உணர்ச்சி வெள்ளம்/அழுத்தக்கார மனிதர்
அழுத்தக்கார மனிதர்
பக்தவத்சலனார் அவர்கள் இந்திய அரசியலிலும் குறிப்பாகத் தமிழக அரசியலிலும் தம்முடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். நாட்டில் 50 வருட வரலாற்றில் அவர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவருடைய தனிப்பட்ட பண்பைப் பாராட்டுவதைவிட அவர் வாழ்ந்த காலத்தில் உள்ள நிலைமையைப் பாராட்டினால் அவரை நாம் உணர்ந்து இருக்கிறோம் என்று பொருள்.
அவரோடு ஒத்த கருத்துள்ளவர்கள் பாராட்டுவதை விட ஒத்துக் கொள்ளாதவர்கள் பாராட்டுவதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு ஆகும்.
அவர் ஒரு கட்சியை சேர்ந்தவர். நான் ஒரு கட்சியைச் சேர்ந்தவன். இருவரும் தனித்தனி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் பெரியார் காங்கிரசிலிருந்து பிரிந்தார். பெரியாரிடமிருந்து நாங்கள் பிரித்தோம். கரங்கிரசில் இருந்து பிரிந்த இயக்கம்தான் மற்ற இயக்கங்கள்; மூலத்தில் எல்லோரும் ஒன்றுதான்.
பழைய காலத்தை நினைவு படுத்தக்கூடிய பெரியவர்களில் ஒருவராக நம்மிடம் பக்தவத்சலம் இருக்கிறார் என்பது பெருமைக்குரியது ஆகும்.
அப்படிப்பட்ட பெரியவர்கள் என்று ராஜாஜி-பெரியார்--காமராஜர், பக்தவத்சலம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் மறைந்தால் பல விஷயங்கள் வெளியே வராமலே போய்விடும். இவர்கள் எல்லோருக்கும் தமிழ் நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை இருப்பது பாராட்டுக்குரியது ஆகும். இந்தப் பெரியவர் எல்லாம் இன்னும் பல ஆண்டுகள். நம்மிடத்திலே இருந்து பல நல்ல கருத்துக் களை சொல்லி தமிழ் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க உதவ வேண்டும். பக்தவத்சலம் அவர்களுடைய குடும்பம் நிலச்சுவான்தார் குடும்பம்.
சமுதாயத்தில் உயர்ந்த வகுப்பு என்று ஒப்புக்கொள்ளப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தார். மேட்டுக்குடியில் பிறந்தவர் என்றாலும் அவருடைய முன்னோர்கள் தேசியத்தில் பற்றுள்ளவர்களாக இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
எங்கள் ஊருக்கு பக்தவத்சலம் அவர்கள் தன்னுடைய தந்தையோடு வரும்போது தான் பார்த்து இருக்கிறேன். அப்போதெல்லாம் வெகு அடக்கத்தோடு வருவார். எனக்கும் அவருக்கும் பத்தாண்டு காலமாக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் பத்திரிகையில் வரும் விஷயங்களைப் பார்த்து எடைபோடுகிறார்களே தவிர எங்களுக்குள்ள நட்பைச் சிலர் புரிந்து கொண்டது இல்லை. சட்டமன்றத்தில் பணியாற்றியபோது நான் கூறிய பலவற்றை அவர் மறுத்திருக்கிறார். அவர் கூறியவற்றை நான் மறுத்து இருக்கிறேன்.
எந்த பண்டத்தை எடுத்தாலும் தூற்றி நல்லதை எடுக்கிறார்கள்.
நாம் கூட தூற்றுகிறோம். மாலை நேரத்தில் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொள்கிற நேரத்தில் தேவையற்றதை தள்ளிவிட்டு நல்லதை எடுத்துக்கொள்ள முயற்சித்தால் பலன் உள்ளதாக இருக்கும்.
யார் மீதும் எனக்கு எந்த நேரத்திலும் வெறுப்பு இருந்தது இல்லை.
பகை உணர்ச்சி கூடாது
அவரவர்கள் தங்கள் கொள்கைகளை வலியுறுத்துவதில் ஈடுபட்டாலும் அதிலே பகை உணர்ச்சி தேவை இல்லை. பக்தவத்சலம் சட்டமன்றத்தில் இருந்த காலத்திலேயே எங்களோடு இருந்த காலத்தில்தான் அதிகமாக மகிழ்ச்சி அடைத்து இருக்கிறார். அவருக்குள்ள பெரியகுணம் அவர் ரொம்ப அழுத்தக்காரர் என்று சொல்வார்கள். சட்டமன்றத்தில் நாங்கள் மணிக்கணக்கில் பேசுவோம். அதிலே சில இடங்களில் கோபத்தை வெளிப்படுத்துவோம். வேண்டுகோளைத் தெரிவிப்போம். எல்லாம் முடிந்த பிறகு பக்தவத்சலம் அவர்கள் என் நண்பர்கள் சொல்லியன ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்று ஒரு வரியில் சொல்லி விடுவார். அப்போதும் அவர் கசப்பு உணர்ச்சியை காட்டியது இல்லை.
மேடையில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்த பொழுது கைதட்டலும் சிரிப்பொலியும் எழுந்தது. எதையோ காணக்கூடாத காட்சியை கண்டதுபோல ஜனநாயகத்தில் பல கட்சிகள் இருக்கும். இருக்கவேண்டும்.
சர்ச்சில் பிரதமராக இருந்து ஒருமுறை தேர்தலில் தோற்றபோது அட்லி பிரதமராக வந்தார். வழக்கப்படி பிரதமர் பத்தாம் எண்ணுள்ள வீட்டுக்கு குடிபோனபோது பழைய பிரதமர் சர்ச்சிலின் மனைவி அந்த வீட்டின் அமைப்புகளை எது எது எங்கு இருக்கும் என்று விளக்கிக் கூறுகிறார். அந்த மனப்பான்மை நமக்கு வராது என்று கருதினால் நாம் ஜனநாயகத்திற்கு லாயக்கில்லாதவர்கள் என்றாகிவிடும்.
அட்லியும்--சர்ச்சிலும் ஒரே மா நாட்டில் கலந்து கொள்ளச் சென்றபொழுது மற்றவர்களுக்கு விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இருவரும் செல்வதை முறியடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் தடுக்கப்பட்டு இருவருமே அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். ஜனநாயகத்தில் அந்த நாடு எவ்வளவு சிறந்து இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
இதுபோன்ற விழா மட்டுமல்லாமல் பொதுவாக முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இருப்பினும் ஒருவரை ஒருவர் மதிக்கும் ஜனநாயகப் பண்பு வளர்வதற்கு காங்கிரஸ் தலைவர்கள் உதவ வேண்டும்.
சைவர்களும்--வைணவர்களும் கண்டையிட்டுக் கொண்ட நிலைபோய் இப்போது இருவரும் ஒரே வீட்டில் சூடி இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட உணர்வை உருவாக்க முன்நிற்க வேண்டும். பக்தவத்சலம் தம்முடைய கட்சிக்கு மட்டும் அல்லாமல் எல்லாக் கட்சிக்கும் கருத்துக் கூறும் ஆற்றல் பெற்றவராவார்,
பைபிளைப் படித்து விடுவதாலே நாம் கிறிஸ்தவர்களாகிவிடுவது இல்லை. காங்கிரஸ் தலைவர்களாக இருப்பவர்கள். தான் காங்கிரஸ் வரலாற்றை படிக்கவேண்டும் என்பதில்லை. எனக்குத் தெரிந்த வரை காங்கிரசிலே இருப்பவர்களை விட நாங்கள் அதிகமாக அறிந்து இருக்கிறோம். ஏன் என்றால் எந்த இடத்தில் ஓட்டை இருக்கிறது என்பது அப்போது தான் தெரியும்.
நான் பொறுப்பு ஏற்றதும் தனித் தனியாக டைரி எழுத. ஆரம்பித்தேன். இப்போது ஒரு டைரிதான் மிஞ்சி இருக்கிறது. ஐந்து டைரி எங்கே என்று தெரியவில்லை டைரி எழுதி எனக்குப் பழக்கம் இல்லை. அந்தப் பழக்கம் இல்லாததால்தான் தமிழ்நாட்டின் முழு வரலாறு நமக்கு கிடைக்கவில்லை. திருவள்ளுவர் எந்த ஊர் என்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
டாக்டர் வரதராஜலு--திரு. வி. க. போன்றவர்கள் வரலாறு சரியாக எழுதப்படவில்லை. பக்தவத்சலம் அவர்களின் நாற்பது-ஐம்பது வருட காலமாக தொடர்பு கொண்டிருந்த அரசியல் வரலாற்றை உருவாக்கினால் படிப்பகத்திற்கு சிறந்து நூல் கிடைக்கும்.
★