உள்ளடக்கத்துக்குச் செல்

இளையர் அறிவியல் களஞ்சியம்/ஹெலிகாப்டர்

விக்கிமூலம் இலிருந்து

ஹெலிகாப்டர் : விண்ணில் பறக்கும் வானூர்திகளில் மிகச் சிறியது ஹெலிகாப்டர் ஆகும். மற்ற பெரிய வகை விமானங்களெல்லாம் மேலே ஏறுமுன் ஓடுபாதையில் ஓடியே வான் ஏற முடியும். ஆனால், ஹெலிகாப்டர் அப்படியன்று. அது இருந்த இடத்திலிருந்தே மேலேறவோ கீழே தரை இறங்கவோ முடியும். முன்னோக்கியோ, பின்னோக்கியோ அல்லது பக்கவாட்டில் திரும்பியோ பறக்க இயலும். பறக்கும்போது ஓரிடத்தில் சிறிது நேரம் நிலையாக நிற்கவும் முடியும்.

மற்ற விமானங்களுக்கு இருப்பது போல் ஹெலிகாப்டருக்கு பக்கவாட்டில் இறக்கைகள் ஏதும் இல்லை. முன்புறத்திலோ பக்கங்களிலோ சுழலும் செலுத்திகள் ஏதும் இல்லை.

ஹெலிகாப்டர்

மாறாக இதன் உச்சியில் படுக்கை வசமாக செலுத்தி உண்டு. இது நீளமாகவும் அகலம் குறைவானதாகவும் உள்ள சுழலும் தகடுகளாகும். இவை இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு சுழல் தகடுகளைக் கொண்டதாக இருக்கும். ஹெலிகாப்டரின் உச்சிப் பகுதியில் வெளிப்புறமாக அமைந்துள்ள இச்சுழல் தகடுகள் லேசாக வளைந்திருக்கும். சுழலி விரைந்து சுழலும்போது உச்சிப் பகுதியில் காற்று வேகமாக வீசும். அதனால் சுழலிக்குக் கீழே காற்று அழுத்தம் குறையும். இதனால் ஹெலிகாப்டர் மேல் நோக்கி உந்தப்படும்.

ஹெலிகாப்டரின் உச்சிப் பகுதியில் பெரிய சுழலி இருப்பது போன்று வால் பகுதியிலும் ஒரு சிறிய சுழலி உண்டு. இது பெரிய சுழலி போன்று தட்டையாக இராமல் வால் பகுதியில் செங்குத்தாக அமைந்திருக்கும். உச்சிப் பகுதிச் சுழலிக்கு எதிரிணையாக இவ்வால் சுழலி செயல்படும். இதனால் ஹெலிகாப்டரை பறக்கும்போது ஒரே இடத்தில் சுற்றிக்கொண் டிருக்கும்படி செய்ய முடிகிறது. அவ்வாறு இருக்கும்போது சுழலியின் மேல் தூக்கும் சக்தியும் பூமியின் ஈர்ப்புச் சக்தியும் சம நிலையில் இருக்கும். ஹெலிகாப்டரை கீழே இறக்க வேண்டுமெனில் மேலே சுழலும் சுழலியின் வேகத்தைக் குறைத்தால் ஹெலிகாப்டர் மெதுவாக இறங்கித் தரையைச் சென்றடையும்,

வானில் விமானங்கள் வேகமாகப் பறப்பது போன்று ஹெலிகாப்டர்களால் பறக்க இயலாது. அதிகபட்சம் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பறக்க முடியும். இதற்குச் செலவாகும் எரிபொருளின் விலையும் அதிகம். ஹெலிகாப்டரின் விலையும் சற்று அதிகமே.

ஹெலிகாப்டர்களால் பல நன்மைகள் உண்டு. விமானங்களால் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு ஹெலிகாப்டர்களால் சுலபமாகச் செல்ல முடியும். விமானங்களுக்குத் தேவைப்படுவது போன்று நீண்ட ஓடு பாதைகள் ஹெலிகாப்டர்களுக்குத் தேவையில்லை. மேலும், மிகச் சிறிய இடப்பரப்பில் கூட ஹெலிகாப்டர்களால் இறங்க முடியும். சாதாரணமாகப் போரில் காயமடைந்த வீரர்களையும் வெள்ளப்பெருக்குப் போன்ற இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்டவர்களையும் ஹெலிகாப்டர்களால் எளிதாக அப்புறப்படுத்திக் காக்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உடைகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்க முடியும். தேவையானபோது உணவுப் பொருட்களை மட்டுமின்றி ஜீப் போன்ற வாகனங்களையும் வேறு பொருட்களையும்கூட ஹெலிகாப்டர்களால் தூக்கிச் செல்ல முடியும். குறுகிய தூரங்களுக்கு விரைந்து சென்று வர ஹெலிகாப்டர்களே சிறந்த வாகனங்களாகக் கருதப்படுகின்றன. சில சிக்கலான சமயங்களில் தபால்களை எடுத்துச் செல்லவும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுவதுண்டு. பூச்சிகளால் பயிர்கள் பாதிப்படையும்போது அதற்கென வடிவமைக்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சி மருந்தும் தெளிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் வடிவமைப்புப்பற்றிய சிந்தனை உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியோனார் டோ டா வின்சிக்கு 1500ஆம் ஆண்டில் எழுந்தது. அவர் கற்பனையாக அதன் வடிவத்தைத் தீட்டினார். ஆயினும், நீண்ட காலம் அறிவியல் வளர்ச்சியின்மை காரணமாக அக்கற்பனையும் சிந்தனையும் வெறும் ஓவிய வடிவத்திலேயே இருக்க நேர்ந்தது. 1910ஆம் ஆண்டிலேதான் முதன் முதலாக ஈகாரி சிகார்ஸ்கி எனும் ரஷ்ய அறிவியலறிஞரும் ஃபிரெஞ்சு இயந்திர நுட்பவியல் மேதையுமான லூயி சார்லஸ் பிராகுவே என்பவரும் இணைந்து இயந்திரத்தோடு கூடிய ஹெலிகாப்டரை வடிவமைத்து உருவாக்கினர். அவர்களின் தொடர் முயற்சி 1988-40 ஆண்டுகளில் வெற்றி பெற்றது. இன்று நாம் காணும் ஹெலிகாப்டர் வடிவமைப்பின் அடிப்படையில் உருவாக்கம் பெற்றது. இன்று சமூக வாழ்வில் மட்டுமல்ல போர்ப்படையிலும் ஹெலிகாப்டர்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஹெலிகாப்டர்கள் பல வடிவங்களில் சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.