உள்ளடக்கத்துக்குச் செல்

உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/கற்பித்தலும்

விக்கிமூலம் இலிருந்து
5. கற்பித்தலும் தயாரிக்கும் திறன் நுணுக்கமும்
(PERSONAL AND TECHNICAL PREPARATIONS)

கலையும் கலைஞனும்

கற்பிக்கும் திறனை கலையம்சம் நிறைந்தது என்று நாம் கூறுவோமானால், கற்பிக்கும் திறன் நிறைந்தவரை, நாம். கலைஞன் என்றே அழைத்து மகிழலாம்.

ஒருவர் எவ்வளவு கற்றிருக்கிறார் என்பதில் பெருமையில்லை. அவர் பிறருக்குப் புரியும்படி எப்படி கற்பிக்கிறார் என்பதில் தான் அவரது ஆற்றலும் பெருமையும் அடங்கியிருக்கிறது.

அப்படிப்பட்ட ஆற்றலையும் சிறப்பையும் பெற, ஒருவர் தம்மைத் தகுதியுள்ளவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

பிறர் போற்ற, விரும்பி ஏற்றுக் கற்றுக் கொள்ளும் எழுச்சி மிகுதியாகக் கற்பிக்கும் திறனையே கற்பிக்கும் திறன் முறுக்கம் என்று கூறுகிறோம். (Presentation Technique)

இந்தத் திறன் நுணுக்க முறையை, ஓர் ஆசிரியர் இரண்டு வகையில் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

1. திட்ட மிடுதல் (Planning)

2. தெளிவாக வழங்குதல் (Presentation).

தயார் நிலை

ஓர் ஆசிரியர், தான் கற்பிக்கப் போகின்ற பாடத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு அறிவார்ந்த முறையில், அந்தப் பாடப் பொருள் பற்றி, அலசி ஆராய்ந்து, அவற்றின் சாராம்சத்தையும், அது சார்ந்த கருத்துக்கள் பற்றியும், தயாரித்து, தயார் நிலையுடன் தான் மாணவர்களிடம் செல்ல வேண்டும்:

பொருள் புரிந்து போதிக்கும் பொழுதுதான், கேட்பவர்களும் கிளர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கேட்க முடியும்,

இவ்வாறு தயார் நிலைக்கு வரக்கூடிய நுணுக்கத்தை. இரண்டு பிரிவாகப் பிரித்துக் காட்டுவர். 4 1. தோற்றத்தில் தயார் நிலை (Personal Preparation)

2. பொருளில் நுணுக்க நிலை (Technical Preparation)

தோற்றத்தில் தயார் நிலை

வகுப்புக்குச் செல்வதற்கு முன்னதாக, ஆசிரியர் தன்னைப் பாடங்களில், மட்டும் தயார் செய்து கொண்டால் போதாது. நடை, உடை, தோற்றம், பாவனை, ஆளுமை, மற்றும் பொழிவு போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்துவதையே, தன் நிலைத் தயார் நிலை என்று கூறுகிறோம்:

காண்பவர்களுக்கு மகிழ்ச்சியும், மரியாதையும் ஊட்டக் கூடிய தன்மையில் அமைந்த தூய நல்லாடை, நிமிர்ந்த நடை தளராத ஆளுமை; பிறரைக் கவர்ந்திழுக்கும் சொல்லாற்றல்; கனிவான கணீரென்ற பேச்சு: நகைச்சுவை இழையோடும் பாங்கு; இவை நிறைய வேண்டும்.

அடுத்தவர்க்கு அறுவெறுப்பூட்டுகின்ற அங்க அசைவு; தேவையற்ற சைகைகள், பண்பாடில்லாத பழக்க வழக்கம் போன்றவற்றைத் தவிர்த்திருக்க வேண்டும்.

இத்தகைய வெளித்தோற்றமும், எடுப்பான நடை முறையும் கொண்டிருப்பதுடன், பற்பல உடலியக்க செயல் முறைகளையெல்லாம் சிறந்த முறையில் செய்து காட்டும் திறன்மிக்கவராகவும் ஆசிரியர் விளங்க வேண்டும்.

இதில் ஒரு சிறப்புக் குறிப்பு என்னவென்றால், ஆசிரியர் ஒருவரின் நடைமுறை, மற்ற மாணவர்களுக்கு முன் மாதிரியாகவும்; (Example) அவரே ஒரு முன்னோடியாகவும் (Model) அமைந்திருப்பது போல் இருப்பதுதான்.

2. நுணுக்க பொருளில் நுணுக்க நிலை

மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடப் பொருளை முதலில் வரிசை முறையாக வகுத்து, நிரல்படுத்திக் கொள்ள வேண்டும்.

பயிற்றுவிக்கும் பாடத்தை, ஒரு நோட்புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். அல்லது மனதில் பதிய வைத்துக் கொள்ளலாம்.

பயிற்றுவிப்பதற்கேற்ற துணைப் பொருட்கள், உதவி சாதனங்கள், முக்கியமான கருவிகள் ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடுகளங்கள், ஓடுகளங்கள் முதலிய விளையாட்டிடங்ககளை தேவையான முறையில் தயார் செய்து, குறித்து வைத்திட வேண்டும்.

வகுப்பிலுள்ள மாணவர்களை எப்படி பிரிப்பது, போதிப்பது பயிற்சியளிப்பது என்பனவற்றை, திட்டமிட்டு, ஒரு தெளிவான மனநிலையில் முடிவெடுப்பது மிகவும் முக்கியம்.

தானும் உடல் நிலையில் தயாராகி, மனநிலையில், தயாரித்துக் கொண்டு, செல்கின்ற பாங்கு, கற்பிக்கும் வல்லமையை வழங்கி வளப்படுத்தி, வழிகாட்டுகிறது.

எவ்வாறு போதிக்க வேண்டும்?

மாணவர்களுக்குப் போதிக்கும் திறமையை, வழங்கும் நிலை (Presentation) என்று கூறுவார்கள். அதாவது, தான் கற்பிக்கும் கருத்தைக் கவனமுடன் முன்வைப்பது என்றும் கூறலாம்.

ஆகவே, திட்டமிட்டுத் தெளிவாகத் தயாரித்த பாடக் குறிப்புகளை வைத்துக் கொண்டு, பூரிப்பு மிக எப்படி போதிப்பது? அதற்கான நடைமுறைகளைக் கடைபிடிக்கும் சில வழிகளைக் காண்போம்.

1. தெரிந்த கருத்தை முதலில் கூறி தெரியாத கருத்தை, விளக்க வேண்டும். (Known to unknown)

2. சிறிய எளிய கருத்தை முதலில் விளக்கி, பிறகு சிக்கலான செய்திகளைத் தெளிவுபடுத்த வேண்டும். (Simple to Complex)

3. விஷயங்களை விளக்குகிற போது பேசுவதோ, விரைவாகப் ஆக்குவதோ அல்லது ஆமை பொறுமையை இழக்கச் செய்வதோ கூடாது.

மாணவர்கள் புரிந்து கொள்ளும் அறிவு நிலையை அறிந்து, அதற்கே பக்குவமாகப் போதிக்க வேண்டும்.
அது போலவே, உளவியல் உரையாடல் முறையிலிருந்து விவாத முறை வரை நடத்திட வேண்டும்.

4. கற்றுத் தருகிற போதே, மாணவர்களின் கருத்தில் பதியுமாறும், சிந்தனைகள் விரியுமாறும், செயல்படுத்தத் துணிவு ஏற்படுமாறும், தெளிவு உண்டாகுமாறும் கற்றுத் தரல் வேண்டும்.

5. மேம்பாடுள்ள துணைக் கருவிகளையும், உதவிப் பொருட்களையும் பயன்படுத்துகிறபோது, மாணவர்களின் கற்கும் திறன் எழுச்சி பெறுகிறது என்பதை ஆசிரியர் என்றும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

6. ஒவ்வொரு கருத்தும், அந்தப் பாடத்தின் முழுமையையும் புரிந்து கொள்ளுமாறு, தொடர்புபடுத்தி, போதிக்க வேண்டும்.

7. சொல் விளக்கத்தை விட, நேரில் பொருட்களைக் காட்டி விளக்கிட வேண்டும்.

மேற்கூறிய கருத்துக்களை மனதில் கொண்டோமானால், அவற்றைத் தொடர்ந்து, அறிவார்ந்த அணுகுமுறைகள் சில உண்டு. அந்த வழங்கும் கற்பிக்கும் முறைகளில் உள்ள வகைகளையும் தெரிந்து கொள்வோம்.

சிறப்பாக போதிக்கும் வரிசைகள்
(Steps in Presentation)

சிறப்பாக போதிக்கும் நிலையினை இரண்டு பிரிவாகப் பார்க்கலாம்.

1. செயற்கை முறை (Artificial Device)

2. இயற்கை முறை (Natural Device).

செயற்கை முறை போதனையின் பிரிவுகளைக், காண்போம்.

1. பாடத்தை சுருக்கமாக அறிமுகப்படுத்துதல் (Orientation)

தான் கற்பிக்கும் பாடத்தைப் பற்றியோ, அல்லது பயிற்சியைப் பற்றியோ; அதன் தோற்றம், வளர்ச்சி, தன்மை, இயல்பு, பெருமை, பயன் முதலியவற்றைத் தெளிவாக விளக்கும் முறை.

இந்த விளக்கத்தை இன்னும் நுண்மையாக்குவார்கள்.

பாடப் பொருள் பற்றிய வரலாறு, இலக்கியம், அமைப்பு பற்றி கதை போலக் கூறும் முறை. (Narration).

பாடப் பொருள் பற்றிய உட்கருத்தை, உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளுமாறு விளக்கிக் கூறும் முறை. (Exposition).

பாடப் பொருள் பற்றிய சிந்தனையை, மனதில் படம்: பிடித்துக் கொண்டு அறியுமாறு விளக்கம் தரும் முறை (Description).

எதற்காகக் கற்றுக் கொள்கிறோம் என்பதை மாணவர்கள் உணர்ந்து, அதில் ஆர்வம் கொண்டு, எப்படி செயல் படுவது, மேம்படுத்துவது என்பதாகப் போதிக்கும் முறை. (Explanation).

இதை சொல் விளக்க முறை - என்றும் (Verbal Explanation) என்றும் கூறுவார்கள்.

2. செயல் விளக்கம் தருதல் (Demonstration)

உடற்கல்வி என்பது செய்து கொண்டே பழகுதல் ஆகும் ஆகவே, எந்தப் பாடத்தையும் பயிற்சியையும் செயல் மூகாம் காட்டி, செய்யச் செய்து, தேர்ச்சி பெறுமாறு செய்வது தான் செயல் விளக்க முறையாகும்.

3. ஆராய்ந்தறிய உதவுதல் (Exploration)

மாணவர்கள் தாங்கள் அறிந்தவற்றை, கண்டு கேட்டவற்றை செயல்படுத்திப் பார்த்த பிறகும், மேலும் அது பற்றி ஆராய்ந்து, துருவித் துருவி ஆராயும் சூழ்நிலையை உண்டாக்கும் முறை இது இதை ஆய்வுக்கூட முறை என்றும் கூறலாம்

4. கலந்துரையாடல் (Discussion)

தனிப்பட்ட முறையில் தாங்கள் புரிந்து கொண்டதை மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடச் செய்து, மேலும் தெரிந்து கொள்ள உதவுதல். இந்த உரையாடலில் ஆசிரியர் முக்கிய பங்கை வகிக்கிறார். சிக்கல்களை தீர்த்து. ஐயத்தை விளக்கி, உரிய பாடத்தில் சீரிய கருத்துத் தெளிவு காணும் முறை இது.

5. மேற்பார்வை காணல் (Supervision)

தான் கற்றுத் தந்ததை. கற்றுக் கொண்டவாறு, மாணவர்கள் பயிற்சி செய்கிறார்களா என்பதை, ஆசிரியர் மேற்பார்வையிடுதல். இந்த முறை, மாணவர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டவும், தைரியத்துடன் பயிற்சிகளைத் தொடரவும் உதவும்.

6. மதிப்பீட்டு முறை (Evaluation)

மாணவர்கள் கற்றுக் கொண்டதில், பெற்ற முன்னேற்றத்தைப் பேரார்வத்துடன் தெரிந்து கொள்ள உதவும் முறை.

எந்த அளவு, எவ்வளவு தெளிவு, எத்தனைச் செறிவு, அவர்களின் கற்றல் திறன் இருந்தது; ஆசிரியரின் கற்பிக்கும் திறன் இருந்தது என்பதை, பல தேர்வுகள் மூலம் கண்டறிந்து, மதிப்பீடு செய்வதன் மூலம், கற்பிக்கும் யுக்தி, சக்தி பெற்றுக் கொள்கிறது.