உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/ஹீலியம்

விக்கிமூலம் இலிருந்து

ஹீலியம் : ஜட வாயுக்களில் ஒன்றான ஹீலியம் ஒரு தனிமமாகும். இதன் அணு எண் 2 ஆகும். வாயுக்களிலே எடை குறைந்த வாயுவான ஹைட்ரஜன் வாயுவைவிடச் சற்றுக் கூடுதலான எடை கொண்டது ஹீலியம். இஃது சாதாரணக் காற்றைவிட நான்கு மடங்கு அதிக எடையுடையதாகும்.

இவ்வாயுவை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் ராம்சே டிராவர்ஸ் எனும் இரு அறிவியலாளர்கள் ஆவர். இவர்கள் கிளீவைட் என்ற தாதுப்பொருளை அமிலத்துடன் காய்ச்சும்போது வெளிப்பட்ட வாயுவை ஆராய்ந்தபோது ஹீலியம் வாயுவைக் கண்டறிந்தனர். 1868-லேயே சூரியமண்டலத்தில் இவ்வாயு இருப்பதாகக் கண்டறியப்பட்ட போதிலும் 1895ஆம் ஆண்டில்தான் இவ்வாயுவைப் பிரித்தறியும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

சாதாரணமாக யுரேனியத் தாது, மோனசைட், கிளீவைட், பிச்பிளண்ட் போன்ற தாது வகைகளிலும் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து வெளிப்படும் இயற்கை வாயுக்களிலும் அதிக அளவு ஹீலியம் உண்டு. ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக எடை குறைந்த வாயுவாதலால் 310 மைல்களுக்கப்பால் உள்ள வாயு மண்டலத்தில் ஹைட்ரஜன் வாயுவும் ஹீலியம் வாயுவும் அதிக அளவில் உள்ளதாகக் கண்டறிந்துள்ளார்கள்.

ஹைட்ரஜன் வாயுவைப் போன்று இதற்கு எரியும் திறன் இல்லாததால் இஃது பெரும் பலூன்களிலும் ஆகாயக் கப்பல்களிலும் நிரப்பப் பயன்படுத்தப்பட்டது. மேலும், ஆழ்கடலுள் ஆய்வுக்கென மூழ்குவோர் ஆக்சிஜன் வாயுவுடன் ஹீலியம் வாயு கலக்கப்பட்ட கலவையைச் சுவாசிக்கக் கொண்டு செல்வதுண்டு. குறைந்த வெப்ப நிலையைப் பெறவும் ஹீலியம் வாயு பயன்படுகிறது.

ஹீலியம் வாயுவுக்கும் மணமும் நிறமும் இல்லையாதலால் இஃது பிற பொருள்களுடன் இணைந்து வினையேதும் புரிவதில்லை. இஃது எரியும் தன்மையற்றதாக இருப்பதால் பிற பொருட்களை எரிவதற்கும் துணைபுரிவதில்லை.

மற்ற வாயுக்களோடு ஒப்பிட்டால் இஃது உலகில் மிகக் குறைந்த அளவே உள்ளன எனக் கூற வேண்டும். உலகிலேயே மிக அதிக அளவில் ஹீலியம் வாயு அமெரிக்காவில் கிடைக்கிறது.