உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்/பாடம்

விக்கிமூலம் இலிருந்து
7. பாடம் தயார் செய்தல்
(LESSON PLAN)

ஆசிரியர். நிபுணர்

ஆசிரியரை, ஒரு கட்டிட வரைகலை நிபுணருக்கும் (Architect), கட்டிடம் கட்டுவோருக்கும் (Builder) ஒப்பிடலாம்.

கட்டிட வரைகலை நிபுணர் என்பவர், சரியாகக் கட்டிடம் கட்டுகின்ற திட்டங்களை வரைபடம் மூலம் தெளிவாகக் காட்டுகிறார்.

கட்டிடம் கட்டுபவரோ, தெளிவான வரைபடத்தின் தன்மையைப் புரிந்து கொண்டு, திட்டங்களை செயல்படுத்திக் காட்டுவார்.

அதுபோலவே ஒரு ஆசிரியர் தானே பாடத்தை தயாரித்துக் கொண்டு தானே செய்து முடிக்கும் நிபுணராக, வல்லுநராகத் திகழ்கிறார்.

ஆகவே, பாடம் தயார் செய்தல் என்பது, கற்பிக்க வேண்டிய பாடப் பொருளைத் தேர்ந்தெடுத்து, பொருத்தமான முறையில் தரம் பிரிக்கப்பட்டு, அறிவார்ந்த முறையில் நடத்தி, முன்னேற்றம் காணுகிற முழுமையான முயற்சி என்பதாக நாம் கருதலாம்.

ஆசிரியரும் பாடம் தயார் செய்தலும்.

பாடத் திட்டத்தைத் தயார் செய்கிற ஆசிரியருக்கு

1. கொடுக்கப் பட்டிருக்கும் குறிப்பிட்ட வகுப்பு நேரத்திற்குள், பாடத்தைப் போதித்து, பக்குவமாக இலட்சியத்தை அடையும் வழிகளை சுலபமாகப் பெறமுடிகிறது.

2. ஒவ்வொரு மாணவரையும் பாடம் பதமாகச் சென்றடையக் கூடிய பாங்கான முறையை, பகுத்துப் பெற முடிகிறது.

3. எந்த மாதிரியான கற்பிக்கும் முறை கையாளப்படுகிறது என்பதை திட்டவட்டமாக முடிவெடுத்து, செயல்பட, சிறப்பு பெற உதவுகிறது.

இவ்வாறு நாம் ஆசிரியரின் பொறுப்பை அறிந்து கொள்வோமானால், பாடம் தயார் செய்கின்றதன் பயன்களையும் என்னவென்று புரிந்து கொள்ள, நமக்கு உதவகின்ற குறிப்புக்களையும் தெரிந்து கொள்வோம்.


பாடம் தயார் செய்தால் ஏற்படும் பயன்கள்.

1. குறிப்பிட்ட பாடத்தை, சிறப்பாக போதிக்க உதவுகிறது.

2. நடந்த பழைய பாடத்திற்கும், நடக்கவிருக்கும் புதியபாடத்திற்கும் தொடர்பு தரும் பாலமாக, அமைந்து விடுகிறது.

3. பாடப் பொருளைக் கையாளுதல், தேவையான துணைப் பொருட்களைத் தேடித் தயார் செய்தல். செயல்களைத் திட்டமிடுதல். இவற்றிற்குத் துணைபுரிகிறது.

4. விருப்பமான கற்பிக்கும் முறை எது என்பதைத் தேர்ந்தெடுக்கும் ஞானத்தை ஆசிரியருக்கு வழங்குகிறது.

5. பாடத்தின் முழுமையை, நுணுக்கமாகப் புரிந்து கொள்ளச் செய்கிறது.

6. போதிக்கும்பொழுது ஏற்படுகிற விளைவுகளை, விவேகத்துடன் சந்திக்கவும், சிந்திக்கவும், மேம்படுத்தவும் தூண்டுகிறது.

7. பாடத்தை சிறப்பாகப் போதிக்க, வினாக்களை எழுப்பவும், வரைபடங்களைத் தயாரிக்கவும் கூடிய வல்லமையை விளைவிக்கிறது.

8. பாடங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு (unity) போதிக்க உதவுகிறது.

9. குறிப்பிட்ட பொறுப்பான போதனா முறையை உறுதிப்படுத்துகிறது.

10. மாணவர்களுக்குள்ள திறமைகளின் வேற்றுமையை அறிந்து, அதற்கேற்ப அனுசரித்துப் போதிக்கும் பேராற்றலைக் கொடுக்கிறது.

11. தேவையானபொழுது, தேவைகளை திருப்தியாகத் தீர்த்து வைக்கவும் உதவுகிறது.

12. ஆசிரியருக்கு கற்பனா சக்தியை அளிப்பதுடன், போதிக்கும்பொழுது, ஒரு சுதந்திரமான உணர்வையும் மிகுதிப்படுத்துகிறது.

இவ்வளவு வசதிகளையும், வாய்ப்புக்களையும், வரை முறைகளையும் வகுத்து வழங்குகிற, பாடம் தயார் செய்யும் திட்டத்தில், முக்கியமான சில குறிப்புக்கள் இடம் பெற்றாக வேண்டும்;

பாடம் தயார் செய்தலில் சில குறிப்புக்கள்

1. நடத்தப்போகிற பாடத்தின், முக்கிய நோக்கமும், இலக்கும் அந்தப் பாடத் தயாரிப்பில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

2. பாடத் தயாரிப்பானது, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுக்கின்ற தன்மையில் அமைய வேண்டும்.

3. எல்லா வயதினருக்கும் ஏற்றாற்போல பாடத் தயாரிப்பும் குறிப்பும் அமைந்திருப்பதுடன், அந்தப் பாடம், புரிகிற தன்மையில், பொருள் பொதிந்ததாகவும் விளங்க வேண்டும்.

4. பாடத்தைப் போதிக்கிற போது, அதில் முன்னேற்றம் விளைகிற அளவில், தெரிகிற தன்மையிலும் அது அமைந்திடல் வேண்டும்.

5. மாணவர்கள் பாடத்தைப் புரிந்து கொண்டு பயிற்சி பெறவும், முயற்சி செய்யவும் கூடிய அளவில், இருக்க வேண்டும்.

இனி, பாடத் தயாரிப்பு அமைவதை, 4 பிரிவாகட் பிரித்துப் பார்க்கலாம்.

பாடத் தயாரிப்பு வகைகள் (Types of lesson plan)

1. முழுப் பாடத் திட்டம் (Unit plan)

முழுப் பாடத் திட்டம் என்பது ஒரு நாளைக்காகத் தயாரிக்கப்படாமல், பல நாட்கள் அல்லது நீண்ட காலத் திற்கு அல்லது ஒரு செமஸ்டர் காலத்திற்கு வருவதுபோல தயாரிக்கப்படுவது.

2. தினசரிப் பாடத் திட்டம் (Daily plan) ஒரு நாளைக்கு, ஒரு நேர வகுப்பில் (class) நடத்தி முடிகிற அளவுக்குத் தயாரிக்கும் பாடக் குறிப்பு.

3. படிக்க உதவும் வழிகாட்டி (Study guide)

படிக்கின்ற நேரத்தில் ஏற்படுகிற பிரச்சினைகளை சமாளித்து; குழப்பத்தைத் தவிர்க்க உதவுகிற புத்தகங்களை குறிப்பிட்டுக் காட்டுவது.

4. பயிற்சிப் புத்தகங்கள் (Work books)

காலியாக இடம் விட்டுத் தருகிற நோட் புத்தகங்களில், இருக்கிற வினாக்களுக்கு விடையளித்தல்; பிரச்சினைகளை அறிந்து தீர்க்கும் முறைகளை எழுதிப் பழகுதல்.

இப்படி பல வகையான முறைகளும் பிரிவுகளும் இருந்தாலும், உடற்கல்விவியைப் பொறுத்தவரை, பாடத் தயாரிப்புக் குறிப்பு முறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. பொதுப் பாடத்திற்குத் தயாரித்தல்

(General Lesson Plan)

2. சிறப்புப் பாடத்திற்குத் தயாரித்தல்

(Particular Lesson Plan)

I பொதுப் பாடத்திற்குத் தயாரித்தல்

1. உடலைப் பதப்படுத்தும் ஆயத்தப் பயிற்சிகள் (Introductory Activities)

கடுமையான பயிற்சிகள், விளையாட்டுக்களில் ஈடுபடு படுவதற்கு முன், உடலிலுள்ள விறைப்புத் தன்மையிலிருந்து விடுபட, உடலைப் பதமாக்கும் பயிற்சிகள் பலவற்றைச் செய்து, ஆயத்தப்படுத்துகின்றமுறை இது. (warming up)

வகுப்பின் மொத்த நேரத்தில், ⅛ பகுதி நேரத்தை, இதற்காக செலவு செய்யலாம்.

மெதுவாக ஓடுதல்; நொண்டியடித்தல், குதித்துக் குதித்து ஓடுதல்; விலங்கு பாவனைகள், ஊர்திகள் போல ஓடுதல் முறையில் பதப்படுத்தும் பயிற்சிகளைத் தரலாம். இது உடல் பிடிப்பு, தசை இழுப்பு ஏற்படாமல் தடுத்து, தாராளமாக இயங்க உதவும்.

2. ஒழுங்குபடுத்தும் பயிற்சிகள் (Formal Activities)

உடல் உறுப்புக்கள் துவளுந்தன்மை பெற; நிமிர்ந்து நிற்கும் தோரணையில் உறுதி பெற; அழகுற உடலை நடத்திச் செல்ல; உடல் கட்டுப்பாட்டில் திகழ, கீழ்க்காணும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன. உடலில் கிளர்ச்சியை உண்டாக்குகின்றன.

எடையில்லா வெறுங்கை உடற்பயிற்சிகள்;

குறுந்தடி (Wand) ; டம்பெல் உடற்பயிற்சிகள்

தண்டால் பஸ்கிப் பயிற்சிகள்

கட்டழகு தரும் கலைப் பயிற்சிகள் (Calisthenics)

இவையெல்லாம் ஒழுங்குபடுத்த உதவும் பயிற்சி “களாகும். மொத்த வகுப்பு நேரத்தில் - பங்கு நேரத்தை ¼ இதற்குப் பயன்படுத்தலாம்.

3. புத்துணர்வு ஊட்டும் பயிற்சிகள் (Recreative Activities)

இவ்வகைப் பயிற்சிகள், விளையாட்டுத் திறமையை, இயற்கையாக உள்ள ஆற்றலை வளர்ப்பதுடன், மகிழ்ச்சியையும், வேடிக்கையும், இன்பத்தையும் ஊட்டுகின்றன.

3-1 சிறு சிறு விளையாட்டுக்கள் (Minor games)

3-2 முன்னோடி விளையாட்டுக்கள் (Lead up games)

3-3 கதைப் பாட்டு விளையாட்டுக்கள் (Story plays)

3-4 சாகசப் பயிற்சிகள் (Stunts)

3-5 பொதுவான சண்டைப் போட்டி பயிற்சிகள் (Combatives)

3-6 தொடரோட்டங்கள் (Relay Races)

இவை எல்லாம் போரடிக்காமல், புத்துணர்வூட்டும் பயிற்சிகளாகும். இவை மட்டும் போதாதென்றால், இன்னும் பல பயிற்சி முறைகள் உள்ளன. அவற்றையும் புத்துணர்வூட்டப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அ) கோபுரப் பயிற்சி முறைகள் (Pyramids)

ஆ) குட்டிக் கரணப் பயிற்சிகள் (Tumbling)

இ) அணி நடைப் பயிற்சிகள் (Marching)

ஈ) தாள நடைப் பயிற்சிகள் (Rhythmics)

உ) கரளா கட்டைப் பயிற்சிகள் (Club drills)

ஊ) பெருங்கழிப் பயிற்சிகள் (Pole drill)

மற்றும் ஆசனங்கள், சூரிய நமஸ்காரம் போன்ற பயிற்சிகளையும்; தனித்திறன் ஓடுகளப் போட்டி நிகழ்ச்சிகளையும்; மற்போர், குத்துச் சண்டை போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவற்றைக் கற்பிக்க சிறப்புப் பயிற்சிகள் தேவைப்படுவதால், பொதுப் பாடத்தின் சிறப்புப் பயிற்சியின் கீழ் கொண்டு வரலாம்.

குறிப்பு :

1. சிறப்புப் பயிற்சிகளையெல்லாம் ஒழுங்குபடுத்தும் பயிற்சிகளுக்கும், புத்துணர்வூட்டும் பயிற்சிகளுக்கும் இடையில் நடத்தலாம்.

2. ஒவ்வொரு பொதுப் பாடத் திட்டத்திலும் சிறப்புப் பயிற்சிகள் இருந்து தான் ஆக வேண்டும் என்பதில்லை.

3. சிறப்புப் பயிற்சிக்காக ⅛ நேரத்தைப் பயன் படுத்தலாம். இனி, பொதுப் பாடத்தை நடத்தக் கூடிய பகுதிகளை, இவ்வாறாக நாம் தெளிவுறக் காணலாம்.

1. மாணவர் வகுப்புக்கு வருகின்ற வருகையறிதல்

2. பதப்படுத்தும் ஆயத்தப் பயிற்சிகள்

3. ஒழுங்குபடுத்தும் உரிய பயிற்சிகள்

4. சிறப்புப் பயிற்சிகள்

5. புத்துணர்வூட்டும் பயிற்சிகள்

6. வகுப்பைக் கலைத்து, போகச் செய்தல்

பொதுப் பாடத்தைத் தயாரிக்க (விளக்கமான மாதிரி வகுப்பு)

வகுப்பு : ஆறு

நேரம் : 45 நிமிடம்

துணைப்பொருட்கள் : தேவையானவற்றை தொகுத்துக் கொள்ளவும்.

1 மாணவர் வருகையும் வருகைப் பதிவும் (2 நிமிடங்கள்) (Roll Call)

மாணவர்களை வரிசையாக வந்து, அணி வகுக்கச் செய்து, பெயர்களை அல்லது எண்களை அழைத்து, வருகையைப் பதிவு செய்தல்.

2. பதப்படுத்தும் ஆயத்தப் பயிற்சிகள் (5 நிமிடங்கள்) (Warming up)

இருக்கின்ற மாணவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து நிற்க வைத்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பயிற்சியைக் கற்றுத் தந்து, முதலில் செய்ய வைக்க வேண்டும்.

1 குழு நொண்டியடிப்பது. 2வது குழு துள்ளி உயரமாகக் குதிப்பது. 3வது குழு நின்ற இடத்திலே ஓடுவது. 4வது குழு உயரக் குதித்து கைகளை தலைக்கு மேலே தட்டுவது.

இப்படி விசிலுக்குப் பிறகு, ஒவ்வொரு குழுவும் செய்து, அடுத்த விசிலுக்கு குழுக்கள் தங்கள் பயிற்சியை மாற்றிக் கொண்டு, இவ்விதமாக 5 நிமிடங்கள் செய்திட வேண்டும். அதாவது ஒவ்வொரு குழுவும், ஒரு முறை இந்த 4 பயிற்சிகளையும் செய்து முடித்திட வாய்ப்பளிக்க வேண்டும்.

8. ஒழுங்குபடுத்தும் பயிற்சிகள் (Formal)

இந்தப் பயிற்சிகளுக்கு 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளலாம் . இந்தப் பயிற்சி முறையைக் கற்பிக்க 4 பிரிவுகள் உள்ளன. அவற்றின் வழியில், விளக்கமாகக் காணலாம்.

3-1 வகுப்பை அணிவகுத்து நிற்கச் செய்தல் (Formation)

வந்திருக்கும் மாணவர்களை ஒற்றை வரிசையில் (Single line) நிற்கச் செய்து; எண்ணச் செய்து; எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்கள் அணியமைப்புத் திறப்பு முறையில் (open order formation) வரச் செய்து நிறுத்த வேண்டும்.

மாணவர்களிடையே பயிற்சி செய்ய போதிய இடைவெளி இருப்பது போலவும்; எல்லா மாணவர்களும் ஆசிரியரைப் பார்த்திட வசதியாக நிற்பது போலவும் திறுத்தி வைப்பது தான் அணி வகுப்பு முறையாகும்.

8-2. செயல் விளக்கம் (Demonstration)

என்ன பயிற்சி செய்யப் போகிறோம் என்பதை மாணவர்களுக்கு, போதிய விளக்கத்துடன், புரியும் படி செய்து காட்டல் வேண்டும்.

3-3. எண்ணிக்கைக்கு ஏற்ப கற்பித்தல் (Teaching by Counts)

தான் செய்து காட்டியவுடன், ஒவ்வொரு நிலையாக மாணவர்களுக்கு, எண்ணிக்கைப்படி செய்யுமாறு கூற வேண்டும். அவர்கள் செய்கிறபோது, தவறுகளை சுட்டிக் காட்டித் திருத்தி, நிறுத்தி பயிற்சிகளை கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.

3-4. சீராக, தொடர்ந்து பயிற்சி செய்தல் (Doing Continuously and Rhythmically)

தவறில்லாமல் ஒவ்வொரு நிலையாக, மாணவர்கள் கற்றுக் கொண்ட பிறகு, தொடர்ந்து, நிறுத்தாமல், சீராகவும் தாளலயத்துடனும் பயிற்சியை செய்திடப் பணிக்கவும்.

பல முறை, இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்த பிறகு, மீண்டும் மாணவர்களை ஓரணியில் கொண்டு வரச் செய்தல் வேண்டும்.

இவ்வாறு பழக்குகின்ற பயிற்சி முறைகள் நான்கினை, உங்கள் பார்வைக்குத் தருகிறோம். இதுபோல் நிறைய பயிற்சி முறைகள் உள்ளன.

தேவையான வகுப்புக்கு ஏற்ப, தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

மாதிரிப் பயிற்சிகள் :

1. 1. கைகள் இரண்டையும் தலைக்கு மேற்புறமாகி உயா்ததி பிறகு, கைகளை மடக்கிக் குந்து. (Squat)

2. எழுந்து இயல்பாக நிமிர்ந்து நில்.

2. 1. கைகளைப் பக்கவாட்டில் விரித்து, இடது காலை இடது பக்கமாக எடுத்துவை.

2. கைகளை, தலைக்கு மேலாக விரைவாக உயர்த்தி, (Swing) குதிகால் உயர, முன் காலில் நில்.

3. முன் மாதிரியே செய்.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

3. 1. கைகள் இரண்டையும் (இடுப்பு) பக்கவாட்டில் வை.

2. இடுப்பை இடது புறமாக வளை (Bend)

3. இடுப்பை நிமிர்த்து.

4. இயல்பாக நிமிர்ந்து நில்.

4. 1. (நிற்கும் நிலையிலிருந்து) கால்களை அகற்றிக் குதித்து, தலைக்கு மேலே கைதட்டு.

2. இயல்பாக நிமிர்ந்து நில்.

4 சிறப்புப் பயிற்சிகள்

ஒழுங்குபடுத்தும் பயிற்சிகள் முடிந்த பிறகு, மீண்டும் ஒற்றை அணி வரிசைக்கு, மாணவர்களை வரச் செய்யவும்.

அடுத்து, சிறப்புப் பயிற்சிகளைத் தொடங்கவும். 8 நிமிடம் போதும். இதற்கு ஒரு ஆசனத்தைக் கற்பிக்க, எடுத்துக் கொள்ளலாம்.

ஆசனத்தை எண்ணிக்கை முறையில் கற்பிக்கலாம்.

ஆசனத்தின் பெயர் : பத்மாசனம்

எண்ணிக்கை

1. கால்களை நீட்டி நிமிர்ந்து உட்காருதல்.

2. வலது காலை இடது கால் தொடை மீது படும்படி வைத்தல்.

3. இடது காலை வலது கால் தொடை மீது படும்படி வைத்தல்.



4. கைகளை முழங்கால்கள் மீது வைத்து ஆசன இருக்கையில் இருத்தல்.

சரியான இருக்கை வருவதற்கு, சரியாகக் கற்பித்தபின், மீண்டும், ஒற்றை அணி வரிசைக்கு மாணவர்களை வரச் செய்யவும்.

5. புத்துணர்வூட்டும் விளையாட்டு

இந்த விளையாட்டுக்கு 18 நிமிடம் ஒதுக்கிக் கொள்ளலாம். சான்றுக்கு ஒரு ஆட்டம்.

சிலை ஆட்டம்

ஒரு குறிப்பிட்ட எல்லையை நிர்ணயித்துக் கொண்டு, ஓடிப்பிடிக்க (it) ஒருவரை நியமித்து, மற்ற மாணவர்களை ஓடச் செய்ய வேண்டும்.

விரட்டுகிற மாணவர், தம்மைத் தொட - வரும்போது, தொடப்படாமல் ஓட வேண்டும். இனி ஓட முடியாது என்கிற போது, சிலைபோல அசையாமல் நின்றுவிட வேண்டும்.

அவர் அசையாத வரை பத்திரமாக இருக்கிறார். அசைந்தால் தொடப்பட தொடப்பட்டவர் விரட்டுபவராக மாற, ஆட்டம் தொடரும்.

குறிப்பு, இந்த, ஆட்டத்திற்கான விதிமுறைகளை, முன்னதாகவே மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.

நேரம் இருந்தால், பல ஆட்டங்களையும் ஆடச் செய்யலாம்.

விளையாட்டு முடிந்த பிறகு, மாணவர்களை அணியாக நிற்கச்செய்து, வகுப்பைக் கலைத்திட (Dismiss) வேண்டும்.

II குறிப்பிட்ட சிறப்புப் பாடத்திற்குத் தயார் செய்தல். (Particular Lesson Plan)

சிறப்புப்பாடத் திட்டம் என்பது முதன்மை ஆட்டங்கள், அல்லது ஓடுகளப் போட்டி நிகழ்ச்சிகள் பற்றிக் கற்றுத்தரப், பயன்படுத்தப்படும் கற்பிக்கும் முறையாகும்.

இந்த கற்பிக்கும் முறை, விளையாட்டுக்கு விளையாட்டு வேறுபடும்.

சிறப்புப்பாடத்திட்டம்

விளையாட்டுக்கு (Game)

1. மாணவர் வருகையும் வருகைப் பதிவும்

2. பொருத்தமான உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகள்

3. விளையாட்டின் அடிப்படைத் திறமைகளைக் கற்பித்தல் (Skills)

4. அடிப்படைத் திறமைகளை பழகிடப் பயிற்சியளித்தல்

5. முன்னோடி விளையாட்டுக்களைக் கற்பித்தல்.

6. முழு விளையாட்டையும் விளையாடவைத்தல்

7. வகுப்பைக் கலைத்துப் போகச் செய்தல்.

ஓடுகளப் போட்டி நிகழ்ச்சிக்கு (Track and Field)

1. மாணவர் வருகையும், வருகைப்பதிவும்

2. பொருத்தமான, உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகள்

3. ஓட்ட நிகழ்ச்சியின் அடிப்படை நுணுக்கத்தைக் கற்பித்தல்

4. அடிப்படை நுணுக்கத்தைப் பழக்கி பயிற்சியளித்தல்

5. மாணவர்களுக்கிடையே போட்டி வைத்தல்

6. வகுப்பைக் கலைத்துப் போகச் செய்தல்

1. ஒரு விளையாட்டுக்கு மாதிரிப் பாடம்.

வகுப்பு. 8

நேரம்: 45 நிமிடங்கள்,

விளையாட்டு: கைப்பந்தாட்டம்

துணைப்பொருட்கள்: 6, பந்துகள், வலை, அளவிட்ட ஆடுகளம்.

1. வருகையும் வருகைப்பதிவும்

வகுப்புக்கு வந்திருக்கும் மாணவர்களை ஓரணி முறையில் நிற்கவைத்து, வருகையைப் பதிவு செய்தல் (2 நிமிடம்)

2. பதப்படுத்தும் பொருத்தமான உடற்பயிற்சிகள்

நின்ற இடத்தில் ஓடுதல்; மெதுவாக ஓடி பிறகு விரைவாக ஓடுதல், கைகளை முன்னும் பின்னும், பக்க வாட்டிலும் வீசுதல்; கால்களை முன்னும் பின்னுமாக பக்க வாட்டிலும் சுழற்றி இயக்குதல்; இடுப்பை முன்னும், பின்னும் பக்கவாட்டிலும் வளைத்துத் திருப்புதல். பிறகு, கைப்பந்தாட்டத்திற்குத் தேவையான பயிற்சிகளைத் தருதல்.

3. கைப்பந்தாட்டத்தில் ஒரு திறனைக் கற்றுத் தருதல்.

(இருகையால் (Underhand Pass) கீழ்ப்புறமாக பந்தை. எடுத்தல்) 8 நிமிடங்களில் கற்பிக்கவும்.

மாணவர்களை பரவலாக நிற்கச் செய்து, ஆசிரியர் செய்கின்ற செயலை, மற்றவர்கள் பார்ப்பதற்கேற்றவாறு நிறுத்தி வைத்தல்.

கைகளை நன்றாகக் கோர்த்துக் கொண்டு, கால்களை அகலமாக வசதிக்கேற்ப விரித்து நின்று, பந்து வந்து கைகளில் விழுகிற போது, பாங்காகத் தெறித்து போவது போல, ஆசிரியர் செய்து காட்ட வேண்டும்.

நிற்கும் கால்கள் நிலை, கைகளைக் கோர்த்து வைத் திருக்கும் நிலை, தோள்களின் அமைப்பு, இடுப்பின் நிலை, இப்படி எல்லா உடல் நிலைகளையும் ஆசிரியர் செய்து காட்ட வேண்டும்.

4. பழகிக் கொள்ள பயிற்சி தருதல்

இதற்கு 15 நிமிடங்கள் தரப்பட வேண்டும்.

மாணவர்களை இருவர் இருவராகப் பிரித்து, ஒவ்வொரு இருவருக்கும் ஒரு பந்து கொடுத்து, அவர்களைக் கீழ்புறமாக பந்தை எடுத்தாடி பழகிக் கொள்ளச் செய்தல்

ஏற்படுகின்ற தவறுகளை அவ்வப்போது திருத்தி, சரியாக செய்யச் சொல்லுதல்.

5 முன்னோடி விளையாட்டு

(Lead up Game)

5 முறை தொட்டாடும் ஆட்டம் (Five touch Game)

இருக்கும் மாணவர்களை இரு குழுக்களாகப் (10 பேர்) பிரித்து, ஆடுகளத்தின் இருபக்கமும் நிற்க வைத்து, ஆடச் செய்தல். சர்வீஸ் போட்ட ஒரு குழுவுக்கு எதிராக உள்ள குழுவின் ஆட்டக்காரர்கள், சர்வீஸ் மூலம் போட்ட பந்தை, 5 முறை எடுத்தாடி, எதிர்க் குழுவிற்கு அனுப்ப வேண்டும்

5 முறைக்குள் பந்தைத் தவற விட்டாலும், 5 முறைக்குள்ளாகப் பந்தை அனுப்பிவிட்டாலும், பந்தைக் கீழாக கையால் எடுத்தாடாமல் விட்டாலும், தவறிழைத்த குழு, வெற்றி எண் பெறுகிற வாய்ப்பை இழந்து விடும்.

விதிமுறைப்படி, எந்தக் குழு 15 வெற்றி எண்களை எடுக்கிறதோ, அதுவே வென்றதாக அறிவிக்கப்படும்.

6. குழு ஆட்டம் (Whole Game)

நேரம் இருந்தால், கைப்பந்தாட்டத்தை, விதிகள் படி ஆடி மகிழ, அனுமதிக்கலாம்.

7. வகுப்பை ஓரணியாக்கி, கலைத்தல்

ஆட்டம் முடிந்த பிறகு, அனைவரையும் ஓரணியில் நிற்கச் செய்து, வகுப்பை முறையாகக் கலைத்து, அனுப்பிவிட வேண்டும்.

அடுத்தது, ஓடுகளப் போட்டியில் ஒரு மாதிரிப்பாடம் பார்ப்போம்.

2. ஓடுகளப் போட்டிக்கு மாதிரிப் பாடம் தயாரித்தல்

வகுப்பு : 6.

நேரம் : 45 நிமிடங்கள்

நிகழ்ச்சி : நீளம் தாண்டல்.

கருவிகள் : உதைத் தெழும்பிட உதவும் மிதிபலகை

1. வருகையும் வருகைப் பதிவும்

மாணவர்களை ஒற்றை அணியில் நிற்கச் செய்து, வருகையைப் பதிவு செய்தல்.

2. பொருத்தமான பதப்படுத்தும் பயிற்சிகள்

நடத்தல்; மெது ஓட்டம் ஓடுதல்; விரைவாக ஓடுதல், துள்ளிக் குதித்துக் கைகளை இருபுறமும் விரைவாக ஆட்டிக் கொண்டு ஓடுதல், அசைத்தல். கீழே அமர்ந்து, கால்களை நீட்டிக்குனிந்து பாதங்களைத் தொடுதல். ஒரு காலை நீட்டி, ஒரு காலை மடக்கிக், குனிந்து இரு கையாலும் தொடுதல், மல்லாந்து படுத்து; சர்வாங்காசனம் போல் கால்களை செங்குத்தாக உயர்த்தி, சைக்கிள் ஓட்டுவதுபோல் கால்களை சுழற்றுதல்.

3. நுண்திறனைக் கற்பித்தல்

நீளத் தாண்டலுக்கு 4 பிரிவுகள் உள்ளன.

1. மிதித்தெழும் பலகையை நோக்கி ஓடி வருதல். (Approach)

2. விரைவாக, அழுத்தி பலகையை மிதித்து உயர்தல் (Take off)

3. காற்றில் நடத்தல் (Walking in the air)

4. மணற்பரப்பில் காலூன்றுதல் (Landing)

குறிப்பு :

1. மிதித்தெழும் கால் எது என்று அறிய வைத்தல்.

2. மிதித்தெழும் பலகைக்கு, வேகமாக ஓடிவரும் அணுகு முறையைக் கற்பித்தல்.

3. காற்றில் நடக்கும், சாமர்த்தியத்தைக் கற்றுத் தருதல்.

4. குதிகால்கள் மணற்பரப்பில் முதலில் ஊன்றுமாறு குதித்தல்.

ஆசிரியர் இந்த நான்கு திறன்களையும், படிப்படியாக மாணவர்களுக்கு செய்து காட்டுதல்.

4. பழகும் பயிற்சியளித்தல்

எல்லா மாணவர்களையும் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, பார்த்துத் தெரிந்து கொண்ட திறன் நுணுக்கங்களை, பழகிக் கொள்ளச் செய்தல்.

ஒவ்வொரு குழு செய்கின்ற பழகிடும் முறையைப் பார்க்க, ஆசிரியர் ஆங்காங்கே சென்று பார்த்து, தவறுகளைத் திருத்திக் காட்டி, பல முறை செய்திட உதவ வேண்டும்.

5. போட்டி வைத்தல்

கற்றுக் கொண்ட திறன்களைப் பின்பற்றி, மாணவர்களில் யார் அதிக தூரம் தாண்டுகிறார் என்பதற்காக, ஒரு போட்டியை ஆசிரியர் நடத்தலாம்.

6. அணியில் நிறுத்தி வகுப்பைக் கலைத்தல்

வகுப்பு நேரம் முடிந்தவுடன் மாணவர்களை, ஒற்றை அணியில் நிற்கச் செய்து, வகுப்பைக் கலைத்து, அனுப்பி விட வேண்டும்.

குறிப்பு: கற்பிக்கும் வகுப்பு நேரத்தில் (instruction period) கற்றுத் தந்த பாடங்களை, மறு வகுப்புக்கு மாணவர்கள் வரும் போது, திரும்பச் செய்யுமாறு பணித்து, நேர்கின்ற தவறுகளைத் திருத்தும் முயற்சியை ஆசிரியர் மேற்கொண்டு, பிறகு புதிய பாடத்திற்குப் போகலாம்.

ஆசிரியருக்குக் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப, அனுசரித்து, பாடத்தைக் கற்பிக்கும் பாங்கினை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் கல்வித்துறை, 1965ல் ஏற்படுத்தித்தந்த நேர அட்டவணையையும், ஆசிரியர்கள் பின்பற்றலாம் என்பதற்காக கீழே தரப்பட்டிருக்கிறது.

செயல்களின்

தரப்பட்டிருக்கும் வகுப்பு நேரம்

தன்மைகள்

35 நிமிடம்

40 நிமிடம்

1. பயிற்சிகளுக்காக 4 முதல் 7 நிமிடம் 7 முதல் 8 நிமிடம்

2. செயல் / முதன்மைப்பகுதி 25 நிமிடம் 25 நிமிடம்

3. சிறுகுழு விளையாட்டு / 6முதல் 3நிமிடம் 8முதல் 7 நிமிடம் தொடரோட்டம்

சில சமயம், ஒரு பாடவகுப்புக்கு 45 நிமிடம் என்று நேரம் எடுக்கப்படும். அப்போது முதன்மைப்பகுதியான செயல் முறைகளுக்கு 30 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம்.