உள்ளடக்கத்துக்குச் செல்

உணர்ச்சி வெள்ளம்/மனித இதயத்தின் ஊதியம்

விக்கிமூலம் இலிருந்து

மனித இனத்தின் ஊதியம்


லகில் புகழ் வேண்டாம் என்று கூறுபவர்கள் மூன்று வகைப்படுவர். ஒன்று-புகழ் நமக்கு வராது என்று தெரிந்து கொண்டிருப்பவர்கள். இரண்டு-தேவைக்கு மேல் புகழைச் சேர்த்து வைத்திருப்பவர். மூன்று-புகழின் பயனை அறியாதவர்கள்.

ஆனால், ஈதல், இசைபட வாழ்தல் (புகழுடன் வாழ்தல்) ஆகியவைதான் மனித உயிருக்கு ஊதியம் என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப் பெருந்தகை கட்டளையிட்டிருக்கிறார்.

அத்தகைய புகழ்வாழ்வை மேற்கொண்டவர் ராசா சர் முத்தையாச் செட்டியார் அவர்கள். நான் அவருடன் பல துறைகளில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். வணிகத்துறை ஒன்றைத் தவிர! !ஒரே அரசியல் கட்சியில் (ஐஸ்டிஸ் கட்சியில்) நாங்கள் அங்கம் வகித்திருக்கிறோம். என்னை அந்தக் கட்சியின் சார்பில் சென்னை கார்ப்பரேஷனுக்கு நிறுத்தி வைக்கக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் கூடிப் பேசினர்.

அப்போது சிலர் "அண்ணாதுரை தேர்தலில் ஈடுபடும் அளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை" என்ற ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால் முத்தையா செட்டியார் அவர்கள்தான் "இது போன்ற கண்ணோட்டம் இனிக் கூடாது. வாலிப வயதில் பொதுத் தொண்டில் ஆர்வம் இருப்பவர்கள்தான் இனித் தேர்தலில் நிற்க வேண்டும். ஆகவே அண்ணாதுரையை நிறுத்தலாம்” என்று வாதாடி னார். எதிர்கால அரசியல் எப்படி உருவெடுக்கும் என்பதை அப்போதே அதனை உணர்ந்திருந்தார்கள்.

அதுமட்டுமல்ல! இந்தி புகுத்தப்பட்ட நேரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சென்னையிலுள்ள தங்கச்சாலையிலிருந்து ஐலண்டு மைதானம் வரை தமிழ்க் கொடியைத் தோளில் சுமந்து கொண்டு நடந்தார்.

இந்தத் தமிழ் இயக்கம் படிப்படியாக வளர்ந்து நாட்டை ஆள்கிற கட்சியாக வளர்ந்திருக்கிறது.

அன்று கொடி தூக்கியவர் என்ற முறையில் இப்போது பங்கு கேட்காத பண்பை--பெருந்தன்மையை நான் நினைத்து நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

தமிழ் ஆர்வம்--இந்திக்கு எதிர்ப்பு--மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் ஆகியவற்றை அவரது புதிய நண்பர்கள் எதிர்பார்த்தார்கள்; பழைய நண்பர்கள் பயந்தார்கள். ஆனால் அந்தக் கொள்கைகளை அவர் கைவிடவில்லை.

இதைப்பற்றி ஒருமுறை காங்கிரஸ் அசைச்சர் என்னிடம் "அவரை எங்கள் கட்சிக்கு அனுப்பினீர்களே தவிர--உங்கள் கொள்கைகளுடன்தான் அனுப்பினீர்கள்” என்று கூறினார்.

ஜனநாயகத்தில்தான் இப்படிப்பட்ட கருத்து வேற்றுமை. இருந்தாலும், ஒத்துப்போகும் பண்பு இருக்கும். எல்லோரும் ஒரே கருத்துடன் இருப்பதல்ல சமத்துவம்.

ஒரே செடியில் பூத்தாலும் மலர்கள் அளவில் பெரியதும் சிறியதுமாகத்தான் இருக்கும்.

ஒரே மரத்தில் காய்த்தாலும் கனிகள் அளவில் பெரியதும் சிறியதுமாகத்தான் இருக்கும்.

ஒரே பழத்தில் ஒரு பக்கம் புளிப்பும்-மறுபக்கம் இனிப்பும் இருப்பதுண்டு,

இதைப் பற்றிக் கூறவந்த பேரறிஞர் வாங்கி "சமத்துவம் என்பது ஒரே தன்மையுடன் இருப்பது அல்ல!" என்றார்.

பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும்--ஒத்துப் போகும் பண்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஜனநாயகம் இயங்குகிறது.

என் கருத்துக்கு நான் எவ்வளவு மதிப்புத் தருகிறேனோ அவ்வளவு மதிப்பு, பிறருடைய கருத்துக்கும் தரவேண்டும்! என் கருத்தை வலிவுபடுத்தும் வாதங்களைப் பிறர் எவ்வளவு தூரம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவு தூரம் அவர்களது வாதத்தையும் கேட்கவேண்டும்.

இந்த அடிப்படையில்தான் பல நாடுகளில் அரசியல் முறை நடைபெறுகிறது. அந்த முறை இங்கே வரவேண்டும்.