உணர்ச்சி வெள்ளம்/சுருங்கிய உள்ளம்
சுருங்கிய உலகம்
முன்பெல்லாம் காசிக்குப் போகிறேன், திருப்பதிக்குப் போகிறேன் என்பார்கள். இப்படி இருந்த இந்த நாட்டில் வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம் அமெரிக்கா போகிறேன்--ரஷ்யாவுக்குப் போகிறேன் என்று கூறப்படுவதைக் கேட்கிறோம்--நம்நாடு எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டாகும்.
காசிக்குப் போகிறவர்களிடம் மறக்காமல் கங்கா தீர்த்தம் கொண்டு வாருங்கள் என்பார்கள். பழனியாயிருந்தால் பஞ்சாமிர்தம் கொண்டு வரும்படிச் சொல்லுவார்கள்.
ரஷ்யாவுக்குப் போகும் நமது நண்பர்களிடம் நாம் என்னென்ன கேட்போம். எப்படி அந்த நாட்டில் ஆட்சி அமைந்துள்ளது? அங்கு மாநகராட்சிகள் எப்படி அமைந்துள்ளன? எப்படி அந்த நாட்டுக் குழந்தைகள் எந்த அளவு மகிழ்ச்சியோடு இருக்கின்றன? இதையெல்லாம் தெரிந்துகொள்ள நாம் விரும்புவோம்.
உலகம் எப்படி நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நம்மிடம் நிரம்ப ஆர்வம் உள்ளது.
பக்கத்து வீட்டுக்காரன் எப்படி இருக்கிறான் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாதது பழைய காலப் பழக்கம். இன்று நெடுந்தூரத்து நாடுகளானாலும் அங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நேரில் தெரிந்து கொள்ள விழைகிறோம். அந்த நாட்டில் என்னென்ன விந்தைகள் உள்ளன என்பதை அறிய விரும்புகிறோம். அத்தனை ஆர்வம் உள்ளது.
முன்னாள் மேயர் முனுசாமி ஏற்கெனவே ரஷியாவுக்கு சென்று வந்தவர். சிட்டிபாபுவும் அயல் நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். கழக அமைப்புச் செயலாளர் என். வி. நடராசன் தற்போது மலேசியா பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாராளுமன்றக் கழக உறுப்பினர் மனோகரன் இரண்டு முறை ஆப்பிரிக்கா நாடுகளைச் சென்று பார்த்துவிட்டு வந்துள்ளார். மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான ராஜாராமும் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்துள்ளார். நானும் ஜப்பான் வரை சென்று வந்திருக்கிறேன். அங்கு காணுகின்றவற்றை--தெரிந்தவகையில் புகுத்தலாம் என்பதை நம்மவர்கள் தெரிந்து சொல்ல இந்த அயல் நாட்டுப் பயணங்கள் துணையாக இருக்கும்.
உலகம் சுருங்கிவிட்டது
உலகம் சுருங்கி வருகிறது. உலக நாடுகள் நெருங்கி வருகின்றன.
25 வருடங்களுக்கப்பால் மிஞ்சிப் போனால் 50 வருடங்களுக்கப்பால் இங்கிருந்து சந்திர மண்டலத்துக்கு ஒருவர் போகிறார். அவருக்கு வழியனுப்பு விழா என்று இதே இடத்தில் நிச்சயம் நடக்கும். நாடுகள் மட்டுல்ல, அண்டங்கள் ஒன்றை ஒன்று நெருங்கிவரும் காலம் இது.
ரஷ்யா என்றாலே குனிந்தவன் நிமிர்ந்து நிற்பான்; அழுது கொண்டிருப்பவன் முகத்தில் புன்முறுவல் பூக்கும்; பாட்டாளி தனக்கொரு நாடு அமைந்ததாக நினைப்பான். உலகத்துக்கே புதிய செய்தியை புதிய நடைமுறையைக் கொடுத்த நாடு ரஷ்யா.
அப்படி இந்த நாடு புகழெய்திடக் காரணம் என்ன? கொடுங்கோன்மையை வீழ்த்திப் பயங்கரப் புரட்சிக்குப் பின் பாட்டாளிகளது அரசை அவர்கள் அமைத்தார்கள். அப்படி அரசு அமைத்த பிறகு மக்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டு தோழமை உணர்ச்சியோடு செயல்பட்டனர். வீணையொன்று நல்ல நாதம் தரவேண்டுமென்றால் அதன் நரம்புகளில் சில அறுந்தும், சில வளைந்தும் இல்லாமல் எல்லாமே ஒரு சீராக இருக்க வேண்டும்--அறுந்தும் வளைந்துமிருக்குமானால் எந்தப் பெரிய வித்துவான் ஆனாலும் வாசிக்க இயலாது.
சீராக இருந்து நல்ல நாதம் எழுப்பும் வீணையைப்போல் ரஷியாத் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து, ஜார் கொடுங்கோன்மையை ஒழித்துப் புதிய அரசை நிறுவினர். நினைத்தாலே பொசுக்கிவிடும் கொடுங்கோன்மை அது.
சோவியத் நாட்டுக்கும் நமக்கும் நிறைந்த தோழமை நிலவுகிறது. பெரிய தொழில் திட்டத்துக்கு நிரம்ப ஒத்துழைத்து வருகிறார்கள். அவர்களது ஒத்துழைப்போடு அரக்கோணத்துக்குப் பக்கத்தில் பெரிய தொழிற்சாலை ஒன்று ஏற்பட இருக்கிறது. அவர்களிடமிருந்து நமக்கு தல்ல ஒத்துழைப்புக் கிடைத்து வருகிறது.
தோழர்கள் செல்லவிருக்கும் வெளிநாடு அன்னிய நாடே என்றாலும், நம் அன்பைப் பெற்ற தோழமை நாடு.
★