உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/வகுப்பறை

விக்கிமூலம் இலிருந்து
6. வகுப்பறை நிர்வாகம்
(CLASS MANAGEMENT)

வகுப்பும் தொகுப்பும்

வகுப்பறை என்பது வெறுமனே ஒரு வெற்றிடமல்ல. அதில் உள்ளவை எல்லாம் உயிரற்ற பொருட்களுமல்ல.

வகுப்பறை என்பது ஜீவனுள்ள இடம். துறு துறுப்பும், துடிப்பும், முனைப்பும் நிறைந்த மாணவர்கள் சூழ்ந்த குழாம் அது.

அத்தகைய அறிவார்ந்த மாணவர்களை, அற்புதத் திறமையுடன் கையாண்டு, கல்வியின் நோக்கங்களையும், இலட்சியங்களையும் மாணவர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவதையே வகுப்பறை நிர்வாகம் என்று அழைக்கின்றனர்.

இதை வகுப்பறை செயல் ஆட்சி என்றும் சிலர் கூறுவார்கள்.

நிர்வாக அனுகுமுறை.

ஆசிரியரின் வகுப்பறை நிர்வாகத்திற்கு உதவுகின்ற, பொதுவான உகந்த சில குறிப்புக்களை நாம் இங்கே காண்போம்.

1. ஆசிரியரின் ஆளுமை. (Personality)

2. செயல்களை இயக்கும் முறைகள். (Activities)

3. உடற்கல்வியை நடத்தும் சூழ்நிலைகள் (Environment)

4. பாதுகாப்பு முறைகள் (Safety)

5. உதவிப் பொருட்களைக் கையாளுதல் (Materials) 6. நேரக் கட்டுப்பாடு (Time)

7. மாணவர்களைப் குழுவாகப் பிரித்தல் (Grouping)

8. பாடத் திட்டங்களை வகுத்துத் தருதல் (Schedule)

9. போட்டிகளை ஏற்படுத்தித் தருதல் (Tournaments)

10. மதிப்பெண்கள் மூலம் மதிப்பிடுதல் (Assignment of Marks)

மேலே காணும் குறிப்புக்களை விளக்குவதற்கு முன், ஆசிரியர் பாடம் நடத்துவதற்கேற்ற பக்குவ நிலையுடன் செல்ல வேண்டும் என்பதை, வலியுறுத்தும் உயர்ந்த தன்மையை சுட்டிக் காட்டுகிறோம்.

எந்த வகுப்புக்குச் செல்கிறோம், என்ன பாடம், எந்த போதனை முறை, எந்த உதவிப் பொருட்கள், அதற்கான ஆடுகளம் தயாரா? அளவிட்டிருக்கின்றனவா, என்பதையெல்லாம் தயார் செய்து கொண்டு சென்றால் தான், வகுப்பை தடையில்லாமல், தடுமாற்றமில்லாமல், குழப்பம் நேராமல் நிர்வகித்துச் செல்ல முடியும்.

இவையெல்லாம் ஆசிரியரின் ஆளுமைத் தன்மையாகும்.

ஆளுமை நிறைந்த ஆசிரியர், வகுப்பறைக்குச் செல்கிற போது, எதிர்கொள்கிற பிரச்சினைகள் பல.

இவற்றைப் பிரட்சினை என்பதை விட, நடை முறை நிகழ்ச்சிகள் என்று கொண்டோமானால், சிக்கலின்றி செல்லவும், சிறப்பாகச் சொல்லவும், மாணவர்கள் மனதை வெல்லவும் முடியும்.

இவற்றையும் சற்று விரிவாகக் காண்போம்.

1. வகுப்பில் மாணவர்கள்

மாணவர்களின் எண்ணிக்கை ஒரு வகுப்பிற்கு 40 முதல் 45 என்பது பொதுவான விதி. ஒரு வகுப்புக்கு 25 பேர்கள் என்பது உத்தமமானது என்பது நியதி. என்றாலும், சூழ் திலைக்கேற்ப, வருகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் ஆண்டு வெதும்பாமல், தருகின்ற பாடங்களைக் கொண்டே, ஆசிரியரின் தகுதியும், திறமையும், நிர்வாகச் சிறப்பும் வெனிப்படுகின்றது.

2. இடமும் நேரமும்

பள்ளியின் வகுப்புக்கும், ஆடுகளத்தின் இடமும் உள்ள டைவெளியை அனுசரித்தே, வகுப்பை ஆரம்பிக்கவும், விடுவிக்கவும் முடியும். ஆகவே, மாணவர்கள் வந்து சேர் வேண்டிய குறிப்பிட்ட இடம்: குறிப்பிட்ட நேரம்; முதலியவற்றை ஆசிரியர் கூறிட வேண்டும்.

தேவையான சீருடை அணியவும், வரிசையாக வந்து சேரவும் கூடிய நேரத்தையும் குறித்துக் காட்ட வேண்டும்.

ஆசிரியரும் முன் கூட்டியே அந்த இடத்திற்கு வந்து, காத்துக் கொண்டிருந்து, முன்னேற்பாட்டுடன், தயாராக இருக்க வேண்டும்.

குறித்த நேரத்தில் பாடத்தை ஆரம்பிப்பது போலவே, நடத்தி முடித்து, குறித்த நேரத்தில், வகுப்பைக் கலைத்து. செல்லுமாறு பணிக்க வேண்டும்.

இவ்வாறு இடம், கால நேரம், அணிவகுத்து வரச் செய்தல் போன்றவற்றில், ஆசிரியர் கட்டுப்பாட்டு நடவடிக் வகையை மேற்கொள்ள வேண்டும்.

3. சீருடை

உடற்கல்விப் பயிற்சி, விளையாட்டிற்கென்று, குறிப்பிட்ட சீருடைகள் உள்ளன. அந்தந்தப் பள்ளிக்கென்று குறிப்பிட்ட சீருடைகள் தரப்பட்டிருக்கும்.

மாணவர்களுக்கு கால் சட்டை, பனியன், காலுறையும் காலணியும்.

மாணவிகளுக்கும் வகுக்கப்பட்ட பாவாடை, சட்டை முதலியன உண்டு.

ஒரே சீரான உடையில் வந்து பயிற்சி செய்தால், பங்கு பெற்றால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பயிற்சியும் நன்றாக நடக்கும். எனவே, சீருடை விஷயத்தில், ஆசிரியர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அது ஆசிரியரின் சிறப்பை உயர்த்தும்.

4. வகுப்பை அணிவகுக்கும் முறை

சூரிய ஒளி முகத்தில் படாமல், மாணவர்களை வரிசையாக நிறுத்த வேண்டும்.

குள்ளமான மாணவர்கள் முன்புறம், பிறகு உயரமானவர்கள் என்பதாக வரிசைப் படுத்தி நிற்க வைக்க வேண்டும்.

கைகளை நீட்டி முன்புறமும், பக்கவாட்டிலும் அசைத்துப் பயிற்சி செய்ய, போதிய இடவசதியுடன் நிற்கச் செய்ய வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியரைப் பார்க்க, ஆசிரியர் மாணவர்களைப் பார்க்க வசதியாக இருப்பது போல, நிற்க வைத்து, நின்று கொள்ள வேண்டும்.

பொதுவாக கோடு அல்லது வரிசை முறையில் (Line or Rank) அல்லது அடுக்கு அல்லது பத்தி முறையில் (File or Column). அல்லது அரைவட்ட அணியமைப்பில், முழுவட்ட அமைப்பில் மாணவர்களை அணிவகுத்து நிற்கச் செய்யலாம்.

5. மாணவர்கள் வருகையறிதல் (Attendance)

மாணவர்கள் வகுப்புக்கு சரியாக வந்திருக்கின்றார்களா என்பதை, பல முறைகளில் கேட்டும், அழைத்தும் அறியலாம்.

அ) மாணவர்களின் பெயர்களைக் (Names) கூப்பிட்டு சரி பார்த்தல். இது ஏற்ற முறையாக இருந்தாலும், நேரம் அதிகமாகி விடும்.

ஆ) மாணவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் எண்களை (Roll Numbers) அழைத்து சரி பார்த்தல்.

இ) சுவற்றில் எண்களை எழுதி, அவரவர் எண்ணுக்கு முன்பாக, மாணவர்களை நிறுத்தி காலியாக இருக்கும் எண்ணைப் பார்த்து, வராத மாணவரைக் கண்டறிதல்.

பல பள்ளிகளில் விளையாடும் இடமே இல்லாத போது, இது போல அமைப்பு இருப்பதும் கிடைப்பதும் எளிதல்ல.

இவ்வாறு மாணவர் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

6. குழு அமைப்பு

வகுப்பில் அதிக எண்ணிக்கையில் வரும் மாணவர்களை, சிறு சிறு குழுக்களாகப் (Squad) பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு குழுத் தலைவரை நியமித்து, குழுவின் முன்னே தலைவரை நிற்க வைத்து, அவர்கள் மூலம் வருகையைப் பதிவு செய்வதும் சிறப்பான முறையாகும்.

வகுப்பு தொடங்குவதற்கு முன்னதாகவும், வகுப்பு முடிந்து கலைவதற்கு முன்னதாகவும், பெயர்ப் பட்டியலை சரிபார்ப்பது நல்லது, ஏனென்றால், இடைப்பட்ட நேரத்தில், சிலர் நழுவிப் போவதும் உண்டு.

எந்த முறையைப் பின்பற்றினாலும், நேரம் வீணாகிப் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

7. பாதுகாப்பு நடவடிக்கைகள்

உடற்பயிற்சிகள் , விளையாட்டுக்கள் என்கிறபோது, அவற்றிற்குள்ளேசில ஆபத்துக்கள் ஏற்படுவதற்கும் ஏதுக்கள் உண்டு.

ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் என்பதில், கீழே தவறிவிழ வாய்ப்பு உண்டு. மெத்தைகள் வைத்து, கற்பிக்கும் போது, பாதுகாப்பு உண்டு.

கபாடி போன்று உடலால் மோதிக் கொள்ளும் ஆட்டங்களும் உண்டு. அவற்றில் விதிகளை செம்மையாக சொல்லிக்கொடுத்து விட்டால், விபத்துக்கள் நேராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆடுகளங்கள், ஓடுகளங்களில், கற்கள், முற்கள், கண்ணாடித் துண்டுகள் இல்லாமல், மேடு பள்ளம் இல்லாமல், சரிசெய்து வைத்துப் பாடம் கற்பிப்பது, பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் வழிகளாகும்.

அவ்வாறு எதிர்பாராது ஏதாவது விபத்து நேர்ந்தால், முதலுதவி செய்வதற்கான, முதலுதவிப் பெட்டியை வைத்திருப்பது, புத்திசாலித்தனமாகும்.

8. கட்டுப்பாடு காத்தல்.

கட்டுப்பாட்டுடன் செய்கிற எந்த காரியமும், களிப்பையும், கவர்ச்சியையும், வெற்றியையும் மனத்திருப்தியையும் அளிக்கும்.

விறுவிறுப்பும் விவரம் இன்மையும் உள்ள சிறுவர்களுக்கு, ஆர்வத்தின் காரணமாக அவசரமும் ஆவேசமும் வந்து விடுவது இயற்கைதான். ஆகவே, அவர்களை அன்புடன், கட்டுக்கோப்பாகக் காத்திருக்க, செயல்பட, மாணவர்களைப் பழக்குவது, மாண்புமிகு செயலாகும்.

1. ஆசிரியரின் தோற்றம், ஆளுமை, பேச்சு, நடத்தை, பாடம் கற்பிக்கும்முறை, அன்பான கண்டிப்பு, ஆதரவான விதிமுறை கடைபிடிப்பு எல்லாம் மாணவர்களைக் கட்டுப்பாட்டுடன் இருக்க வைக்கும்.

2, ஆசிரியர் கற்றுத்தருகிற பயிற்சிகள், மாணவர்களுக்கு விருப்பம் அளிப்பதாக அமைகிறபோது, அவர்களும் மிக இணக்கத்துடன் செயல்பட உற்சாகம் அளிக்கும். ஆசிரியரின் பாடத்தேர்வும், கட்டுப்பாட்டை வளர்த்திட உதவும்.

3. ஆசிரியரின் சரியான நேரத்தில் வருதல். மாணவர்கள் சீருடையைக் கவனித்தல், கண்காணித்தல், திருத்துதல், குறித்த நேரத்தில் பாடம் கற்றுத் தருதல், வகுப்பைக் கலைத்தல், மனக்கட்டுப்பாட்டையும் மாணவர்களின் உடல் கட்டுப்பாட்டையும் மிகுதியாகவே வளர்த்துவிடும் வேகம் கொண்டவையாகும்

மேலும், குறும்பும், குதர்க்கமும், குறுக்குவழிகளில் சந்தோஷப்படும் மாணவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்களுக்கு ஒரு பொறுப்பை அளிக்கிறபோது, அவர்களின் வழிமுறை மாற்றம் காணும். வகுப்பில் அமைதியும் செயல் திறமும் அதிகமாகிவிடும்.

இறுதியாக, மாணவர்களிடையே போட்டிகள், விளையாட்டுக்கள் நடக்கிறபோது, சரிசமமான திறமை. எடை என்று சீராகப்பார்த்து, போட்டி நடத்துவது, எல்லோருக்குமே இன்பம் பயக்கக் கூடியதாக அமையும்.

இனி, வகுப்பறை நிர்வாகத்தை, சிறப்பாக நடத்திட முக்கியமான குறிப்புகளைத் தொகுத்துத்தந்திருக்கிறோம்.

1. ஆசிரியர் பயிற்சிக்கு, பொருத்தமான உடை அணிந்திருக்க வேண்டும்.

2. அதுபோலவே, மாணவர்களையும் சீருடைஅணிந்து வரச்செய்ய வேண்டும்.

3. மாணவர்களுக்கும் நிர்வாகப் பொறுப்பினை வளர்ப்பது போல, வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

4. ஆசிரியர், தான் கற்றுத்தரப் போகிற பாடத்தை, சிறப்பாகத் தயாரித்துச் செல்ல வேண்டும்.

5. வகுப்பில் உள்ள மாணவர்களின் வயது, இனம், தேவைகள், ஆர்வங்கள், எதிர்பார்ப்புகள், திறமை கள் இவைகளுக்கேற்ப பாடங்களைத் தேர்வு செய்து, கற்பிக்கும் முறையைக் கையாள வேண்டும்.

6. பாடங்களைக் கற்பிக்கிற போது, தெளிவான கற்பிக்கும் முறை மட்டும் போதாது. கணிரென்ற குரலும், சரியான உச்சரிப்பும். தெளிவான பேச்சும் வேண்டும்.

7. சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வர, கலைந்து செல்ல என்பதில் கட்டுப்பாடான கவனம் செலுத்திட வேண்டும்.

8. மாணவர்களின் அபிப்ராயத்தையும் அறிந்து, செவிசாய்த்து, நல்லதென்றுபட்டால், நடை முறைப்படுத்த வேண்டும்.

9. மாணவர்களுக்குக் கீழ்ப்படிதலையும், சுயகட்டுப் பாட்டையும், பண்பான செயல்முறைகளையும் வளர்க்க ஆவன செய்ய வேண்டும்.

10. மாணவர்கள் மனம் புண்படும்படி பேசுவதை, முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

11. மாணவர்களின் குறைகளை, நாசூக்காக விளக்கி

நிவர்த்திப்பதும் திறமைகளை மற்றவர்களும் அறியும்படி, பாராட்ட வேண்டும்.

12. பயிற்சி வகுப்பில் அதிகம் பேசாமல், செயல்படச் செய்து: முடிந்தால் விசிலை அதிகம் பயன்படுத்தி, நடத்திட வேண்டும்.

13. பாதுகாப்பு முறைகளில் தீவிரக் கவனம் செலுத்துவதுடன், தன்னால் முடிந்த அளவு திறமையைப் பயன் படுத்தி, வெளிப்படுத்தி, வகுப்பை நடத்துகிறபோது, நிச்சயம் நல்ல வெற்றியைப் பெற முடியும். நிறைந்த திருப்தியையும் அடைய முடியும்.