இளையர் அறிவியல் களஞ்சியம்/விமானம்
விமானம் : இன்றைய நவீன வாழ்வின் போக்குவரத்துச் சாதனங்களுல் குறிப்பிடக்தக்க ஒன்றாக விளங்குவது விமானமாகும். பயணம் செய்வதற்கும், பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் மட்டுமல்லாது நாட்டில் பாதுகாப்புக்கு இன்றியமையாத போர் அரணாகவும் விமானங்கள் விளங்குகின்றன. வானில் பறக்கும் பறவை போன்று தானும் பறக்க வேண்டும் என்ற வேட்கை மனிதனுக்கு நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்தது. பறவை போன்று இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறக்க முயன்றவர்களும் உண்டு. ஆசைக்கு உரிய வடிவம் தந்து செயல்பட்டவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் ஆவர். 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் நாள் ரைட் சகோதரர்கள் பிர்ச் மரச்சட்டங்களால் உருவாக்கப்பட்ட விமானமொன்றைச் செய்து பறக்க விட்டனர். இஃது 12 விநாடிகளில் 86 மீட்டர் பறந்தது. இதுவே வானில் பறந்த முதல் விமானம். இவர்களைத் தொடர்ந்து வேறு சிலரும் விமான உருவாக்கத்தில் ஈடுபடலாயினர்.
அன்று ஓரிருவர் அமரக்கூடிய மர விமான முயற்சி தொடர்ந்ததன் விளைவாக இன்று
நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்யவல்ல மிகப்பெரும் விமானங்கள் உருவாகலாயின.
மரச்சட்டத்தில் தொடங்கிய விமானங்கள் இன்று அலுமினியம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற உலோகங்களின் கலவையான 'டியூராலுமினியம்’ எனும் புதுவகை உலோகத்தைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவ்வுலோகம் கடினத்தன்மை மிக்கதாக விளங்குவதோடு எடை குறைந்ததாகவும் இன்று உள்ளது.
விமானம் பல்வேறு உறுப்புகளைக் கொண்டு இயங்குகிறது. அவற்றுள் மிக முக்கிய உறுப்பாக அமைந்திருப்பது 'புரோப்பெல்லர்’ என்று அழைக்கப்படும் செலுத்திகளாகும். காற்றாடிப்பட்டை வடிவில் இருக்கும். இவ்வுறுப்பு விசையோடு சுழலும்போது உண்டாகும் காற்றை வால் பகுதியை நோக்கி விரைந்து தள்ளுகிறது. இதனால் இக்காற்று விசைக்கு ஓர் எதிர்விசை உருவாகிறது. விமானத்தை முன்னோக்கித் தள்ளிச் செலுத்துவது இவ்விசையே யாகும். விமானம் மேல்நோக்கிப் பறக்கவோ அல்லது கீழ்நோக்கி இறங்கவோ உறுதுணையான உறுப்பு விமானத்தின் மையப் பகுதியில் இருபுறமும் விரிந்திருக்கும் இறக்கைகளாகும். விமானம் மேல் எழும்ப அல்லது கீழ் இறங்க அல்லது பக்கவாட்டில் திரும்ப உதவுவது விமானத்தின் வால் பகுதியாக அமைந்திருக்கும் எய்லிரான் (Aileran) எனும் நிலைப் படுத்தியாகும். விமானத்தின் வால்பகுதியில் இருபுறமும் சிறிய அளவில் விரிந்திருக்கும் 'எலிவேட்டர்’ எனும் உயர்த்தியை இயக்கி விமானத்தை மேலே உயர்த்தவோ, கீழே இறக்கவோ அல்லது சம மட்டத்தில் வைத்திருக்கவோ இயலும். 'ரட்டர்' எனப்படும் சுக்கானையும் எய்விரானையும் கொண்டு
விமானத்தை எப்பக்கமும் திருப்ப இயலும். விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் ஒடு பாதையில் சிறிது ஓடியே நிற்கவோ, பறக்கவோ இயலும். இதற்காக விமானத்தின் அடிப்பாகத்தில் முன்னால் இரண்டும் பின்னால் ஒன்றுமாக ரப்பர் சக்கரங்கள் அமைந்திருக்கும். இதை வேண்டியபோது வெளியே நீட்டவோ மடக்கி வைத்துக்கொள்ளவோ முடியும்.
இன்றைய நவீன விமானங்களில் முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் விசிறி வடிவிலான புரொப்பெல்லராகிய செலுத்திகள் இடம் பெறுவதில்லை. இவற்றில் ஜெட் என்ஜின்கள் பயன்படுத்தப்படுவதால் இவ்விமானங்களும் ‘ஜெட் விமானங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. இவ்விமானத்தில் ஜெட் என்ஜினில் எரியும் எரிபொருள் வாயுவாக விமானத்தின் பின் பகுதியில் உள்ள துவாரம் வழியே விரைந்து வெளிப்படுவதால் விமானம் விரைந்து முன்னோக்கிச் செலுத்தப்படுகிறது.
இன்று ஒலியையும் விஞ்சும் அதிவேக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓரிருவர் அல்லது ஒருசிலர் மட்டும் பயணம் செய்யும் சிறுவகை விமானமாக ஹெலிகாப்டர் பயன்பட்டு வருகிறது. இதைத் தரையிலிருந்து நேராக வானை நோக்கிச் செலுத்த முடியும்.
அவ்வாறே தரையில் இறக்கவும் முடியும். இதனால் அதிக உயரத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும் வேண்டிய திசையில் திருப்பவும் வானில் நிலையாக நிறுத்தவும் இதனால் முடியும். வெள்ளம், பூகம்பம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அவசர சமயங்களில் ஹெலிகாப்டர் விமானங்கள் பேருதவி செய்கின்றன.
சாதாரணமாக பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம், குண்டு வீச்சு விமானம், கடற்கரைக் காவல் விமானம் எனப் பலவகை உண்டு. இன்று உள்நாட்டில் மட்டுமல்லாது நாடு விட்டு நாடு விரைந்து அஞ்சல் அனுப்ப விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வயல்களில் பூச்சி மருத்து தெளிக்க சிறு வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிலேயே இன்று பலவகை விமானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெங்களுரில் போக்குவரத்துக்கான பயணி விமானங்களும் ஹெலிகாப்டர்களும் உருவாக்கப்படுகின்றன. விமானங்களுக்கான என்ஜின்களும் இங்கு உருவாக்கப்படுகின்றன. நாசிக்கில் இராணுவ விமானங்கள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. கான்பூரில் சரக்கு விமானங்களும் பயணிகளின் விமானங்களும் தயாராகின்றன. ஐதராபாத்தில் விமானங்களுக்கான மின் கருவிகளும் ராடார் போன்ற நுட்பக் கருவிகளும் உருவாக்கப்படுகின்றன. இலட்சுமணபுரியில் ஹெலிகாப்டரின் உதிரிப்பாகங்களும் கோரக்பூர் என்னுமிடத்தில் எஞ்சின்களும் தயாரிக்கப்படுகின்றன.