உண்மை விளக்கம்-வெண்பா 31-40

விக்கிமூலம் இலிருந்து

சித்தாந்தச் சாத்திரங்கள் வரிசை[தொகு]

உண்மை விளக்கம்- வெண்பா 31-40[தொகு]

ஆசிரியர்: திருவதிகை- மனவாசகங்கடந்தார்[தொகு]

வெண்பா 31 (எட்டுமிரண்)[தொகு]

எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே () எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே

நட்டம் புதல்வா நவிலக்கேள்- சிட்டன் () நட்டம் புதல்வா நவிலக் கேள் - சிட்டன்

சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சாலே () சிவாய நம என்னும் திரு எழுத்து அஞ்சாலே

யவாயமற நின்றாடு வான். () அவாயம் அற நின்று ஆடுவான்.


வெண்பா 32 (ஆடும்படி )[தொகு]

ஆடும் படிகேணல் லம்பலத்தா னையனே () ஆடும் படி கேள் நல் அம்பலத்தான் ஐயனே

நாடுந் திருவடியி லேநகரங் - கூடு () நாடும் திரு அடியிலே நகரம் -கூடும்

மகர முதரம் வளர்தோள் சிகரம் () மகரம் உதரம் வளர் தோள் சிகரம்

பகருமுகம் வாமுடியப் பார். () பகரும் முகம் வா முடியப் பார்.


வெண்பா 33 (சேர்க்குந்துடி )[தொகு]

சேர்க்குந் துடிசிகரஞ் சிற்கனவா வீசுகர () சேர்க்கும் துடி சிகரம் சிற்கனவா வீசு கரம்

மார்க்கு யகர மபயகரம்- பார்க்கிலிறைக் () ஆர்க்கும் யகரம் அபய கரம்- பார்க்கில் இறைக்கு

கங்கி நகர மடிக்கீழ் முயலகனார் () அங்கி நகரம் அடிக் கீழ் முயலகனார்

தங்கு மகரமது தான். () தங்கும் மகரம் அது தான்.


வெண்பா 34 (ஓங்காரமே )[தொகு]

ஓங்கார மேநல் திருவாசி யுற்றதனில் () ஓங்காரமே நல் திருவாசி உற்று அதனில்

நீங்கா வெழுத்தே நிறைசுடரா- மாங்கார () நீங்கா எழுத்தே நிறை சுடராம்- ஆங்காரம்

மற்றா ரறிவரணி யம்பலத்தா னாடலிது () அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது

பெற்றார் பிறப்பற்றார் பின். () பெற்றார் பிறப்பு அற்றார் பின்.


வெண்பா 35 (தோற்றந்துடி )[தொகு]

தோற்றந் துடியதனில் தோயுந் திதி யமைப்பிற் () தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்

சாற்றியிடு மங்கியிலே சங்கார- மூற்றாமா () சாற்றி இடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமா

வூன்று மலர்ப்பதத்தி லுற்றதிரோ தம்முத்தி () ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி

நான்ற மலர்ப்பதத்தே நாடு. () நான்ற மலர்ப் பதத்தே நாடு.


வெண்பா 36 (மாயைதனை )[தொகு]

மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ் () மாயை தனை உதறி வல் வினையைச் சுட்டு மலம்

சாய வமுக்கியரு டானெடுத்து- நேயத்தா () சாய அமுக்கி அருள் தான் எடுத்து- நேயத்தால்

லானந்த வாரிதியி லான்மாவைத் தானழுத்த () ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்

டானெந்தை யார்பரதந் தான். () தான் எந்தையார் பரதம் தான்.


வெண்பா 37 (மோனந்தமா )[தொகு]

மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத் () மோனந்த மா முனிவர் மும் மலத்தை மோசித்துத்

தானந்த மானிடத்தே தங்கியிடு- மானந்தம் () தான் அந்தமான இடத்தே தங்கியிடும்- ஆனந்தம்

மொண்டருந்தி நின்றாடற் காணுமருள் மூர்த்தியாக் () மொண்டு அருந்தி நின்று ஆடல் காணும் அருள் மூர்த்தியாக்

கொண்டதிரு வம்பலத்தான் கூத்து. () கொண்ட திரு அம்பலத்தான் கூத்து.


வெண்பா 38 (பரையிடமா )[தொகு]

பரையிடமா நின்று பஞ்சாக் கரத்தா () பரை இடமா நின்று பஞ்ச அக்கரத்தால்

லுரையுணர்வுக் கெட்டா வொருவன் -வரைமகடான் () உரை உணர்வுக்கு எட்டா ஒருவன்- வரை மகள் தான்

காணும் படியே கருணையுருக் கொண்டாடல் () காணும் படியே கருணை உருக் கொண்டு ஆடல்

பேணுமவர்க் குண்டோ பிறப்பு. () பேணும் அவர்க்கு உண்டோ பிறப்பு.

வெண்பா 39 (நாதாந்த )[தொகு]

நாதாந்த நாடகத்தை நன்றா யருள்செய்தீ () நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள் செய்தீர்

ரோதீ ரெழுத்தஞ்சு முள்ளபடி- தீதறவே () ஓதீர் எழுத்து அஞ்சும் உள்ளபடி- தீது அறவே

யஞ்செழுத்தீ தாகி லழியுமெழுத் தாய்விடுமோ () அஞ்சு எழுத்து ஈது ஆகில் அழியும் எழுத்து ஆய் விடுமோ

தஞ்ச வருட்குருவே சாற்று. () தஞ்ச அருள் குருவே சாற்று.


வெண்பா 40 (உற்றகுறி )[தொகு]

உற்ற குறியழியு மோதுங்காற் பாடைகளிற் () உற்ற குறி அழியும் ஓதுங்கால் பாடைகளில்

சற்றும் பொருடான் சலியாது- மற்றதுகே () சற்றும் பொருள் தான் சலியாது- மற்று அது கேள்

ளீசனரு ளாவி யெழிலார் திரோதமல () ஈசன் அருள் ஆவி எழி்ல் ஆர் திரோத மலம்

மாசிலெழுத் தஞ்சினடை வாம். () ஆசு இல் அஞ்சு எழுத்தின் அடைவாம்.

பார்க்க:[தொகு]

[[]]


உண்மை விளக்கம்-வெண்பா 01-10காப்பு

உண்மை விளக்கம்-வெண்பா 11-20

உண்மை விளக்கம்-வெண்பா 21-30

உண்மை விளக்கம்-வெண்பா 41-53


உண்மைவிளக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=உண்மை_விளக்கம்-வெண்பா_31-40&oldid=27123" இலிருந்து மீள்விக்கப்பட்டது