உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/கற்பிக்க

விக்கிமூலம் இலிருந்து
4. கற்பிக்க உதவும் துணைப் பொருட்கள்
(TEACHING AIDS)

கற்பிக்கும் வழிகளில், செயற்கை முறை, இயற்கை மூறை என்று முன்ன தாகக் கூறியிருந்தோம்.

செயற்கையான போதிக்கும் முறை என்பது, வாய் மொழி மூலமாகவே விளக்கம் அளிப்பது. செயற்கை மூறையால் கற்கிற மாணவர்களுக்கு மறைமுகமான அனுபவங்களே (Indirect Experience) கிடைக்கிறது.

இயற்கையான போதனை முறை என்பது, மாணவர்கள் தாங்களே நேரடியாகப் பங்கு பெற்று, கண்டு கேட்டு, உற்று அறிவதாகும் மாணவர்கள் சுற்றுலா செல்வது போன்ற அனுபவ முறை.

செயற்கை முறையில், ஓர் ஆசிரியர் கற்பனையில் உருவாக்கி, கனிவார்ந்த சொற்களைப் பயன்படுத்தி, கவர்ச்சியான வழியில், கேட்பவர் புரிந்து கொள்ளுமாறு கற்பிக்கும் பணியாற்றுகிறார்.

இயற்கை முறை என்பது, ஓர் ஆசிரியர் இயற்கையான பிரதேசங்களையும், இடம் பெற்றிருக்கும் சூழ்நிலைப் பொருள் களையும் காட்சிப் பொருளாகக் காட்டிப் போதிப்பதாகும்.

தான் கற்பிக்கப் போகின்ற பாடப் பொருளுக்கு ஏற்ப, ஓர் ஆசிரியர் உண்மையான பொருட்களை நேரில் காட்டி, நெஞ்சில் படும்படி நினைவில் நிறுத்தி, தன் கற்பித்தலை மேம்படுத்திக் காட்ட உதவுகின்ற பொருட்களையே துணைப் பொருட்கள் என்று கூறுகிறோம்.

இப்படிப்பட்ட துணைப் பொருட்களை நாம் 3 பிரிவாகப் பிரித்து அறியலாம்.

1. சமுதாய சூழ்நிலை (Community)

2. கிளைப் பாடத் திட்ட செயல்கள் : (Co-curricular Activities)

3. கண்டும் கேட்டறியும் உதவிப் பொருட்கள் (Audio - visual aids)

1. சமுதாய சூழ்நிலை

மனிதனை கூடி வாழும் மிருகம் என்பார்கள். மனிதர்கள் கூடி வாழ்வதைத் தான் சமுதாய அமைப்பு என்கின்றனர். தனிப்பட்டவர்கள் தங்கள் உரிமைகளைக் காத்துக் கொண்டு, பொதுமைகளுக்குக் கட்டுப்பட்டு, ஒன்றுபட்டு, உணர்வாலும் செயலாலும் கட்டுக் கோப்புடன் வாழ்வதையே சமுதாயம் என்கிறோம்.

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக சகலவிதமான ஆக்க வேலைகள் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வேலைகளே கட்டிடமாக, கலா சாலையாக, காட்சியகமாக அமைந்து விடுகின்றன.

அத்தகைய இடங்களை மாணவர்கள், நேரில் பார்க்கிற போது, அவர்களால் உண்மையை உணர முடிகிறது.

அவசியத்தை அறிய நேர்கிறது. அறிவார்ந்த லட்சியங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே, இயற்கையோடு இயைந்த அறிவைப் பெற்றிட உதவும் சமுதாயத்தில், காணப்படும் சில துணைப் பொருட்களைக் காண்போம்.

1. அணைக்கட்டுகள் 2. பாலங்கள்
3. பொருட் காட்சி சாலை 4. தொழிற் சாலை
5. கலைக் காட்சியகம் 6. மீன் காட்சியகம்
7. மிருகக் காட்சி சாலை 8. கலங்கரை விளக்கம்
9. துறை முகம் 10. உடற்பயிற்சி கூடங்கள்
11. விளையாட்டுப் போட்டிகள் 12. பூங்காக்கள்
13. வரலாற்றுக் கட்டிடங்கள் 14. விமான நிலையங்கள்
15. அரசு பொது நிறுவனங்கள் 16. மின் நிலையங்கள்

இவற்றை நேரில் காணுகிற போது, ஏராளமான செய்திகளை மாணவர்களால் தாராளமாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.


2. கிளைப் பாடத் திட்ட செயல்கள்

பள்ளிகளில் மற்றும் பாட நிறுவனங்களில், பயிலும் மாணவர்களுக்கு, பல்வேறு விதமான விருப்புகள், ஆசைகள் உண்டு.

அவர்கள் ஆசை நிறைவேறவும், ஆர்வமுடன் பங்கு கொளளவும், பாடத் திட்டத்திற்கேற்ப, பல கிளைகள் அடங்கிய இயக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சான்றாக, தேசிய மாணவர் படை; சாரணர் இயக்கம்; முகாம் வாழ்க்கை இயக்கம் (Camping); நடந்து சென்று இடம் பார்த்து மகிழும் இயக்கம் (Hiking); விளையாட்டு விழாக்கள்; குடியுரிமைப் பயிற்சி (Citizenship training). சுகாதாரக் கண்காட்சி இயக்கம் போன்றவற்றைக் கூறலாம்.

மாணவ மாணவியர், தாங்களே நேராக இத்தகைய இயக்கங்களில் பங்கு பெறும் போது, பல் வேறு விதமான கருத்துக்களையும், பாங்கான அறிவினையும் பெறும் வாய்ப்பு மிகுதி பெறுகிறது.


3. கேட்டு கண்டறிய உதவும் பொருட்கள்.

உலகை அறிந்திட உதவுவது நம் ஐம்புலன்களே. அரிய சக்தி படைத்த ஐம்புலன்களே, அறிவை வளர்த்திட துணைபுரிகின்றன.

கேட்டு கண்டறிய உதவும் துணைப் பொருட்கள், கற்பதில் விரைவாகத் தேர்ச்சிபெற, மிகுதியாக உதவுகின்றன.

இந்தத் துணைப் பொருட்கள், அறிவு நிறைய பெற உதவுமே அன்றி, ஆசிரியரே தேவையில்லை என்ற அளவுக்கு மாற்றிவிட முடியாது.

மாணவர்க்கு இந்தத் துணைப் பொருட்கள், நல்லதைக் கற்றுத் தரவே அமைந்திடவேண்டும். காண்பவர்க்குக் களிப்பூட்டுகின்ற இந்தத் துணைப் பொருட்கள், மாணவர்கள் மனதை வழிமாற்றிட அல்ல என்பதை நாம் புரிந்து கொண்டு, தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்கு சாதகமாக இருக்கவும், புரிந்து கொள்ளவும், கேட்டுக் கண்டறிய உதவும் துணைப் பொருட்களை 5 வகையாகப் பிரிக்கலாம்.

1. காதால் கேட்பதற்கு உதவும் பொருட்கள்
(AUDITORY)


1. ரேடியோ . 2. போனோ கிராப் (Phonograph) 3. இசைக்கருவிகள்.

2 கண்ணால் காண்பதற்கு உதவும் பொருட்கள்
(VISUAL)


1. தொலைக்காட்சிக் கருவி.

2. கேமரா.

3. சினிமா படம்.

4. விளக்கப்படங்கள்: ஓவியங்கள்

5. சுவரொட்டிகள்: புகைப்படங்கள்

6. தேசப்படங்கள் : குளோப்

7. கரும்பலகை

3. கண்ணுக்கும் காதுக்கும் உதவும் பொருட்கள் (AUDIO - (VISUAL)

1. பேசும் (சினிமா) படம்

2. தொலைக்காட்சி.

4. செயல்பட உதவும் துணைப் பொருள் (AIDES THROUGH ACTIVITY)

1. உல்லாசப் பயணம்:

2. நடைப்பயணம்.

3. மாதிரிப் பொருட்கள், துணைப் பொருட்களைக்

கண்டறிந்து, பொறுக்கிச் சேர்த்தல். (Collection)

5. பொதுவான (நிலையான) துணைப் பொருட்கள்

1. நாடகம் நடித்தல், (பாவனை செய்தல்)

2. புத்தகங்கள் ; தின, வார, மாதாந்திர பத்திரிக்கைகள்; துண்டு வெளியீடுகள்; பத்திரம் போன்ற மூல ஆவணங்கள்.

கேட்டு அறிவதை விட, பார்த்து பெறும் அறிவு பெரும் பயன் பயக்கும். ஒரு சித்திரத்தை ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு விளக்குவதை விட, நேரில் ஒரு முறை காட்டினாலே போதும், நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்.

இந்தக் கருத்தை மனதிற் கொண்டு, ஆசிரியர் மேற்கூறிய துணைப் பொருட்களை, மிகுதியாகப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுது, ஆசிரியர் எதிர்பார்க்கும் கற்றல் விளைவுகளை, மிக எளிதாக மாணவர்களிடம் பெற முடியும் ஒரு சாதனையையே நிகழ்த்த முடியும்.