இளையர் அறிவியல் களஞ்சியம்/வெப்ப மண்டலம்

விக்கிமூலம் இலிருந்து

வெப்ப மண்டலம் (hot zone) : கதிரவனிடமிருந்து பூமி வெப்பச் சக்தியைப் பெற்றாலும் உலகம் முழுவதும் ஒரே சீராகப் பெறுவதில்லை. ஒரு சில பகுதிகள் மிகுதியான வெப்பத்தைப் பெறுகின்றன. இன்னும் சில இடங்கள் மிதமான வெப்பத்தைப் பெறுகின்றன. வேறு சில இடங்கள் வெப்பம் குறைந்த குளிர் நிலப் பகுதிகளாக அமைந்துள்ளன. இதற்குக் காரணம் கதிரவனின் வெப்பக் கதிர்கள் நிலத்தின் மீது செங்குத்தாகவோ அல்லது சாய்வாகவோ விழுவதுதான்.

ஒவ்வோராண்டிலும் குறிப்பிட்ட காலங்களில் பூமத்திய ரேகைப் பகுதியில் சூரியன் செங்குத்தாகத் தோன்றும். அவ்வாறு தோன்றும் பகுதிகள் வெப்பம் மிக்கவையாக இருப்பதால் அப்பகுதிகள் வெப்ப மண்டலங்கள் (Torridzones) என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு தோன்றும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 28 வரை என கணித்துள்ளார்கள். பூமத்திய ரேகைக்கு வடக்கே 23½0 தள்ளியுள்ள கடக ரேகையிலும் 23½0 தள்ளி தெற்கேயுள்ள கடக ரேகையிலும் முறையே ஜூன், டிசம்பரில் கதிரவன் தோன்றும். இப்பகுதியில் சூரியன் செங்குத்தாகத் தோன்றாது. சாய்வாகத் தோன்றுவதால் இப்பகுதி மிதவெப்ப மண்டல (Temperate zone) ஆகும். மிகக் குளிர்மண்டலம் (Frigid zone) துருவப் பகுதிகளில் அமைந்துள்ளது.

வெப்ப மண்டலத்தில் வெப்பம் மட்டுமல்ல மழையும் அதிகமாகப் பெய்யும். இங்குதான் காடுகளும் மிகுதி. அதிலும் வெப்ப மண்டல ஆற்றுப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் மிகுதியாக உள்ளன. அமெரிக்க அமேசான் நதிப் பகுதி காடுகளிலும் ஆஃப்ரிக்கக் காங்கோ நதிப்புறத்துக் காடுகளும் புகழ்பெற்றவைகளாகும்.

வெப்ப மண்டலப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளிலும் காடு சார்ந்த பகுதிகளிலும் தேக்கு, ரப்பர், மற்றும் பனைவகை மரங்களும் மிகுதியாக வளர்கின்றன. பல்வேறு வகையான பழ மரங்களும் இப்பகுதியிலேயே அதிகம். எண்ணெய் வித்துக்களும் வாசனைப் பொருட்களும் இப்பகுதியிலேயே ஏராளமாக விளைகின்றன.

விலங்கினங்களும் வெப்ப மண்டலப் பகுதியிலேயே மிக அதிகமாக உள்ளன. யானை, சிங்கம், புலி, குதிரை போன்றவைகளும் பல வகைப் பறவைகளும் பூச்சியினங்களும் கூட இப்பகுதியில் தான் மிகுதியாகவுள்ளன. வெப்ப மண்டலக் கடற்கரைப் பகுதிகளில் முதலை, ஆமை, மீன் போன்ற நீர் வாழ் உயிரினங்களும் கூட பெரியவைகளாக உள்ளன. இதற்குக் காரணம் அவற்றின் செழிப்பான வாழ்க்கைச் சூழலுக்கு வெப்ப மண்டலப் பகுதி ஏற்றவையாக இருப்பதுதான்.