இளையர் அறிவியல் களஞ்சியம்/வால் நட்சத்திரம்

விக்கிமூலம் இலிருந்து

வால் நட்சத்திரம் : இஃது ஆங்கிலத்தில் 'காமெட்' (Comet) என்று அழைக்கப்படுகிறது. நம் நாட்டில் இதற்கு 'தூமகேது' என்ற வேறொரு பெயரைப் பெற்றிருப்பினும் உண்மையில் இது நட்சத்திரமல்ல. சூரியக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவகை ஒளிரும் பொருளேயாகும். பூமி சூரியனைச் சுற்றி வருவது போன்றே வால் நட்சத்திரங்களும் கதிரவனையே சுற்றி வருகின்றன. வால் நட்சத்திரங்கள் பலவாயினும் அவற்றில் ஒரு சில மட்டுமே நம் கண்களுக்கு எப்போதாவது புலப்படும். தொலைநோக்கி மூலம் பல வால் நட்சத்திரங்களைக் காண முடியும்.

வால்நட்சத்திரங்கள் சூரியனை நெருங்கும்போது கதிரவனிடமிருந்து வெளிப்படும்அழுத்தமான ஒளிர் கதிர்கள் வால் நட்சத்திரங்களின் மீது முழுமையாகப் படுகின்றன. அப்போது வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியில் உள்ள வாயுவும் பிற துகள்களும் எதிர்ப்புறத்தில் விரைந்து அழுத்தம் மிக்க சூரியக் கதிர்களால் தள்ளப்படுகின்றன. இவையே வால் நட்சத்திரத்தின் வால் பகுதியாகும். இவ்வாலின் நீளம் ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கி.மீ. தூரம்வரை நீண்டிருக்கும். ஒரு சிலவற்றின் வால் பகுதி 16 கோடி கி.மீ. தூரம் வரை இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

இந்த வால்நட்சத்திரங்கள் கதிரவனை நெருங்கும்போது பேரொளி பெறுவதால் நம் கண்களுக்குப் பளிச்சென தெரிகின்றன. இவ்வாறு காணப்படும் வால் நட்சத்திரங்களை முதலில் யாரெல்லாம் கண்டறிந்து கூறினார்களோ அந்த விஞ்ஞானிகளின் பெயராலேயே அவை அழைக்கப்படுகின்றன. ஹாலி என்பவரால் முதன்முதலில் கண்டறியப்பட்ட வால் நட்சத்திரம் 'ஹாலி வால் நட்சத்திரம்’ என அழைக்கப்படுகிறது. இது முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு 1986ஆம் ஆண்டில் மீண்டும் தோன்றியது. என்கே என்ற வால்நட்சத்திரம் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறையே தோன்றுகிறது. சில வால் நட்சத்திரங்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு ஒரு முறை தோற்றம் தரும். அத்தகைய வால் நட்சத்திரங்களுள் ஒன்றான கொஹொட்டெக் வால்நட்சத்திரம் 1974ஆம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் தோற்றமளித்தது. 1957இல் ரோலண்ட் என்ற வால் நட்சத்திரம் வெளிப்பட்டது.

'கோமெட் ஷு மேக்கர் லெவி' என்று பெயரிடப்பட்ட வால் நட்சத்திரம் 21 துண்டுகளாகச் சிதறி வியாழன் கிரகத்தில் 1994 ஜூலை 16 அன்று மோதி மறைந்தது. மணிக்கு பதினெட்டாயிரம் மைல் வேகங் கொண்ட இஃது 18 இலட்சம் அணுகுண்டு சக்தி கொண்டதாகும். வியாழன் கிரகத்தின் மேற்பகுதி ஐஸ்கட்டிகளாக அமைந்திருப்பதால் இல்வால்வு நட்சத்திர மோதலால் பெரும் அபாயம் ஏதும் ஏற்படவில்லை. ஐஸ்கட்டியில்

மோதிய பின்னர் அஃது ஆவியாகி அண்டவெளியில் கலந்துவிட்டது.