உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/கற்றலில்

விக்கிமூலம் இலிருந்து
3. கற்றலில் வளர்ச்சியும் எழுச்சியும்
(PSYCHOLOGY OF LEARNING)

கல்வியின் நோக்கம்

கல்வியின் நோக்கமானது, குழந்தைகள் நடத்தையில் சில விசேஷமான, விருப்பமான மாற் றங்களை ஏற்படுத்துவது தான்.

அந்த மாற்றங்கள் நிகழ்வது, அவர்கள் பெறும் அனுபவங்களால் தான்.

அனுபவங்கள் என்பது, அவர்கள் தேவைகளைத் தீர்த்துக் கொள்ள முயலுகிறபோதும்; தங்கள் ஆர்வங்களை நிறைவேற்றிக் கொள்கிறபோதும், ஏற்படுகிற நிகழ்ச்சிகளின் தொகுப்பாகும்

ஒருவரது நடத்தையில், எண்ணங்களில், நடைமுறையில், உணர்ச்சிகளில் ஏற்படுகிற மாற்றங்களைக் கொண்டே, அவர் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று அறிய முடியும் என்கிறார் ஒரு மேல்நாட்டறிஞர்.

கற்கும் தொடர்நிலை

கற்றல் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஏற்படுகின்ற தொடர் நிகழ்ச்சியாகும்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்படுகின்ற சூழ்நிலைக் கேற்ப, செயல்படும்பொழுதே, கற்றுக் கொள்ளவும் செய்கின்றார்.

அப்படிக் கற்றுக் கொள்கிறபோது, அறிவால் வளர்கிறார். ஆத்மார்த்தமாகவும் உயர்ந்து கொள்கிறார்.

இவ்வாறு கற்கும் தொடர் நிலை என்பது, பல காரணங்களால் நிகழ்கிறது. நிறைவு காணுகிறது.

1. கற்பவரின் தேவைகள் (Needs of the Learner)

ஒவ்வொருவரும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, செயல்படுகிற எதிர்வினையின் காரணமாக, கற்றுக் கொள்பவராகிறார்.

ஒருவரின் தேவை அதிகமாகும்போது, அல்லது சூழ்நிலை கடினமாகவோ. கொடுமையாகவோ நேர்கிற போது, அவரின் செயலும் சிந்தனையும் மேலும் விரிவடைகிறது. அவருக்குக் கற்கும் திறமை மிகுதி பெறுகிறது.

ஆகவே, 'தேவைகளே கண்டுபிடிப்பின் தாய்' என்பது போல, தேவைகளும், ஆர்வமும், ஆசையும், ஒருவரை முனைப்புடன் ஈடுபடச் செய்கின்றன. பாடுபட வைக்கின்றன. தேடித் திரிந்து தீர்த்துக் கொள்ளும் அறிவை விரிவுபடுத்துகின்றன. செறிவுபடுத்துகின்றன.

2. கற்பதற்குத் தயார் நிலை (Readiness to learn)

கற்க வேண்டும் என்று ஏற்படுகின்ற ஆர்வமே, சிறப்பாகக் கற்க உதவுகிறது. உத்வேகம் அளிக்கிறது. உற்சாகம் ஊட்டுகிறது.

கற்பவர் கற்கத் தயார் நிலையில் இல்லை என்றால், அங்கே கற்றல் நடைபெறாது. கசப்பான உணர்வுகளே கால் பரப்பிக் கிடக்கும்.

நோய் வந்த போதும், உடல் உறுப்புக்கள் பழுதடைகிற போதும்; வீட்டில், சமுதாயத்தில் அவருக்கு சுமுக நிலை இல்லாத போதும், ஒருவாத கற்கும் மனநிலையில் தேக்கம் பிறக்கிறது. ஊக்கத்தையும் இழக்கிறது.

ஆகவே, கற்பவர் மனநிலை, உடல்நிலை, உற்சாக நிலை, இலட்சியநிலை இவைகளே கற்கத் தூண்டும்.

3. வாய்ப்புகள் வழங்கும் சூழ்நிலை (situation)

சுற்றுப்புற சூழ்நிலை போல, கற்றலுக்கும் உரிய சரியான சந்தர்ப்பங்கள், கற்றலில் வேகத்தையும், நல்ல தரத்தையும் வழங்குகிறது.

ஆகவே, ஆசிரியர்கள், மாணவர்கள் கற்பதற்குரிய நல்ல சூழ்நிலையை முதலில் உருவாக்கித் தரவேண்டும்.

வீட்டில், சமுதாய அமைப்பில், பள்ளிகளின் சுற்றுப் புறத்தில், புதிது புதிதாகக் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு. என்றாலும், சிறப்பாகக் கற்றுக் கொள்ளும் திறன், மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிற சூழ்நிலையைப் பொறுத்தும், அது வழங்குகிற வாய்ப்பைப் பொறுத்துமே அமைகிறது.

4. செயல்படும் விதமும் வேகமும் (Interaction)

மாணவர்களின் தேவைகளும், அவர்கள் கொண்டிருக்கும் இலட்சிய நோக்கும் ஏற்படுத்துகிற தூண்டுதல்களுக்கு ஏற்ப, அவர்களின் செயல்படும் விதமும், வேகமும் அமைந்துவிடும்.

தேவைகளைத் தடுக்கும் தடைகளும், எதிர்ப்புகளும், அவர்களின் அறிவை நுணுக்கமாகப் பயன்படுத்துவதன் மூலம், புதிது புதிதாகக் கற்றுக் கொள்ளும் விதத்தை, வேகப்படுத்துகிறது. விவேகப்படுத்துகிறது. திருப்திபடுத்து கிறது. தீர்க்கமாக சிந்திக்கத் தூண்டுகிறது.

இத்தகைய செயல்படும் தூண்டுதலும், செயல்பாடும், கற்பனையை, அறிவுச்செறிவை, கட்டுப்படுத்தி, வளர்த்து, கணக்காகக் காரியமாற்றத் துணைபுரிகிறது.

இப்படிப்பட்ட இனிய கற்கும் விளைவுகளை ஏற்படுத்தும் வேறு சில தூண்டுதல்களும் உண்டு. அவை பின்வருமாறு.

1. சுற்கும் விருப்பத்தை ஊக்குவித்தல் (Motivation).

2. மனதுக்குள்ளே பாதுகாப்பான ஒரு எண்ணம் வளரும் வகையில் உற்சாகம் அளித்தல்.(Psychological Safety)

3. பங்கு பெறச் செய்து, ஆய்வு செய்ய உதவி, அவர்களின் ஆர்வத்தை நிறைவேற்றி வைத்தல். (Experimentation)

4. கற்றுக் கொண்டே வருகிறபோது, முன்னர் கற்றதை நினைவுபடுத்தி, மேலும் கற்க, புதியதைக் கற்க துணைபுரிதல். (Feedback)

5. பயிற்சியே பக்குவத்தை உண்டாக்குவதால் திரும்பத் திரும்ப, பயிற்சி செய்ய உதவுதல். (Practice).

6. கற்றலின் தன்மையறிந்து பாராட்டி கௌரவித்தல்.

இவ்வாறு எல்லா வழிகளிலும் கற்கிறபோது, ஏற்படுகிற இன்பம், எழுத்தால் வருணிக்க முடியாத ஒன்றாகும்.

ஆனாலும், கற்றலினால் உண்டாகின்ற வளர்ச்சியும் எழுச்சியும், கற்பவர்க்கு எப்படி அமைகிறது என்பதையும் நாம் காண்போம்.

1. கற்பது நல்ல வளர்ச்சியை நல்குகிறது. அதாவது உடலாலும், உள்ளத்தாலும், ஏற்படுகிற வளர்ச்சியே அது.

2. புதிது புதிதாகத் தோன்றும் சுற்றுப்புற சூழ்நிலைக்கேற்ப நெகிழ்ந்தும், வளைந்தும், ஒன்றியும், ஒதுங்கியும், மாற்றியும் மாறியும் கொள்கிற மனப்பக்குவத்தை கற்றல் கொடுக்கிறது.

3. கற்றல், நல்ல நிர்வாகத் திறனை வளர்த்து விடுகிறது. அவ்வப்போது ஏற்படுகிற புதிய அனுபவம், பழைய அனுபவம் இவை தரும் வளமே அது.

4. கற்றல் நல்ல இலட்சியத்தையும், நல்வாழ்வு நோக்கத்தையும் அளிக்கிறது.

5. கற்றல் அறிவுக் கூர்மையை வளர்த்து விடுகிறது.

6. கற்றல் ஒருவரின் சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் துணிவையும், நம்பிக்கையையும் - அளிக்கிறது.

7. கற்றல் நல்ல முன்னுணரும் அறிவை விளைவித்துத் தருகிறது.

ஆகவே, கற்பதினால், கற்பவருக்கு நல்ல வளர்ச்சியும், ஏற்றம் தரும் எழுச்சியும் எடுப்பாகக் கிடைக்கிறது. என்கிற உண்மை நிலை எல்லாம், எல்லோருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல், தெளிவாகவே தெரிகிறது.