உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/உடல்

விக்கிமூலம் இலிருந்து

10. உடல் இயக்க செயல்களைக் கற்பிக்கும்
வழி முறைகள்
(TEACHING OF PHYSICAL ACTIVITIES)

உடலியக்க செயல்கள் என்பவை, கீக்ழ்காணும் வகைகளாகப். பிரிக்கப்பட்டிருக்கின்றன.

1. கட்டழகுக்கலைப் பயிற்சிகள் (Calisthenies)

2. இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள் (lndigenous Activities)

3. அணிநடைப் பயிற்சி (Marching)

4. சிறு விளையாட்டுக்கள் (Minor games)

5. முதன்மை விளையாட்டுக்கள் (Major games)

6. தாளலயப் பயிற்சிகள் (RhythmicActivities)

7. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் (Gymnastics)

8. தற்காப்புக் கலைகள் (Defensive Arts)

9. ஒடுகளப் போட்டி நிகழ்ச்சிகள் (Track and Field events)

10. நீச்சல் போட்டி நிகழ்ச்சிகள் (Swimming)

இத்தகைய பயிற்சிகளை எப்படிப் பயிற்றுவிக்க வேண்டும் என்ற முறைகளை அறிந்து கொள்ளுமுன், கற்பிக்க வசதியாக, மாணவர்களை எப்படிப் பிரிக்க வேண்டும், நிறுத்தி வைக்க வேண்டும் என்ற முறைகளை முதலில் தெரிந்து கொள்வோம்.

ஒழுங்குபடுத்தும் பயிற்சிகளுக்கான வகுப்பு அணி முறை.

வகுப்பு மாணவர்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்தி (Single line) வைத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கான கட்டளைகள்

1. மாணவர்களே ! ஒரு வரிசையில் நில்லுங்கள்

(In a line - class - Fall in)

இந்தக் கட்டளையைத் தொடர்ந்து, மாணவர்களில் குள்ளமானவர் வலப்புறம் இருப்பது போல் நிற்க, அடுத்து உயரமானவர்கள் என்ற நிலையில் ஓரணிவரிசையில் நிற்க வேண்டும்.

2. நேரே - fisio (Atten-Tion) கைகள் பக்கவாட்டில் உடலுடன் ஒட்டியபடி இருக்க, கால்கள் இரண்டையும் இணைத்தாற்போல் வைத்து, நிமிர்ந்து நிற்கச் செய்யவும். அசையாமல் நிற்க வேண்டும். 3. இயல்பாக... நில் (Stand at ease)

மாணவர்கள் கைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டு, கால்களை அகலமாக விரித்து நிற்றல்.

4. ஒய்வாக... நில் (Stand at ease)

மாணவர்கள் விறைப்பாக நிமிர்ந்து நிற்பதைத் தவிர்த்து, கால்களை இருந்த இடத்திலிருந்து அசைக்காமல் ஒய்வாக நிற்றல்.

5. வலப்புறமிருந்து - சீச் செய் (Right Dress) குள்ளமான முதலாவது மாணவர், நேராகப் பார்த்து நிற்க, வலப் புறமாக மாணவர்கள் தங்கள் தலையைப் வலப் புறமாகத் திருப்பி, தங்களது வரிசையை நேராகச் சீர் செய்ய வேண்டும்.

6. நேரே - பார் (Eyes - Front) மாணவர்கள் தங்கள் தலைகளைத் திருப்பி, முன்புறமாகப் பார்க்க வேண்டும். தலை தான் அசைந்து பார்க்க வேண்டுமே தவிர, நேரே நில் என்ற நிலையில் தான் கால்கள் நிற்க வேண்டும்.

இது வரை ஒரு நேர்க்கோட்டு வரிசைக்கான கட்டளை முறையை அறிந்து கொண்டோம். (Line or Rank).

அடுத்து, அடுக்கு வரிசை முறை (File or Column)

7. ஒர் அடுக்கில் நில் (Class-in a File-Fall in)

கட்டளையைக் கேட்டதும், குள்ளமானவர் முதலில் நிற்க, அவரது பின்னால் அடுத்தடுத்து உயரமானவர்கள் நின்று கொள்ள வேண்டும். இது தான் அடுக்கு முறை என்பதாகும்.

2. நேரே - நில் (Atten - Tion)

மாணவர்கள் கால்களை சேர்த்து, நிமிர்ந்து, கைகள் உடலோடு ஒட்டியிருக்க, விரைப்பாக நிற்க வேண்டும்.

3. முன்னோக்கிச் - சரி செய் (Forward - Dress)

முதல் மாணவன் நிமிர்ந்து அசையாமல் நிற்க, அவன் பின்னே உள்ளவர்கள் தங்கள் வலக்கையை நேராக, முன்னோக்கித் தூக்கி, தங்கள் அணியின் அடுக்கை சீர் செய்ய வேண்டும். அவர்கள் வலக் கையை, முன்புறமாக உயர்த்தியே இருக்க வேண்டும்.

4. கைகளைத் - தாழ்த்து (Arms - Sink)

கட்டளைக்குப் பிறகு, கையைத் தொங்க விட்டு விட்டு, மீண்டும் நிமிர்ந்த நிலையிலே, விறைப்பாகவே நிற்க வேண்டும்.

இனி வகுப்பை பயிற்சிக்கு ஏற்ப வசதியாக நிறுத்து வதற்காகக் கொண்டு வருகிற முறையைக் காண்போம்.இதை அணி திறப்பு முறை என்பார்கள்.

அணி திறப்பு முறை (Open Order Formation) மாணவர்கள் ஒரு நேர்க் கோட்டு வரிசையில் இருக்கும் போது, பின்பற்றும் கட்டளை முறை இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1. ஒற்றை நேர்க் கோட்டு அணி - அதன் திறப்பு முறை 1. வலப்புறமிருந்து மூன்று மூன்றாக ... எண்ணு (From the Right in Threes ...... Count)

மாணவர்கள் வலது புறத்தின் ஆரம்பத்திலிருந்து, 1, 2, 3, 1, 2, 3 என்று எண்ணிக் கொண்டே வரவேண்டும்.

எண்ணுகிற ஒவ்வொருவரும், தன் தலையை இடப் புறமாகத் திருப்பி, சத்தமாக, சுறு சுறுப்பாகக் கூற வேண்டும்.

2. ஒன்றுகள் எல்லாம் அவரவர் இடத்திலே நில்லுங்கள்
இரண்டுகள் எல்லாம் இரண்டு காலடிகள். (Steps)
மூன்றுகள் எல்லாம் நான்கு காலடிகள்.
முன்னோக்கி ...... நட·
Number ONES - stay where you are
Number TWOS - Two steps
Number THREES - Four steps
Open Order Forward - March

ஆசிரியர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று எண்ணுகிற போது; ஒன்றுகள் அங்கேயே நிற்க, இரண்டுகள் ஒன்றுக்கு ஒரு காலடி, இரண்டுக்கு இரண்டாவது காலடிகளை வைத்து நடந்து நிற்க; மூன்றுகள் மூன்று நான்கு எண்ணிக்கைக்கு நடந்து வந்து நிற்க வேண்டும்.

படம் பார்க்கவும் (Forward March)

மேலே விளக்கியது முன்னோக்கி நடக்கும் முறை.

பின் நோக்கி நடக்கச் செய்வது இரண்டாவது முறை.
கட்டளை : ஒன்றுகள் அங்கேயே நில்லுங்கள்.

இரண்டுகள் இரண்டு காலடிகள் முன்னோக்கியும்
மூன்றுகள் இரண்டு காலடிகள் பின்னோக்கியும்
- நட.

Number ONES - Stay where you are
Number TWOS - Two steps FORWARD
Number THREES - Two steps Back ward
Open Order ...... March.

இனி அடுக்கு முறை அணியிலிருந்து, திறப்பு முறையைக் காண்போம். (From File -Open order Formation).

முதலில் மாணவர்களை அடுக்கு முறையில் நிறுத்தி, நேரே நில், இயல்பாக நில், நேரே பார் - சீர் செய் என்றெல்லாம் கட்டளையிட்டு நிற்கச் செய்த பிறகு — :

1. முன்புறமிருந்து மூன்று மூன்றாக - எண்ணு.
(From the Front in Threes - Count)

2. ஒன்றுகள் - அங்கேயே நில்லுங்கள்
இரண்டுகள் - இடப்பக்கம் இரண்டு காலடிகள்
மூன்றுகள் - வலப் பக்கம் இரண்டு காலடிகள்,
நடந்து ... செல். – 6 Number ONES - Stay where you are.
Number TWOS - Two steps to the Left.
Number THREES - Two steps to the Right
Open Order ... March

ஆசிரியர் எண்ண எண்ண, மாணவர்கள் இடப் புறமும் வலப்புறமுமாக பிரிந்து சென்று நிற்க வேண்டும்.

படம் பார்க்க


பல அடுக்குகளில், மாணவர்களை நிறுத்தி வைத்திருந்தாலும், ஓர் அடுக்கு முறை போலவே, பிரித்து வைத்து, பயிற்சிகளைச் செய்கிற வசதியான நிலையை ஏற்படுத்திக் கொள்ளவும். பயிற்சிகளுக்கேற்ப, பிரித்து வைக்கும் முறை களில் தேவையான வகைகளை சேர்த்துக் கொள்ளவும்.

இனி, மாணவர்களை, மீண்டும் ஒரு வரிசைக்கு அல்லது அடுக்கு நிலைக்குக் கொண்டு வரும் கட்டளை முறையைக் காண்போம்.

மீண்டும்-உன் இடம் நோக்கி-நட (Close order-march)

இந்தக் கட்டளையைப் பின்பற்றி, மாணவர்கள் தங்கள் இடப்புறமோ, வலப்புறமோ சென்றிருந்தாலும், தங்களது பழைய இடம் நோக்கி வந்து விடவேண்டும்.

ஆசிரியருக்கு சில குறிப்புகள்

1. அணித் திறப்புமுறை நடைபெற்றவுடன், ஆசிரியர் மாணவர்களை ஓய்வு நிலையில் (Stand at ease) நிற்கச் செய்ய வேண்டும்.

2. மாணவர்கள் இடப்புறம் பயிற்சி செய்ய வேண்டியிருப்பின், ஆசிரியர் தனது வலப்புறத்தில் செய்து காட்ட வேண்டும். அதுபோலவே, வலப்புறம் மாணவர்கள் செய்திட இடப்புறமாக செய்து காட்ட வேண்டும்.

3 ஆசிரியர் எண்ணிக்கைப்படி, ஒவ்வொரு பயிற்சியையும் செய்து காட்டி, மாணவர்களை கவனமாக்கி, கருத்தில் பதிய வைக்க வேண்டும்.

4. மாணவர்களை செய்ய வைத்து, தவறுகளைத் திருத்த வேண்டும்.

5. சரியாக மாணவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்த பிறகு, அதைத் தாளலயத்துடன் (Rhythmic) செய்திடக் கற்பிக்க வேண்டும்.

6. ஆசிரியர் விரும்புகிற வகையில், மாணவர்கள் நிற்கும் அணியமைப்பு முறையை (Formation) மாற்றி நிற்க வைத்து, பயிற்சிகளைக் கற்பிக்கலாம்: இனி, ஒவ்வொரு உடலியக்கச் செயல்களையும் கற்பிக் கின்ற முறைகளை, சுருக்கமாக காண்போம்.

1 கட்டழகு தரும் கலைப் பயிற்சிகள் (Calisthenics)

கட்டழகு தரும் கலைப்பயிற்சிகள் என்பது, எந்தவித எடை சாதனங்களுமின்றி வெறுங்கையுடன் செய்யும் பயிற்சிகள் ஆகும்.

நன்றாக மூச்சிழுத்து, சுவாசத்தை விட்டு செய்கிற வெறும் பயிற்சிகளுடன், டம்பெல்ஸ், வாண்ஸ் என்கிற குறுந்தடி பயிற்சிகளையும், இந்தப் பயிற்சிகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட, உடலழகுப் பயிற்சிகளை, இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. எண்ணிக்கையுடன் செய்வது (Formal)

2. விருப்பம் போல் செய்வது (In formal) எண்ணிக்கையுடன் செய்வது பள்ளி மாணவியர்க்கு தேவையானதாகும். அப்பொழுதுதான், அனைவரும் சேர்ந்து, ஒருங்கிணைந்து செயல்படும் சீரினை உண்டாக்கி விட முடியும்.

மேலும் விளக்கத்திற்கு, முன்னர் கூறியுள்ள ஒழுங்கு படுத்தும் பயிற்சிகள் என்ற பகுதியில் காண்க.

2. இந்தியத் தேகப் பயிற்சிகள் (Indigenous Activities)

இந்தியத் தேகப் பயிற்சிகளை நாம் 5 பிரிவாகப் பிரித்து அறிந்து கொள்ளலாம்.

1 . உடலழகுப் பயிற்சிகள்

(அ) எடையற்ற பயிற்சிகள் (தண்டால், பஸ்கி)

(ஆ) எடையுடன் பயிற்சிகள் (கரளா கட்டை)

(இ) சாதன உதவியுடன் பயிற்சிகள் (மல்லர் கம்பம்)

2. யோகாசனங்கள்

3. குழு விளையாட்டுக்கள் (கோகோ, கபடி, அட்டிய பட்டியா)

4. தாளலயப் பயிற்சிகள் (லெசிம், நடனம்)

5.தற்காப்புக் கலைப்பயிற்சிகள் (மல்யுத்தம், லட்டி)

2-1. உடலழகுப் பயிற்சிகள் தண்டால் பஸ்கி

உடலழகுப் பயிற்சிகளில் முதலாவது வருவது தண்டால், பஸ்கிப் பயிற்சிகள்.

தண் என்ற வடமொழிக்கு புஜம் என்று பொருள். இந்தப் பயிற்சி, கைகளை வலிமையுடையதாக்கும்.

பஸ்கிப் பயிற்சிகள், கால் தசைகளை உறுதியாக்கும்.

இந்தப் பயிற்சிகள் கொஞ்சம் கடுமை நிறைந்ததாகும். ஆனால், அதிக எண்ணிக்கையில் செய்கிற போது, கால்களும் கைகளும், நல்ல உறுதியும் வலிமையும் அடையும்.

கஷ்டமான பயிற்சி என்பதால் மாணவர்களுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகக் கற்பித்து, பிறகு எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும்.

தண்டால், பஸ்கிப் பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கிற போது, வயது, இனம், மாணவர் திறமை முதலியவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

பயிற்றுவிக்கும் முறை : வகுப்பை அணித் திறப்பு முறையில் வரச்செய்து, பயிற்சிகள் செய்ய போதிய இடைவெளி கொடுத்து, எண்ணிக்கை முறையில் கற்பிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு பஸ்கி செய்யும் எண்ணிக்கை முறையைக் காண்போம்.

அனுமார் பஸ்கி.

1. நேராக, நிமிர்ந்து விறைப்பாக நிற்றல் (12" இடைவெளி)

2. முழங்கால்களை பாதி அளவு மடக்கி, அரைக் குந்தலாக (Squat) நிற்றல்.

3. இந்த நிலையிலிருந்து அதே இடத்தில், துள்ளிக் குதித்து இடது கால் ஒரடி முன்னேயும், வலது கால் ஓரடி பின்னேயும் வைத்து; இடது கையை நெற்றிக்கு முன்னும், வலது கையை முதுகிற்குப் பின்னும் வைத்தல்.

4. முதல் நிலைக்கு வரவும்.

மேலும் பல பயிற்சிகளைத் தெரிந்து கொள்ள, நான் எழுதிய 'இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்’ எனும் புத்தகத்தைப் பார்க்கவும்.

மல்லர் கம்பம் (Malcomb)

மல்யுத்தம் செய்பவர்கள், ஒரு கம்பத்தை , எதிரியாக பாவித்து, பல பிடி முறைகள் போட்டு, மல்யுத்தம் பழகுதல் இதற்கு உதவும் கம்பத்திற்குப் பெயர் மல்லர் கம்பம்.

சில முக்கியக் குறிப்புக்கள்

1. மல்லர் கம்பம் நிழல்மிகுந்த இடத்தில் பதிக்கப்பட வேண்டும்.

2. கம்பத்தை சுற்றியுள்ள தரை மிருதுவாகவும், சமமாகவும் இருக்க வேண்டும்.

3. விளக்கெண்ணெய் அல்லது அதற்கு ஈடாக உள்ள பொருள் ஒன்று, கம்பத்தின் மீது தடவியிருத்தல் நல்லது. அப்பொழுது தான் அதில் வழவழப்பு இருக்கும்.

4. மாணவர்கள் ஜட்டியுடன், அல்லது அரைக்கால் சட்டையுடன் தான் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

5. தனித் தனியாகவே மாணவர்கள் பயிற்சிகளைப் பயில வேண்டும். ஆசிரியர் கட்டாயம் அங்கே இருத்து, உதவ வேண்டும்.

6. பயிற்சி செய்வதற்குமுன், பதப்படுத்தும் பயிற்சிகள் தந்திருக்க வேண்டும்.

7. குறிப்பிட்ட பயிற்சியை முன் கூட்டியே ஆசிரியர் அல்லது நன்கு தெரிந்த மாணவர் ஒருவர் செய்து காட்ட வேண்டும்.

8. கம்பத்தில் ஏறும் போதும், இறங்கும் போதும், கால்களால் பிடி போடும் போதும், ஆசிரியர் அருகிலிருந்து உதவுதல் வேண்டும்.

9. பயிற்சிகளை வலதுபுறம், இடதுபுறம் என்று மாற்றி மாற்றி செய்திடுமாறு பயிற்றுவிக்க வேண்டும்.

10. எளிய பயிற்சிகளில் தொடங்கி, பிறகு கஷ்டமான பயிற்சிகளுக்குக் கொண்டு போவது நல்லது.

11. வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, இந்தப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது. வயிறு காலியாக இருப்பது நல்லது.

12. அதிகாலை, அல்லது மாலைப்பொழுது, இந்தப் பயிற்சிகளுக்கு வசதியான நேரமாகும்.

13. பயிற்சி முடிந்த பிறகு, கம்பத்தை எடுத்து, பத்திரமாக வைக்கவும்.

குறிப்பு : இந்தியன் கிளப் என்கிற கரளா கட்டைப் பயிற்சிகளும், எண்ணிக்கை அடிப்படையில் செய்யப்படுகின்ற பயிற்சிகள் தாம் என்பதால், இங்கே விளக்கமாக எழுதவில்லை. ஒழுங்குமுறைப் பயிற்சிகள் தருவது போலவே, இதுவும் அமைந்திருக்கிறது என்பதை அறியவும்.

2-2. யோகாசனங்கள்

உடல் வளத்திற்கும், உள்ளத்தின் நலத்திற்கும் உயர்ந்த பலன்களை விளைவிக்கும் உன்னத பயிற்சியாக, ஆசனங்கள் இருக்கின்றன. தண்டால் பயிற்சிகள் கைகளின் வலிமைக்கும்; பஸ்கிப் பயிற்சிகள் கால்களின் வலிமைக்கும் உதவுவதுபோல; ஆசனப்பயிற்சிகள் வயிற்று உறுப்புகளுக்கும் முக்கியமான முறையில் வலிமையை வளர்த்து விடுகின்றன.

இப்படிப்பட்ட ஆசனங்கள் நூற்றுக்கு மேற்பட்டதாக இருந்தாலும், மாணவ மாணவிகள் செய்வதற்கென்று அமைக்கப் பெற்ற ஆசனங்கள், 32 என்றும் கூறுவார்கள். அவற்றை நாம் நான்கு வகைகளாகப் பிரித்து செய்யலாம்.

1. நின்று கொண்டு செய்யும் ஆசனங்கள்.

2. உட்கார்ந்து கொண்டு செய்யும் ஆசனங்கள். 3. குப்புறப் படுத்துக் கொண்டு செய்யும் ஆசனங்கள்.

4. மல்லாந்து படுத்துக்கொண்டு செய்யும் ஆசனங்கள்.

ஆசனத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு சில குறிப்புக்கள்

1. குறைந்த அளவு ஆடையுடன், ஆசனம் செய்ய வேண்டும்.

2. வெறுந்தரையில் ஆசனம் செய்யாமல், ஏதாவது ஒரு விரிப்பின் மேல் செய்வது நல்லது.

3. ஆசனம் செய்யும் போது, வயிறு காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. அதிகாலையிலோ அல்லது மாலைப்பொழுதிலோ ஆசனம் செய்வது நல்லது.

5. மாணவர்களுக்கு ஆசனம் செய்ய இடம் இருப்பது போல, வட்ட வடிவ அமைப்பில் அல்லது அரை வட்ட அமைப்பில் மாணவர்களை இருத்திட வேண்டும்.

6. கற்றுத்தரப் போகிற ஆசனத்தின் பெயரை முதலில் கூறி, அதன் அமைப்பு, செய்தால் கிடைக்கும் பயன் முதலியவற்றை விளக்கி, அதனை எண்ணிக்கை முறையில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை, ஆசிரியர் செயல் விளக்கத்துடன் செய்து காட்ட வேண்டும்.

பிறகு மாணவர்களை, ஒவ்வொரு எண்ணிக்கையிலும் செய்திடப் பணித்து, குறைகளை நிவர்த்தித்து, பிறகு தொடர்ச்சியாகச் செய்யுமாறு கற்றுத்தர வேண்டும்.

7. ஆசனத்தை ஆரம்பிக்கிறபோது மூச்சிழுத்து, முடிக்கிறபோது மூச்சுவிடுகிற முறையில் பயிற்சியளிக்க வேண்டும்.

8. ஆசனம் செய்து முடிக்கிறபோது சவாசனம் என்கிற ஆசனத்தை செய்யுமாறு அறிவுறுத்தி முடித்திட வேண்டும்.

9. ஆசனங்கள் செய்கிறபோது, ஆசிரியர் கட்டாயம் அருகே இருந்து, கவனித்து, கண்காணித்து, தொடர வேண்டும். சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தை மாணவர்களுக்குக் கற்பிக்கலாம்.

குறிப்பு : பயன் தரும் யோகாசனப் பயிற்சிகள் என்னும் என் புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். ஆசிரியர்கள் படித்தும் படிப்பித்தும் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

3. அணி நடைப் பயிற்சி (Marching)

அணி நடைப் பயிற்சி, மாணவ மாணவியர்க்கு மிகவும் அவசியமாகும். உடற்கல்விப் பாடத்திட்டத்தில், கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய பாடமாகும்.

ஒழுங்கு (Discipline); கட்டளைக்குக் கீழ்ப்ப டிதல் (obedience); தாளலய உணர்வு (Rhythm); நல்ல உடல் தோரணை (Good posture), குழு உணர்வு (Group sense) முதலிய பண்புகளை அணி நடைப் பயிற்சி மாணவர்க்கு அருமையாக வளர்த்து விடுகிறது.

அணி நடைப் பயிற்சியைக் கற்றுத் தர, அடிப்படை இயக்கம் பற்றிய குறிப்புக்களை, ஆசிரியர் விளக்கமாக முதலில் கூற வேண்டும்.

கீழ்க்காணும் கட்டளைகளை ஆசிரியர் கூற, மாணவர்கள் செய்ய வேண்டும்.

1. ஒரு வரிசையில் நில் (Stand in a Single line)
இயல்பாக நில் (Stand at ease)
நேரே ... நில் (Atten ...tion)
ஓய்வாக நில் (Stand - easy)

பிறகு, வரிசையில் நேராக நிற்கச் செய்யும் கட்டளைகளை ஆசிரியர் கொடுக்க வேண்டும்.

வலப்புறம் ... சரிசெய் (Right...Dress)
நேரே ... பார் (Atten...tion)
இடப்புறம் ... பார் (Left...Dress)

நேரேபார் என்று அறிவிப்புக்குப் பிறகு, 1, 2 என்ற எண்ணிக்கையில், மாணவர்களை திரும்பச் செய்ய (Turn) தருகிற கட்டளைகளைக் கொடுக்க வேண்டும்.

வலப்புறம் ... திருப்பு (Left...Turn)
இடப்புறம் ... பார் (Left...Turn)
பின்புறம் ... பார் (About...Turn)

இவ்வாறு திரும்புவதை (Turn) இரண்டு எண்ணிக்கையில் மாணவர்களைச் செய்யுமாறு கற்பிக்க வேண்டும்.

உதாரணமாக வலப்புறம் திரும்பு என்பதைப் பார்ப்போம்.

எண்ணிக்கை 1: வலது குதிகால் மீதும், இடது கால் விரல்கள் மீதும் கால்களை சுழற்றி, வலது பக்கமாகத் திரும்ப வேண்டும்.
எண்ணிக்கை 2: இடது காலை வலது காலுடன் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கால்களை சேர்த்ததும் நிமிர்ந்து, விறைப்பாக நிற்க வேண்டும்

நிலை நடைப் பயிற்சி (Mark Time)

நிலை நடை என்பது, நின்ற இடத்திலேயே கால்களை உயர்த்தி, இறக்கி, நடை போடுகிற முறையாகும்.

நிற்கும் இடத்திலேயே நட (Mark Time) என்ற கட்டளையை ஆசிரியர் இட வேண்டும்.

வரிசையில் விறைப்பாக நிற்கும் மாணவர்கள், இடது காலால் தொடங்குவர். இடது காலை உயர்த்தும் போது, இடம் (Left) என்றும், இடது காலை தரையில் வைத்து, வலது காலை உயர்த்தும் போது வலம் (Right) என்றும் ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

நடையை நிறுத்து (Class ... halt) என்றதும், மாண வர்கள் நடையை நிறுத்துவர்.

இடது கால் தரைக்கு வரும் போது நடையை (Class) என்றும், வலது கால் தரைக்கு வரும் போது நிறுத்து (Halt) என்றும் கூற வேண்டும்.

நின்ற இடத்தில் நடை போடக் கற்றுக் கொண்ட பிறகு, மாணவர்களுக்கு, முன்னோக்கி நட, இடது புறம் திரும்பு, வலது புறம் திரும்பு பின் புறம் திரும்பு என்றெல்லாம் கட்டளையிட, மாணவர்கள் நடக்கும் போதே, திரும்பிடக் கற்றுக் கொள்வர்.

இடது புறம், வலது புறம் என்பதற்கு 1, 2 என்ற இரண்டு எண்ணிக்கை எண்ணினால் போதும்.

பின்புறம் திரும்பு (About Turn) என்னும் கட்டளைக்கும் 2 எண்ணிக்கை கூற வேண்டும்.

ஒவ்வொரு முறையாகப் பார்ப்போம்.

வகுப்பு மாணவர்களை வலது பக்கம் திரும்பச் செய்ய, வலப் புறம் திரும்பு என்று கட்டளை இட வேண்டும்.

வலது காலை தரையில் வைக்கும் பொழுது கட்டளை யைத் தொடங்கி, இடது கால் தரைக்கு வரும் போது, இரண்டாவது கட்டளையை முடித்து விட வேண்டும்.

பின்புறம் திரும்பு என்ற கட்டளையை, செயல்படுத்தும் முறை

கட்டளை - 1. இடது காலை இடது புறமாக தரையோடு திருப்பி பின்புறமாகக் கொண்டு செல்லவும்.

கட்டளை - 2. வலது காலை கொண்டு வந்து, இடது காலோடு சேர்த்து விடவும்.

இடப் புறம், வலப் புறம், திரும்பு என்கிற போது, மாணவர்கள் நேராக, விறைப்பாக உடலை வைத்துத் திரும்புவர்.

சிறிது வளைவாக அணியை நடக்கச் செய்ய பயன்படும் கட்டளை Left...wheel Right wheel என்பதாகும்.

இடப்புறம் வளைந்து செல் (Left wheel) என்ற கட்டளை கொடுத்ததும், முன் வரிசையில் முதலாவதாக இடப் புறம் இருப்பவர்; மெதுவாகத் திரும்ப, முன் வரிசையில் வலப்புறத்தில் முதலாவதாக இருப்பவர் வேகமாக இடப் புறம் வந்து, அணியின் வரிசை முறையை சரி செய்து கொள்ள வேண்டும்.

தேர்ச்சியான அணிநடை (Advanced Marching)

அணி நடையில் முக்கியமான மூன்று திரும்பும் முறைகளைக் கற்றுக் கொண்ட பிறகு. மாணவர்களுக்கு. தேர்ச்சி மிக்கதான, காண்பதற்குக் கவர்ச்சியான அணி நடை முறைகளைக் கற்றுத் தரலாம்.

1. இரட்டை அணி நடை (Double Time Marching)

2. மெது அணி நடை (Slow Marching)

3. எதிர் நடை or மறு நடை (Counter Marching)

4. கோல நடை (Figure Marching)

முக்கிய குறிப்பு

1. மெது நடை போடும் போது மணிக்கு 80 காலடிகள் (Step) இருக்கலாம்.

2. வேகநடை போடும் போது மணிக்கு 120 காலடிகள்.

3. இரட்டைநடை நடக்கும் போது மணிக்கு 186 காலடிகள் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.

விரைவு அல்லது வேகநடையை நிறுத்த 2 எண்ணிக் கைகள். இரட்டை நடையை நிறுத்த 4 எண்ணிக்கைகளில் கட்டளை கொடுத்து, நிறுத்த வேண்டும்.

4. சிறு விளையாட்டுக்கள் (Minor games)

சுலபமான திறமைகளையும், எளிமையான விதிகளையும் கொண்டதே சிறு விளையாட்டுக்களாகும்.

சிறு விளையாட்டுகளுக்கு, விளையாட்டு சாதனங்கள் அதிகம் தேவையில்லை. குறைந்த இடவசதி, போதும். நேரக்கட்டுப்பாடும் வலியுறுத்தப்படுவதில்லை. ஆட்டக்காரர்களின் குறிப்பிட்ட எண்ணிக்கையும் கட்டாயமில்லை

நேரத்திற்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப, பங்கு பெறுபவர் களுக்கு ஏற்ப, வயது வித்தியாசத்திற்கு ஏற்ப, விளையாட்டை அமைத்துக் கொண்டு, மகிழ்ச்சி பொங்க ஆடுவது தான், சிறுவிளையாட்டுக்களின் சிறப்புத் தன்மையாகும்.

சிறு விளையாட்டுக்களின் பிரிவுகள்

1. ஓடிவிளையாடும் ஆட்டம் (Running game)

2. ஓடித்தொடும் ஆட்டம் (Tag game)

3. சாதாரண பந்தாட்டம் (Simple ball games)

4. தொடர் விளையாட்டுக்கள் (Relays)

5. சாகசச் செயல்கள் (Stunts)

சிறு விளையாட்டைக் கற்பிக்கும் முறைகள்

1. விளையாட்டுக்கு ஏற்ப, மாணவர்களை பிரித்துக் கொள்ள வேண்டும்.

2. சில மாணவர்களை ஆடச் சொல்லி, மாதிரி காட்ட வேண்டும்.

3. மாணவர்களை திறமை வாரியாக குழுவாக்கிட வேண்டும்.

4. விளையாட்டில் பங்கு பெற இயலாதவர்களை, ஆட்டத்தைக் கண்காணித்து நடத்தும் பொறுப்பை அளிக்க வேண்டும்.

5. பங்கு பெறுபவர் ஆர்வம் காட்டி விளையாடுகிற வரையில், ஆட்டத்தைத் தொடர வேண்டும்.

அதாவது, ஆட்டத்தில் சுவாரசியம் குறைவதற்குள். ஆட்டத்தை நிறுத்திவிட வேண்டும்.

6. ஆட்டம் மகிழ்ச்சியையே அளித்தாலும், ஆட்டத்தின் விதிகளை யாரும் மீறாதபடி, கட்டுப்பாட்டுக்குள் அடங்கி ஆடுகிறபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.

7. ஆசிரியரும் பங்குபெறுகிறபோது, மாணவர்க்கு உற்சாகமாக இருக்கும்.

8. தோற்கிற குழுவைத் தேற்றுவதும்,வெற்றிபெறுகிற குழுவை வாழ்த்துவதும் ஆசிரியர் கடமையாகும்.

9. விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பாக, இடத்தை சரி செய்து தேவையான உதவிப் பொருட்களை ஆசிரியர் சேமித்து வைத்திருப்பது, சிறப்பான நிர்வாகத் திற்கு உத்திரவாதமளிக்கும்.

5 முதன்மை விளையாட்டுக்கள் (Major games)

மிகவும் நுண்மையும், வலிமையும் நிறைந்த திறமைகள்: விரிவுபடுத்தப்பட்டு வற்புறுத்துகின்ற விதிமுறைகள்: அதிகமான தரமான இடவசதி; தேர்ச்சியும் செழுமைநிறைந்ததுமான உதவி சாதனங்கள்; குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகள்: இப்படித்தான் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்ற கட்டாய நியதிகள்; இவ்வளவு ஆட்டக் காரர்கள் இருக்க வேண்டும் என்ற விதிகள் கொண்டவையே. முதன்மை விளையாட்டுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

போட்டியிடுகின்ற உணர்வுகளுக்குத் தீனிபோடுவது போல, குழுவாகக் கூடி ஆடும் வாய்ப்புக்களை இவை வழங்குகின்றன.

நரம்புத்தசைகள் ஒருங்கிணைப்பு ஆற்றல்; வளர்ச்சி பெறுகிற திறமைகள்; கிளர்ச்சி கொள்கிறதிறன் நுணுக்கங்கள் தலைமைப் பதவிக்குத் தகுதி தரும் சந்தர்ப்பங்கள் விளையாட்டுப் பெருந்தன்மை முதலியவற்றை வளர்த்து விடுகின்றன.

முதன்மை விளையாட்டுக்களை, முழுமை பகுதி முழுமை என்னும் கற்பிக்கும் முறையில் கற்பிக்க வேண்டும்

கற்பிக்கும் முறை

விளையாட்டைக் கற்பிக்கும் முன்னதாக, அதன் தொடக்கம்: தொடக்கத்திற்கான காரணம்; ஆடுகளத்தின் அளவு; ஆட்டக்காரர்களின் எண்ணிக்கை; ஆட்டத்தின் நோக்கம், ஆட்டத்திற்குரிய உதவி சாதனங்கள் போன்றவற்றை, ஆசிரியர் தெளிவாக, சுருக்கமாக விளக்கிட வேண்டும்.

மாணவர்களை விளையாடச் செய்கிற போது, ஏற்படுகிற தவறுகளைத் திருத்த வேண்டும். தேவையான போது, விதிமுறைகளையும் விளக்கி, விளையாட்டுக்கான அடிப்படை திறமைகளையும் குறிப்பிட்டுக் கற்பிக்க வேண்டும்.

ஆசிரியரின் தெளிவான செயல் விளக்கம், மாணவர்க்குக் கற்கின்ற ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

மாணவர்களை பல சிறு சிறு குழுக்களாகப் பிரித்து கற்றுக் கொள்ள, பயிற்சி பெற ஆசிரியர் உதவ வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் சென்று, உற்சாகப் படுத்த வேண்டும்.

பிறகு, மாணவர்களை அழைத்து, மீண்டும் அவர்களை குழுவாகப் பிரித்து, முழு ஆட்டத்தையும் ஆட விட வேண்டும். ஆட்டத்திற்குப் பிறகு அனைவரும் ஒன்றுகூடி, கலந் துரையாடினால், அது அவர்களின் திறமை வளர உதவும்.

6. தாள லய செயல்கள் (பயிற்சிகள்)

நளினமான உடல் இயக்க அசைவுகளை, நடனம் என்பார்கள். அதனைதாளமும் லயமும் நயமாக இணையச் செய்திட வேண்டும். ஆடிட வேண்டும்.

பரதநாட்டியம், கதகலி, மணிப்புரி, குச்சிப்புடி போன்றவை உயர்தரமான அபிநய நடனங்களாகும். (Classical Dance)

கும்மி, கோலாட்டம், பாங்க்ரா போன்ற நடனங்கள் குழுவாக ஆடுகிற கிராமிய நடனங்களாகும். (Folk dance)

உடற் பயிற்சிகளை மிகவும் ஒய்யாரமாக கண்கவர் முறையில் ஆடுகிற ஜிம்னாஸ்டிக்ஸ், லெசிம் போன்றவைகள்யாவும், தாளலயச் செயல்களுக்கு உதவுவனவாகும்.

தாளலய இயக்கங்களை முன்னேற்றம் தரும் பகுதி முறை கற்பிக்கும் வழியில் (Progressive part method) கற்பிக்கலாம்.

ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு காலடியாகக் (Step) கற்பிப்பது நல்லது.

முதல் காலடியைக் கற்பிப்பது (Step 1) பிறகு, இரண்டாவது காலடி இடுவதைக் கற்பிப்பது (Step 2). பிறகு முதலிரண்டு காலடிகளைக் கற்பித்து, 3வது காலடியைக் கற்பிப்பது. இப்படியாக, ஒவ்வொன்றையும் தனித்தனியே தெளிவாக, கூட்டாகக் கற்பித்தால், சிறந்த பயனை எதிர்பார்க்கலாம்.

கற்பிக்கும் ஆசிரியர்க்கு சில குறிப்புக்கள்

1. கற்பிக்கும் பயிற்சியை, முழுமையாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

2. முதலில் காலடி முறையைக் கற்பித்து, மாணவர்கள் நன்கு தெரிந்து கொண்ட பிறகு, கை அசைவு முறையைக் கற்பித்து, பிறகு இரண்டையும் இணைத்து முழுதாகக் கற்பிக்க வேண்டும்.

3. மாணவர்கள் கற்று க் கொள்ள கஷ்டப்படுகிற நேரத்தில், ஆசிரியர் பொறுமையாக, விடாமுயற்சியுடன் கற்பிக்க வேண்டும்.

4. தொடர்ந்து செய்கிற முயற்சியால் தான், எளிமை யாகக் கற்பிக்க முடியும். ஆகவே, எண்ணிக்கை முறையில் கற்பித்தல் நல்லது.

5. எளிமையான அசைவுகளிலிருந்து கஷ்டமான அசைவுக்கு, மாணவர்களை உற்சாகத்துடன் கொண்டு செல்ல வேண்டும்.

7. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள்

ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளை, சீருடல் பயிற்சிகள் என்று கூறலாம்.

தானே தனது உடலை சிறப்பாகக் கையாண்டு, சாகசம் மிகுந்த செயல்களைச் செய்வது தான் சீருடல் பயிற்சிகளாகும்.

இத்தகைய சீருடல் பயிற்சிகள் உடலுக்கு வலிமை, நல்ல திறமை உறுப்புக்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற ஆற்றல், தைரியம், தன்னம்பிக்கை, புத்திக்கூர்மை, மூன்உணரும் முன்னறிவு; விழிப்புணர்வு,சுறுசுறுப்பு: தேர்ந்த நெகிழ்ச்சி, துரிதமாக இயங்குதல், போன்ற வல்லமைகளை வளர்த்து விடுகின்றன.

ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளை 4 வகையாகப் பிரிக்கலாம்
1. நின்று நிலையாகச் செய்யும் பயிற்சிகள் (Static

gymnastics)

2. Goog Gouéolo Luisb%hoir (Dynamic gymnastics)
3. Graf 35moor Luosi,956;t (Light gymnastics)
4. Gugyoutraor Luo Sir (Heavy gymnastics)

1. நிலையாகச் செய்யும் பயிற்சிகள்

குழுவா ச் சேர்ந்து, கோபுரப்பயிற்சிகள் (Pyramids) செய்வதை, இதற்கு சான்றாகக் கூறலாம்.

ஒருவர் மேல் ஒருவர் நின்று அல்லது முதுகின்மேல் அமர்ந்து, அபபடியே படிப்படியாய் இருந்து, மனிதக் கோபுரம் கட்டுவது.

மிகவும் எச்சரிக்கையுடன், கருத்தான கவனத்துடன் இந்தப் பயிற்சிகளைக் கற்பிக்க வேண்டும்.

கற்பிக்கும் முறைகள்

1. கோபுரத்தின் அடித்தளத்தில் இருப்பவர்கள் கனமானவர்களாகவும்; மேலே அமர்பவர்கள் இலேசாக உள்ளவர்களாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

2. கையூன்றி தலைகீழாக நிற்றல், தலையில் நிற்றல், வளைந்து ஹலாசனம் செய்தல் போன்ற திறமைகள் உள்ள மாணவர்களாகவும் தேர்ந்தெடுக்கவும்.

3. அவசரம் இல்லாமல், நிதானமாக, கவனத்துடன் மாணவர்களை செய்யச் சொல்ல வேண்டும்.

எண்ணிக்கையில் கோபுரப் பயிற்சிகள் செய்யும் முறை

எண்ணிக்கை 1 : பயிற்சி செய்கிற மாணவர்கள், வர போக வசதியாக, முதலில் வரிசையில் நின்று கொள்ள வேண்டும்.
எண்ணிக்கை 2 : விசிலுக்குப் பிறகு, அடித்தளத்தில் இருப்பவர், அதற்கு மேல் இருப்பவர். அதற்கும் மேலே என்று வந்து, இருந்து கொள்ள வேண்டும்.
எண்ணிக்கை 3 : எல்லோரும் வசதியாக இருந்தபிறகு, விசில் ஒலி கேட்டதும், கோபுர முழு வடிவைக் காட்ட வேண்டும்.
எண்ணிக்கை 4 : விசிலுக்குப் பிறகு, கோபுரம் கட்டிய முறைபோலவே, இறங்கி கலைந்து செல்ல வேண்டும்.
குறிப்பு : 1. வயதுக்கேற்றவாறு, இனத்திற்கேற்றவாறு (Sex) பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
2 மெத்தைபோன்ற விரிப்புகளை, பாதுகாப்பு நிலைளைக் கவனித்து செய்து கொள்ளவும்.

2. விரைவியக்க ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் (Dynamic)

கற்பிக்கும் முறைகள்

1. தேர்ந்தெடுக்கும் பயிற்சிகள் எளிதாக இருந்து, பின் கஷ்டமானதாக இருக்குமாறு அமைய வேண்டும்.

2.ஆசிரியர் சொல் விளக்கத்துடன், செயல் விளக்கத்தையும் முழுமையாக, சரியாக செய்து காட்ட வேண்டும்.

3. மாணவர்கள் பயிற்சியை செய்கிற போது, ஆசிரியர் அருகிருந்து உதவ வேண்டும்.

4. மாணவர்கள் பிறரை கலாட்டா செய்யாமல், கேலிபண்ணிக் குழப்பாமல், வகுப்பை கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்க வேண்டும்.

5. மாணவர்களை சிறுகுழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவரை நியமித்து, பயிற்சி செய்யுமாறு பணிக்க வேண்டும். ஆனால் கஷ்டமான பயிற்சியின் போது, ஆசிரியர் அவசியம் அருகில இருக்க வேண்டும்.

6. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் செய்கிற சாதனங்கள் பழுதில்லாமல் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்

7. எல்லா மாணவர்க்கும் வாய்ப்பு வருவது போல் வகுப்பை நிர்வாகித்துக் கற்றுத் தரவேண்டும்.

8. எந்த நேரத்திலும் விழுதல், கை கால் பிடிப்புகள், போன்றவைகள் நடக்கக் கூடும் என்பதால், முதலுதவிப் பெட்டியும் அவசியம்.

9. முடியாத மாணவர்களை கட்டாயப் படுத்துவதோ, வலிந்து செய்ய வற்புறுத்துவதோ, தவறான அணுகு முறையாகும்.

8. தற்காப்புக் கலைகள்

திடீரென்று அல்லது திட்டமிடப் பட்டு, தன் மேல் நிகழப்போகின்ற ஆபத்துக்களை, தன்னம்பிக்கையான ஆற்றலுடன், தடுத்துக் காத்துக் கொள்கின்ற திறமைமிகு செயல்களையே தற்காப்புக் கலைகள் என்று அழைக்கின்றனர். 

இவை முக்கியமாக, 3 வகைப்படும். பல நூறு வகைகள் தற்காப்புக் கலைகளாக அழைக்கப்பட்டாலும், இங்கே நாம் 3 பிரிவுகள் பற்றியே தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

1. குத்துச்சண்டை (Boxing)
2. மல்யுத்தம் (wrestling)
3. கம்புச்சண்டை (Lathi fight),

1. குத்துச் சண்டை

பள்ளி மாணவர்களுக்குக் குத்துச் சண்டையைக் கற்றுத்தர பரிந்துரை செய்யப்படவில்லை என்றாலும், குத்துச் சண்டைத் திறன்களை, அவர்கள் கற்றுக் கொள்கிற போது, வாழ்வில் பல சூழ்நிலைகளில் வெற்றி பல பெற்று வாழ்வாங்கு வாழ உதவும்.

குத்துச் சண்டையான்து வீரம், விவேகம், விழிப்புணர்வு, சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, நேரம் அறிந்து நேர்த்தியாக செயல்படுதல் போன்ற குணங்களை வளர்த்து விடுகிறது.

குத்துச் சண்டைக்கு, நிறைய நெஞ்சுரம் (Stamina) : உடலுரம், வலிமையாகக் குத்தும் திறமை முதலியவை வேண்டும்.

குத்துச் சண்டைக்கான அடிப்படைப் பயிற்சிகள். சாலையில் ஒடிப் பழகுதல்; கயிறு தாண்டிக் குதித்தல்: கழுத்து, அடிவயிறு, கைகள் வலிமையாக்குவதற்கான பயிற்சிகள் முதலியன வேண்டும்.

கற்பிக்கும் முறை

1. முதலில் நிற்கும் நிலையை (Stance) கற்றுத்தர வேண்டும்.

2. நிற்கும் நிலை என்பது, உடலை சமநிலையாக வைத்துக் கொள்வது.

3. கால்கள் முன்னும் பின்னும், இருபுறமும் பக்க வாட்டில் விரைந்து இயங்குவது போல் கால்களை இயல்பாக வைத்து நின்று: எதிரியை ஒரு கையால் குத்துவதற்காக முன்புறம், மற்றொரு கையை எதிரியின் தாக்குதலைத் தடுத்து கொள்வதும் போன்ற முறையில் வைத்திருப்பதே, நிற்கும் நிலையாகும்.

4. இயங்குதல் என்பது கால்களின் இயக்கம் (Footwork) கைகளின் இயக்கம் (Arm movement) ஆகும். கைசளும் கால்களும் சேர்ந்து திறமையாக இணைந்து செயல்படுமாறு (Coordination) கற்பிக்க வேண்டும்.

5. தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தாக்கும் முறை களையும், தடுக்கும் திறன்களையும் (Blow and Block) கற்பித்த பிறகு, ஜோடி ஜோடியாக மாணவர்களைப் பிரித்து, பழகச் செய்யுதல்

6. தாக்கும் கலை, தடுக்கும் கலை இரண்டிலும் தேர்ச்சி பெற நுணுக்கங்களைக் கற்பித்தல்.

7. நன்கு பயிற்சி பெற்றவர்களை, போட்டியில் பங்கு பெறத்தக்க நுணுக்கத்தையும், தைரியத்தையும் ஊட்டுதல்.

குறிப்பு:

1.கைகளில் துணியால் கட்டுப்போட்டு கையுறைகள் மாட்டாமல்; வாயில் தடுப்புப் பொருள் (Mouth Piece) வைக்காமல், சண்டை செய்ய அனுமதிக்கக் கூடாது.

2. முதலுதவிப் பெட்டி வைத்திருப்பது மிகவும் அவசியம்.

2. மல்யுத்தம்

குத்துச் சண்டையைப் போலவே மல்யுத்தமும் சிறந்த தற்காப்புக் கலையாகும். தைரியம், தன்னம்பிக்கை, தாக்கும் ஆற்றல்கள்: சந்தர்ப்பத்திற்கேற்றவாறு புத்திசாலித்தனமாக இயங்குதல், தசைகளின் வலிமை, உறுப்புக்களின் உன்னத வலிமை, இவற்றையெல்லாம் மல்யுத்தம் வளர்க்கும் மேன்மையைப் பெற்றிருக்கிறது.

இதற்கான உடற்பயிற்சிகள் சில. தண்டால், பஸ்கிகள், மல்லர் கம்பப் பயிற்சிகள், குனிந்து எழுந்து உட்காருதல் (Push-up and Press-up), சாலை ஓட்டம், கயிறு தாண்டிக் குதித்தல், ஒழுங்குமுறைப் பயிற்சிகள் எல்லாம் நல்ல பயிற்சிகளே.

தேவைகள்

1. மல்யுத்தம் செய்ய மெத்தைகளை பயன்படுத்த வேண்டும்.

2. விரல்களில் நகங்கள் வெட்டப்பட்டிருக்க வேண்டும்.

3. நகைகள், அணியக் கூடாது. எண்ணெய் அல்லது வழுக்கும் திரவம் எதையும் மேனியில் தடவியிருக்கக் கூடாது

4. முதலுதவிப் பெட்டி முக்கியமான தேவையாகும்

மல்யுத்தத் திறன்கள்

1. எதிரியைப் பிடித்து வீழ்த்தக் கூடிய வகையில் நிற்கும் நிலை. அதாவது எந்த நிலையிலும் சமநிலை இழந்துபோய்விடாத வண்ணம், தரையில் உறுதியாக நிற்கும் நிலை.

2. எதிரியின் கைகளை, கால்களைப் பிடிக்கும் முறை (Holds)

3. எதிரியின் மேல் பிடி போடுவதுபோல: அவர் போடுகிற பிடிக்கு எதிர்ப்பிடி (Counter) போடுதல்.

4. எதிரியின் பிடியிலிருந்து விடுபடுதல். (Escapes)

5. எதிரி திமிறி வெளிவராதபடி, இடுக்கிப் பிடி போட்டு, தரையில் அழுத்துதல். (Pinning)

கற்பிக்கும் முறை

ஆசிரியர் மாணவர்களுக்கு, ஒவ்வொரு திறமையாக முதலில் விளக்கி, செயல்முறையில் செய்துகாட்ட வேண்டும்.

இந்தக் கலையில் அறிமுகமான மாணவர்களை, சிறுசிறு குழுவாகப் பிரித்த பிரிவுக்கு தலைவர்களாக வைத்துக் கற்றுத்தரச் செய்ய வேண்டும்.

இதற்கு பகுதி கற்பிக்கும் முறை பயன்படும்.

மாணவர்கள்கோபப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதை, ஆசிரியர் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும்.

மல்யுத்தப் போட்டிக்கென்று, சில முன்னோடிப் பயிற்சிகள் (Lead up Activity) உண்டு.

அ) காலால் போடும் மல்யுத்தம் (Leg Wrestling)

ஆ) கைத்தடி கொண்டு மல்யுத்தம் (Wand Wrestling)

இ) கையால் போடும் மல்யுத்தம் (Hand Wrestling)

இன்னும், இரட்டையர் போடக்கூடிய சிறுசிறு போட்டிகளும் உண்டு.

அவற்றை மாணவர்களுக்குக் கற்பித்து, மல்யுத்தத்தில் ஆர்வத்தையும் தேர்ச்சியையும் அதிகப்படுத்தி, ஆசிரியர் திறமையாகக் கற்பித்துப் பயன் சேர்க்கலாம்.

3. கம்புச் சண்டை

கம்புச் சண்டையை சிலம்பாட்டம் என்றும் கூறுவார்கள்.

தைரியம், தன்னம்பிக்கை, விழிப்புணர்ச்சி, வீரமுடன் செயல்படுத்தல் போன்ற இயற்கையான குணங்களை, மெருகேற்றி வளர்த்துவிடுகின்ற ஆற்றல், சிலம்பாட்டத்திற்கு உண்டு.

எதிர்கால வாழ்க்கைக்கு கம்புச் சண்டை பயன்படும் என்பதால், பள்ளி மாணவர்களுக்கு, அறிமுகப்படுத்துவதில் தவறேதும் இல்லை

வளைகோல் பந்தாட்டத்தில் பயன்படும் கோலை, லாவகமாக இயக்குவதுபோல, சிலம்பையும் லாவகமாக சுழற்றும் தன்மை எளிதாக மாணவர்களுக்கு ஏற்படும்.

இதற்கு கால் இயக்கம்; கம்புடன் உள்ள கை சுழற்றல்; அதற்கான நிற்கும் நிலை. இவற்றைக் கற்றுத் தருகிற ஆசிரியர், தவறுகள் செய்கிற மாணவர்களைத் திருத்தி, ஊக்குவித்துக் கற்பிக்க வேண்டும்.

தனித் தனியாக ஒவ்வொரு திறமையையும் கற்றுத் தந்த பிறகு, இருவர் இருவராக கம்புச் சண்டை போடச் செய்யலாம்.

தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள் இருவரும், சம அளவில் திறமையுள்ளவர்களாக இருப்பவர்களாக இருந்தால், போட்டியும் நன்கு அமையும். ஆபத்தும் அதிகம் ஏற்படாது.

தாக்கவும், தடுக்கவும் கூடிய நிலையில் காயம் ஏற்படலாம். முதலுதவிப் பெட்டி கைவசம் வைத்திருப்பது நல்லது.

9. ஒடுகளப் போட்டி நிகழ்ச்சிகள்

ஒவ்வொருவர் உடலிலும் நிறைந்து ஊடாடிக் கொண்டிருக்கின்ற இயற்கையான செயல்களான ஒடுதல், தாண்டுதல், எறிதல் போன்றவற்றை, வளர்த்து விடவும், வலிமை கொள்ளவும் , மேன்மை பெறவும் உதவுகின்ற முறைகளே, ஒடுகளப் போட்டிகள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.

ஒடுகளப் போட்டிகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு பிரிவில் உள்ள நிகழ்ச்சிக்கும் தனித் தனியேயான திறன் நுணுக்கங்கள் இருக்கின்றன.

ஆசிரியர்கள் நிகழ்ச்சிக்கேற்ற திறன் நுணுக்கங்களையும், கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கேற்ற அறிவு நிலை, ஆற்றல் நிலை, எழுச்சி நிலை, ஏற்ற நிலை முதலியவற்றை அறிந்துகொண்டே, அதற்கேற்ப கற்பிக்கவேண்டும்.

மாணவர்களுக்குக் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை நிறைய நல்கி, அவ்வப்போது ஏற்படும் குறைகளைத் திருத்தி, அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்து, கற்பித்திட வேண்டும்.

சில குறிப்புக்கள்

1. உடலை நன்கு வேகமாகவும், தீவிரமாகவும் ஒரு நிகழ்ச்சியில் ஈடுபடுத்துவதால், மாணவர்களுக்கு பதப் படுத்தும் பயிற்சிகளை கொடுக்காது, எந்த நிகழ்ச்சியையும் செய்யுமாறு கூறக் கூடாது.

2. மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படா வண்ணம், பாதுகாப்பாகக் கற்பிக்க வேண்டும் (தாண்டுதல், எறிதல் திகழ்ச்சிகள்)

3. முதலுதவிப் பெட்டியைத் தயாராக வைத்திருக்கவும்.

பழுது படாத சாதனங்களாகப் பார்த்து, பயன்படுத்திட வேண்டும்.

இனிமேல், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உரிய முக்கிய திறன்கள் (Skills) என்னென்ன என்பதை மட்டும் கொடுத்துச் செல்கிறோம். ஆசிரியர்கள் மேலும் விளக்கமாக அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு போதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

1. ஓட்டத்திற்கான கிகழ்ச்சிகள்

ஒட்ட நிகழ்ச்சிகளை மூன்று நிலையாகப் பிரிக்கலாம்.

1. விரைவோட்டம் (Sprint)

2. இடை நிலை ஓட்டம் (Middle distance Race)

3. நெடுந்தூர ஒட்டம் (Long distance Race) விரை வோட்டத்தை ஓடத் தொடங்குபவர்கள், மூன்று வகையாக அமர்ந்திருந்து ஓடத் தொடங்குவர். அந்த ஓட்டத் தொடக்கத்திற்குரிய பெயர்கள்

அ) குவி நிலைத் தொடக்கம் (Bunch Start)

ஆ) இடை நிலைத் தொடக்கம் (Medium Start)

இ) நீள் நிலைத் தொடக்கம் (Long Start)

இந்த மூன்று நிலைகளிலும், எவ்வாறு அமர்வது என்பதை ஆசிரியர், மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

ஓட உதவும் சாதனத்தில் (Starting Block) எப்படி அமர்வது என்பதையும் பயிற்சியளிக்க வேண்டும்.

ஓட விடுபவர் (Starter) எப்படி ஓட விடுவார்? அவரது கட்டளைகள் எப்படி எழும் என்பதையும் விளக்க வேண்டும்.

உங்களிடத்தில் உட்காருங்கள் (on your marks)

தயாராக இருங்கள் (Set)

ஓடுங்கள் அல்லது துப்பாக்கி ஒலி (Go or Gun)

எப்படி ஓட வேண்டும் என்பதையும் ஆசிரியர் விளக்க வேண்டும்.

மூன் பாதங்கள் மட்டுமே தரையில் பட, கைகள் இரண்டையும் முன்னும் பின்னும் விரைவாக வீசி ஓட வேண்டும்.

ஓட்டத் தொடக்கத்தில் இருந்த வேகத்தை விட, ஓட்ட எல்லையை நெருங்க நெருங்க, அதிக வேகத்துடன் பாய்ந்தோட வேண்டும்.

எல்லைக் கோட்டைக் குறிக்கும் நாடாவை முதலில் தொட முயற்சிக்க வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிக் கூற வேண்டும்.

நீண்டதூர ஓட்டத்தின் தொடக்கத்திற்கு,

உங்களிடத்தில் நல்லுங்கள் என்று கூறியவுடன் துப்பாக்கி ஒலி கிளம்பும். உடனே ஓடத் தொடங்க வேண்டும் என்பதையும் மாணவர்களுக்குக் கூற வேண்டும்.

இனி தாண்டும் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்

தாண்டுகின்ற நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகளை மட்டும் இங்கே கூறியிருக்கிறோம். அவற்றை எவ்வாறு செயல் படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் விளக்குவது முக்கியம் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறோம்,

குறிப்பு மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டு மென்றால் நான் எழுதியிருக்கும் "நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம் என்ற புத்தகத்தைப் படித்து பயன்படுத்திக் கொள்ளவும்.

1. நீளம் தாண்டல் (Broad jump)

தாண்டுவதற்கு முன், தேவையான பதப்படுத்தும் பசிற்சிகளைச் செய்யச் சொல்லவும்.

தாண்டுவதற்குறிய வலிமையான கால் (Strong leg) எது என்பதைக் கண்டறிய, மாணவர்களை பல முறை ஓடி வந்து தாண்டச் செய்து, கண்டுபிடித்திடச் செய்யவும்.

மெதுவாக முதலில் ஓடி வந்து தாண்டச் செய்யவும், மணற்பரப்பைப் பார்த்தே தாண்டாமல், மேலே பார்த்து தாண்டச் சொல்லவும்.

உயரமாக 8 அடிக்குள்ளாக ஒரு பலூனைக் கட்டி விட்டு, ஓடி வந்து துள்ளி தாண்டுகிறபோது, தலையில் பலூனை இடிப்பது போல உயரமாகத் தாவிக் குதிக்கச் செய்யவும். (Heading the baloon)

தாண்டி மணற் பரப்பில் குதிப்பதற்கு முன், காற்றில் நடப்பது போல, கால்களை முன்புறமாக நீட்டிக் காலுன்று மாறு பழக்கவும் (Hitch Kick)

நான்கு பிரிவுகள் இதில் உண்டு.

1. உதைத்தெழும் பலகை வரை ஓடி வருதல் (Approach)

2. பலகையில் உதைத்தெழல் (Take-off)

3. காற்றில் நடத்தல் (Walking in the air)

4. மணற்பரப்பில் காலூன்றல் (Landing)

அணுகு முறைக்கு 16 தப்படி காலடி முறை (16 Steps) அல்லது 20 தப்படி காலடி முறையைக் கற்பிக்கவும்,

2. மும்முறைத் தாண்ட ல் (Triple Jump)

பொருத்தமான பதப்படுத்தும் பயிற்சிகளைச் செய்து முடித்த பிறகு, நின்று கொண்டே மும்முறைத் தாண்டும் பயிற்சியைத் தரவும். (Standing Triple Jamp).

இதற்கு நீளத்தாண்டல் போல ஓடி வந்து, வலிய காலால் தாண்டி அதே காலில் தரையில் ஊன்றி, (Hop) அடுத்த காலில் ஒரு தப்படி வைத்து, பிறகு, (Step மணற் பரப்பில் இரு கால்களாலும் காலூன்றுதல் (Jump).

இந்த முறையை ஓடி வந்து செய்யச் சொல்லவும்.

தாவி தப்படி வைத்துத் தாண்டல் என்பது மூன்று முறை தாண்டுவது போல அமைவதால், அதை 3 : 2 : 3 என்ற விகிதத்தில், ஓடிவரும் பரப்பில் குறித்து வைத்துத் தாண்டிப் பழக்கவும்.

பிறகு மணலில் காலூன்றும் முறையைக் கற்றுத் தரவும்.

உதைத்தெழும் பலகையை நோக்கி வருகிற சரியான அணுகு முறையை, உரிய வழியில் பழக்கவும். (Check Mark)

3. உயரம் தாண்டல் (High Jump)

உயரம் தாண்டலில் 4 வகைகள் உண்டு.

1. கத்தரிக்கோல் தாண்டு முறை (Scissor Cut)

2. மேற்கத்திய உருளல் தாண்டு முறை (Western Roll)

3. குறுக்குக் கம்பு மேல் உருளல் முறை (Belly Roll)

4. பாஸ்பரி தாண்டு முறை (Fosbury Flop)

பொருத்தமான பதப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

கால்களை தரையில் வேகமாக உதைத்துத் துள்ளித் தாண்டி மணற்பரப்பில் குதிக்கவும். இந்தப் பயிற்சியை குறுக்குக் கம்பம் (Crossbar) இல்லாமலே பழகவும்.

இந்த முறையில், தரையில் உதைத்து எழுகின்ற காலாலேயே (Take off leg) மணற்பரப்பில் ஊன்ற வேண்டும். பின்னால் வரும் அடுத்த காலை (Rear leg), நன்கு உயர்த்தி, உயரமாகக் கொண்டு வருமாறு பழகவும்.

குறுக்குக் கம்பம் இல்லாமல் பழகியது போல, குறுக்குக் கம்பத்தை இடதுபுறம் உயர்த்தி, தாண்டுகிற பக்கம் தரையில் இருப்பது போல வைத்து, தாண்டச் சொல்லவும்.

இடது காலால் தாண்டுவோருக்கு வலது புறத்தில் குறுக்குக் கம்பம் தரையிலும், வலது காலால் தாண்டு வோருக்கு வலது புறத்தில் தரையில் இருப்பது போல் வைத்துத் தாண்டச் செய்யவும்.

கம்பு மேல் உருண்டு தாண்டும் முறையை, 30 அல்லது 40 டிகிரி கோண அளவில் ஓடி வந்து தாண்டுமாறு கற்பிக்கவும். 5 அல்லது 7 தப்படிகளில் விரைவாக ஓடி வந்து தாண்டுகிற உத்தியை உணர்த்தவும். இதற்குரிய அடையாளக் குறிப்பை (Check Mark) சரியாக அமைத்துக் கொள்ளக் கற்பிக்கவும்.

4. கோலூன்றித் தாண்டல்

பொருத்தமான பதப்படுத்தும் பயிற்சிகளைத் தரவும்.

தாண்டவருகிறவர் இடது கைப் பழக்கமுள்ளவரா அல்லது வலதுகை பழக்கம் உள்ளவரா என்பதை முதலில் கண்டறியவும்.

தாண்ட உதவுகின்ற கோலை, எப்படிப் பிடிப்பது என்பதைக் கற்றுத் தரவும். வலதுகைப் பழக்கம் உள்ளவருக்கு கைப்பிடிப்பில் இடதுகைக்கு மேலாக வலதுகை இருப்பது போல் பிடிக்கச் செய்யவும், இடது கையருக்கு வலதுகைக்கு மேலாக இடதுகை இருக்க வேண்டும்.

கோலுடன் சீரான வேகத்துடன் ஒடி வருகின்ற முறையைக் கற்றுத் தரவும்.

கோலுடன் ஓடி வருகின்றவர். ஓடி வருகின்ற திசையை நோக்கி, தோள் அளவு சரியான கோணத்தில் (Right Angle) அமைந்திருப்பது போல, ஏந்திக் கொண்டு வரவேண்டும்.

ஏந்தி வரும் கோலானது, முன்னும் பின்னும் போய்வராமல், பிடித்துக் கொள்வது நல்லது.

கோலுடன் ஓடி வந்து, கோலை முன்புறமுள்ள கோலூன்றும் பெட்டியில் சரியாக ஊன்றுகின்ற முறைக்கு, நிறைய பழக்கம் தேவை.

தரையில் இருந்தே கோலை ஊன்றி, ஒரு காலால் தரையை உதைக்துத் துள்ளி, கோலுடனே உடலை ஒட்டியவாறு உயரே தாக்கித் தாண்ட முயற்சிப்பதைத் தவறின்றிச் செய்திடப் பழக்கவும்.

இப்படிப் பழகி, குறுக்குக் கம்பத்தைக் கடக்கிறபோது மேலே செல்வதற்கும், தலைகீழாக நிற்பது போல, கம்பின், பிடியிலிருந்து, கால்களை மேலே உயர்த்தி, கம்புக்கு மேலாக உடம்பை வளைத்துக் குதிப்பதும் ஒரு அரிய கலையாகும்.

குறைந்த உயரத்தில் குறுக்குக் கம்பத்தை வைத்து, பல முறை கோலுடன் ஓடி வந்து, பெட்டியில் கோலை ஊன்றி, ஒரு காலால துள்ளித் தாண்டி, உயர்ந்து சென்று. இலாவகமாக குறுக்குக் கம்பத்தைக் கடக்கும் முறையை ஒவ்வொன்றாகக் கற்றுத் தரவும்.

சரியான அடையாளக் குறிப்பை அமைத்துத்தர ஆசிரியர் உதவ வேண்டும்.

எறியும் நிகழ்ச்சிகள் (Throws)

1. குண்டு எறிதல் (Shot put)

பொருத்தமான பதப்படுத்தும் பயிற்சிகள் தருதல்.

இரும்புக் குண்டினை எப்படி கையில் எடுப்பது; எப்படி பிடிப்பது (Hold) என்பதைக் கற்றுத் தருதல்.

இரும்புக் குண்டினை நின்று கொண்டு எறிவதற்குப் பயிற்சி அளித்தல்.

எடை குறைந்த இரும்புக் குண்டைப் பயன்படுத்தி, எறியப் பழகுமாறு வாய்ப்புகளைக் கொடுத்தல். இதனால், எறியும் மாணவர்களுக்கு, மனத்தெம்பினை வளர்த்திட முடியும்.

பிறகு, கையில் வைத்திருக்கும் குண்டினை, எப்படி விரல்களால் தள்ளிட வேண்டும்? (Finger Flip) என்பதை விளக்கி, எறியுமாறு பழக்குதல்.

நின்று கொண்டே, இரும்புக் குண்டை விரல்களால் தள்ளி, உயரே, உயரமாக எறிந்து பழகுதல்.

அதற்காக, அதாவது எறியதற்கு முன் நிற்கும் நிலை (Stance) பழகுதல். உடல் சக்தியை முழுவதும், இரும்புக் குண்டினை எறியும் கைக்குக் கொண்டு வரப் பயிற்சியளித்தல்.

குண்டை எறிந்த பிறகு, உடல் சமநிலையை இழக்காமல் வட்டத்திற்குள்ளே நின்றிடப் பயிற்சியளித்தல்.

இப்படி ஒவ்வொரு திறனையும் கற்றுத் தந்து, பிறகு மொத்தமாக அனைத்துத் திறனையும் செய்ய வைத்தல்.

2. தட்டெறிதல் (Discus Throw)

பதப்படுத்தும் பயிற்சிகளை அளித்தல்.

தட்டினை, எவ்வாறு விரல்களால் பற்றிப் பிடிப்பது என்ற முறையை விளக்குதல்.

முதற்கட்டமாக, எறிதட்டினை, விரல் சக்தியைப் பயன் படுத்தி, தரை மீது ஓடுவதுபோல, உருட்டி விடுதல். அதற்குப் பயன்படும் சுட்டுவிரலைப் பயன்படுத்தும் நுணுக்கத்தை விளக்குதல்.

அடுத்து, தரைக்கும் மேலே அந்தரத்தில் (Air), தட்டு சுழன்று போவது போல, சுட்டு விரலால் சுழற்றி எறியச் செய்தல்.

பிறகு, நின்று கொண்டே தட்டெறியச் செய்தல்.

அதற்குப் பிறகு, வட்டத்திற்குள்ளேயே சுற்றுகிற ஆரம்பச் சுழற்சிகளை (Priliminary Swings), தட்டு இல்லாமல் சுற்றிடக் கற்றுத் தருதல்.

இப்படி சுழலக் கற்றுத் தந்த பிறகு, தட்டுடன் சுற்றி, தட்டை வீசி எறியக் கற்றுத் தருதல்.

தட்டானது, கடிகாரம் சுற்றுவது போன்ற திசையில், (Clock wise) சுழலும் முறையில் சுழன்று போவது போல எறிய வைத்தல்.

இப்படி எல்லா அடிப்படைத் திறன்களையும் மாணவர் கள் கற்றுக் கொண்ட பிறகு, மொத்தமாக அனைத்துத் திறன்களையும் சேர்த்து, தட்டெறியச் செய்தல்.

3 வேலெறிதல் (Javelin throw)

தேவையான பதப்படுத்தும் பயிற்சிகளைத் தருதல்.

வேலினை, எப்படிப் பிடிப்பது என்கிற பிடிமுறையை (Grip) முதலில் கற்றுத் தருதல்.

தோளுக்கு மேலே, வேலினை எவ்வாறு பிடித்துக் கொண்டிருப்பது என்பதையும் சொல்லித் தருதல்.

வேலினைப் பிடித்திருக்கும் கை எது என்பதை தீர்மானித்த பிறகு, வேல் இல்லாமல், வெறும் கை கொண்டு. உடலைத் திருப்பி (Turn) எப்படி எறிவது என்பதைக் கற்றுத் தருதல்

பிறகு, வேலுடன் நின்று கொண்டு எறிதல்.

ஓடிவந்து, வேலெறிகிற விதத்தைக் கற்றுத் தருதல்.

எறிகிற நேரத்தில். குறுக்குத்தப்படி (Cross step) வைக்கும் முறையை நுணுக்கமாகக் கற்றுத் தருதல்.

அதற்கான, அடையாளக் குறிகளையும் (Check marks) குறித்து, நிறைய முறை, ஓடிவந்து எறியுமாறு செய்தல்.

சங்கிலிக் குண்டு வீசுதல் (Hammer throw)

பொருத்தமான உடற்பயிற்சிகளைத் தருதல்.

சங்கிலிக் குண்டினை எப்படிப் பிடிப்பது, எவ்வாறு நிற்பது என்பதை சொல்லித் தருதல்.

சங்கிலியைப் பிடித்தபடி, எப்படி சுழற்றுவது என்கிற ஆரம்பச் சுற்று முறையைக் கற்றுத் தருதல்.

ஆரம்பச் சுழற்சிக்காக, எடை குறைந்த குண்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தட்டு எறிவது போல, இதற்கும் கால் தப்படியும் சுழலும் முறையும் (Foot work) உண்டு. அதனை, ஒவ்வொரு காலடியாகக் கற்றுத்தரவும்.

முதலில் ஒரு சுற்று (One turn) பிறகு எறிதல்.

பிறகு இரண்டு சுற்றுச் சுற்றி எறிதல்.

பிறகு, மூன்று சுற்றுக்களைச் சுற்றி எறிதல்.

இப்படியாக, முழுமையாக எறியப் பயிற்சியளித்தல்.

இதுவரை, ஓடுகளப் போட்டிகளைக் கற்றுத் தருகிற முறைகளையெல்லாம் கண்டறிந்து கொண்டோம்.

10 . நீச்சல் போட்டி நிகழ்ச்சிகள்

நீச்சல் என்பது நிறைந்த பயன்களை நல்குகின்ற நல்லதொரு உடற்பயிற்சியாகும். உடல் உறுப்புக்கள் அனைத்தையும் இயக்குகின்ற அளவில் அமைந்திருப்பதுடன், சிறந்த பொழுது போக்கு அம்சமாகவும், மகிழ்ச்சிதருகின்ற சம்பவமாகவும் நீச்சல் இருக்கிறது.

மாணவர்களுக்கு எளிதாக நீந்தும் கலையைக் கற்றுத் தரலாம் என்றாலும், அபாயம் நிறைந்துள்ள இதனை, சற்று எச்சரிக்கையுடன் செயல்பட்டால், சிரமமின்றி சந்தோஷமாக்கிக் கொள்ள முடியும்

முக்கியமான பாதுகாப்புக் குறிப்புகள்.

1. ஆழமில்லாத இடத்தில் தண்ணீர் குறைந்துள்ள இடத்தில், நீச்சல் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

2. தூய்மையான தண்ணீர் உள்ள குளத்தில், நீச்சல் கற்றுத் தருவது நல்லது.

3. மிதக்கின்ற ரப்பர் வளையங்கள், கயிறுகள், கிடைப்பதாக இருந்தால், பயிற்சிக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

4. முதலுதவி சாதனப் பெட்டி கூடவே இருப்பது நல்லது.

5. தோல் வியாதி மற்றும், நோயாளிகள் நீச்சல் குளத்தில் இறங்காமல், பார்த்துக் கொள்ளவும்.

6. மாணவர்கள் தண்ணீரில் இறங்க, குளிக்க, குதித்து விளையாட ஆர்வமாகத் தான் இருப்பார்கள். அவர்களின் ஆசைக்காக, அப்படியே விட்டு விடுவது, ஆபத்தான விஷயமாகும்.

ஆகவே, கொஞ்சங் கொஞ்சமாக, அவர்களுக்கு இந்தக் கலையைக் கற்றுத் தர வேண்டும்.

1. தண்ணீரில் நின்று கொண்டு, கழுத்தளவு இருந்து தண்ணீரைப் பயமின்றி சந்திக்கும் துணிவை வளர்த்தல்.

2. தண்ணீரில் மிதக்கும் கலையைக் கற்றுத் தருதல். (Water Balance)

3. தண்ணீருக்கு மேலே மிதந்து, முன்னேறச் செய்தல்.

4. தண்ணீருக்குள் மூச்சடக்கிக் கொள்கிற பயிற்சியை அளித்தல்.

5. பிறகு, தண்ணீரில் ஊர்ந்து செல்கிற நீச்சல் பயிற்சியை (Crawl stroke) கற்றுத் தருதல்.

6. கால்களை பின்புறமாக வேகமாக உதைத்து முன்னேறும் வலிமையை வளர்த்து விடுதல். (Leg kick)

7. தண்ணீரைக் கைகளால் கிழித்து, ஒதுக்கி முன்னேறும் வல்லமையைக் கற்றுத் தருதல். (Arm movement)

பிறகு, ஒவ்வொரு நீச்சல் முறையையும், தொடர்ந்து கற்றுத் தரலாம்.

ஆனால், நீச்சல் பயிற்சியில் முழு நேரமும், ஆசிரியர் அருகே இருக்க வேண்டும். அவரது கண்காணிப்பும் உதவியும் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆசிரியர் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பது மிக மிக அவசியமாகும்.