்டு கையாளப்பட்டு வருகிறது.

முதலில் எந்த வடிவில் பொருளை வார்த்தெடுக்க விரும்புகிறோமோ அதற்கேற்ற மாதிரி வடிவை வடிவமைத்துக்கொள்ளவேண்டும். இஃது தேக்கு மரத்திலோ உலோகத்திலோ அமையலாம். இது இரு சமபகுதிகளாக இருக்கும். இதைக் கொண்டு வார்ப்புப் பொருளைத் தயாரிக்கும்போது பொருளின் மேட்டுப்பகுதி வார்ப்பில் பள்ளமாகவும், பள்ளமாக உள்ள பகுதி வார்ப்பில் மேடாகவும் அமையும். இவ்வார்ப்பு ஒரு தனிவகை மணலைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

வார்ப்புத் தொழிலுக்கு நன்கு சலித்தெடுக்கப்பட்ட தனிவகை மணல் இன்றியமையாததாகும். இம்மணலின் துணை கொண்டே எத்தகைய வார்ப்பும் உருவாக்கப்படுகிறது. இத்தனிவகை மணல் சில இடங்களில் இயற்கையாகவே கிடைக்கிறது. மணலின் தன்மையைப் பொறுத்தே வார்ப்புப் பொருளின் தன்மையும் தரமும் அமைய முடியும். இம்மணல் பச்சை மணல், உலர் மணல், குறு மணல் என மூவகையினவாக உள்ளன.

இனி, எவ்வாறு வார்ப்பு வேலை செய்யப்படுகிறது என்பதைக் கவனிப்போம். வார்ப்பு வேலைப் பெட்டி 'வார்ப்பு இரும்பு’ (Cast iron) எனும் தனிவகை உலோகத்தைக் கொண்டு இரண்டு பகுதிகளாகச் செய்யப்படும். இது சதுர வடிவிலோ அன்றி செவ்வகமாகவோ இருக்கும். முன்பே உருவாக்கப்பட்டுள்ள மாதிரி வடிவின் ஒரு பகுதியை சரியாக வைத்து அதைச் சுற்றிலும் தனிவகை மணலைப் போட்டு நன்றாக கெட்டிப்படுத்துவர். அதன்பின் முன்பு பதிக்கப்பட்ட மாதிரி வடிவை வெளியே மெதுவாக எடுத்து விடுவர். இப்போது கெட்டிப்படுத்தப்பட்ட மணலின் உட்பகுதி மாதிரி வடிவினையுடையதாகும். மற்றொரு வார்ப்புப் பெட்டியும் மற்றொரு வடிவைக் கொண்டு இதேபோன்று செய்யப்படும். பின்னர், பெட்டியின் இரு பகுதிகளையும் ஒன்றாக இணைப்பர். நன்கு மூடப்பட்ட அப்பெட்டியினுள் ஒரு துளை வழியே உருக்கிய உலோகக் குழம்பை ஊற்றுவர். மாதிரி வடிவப் பகுதி முன்பு அடைத்துக் கொண்டிருந்த பகுதி முழுவதும் ஓடி நிரம்பும். வார்ப்புப் பெட்டியில் உள்ள மற்றொரு துளை வழியாக காற்றும் வாயு வடிவிலான பிற அசுத் தங்களும் வெளியேறி விடும். நன்கு குளிர்ந்த பின் வார்ப்புப் பெட்டியைத் திறந்தால் அங்கு மாதிரி வடிவிலுள்ள உருவில் வார்ப்புத் தயாராக இருக்கும்.

உருகிய உலோகக் குழம்பை வார்ப்புச் சட்டகத்தில் ஊற்றுதல்

உருக்கிய உலோகம் ஊற்றப்பட்ட துளை வாயிலிலும் அசுத்தக் காற்று வெளியேறிய துணைப் பகுதியிலும் பிற பகுதிகளிலும் உள்ள தேவையற்ற பிசிறுகளை செதுக்கி நீக்கிவிடவேண்டும். பின், அரத்தால் அல்லது உப்புக் காகிதம்,மெருகுத் தாள் போன்றவற்றால் தேய்த்து மெருகேற்றுவர்.

உட்கூடான வார்ப்புகளைச் செய்ய வேறு ஒரு முறை கையாளப்படுகிறது. உட்கூடான ஒரு உருளை வடிவ வார்ப்பை உருவாக்க வேண்டுமெனில் உட்கூட்டு வடிவிலமைந்த உருகிய உலோகக் குழம்பை ஊற்றி விரைந்து சுழலச் செய்வர். அப்போது உருகிய உலோகம் உட்கவரில் படிந்து அழுந்தப் பதிந்துவிடும். குளிர்ந்த பின் உருளை வார்ப்பைப் பெற முடியும். இம்முறைக்கு 'விளக்கு வார்ப்பு' (Centrifugal) என்று பெயர், இதற்கான வார்ப்புருவை எளிதில் உருகாப் பொருளால் (Refractory Material) உருவாக்கப்படுகிறது.

மெழுகைப் பயன்படுத்தி வார்ப்புச் செய்வதும் உண்டு. மிக நுட்பமான வார்ப்புருக்களை உருவாக்க மெழுகு முறை பயன்படுகிறது. மெழுகு வடிவமைப்பின் மீது ஒரு வகைக் களிமண்ணை நன்கு காயும்படி செய்வர். பின்பு, அதனைச் சூடாக்குவர். வெப்பத்தின் காரணமாக உள்ளிருக்கும் மெழுகு உருகி துளை வழியே

வார்ப்புப் பெட்டி
உலோகக் குண்டு ஒன்று வார்க்கப்படுகிறது

வெளியேறி விடும். பிறகு, அதே துவாரத்தின் வழியாக உருகிய உலோகக் குழம்பை ஊற்றி நிரப்புவர். பின், நன்கு குளிர்ந்தபின் களிமண் வார்ப்பை உடைத்து, உள்ளேயுள்ள கெட்டிப்பட்ட உலோக வார்ப்பை எடுப்பர். மிக நுண்மையான சிலைகளும் வேலைப்பாடு மிக்க குத்துவிளக்குகளும் இம்முறையிலேயே வார்த்தெடுக்கப்படுகின்றன. விமானம் போன்றவற்றிற்கான நுட்பமான உறுப்புகளையும் இவ்வகையிலேயே வார்த்தெடுக்கின்றனர்.

வார்ப்பு வேலைகளுக்கு இரும்பு மட்டுமல்லாது. எஃகு, செம்பு, அலுமினியம், வெண்கலம், பித்தளை, தங்கம், வெள்ளி, மக்னீசியம் போன்ற பல்வேறு வகையான உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளை ஐம்பொன் போன்ற பலவகை உலோகக் கலவைகளும் சிலை போன்றவற்றை வார்க்கப் பயன் படுத்தப்படுவதுண்டு.