இளையர் அறிவியல் களஞ்சியம்/வில்லியம் ஹார்வி

விக்கிமூலம் இலிருந்து

வில்லியம் ஹார்வி : இரத்தம் உடலில் சுற்றோட்டமாக ஓடுகிறது என்பதையும் இதயம் இயங்கும் முறையையும் முதன்முதலாகக் கண்டறிந்தவர் இவரேயாவர். தலைசிறந்த ஆங்கில மருத்துவ அறிஞரான இவர் 1578 -ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஃபோல்க்ஸ்டோன் நகரில் பிறந்தார்.

பள்ளிக் கல்வியை முடித்தபின் இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த

கேயஸ் கல்லூரியில் கற்று பட்டம் பெற்றார். மருத்துவத்துறை அறிவு பெறுவதில் நாட்டம்

கொண்டிருந்த அவர் அக்காலத்தில் பெரும் புகழ்பெற்ற மருத்துவப் பல்கலைக் கழகமான பதுவாப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். உலகின் புகழ்பெற்ற இப்பல்கலைக்கழகம் இத்தாலி நாட்டில் உள்ளதாகும். இங்கு வில்லியம் ஹார்வி மருத்துவம் பயின்று கொண்டிருந்த அதே சமயத்தில், புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான காலிலியோ அங்குப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். பதுவாப் பல்கலைக்கழகத்தில் 1602ஆம் ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்று இங்கிலாந்து திரும்பினார்.

இவரது மருத்துவம் பற்றிய ஆய்வுரைகள் பலரையும் கவர்ந்தது. லண்டன் மருத்துவக் கல்லூரி முதல்வர் பதவி இவரைத் தேடி வந்த போது அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் தனியாக மருத்துவத் தொழில் செய்து பேரும் புகழும் பெற்றார். இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் இருவருக்கும் மருத்துவம் பார்த்த பெருமை இவருக்குண்டு. அக்காலத்தில் புகழ்பெற்ற தத்துவ அறிஞராக விளங்கிய ஃபிரான்சிஸ் பேக்கனுக்கும் இவர் மருத்துவம் செய்துள்ளார்.

இவர் தனியாக மருத்துவத் தொழில் செய்து கொண்டே லண்டனிலுள்ள புனித பார்த்தலோமியோ மருத்துவமனையில் தலைமை மருந்துவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

இவர் மருத்துவத் தொழிலில் சிறப்புற விளங்கிய அதே நேரத்தில் மருத்துவ ஆராய்ச்சியிலும் பெருங்கவனம் செலுத்தி வந்தார். அதிலும் இரத்தவோட்டம் பற்றிய ஆய்வில் பெரும் முனைப்புக்காட்டி ஆராய்ச்சி செய்து வந்தார். இதற்காக இவர் முதலில் விலங்குகளைக் கொண்டு ஆராய்ந்தார். பின்னர், மனிதர்களைக் கொண்டு ஆய்வு செய்து வந்தார். தம்மிடம் மருத்துவம் செய்துகொள்ள வரும் நோயாளிகளை வெகு நுட்பமாக ஆராய்ந்து பல்வேறு விதமான சோதனைகளைச் செய்து இரத்த வோட்டத்தின் இயல்புகளை நுட்பமாகக் கணித்தார்.

இறுதியாக, தமனிகள் இதயத் திலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்துச் செல்கின்றன; சிரைகள் மீண்டும் இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டுவந்து சேர்க்கின்றன என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்தார். அக்காலத்தில் நுண்பெருக்காடிகள் போன்ற நுட்பமான கருவிகள் இல்லை. இருந்தும் அவற்றால் மட்டுமே காணக்கூடிய மயிரிழைபோன்ற நுண்புழைத் தந்துகிகளையும் மிகச்சிறிய தமனிகளிலிருந்து சிரைகளுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நுண்ணிய இரத்த நாளங்களையும் இவர் ஊகமாகவே கண்டறிந்தார்.

இரத்தவோட்டம் பற்றிய இவரது புகழ் பெற்ற நூலான "விலங்குகளின் இதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம்பற்றிய உடற்கூற்று ஆய்வு" (An anatomical Treatise on the Movement of the Heart and Blood in Animals) என்பது 1628ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் குறிப்பிட்டிருந்த இரத்த ஓட்டம் பற்றிய ஆய்வுகளை பலரும் ஏற்க மறுத்தனர். சிலர் தூற்றவும் செய்தனர். ஆயினும், காலப்போக்கில் ஆய்வுகளால் கண்டறியப்பட்ட மருத்துவ உண்மைகள் இவரது ஆராய்ச்சியின் நுட்பத்தை மெய்ப்பிப்பதாக அமைந்தன. இவரது புகழ் ஐரோப்பாவி வெங்கும் பரவி நிலைபெற்றது. மருத்துவ உலகின் மாபெரும் ஆய்வறிஞர் எனும் சிறப்பைப் பெற்றார்.

இவரது ‘கரு இயல்’ (Embryology) பற்றிய ஆராய்ச்சியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1851ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட “விலங்குகளின் தலைமுறை” (On the Generation of Animals) என்ற நூலும் இக் கால கருஇயல் ஆய்வுக்கு அடித்தளமாக அமைந்தனவெனலாம்.

மருத்துவ உலகில் மாபெரும் ஆய்வாளராக விளங்கிய வில்லியம் ஹார்வி 1667ஆம் ஆண்டில் தமது 79ஆம் வயதில் லண்டனில் காலமானார்.