உமார் கயாம்/25. எழுதினபடிதான் எதுவும் நடக்கும்!

விக்கிமூலம் இலிருந்து

25. எழுதினபடிதான் எதுவும் நடக்கும்!

கொரசான் பாதையிலே, கூர்டிஸ்தான் மலைப்பிரதேசத்தின் வழியாக அந்த ஒட்டச்சாரி சென்று கொண்டிருந்தது. ஒட்டகங்களின் மணியோசை இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பயணம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. கதிரவனின் வெப்பத்துடன், மண்ணிலிருந்து கிளம்பிய குடும் ஆட்களை அயரச் செய்து கொண்டிருந்தது. ஒரு மட்டக்குதிரையில் சென்று கொண்டிருந்த உமார் அரை குறையாகத் தூங்கிவிழுந்து கொண்டே சென்றான்.

இரவு நேரத்தில் தூக்கம் வராத பொழுது, அவன் அக்ரோனோசிடமிருந்து மதுவை வாங்கிக்குடிப்பான். காவல்காரர்களுடன் சென்று பேசிக்கொண்டிருப்பான். இவனைப் பைத்தியம் என்று எண்ணிக்கொண்டிருந்த அவர்கள், மிக மரியாதையாகப் பதில் சொல்லுவார்கள். பேசிக்கொண்டிருக்க வாய்ப்பில்லாத நேரங்களிலே, தூரத்திலே ஆற்றங்கரை மேட்டிலே அடக்கமாகிக் கிடக்கும் யாஸ்மியின் நினைவு-புதை குழியிலே முக்காட்டுத் துணியுடன் பூப்போல் கிடக்கும் அந்த அன்புடையாளின் தோற்றம் அவன் உள்ளத்திலே உருவாகும். அந்த எண்ணம் தோன்றியவுடனே இதயத்திலே நெருப்பு எரியத் தொடங்கிவிடும். அந்த நெருப்பை அணைப்பதற்காக அவன் மதுச்சாடியின் அருகிலே சென்று சிறிது நேரத்திற்கொருமுறையாக விட்டுவிட்டுக் குடித்துகொண்டேயிருப்பான். சமயா சமயங்களில் ஏற்படும் மனக்கவலைக்கு மதுவே மாற்று மருந்தாகப் பயன்பட்டது அவனுக்கு.

“அவர் குடித்துக்குடித்து மிகவும்,மெலிந்து போய்விட்டார்” என்று ஜபாரக் அக்ரோனோசிடம் கூறுவான். “தாகத்தோடு இருப்பதை காட்டிலும் குடிப்பது நல்லது” என்று அக்ரோனோஸ் பதில் கூறுவான்.

“ஆனால், நாளைக்கு என்ன செய்வது? அதைத் தொடர்ந்து வரும் நாட்களுக்கெல்லாம் வழி என்ன?”

“அவை வரும்பொழுது, நாம் அவற்றைப் பற்றிச் சிந்திக்கலாம். இப்பொழுது அந்தக் கவலை தேவையில்லை”.

இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டதும் உமார் தன் இருக்கையிலிருந்து, எழுந்து அவர்களைக் கவனிப்பான். “நேற்று என்பதும் நாளை என்பதும் இல்லாவிட்டால் வாழ்வு என்பது எவ்வளவு நன்றாகவும் எளியதாகவும் இருக்கும். நேற்று என்பதிலே போடப்பட்ட மறதி என்ற முக்காடு போட்டபடியே இருந்தால், வருங்காலம் என்பதனை மறைத்துக் கொண்டிருக்கும் திரை தூக்கப்படாமலே யிருந்தால், இன்றையபொழுது என்பது என்றும் மாறாமலே இருக்கும்” என்று எண்ணுவான்.

“சாந்தி! உனக்கு சாந்தியுண்டாக்கும்!” என்று ஜபாரக் முணுமுணுத்தான்.

ஒட்டகச்சாரி, பாலைவனத்து மணல் வெளியைவிட்டுக் கூர்டிய மலைப் பள்ளத்தாக்கின் சிவந்த மண் பூமி வழியாகப் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் பிற்பகலில், அந்த வியாபாரிகள் கூட்டம், ஓரிடத்திலே நின்றது. அந்த இடத்தில், மனிதனின் இடையளவு உயரமுள்ள கற்கள் குவியல் குவியலாகக் கிடந்தன. சில கற்களின் தோற்றம் மனிதனின் முகத்தைப்போன்ற அமைப்புடன் விளங்கியது. அந்த வியாபாரிகள் கீழே இறங்கி அந்தக் கற்களை நோக்கிச் சென்றார்கள். தள்ளியும் உருட்டியும் பாதையிலே சிறிது தூரத்திற்கு அவற்றைத் தள்ளிக் கொண்டு போனார்கள்.

“மலைகளிலிருந்து உருட்டிக் கொண்டுவரப்பட்ட இந்தக் கற்களுக்குப் பயணக் கற்கள் என்று பெயர். அந்தப் பாதை வழியாக வருகின்ற வியாபாரிகள், பிரயாணிகள் அனைவரும், தங்கள் தங்களால் முடிந்த அளவு, அந்தக் கற்களை மெக்காவை நோக்கிச் செல்லும் பாதையில் தள்ளி விடுவார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் அந்தப் பயணக் கற்கள் புனித நகரமான மெக்காவை அடைவதற்கு உதவிசெய்யக் கடமைப்பட்டிருக்கிறான். நான் சிறுவனாக இருந்தபோது இந்தக் கற்கள் ஷிரின் கோட்டை அங்காடித் தெருவில் காணப்பட்டன. இப்பொழுது, கூர்டியர் மலைக்கணவாய்ப் பாதையில் கிடக்கின்றன. இவை மெக்கா போய்ச்சேர இன்னும் எத்தனை காலம் ஆகுமோ?” என்று ஜபாரக் அந்தப் பயணக் கற்களின் கதையைக் கூறினான்.

அவை, மற்ற கற்களைப்போல் சாதாரணமாகத் தோன்றின. இருப்பினும், அவை நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு, இப்படிப் பாதைகளிலேயே சென்று கொண்டிருப்பதும் நின்றுகொண்டிருப்பதும் விந்தைதான்! வியாபாரிகள் அன்று மாலை மிக நீண்ட நேரத்திற்கு, தங்கள் வேண்டுகோள்களையெல்லாம் உரக்கச் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். ஏற்கெனவே அந்தப் பாதையில் சென்று பழக்கப்பட்ட பழைய வியாபாரிகள் அன்று இரவு எந்தவிதமான துன்பமும் ஏற்படாதிருக்க பிரார்த்தனையும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொண்டார்கள். ஏனெனில், மலையில் உள்ள கூர்டியர்கள் திடீரென்று இறங்கி வந்து ஒட்டகச் சாரிகளைக் கொள்ளையடிப்பது அந்தப் பாதையிலே வழக்கமான ஒரு நிகழ்ச்சி.

இரவு எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் கழிந்தது. எல்லா வியாபாரிகளும் அல்லாவுக்கு நன்றி கூறி மறுபடியும் ஒருமுறை பயணக் கற்களைச் சிறிது தூரம் தள்ளிவிட்டார்கள்.

பிறகு அவர்கள் பயணத்தைத் தொடங்கு முன்னரே, தங்கள் கூட்டத்திலே வந்த மது வியாபாரி ஒருவனை அழைத்து, தங்களுடைய ஒட்டகச்சாரி கண்ணுக்கு மறையுந் தூரம் வரை கடந்து போன பிறகு தொடர்ந்து வரச்சொன்னார்கள். தங்களுடன் கூட வரக் கூடாதென்று கூறிவிட்டார்கள். திருக்குரானிலே பாவம் என்று வகுக்கப்பட்ட பொருள்களிலே மது ஒன்று. அந்த மதுவைக் கொண்டுவரும் அவன் தங்கள் கூட்டத்திலே இருந்தால், அல்லாவின் கோபத்திற்கு ஆளாகும்படி நேரிடும். கொள்ளைக்காரனிடம் மாட்டிக்கொள்ளும்படி நேரிட்டாலும் நேரிடலாம். ஆகையால், தாங்கள் நெடுந்துரம் போனபிறகே, அவன் தன்னுடைய ஒட்டகங்களுடன் வரலாமென்று சொல்லிவிட்டார்கள். மத பக்தியுடைய அவர்கள் அக்ரோனோஸையும் தங்கள் கூட வருவதற்கு அனுமதிக்கவில்லை. “நீ ஒரு கிரேக்கன். மத விரோதி.நீயும் மது வியாபாரியுடன் சேர்ந்து வா” என்று கூறினார்கள். அதற்கு அக்ரோனோஸ், “நான் கிரேக்கனல்ல; ஆர்மீனியன்” என்றான். “அதுவும் ஒன்றுதான். பன்றிக் கறியைத் தின்னும் நீ மத விரோதிதான். நீ எங்களுடன் இருந்தால், உனக்காக வரும் தீமை எங்களையும் பாதிக்கும். எங்களோடு வராதே!” என்று கூறிவிட்டார்கள். அவன் பதில் பேசாமல் நின்றுவிட்டான்.

அக்ரோனோசையும், மது வியாபாரியையும் விட்டுவிட்டு, மற்றவர்கள் அனைவரும் தங்கள் குதிரைகளிலும், ஒட்டகங்களிலும் சாமான்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். உமார் அவர்களுடன் புறப்படாமல் தன்னுடைய மட்டக்குதிரையைப் பிடித்துக்கொண்டு, பயணக் கற்களில் ஒன்றின்மேல் உட்கார்ந்திருந்தான். அதைக் கவனித்த வியாபாரிகள் அவனை வரும்படி அழைத்தார்கள். “நான் வரவில்லை. மதுவில்லாமல் நீங்கள் போகிறீர்கள்! நான் மதுவில்லாமல் இருக்கமுடியாது! போங்கள்” என்று விடை கொடுத்துவிட்டான். ஜபாரக்கும் அவனுடன் தங்கிவிட்டான்.

அந்த மது வியாபாரி, மற்ற வியாபாரிகளின் பேச்சை, மறுத்துப் பேசவில்லை. அவர்களுடைய ஒட்டகச்சாரி கண்ணுக்கு மறையும் வரை காத்திருந்து பிறகு புறப்படும்படி தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டான்.

“இன்றையப் பொழுதில் என்ன நடக்க வேண்டுமென்று ஆண்டவன் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறான். அவன் எப்படி எழுதி வைத்திருக்கிறானோ அப்படித்தான் நடக்கும். அதைத் தடுக்கமுடியாது. ஒரு முட்டாள், ஒரு குடிகாரன், ஓர் அர்மீனியன் இவர்களோடு நான் பிரயாணம் செய்ய வேண்டுமென்று என் தலையில் எழுதியிருக்கிறது. அதை நான் எப்படித் தவிர்க்கமுடியும்?” என்று வேதாந்தம் பேசத் தொடங்கினான்.

மற்ற வியாபாரிகள் கூட்டத்தின் கடைப்பகுதி, தூரத்து மேட்டுக்கப்பால் மறைந்த பிறகு, மது வியாபாரி தன்னுடைய ஒட்டகங்களைக் கிளப்பினான். அவனுடைய வேலையாட்கள் தங்கள் கைக் கம்புகளை எடுத்துக்கொண்டார்கள். ஜபாரக், தன் கழுதையின்மேல் ஏறிக்கொண்டான். கண்ணைக் கூசவைக்கும் கதிரொளியில் அவர்கள் கணவாய்ப் பாதை வழியாக முன்னேறினார்கள். ஒரு மேட்டுச் சரிவில் அவர்கள் ரைவாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது, ஒட்டகக்காரர்கள் தங்கள் ஒட்டகங்களைச் சடக்கென்று நிறுத்தினார்கள். குதிரைக் குளம்புகளின் படபடப்பான ஓசையின் எதிரொலி அந்தப்பள்ளத்தாக்கு முழுவதும் நிறைந்தது. எங்கோ, மனிதர்களின் கூப்பாடு கேட்டது . கூர்டியர்கள் வந்து கொல்லப்போகிறார்கள் என்று மது வியாபாரி பயந்து துடித்தான். சற்றுமுன் அவன் பேசிய வேதாந்தமெல்லாம் மறந்துபோய் விட்டது.

“நாம் ஒடித் தப்பிப்பது கடினம். ஆகையால் மிருகங்களை எங்காவது மறைத்து வைப்போம்” என்று அக்ரோனோஸ் ஆலோசனை கூறினான். பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஒடைப்படுகையின் வற்றிக்கிடந்த இடைவெளியில், ஒட்டகங்களை அவற்றின் சுமையுடன் ஒட்டிச்சென்று நிறுத்தினார்கள். பக்கத்தில் வளர்ந்திருந்த செடிகளின் மறைவிலே மனிதர்கள் பதுங்கிக் கொண்டார்கள்.

“அவனுடைய விதியின் பிடியிலிருந்து யாரும் தப்பு முடியாது!” என்று அழுதுகொண்டே மது வியாபாரியும் ஒளிந்துகொண்டான். பக்கத்தில் உயர்ந்து விளங்கிய மேட்டின் உச்சியிலே வான்முகட்டிலே ஈட்டி பிடித்த குதிரைக்காரர்கள் பாய்ந்து சென்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். குதிரைக்கால்கள் சிதறி எறிந்த சிறுசிறு கற்கள் உருண்டு விழும் ஓசையையும் கேட்டார்கள்.

“இந்தக் குன்றுகளின் வயிற்றிலிருந்து திடீரென்று மனிதர்கள் பிறந்துவிட்டார்கள்! வேடிக்கைதான்” என்று ஜபாரக் மெல்லிய குரலிலே தன் விகடத்திறமையைக் காட்டினான்.

அந்தக் குதிரைகளிலே வந்த கூர்டியர்கள் வளைந்து வளைந்து விரைந்து வந்ததைப் பார்த்தால், ஒளிந்திருக்கும் இவர்களைச் சுற்றி வளைத்துக்கொள்ள வருவதுபோலிருந்தது. அக்ரோனோசின் தோள்கள் பயத்தால் ஆடின. மூச்சைப் பிடித்துக்கொண்டு இருந்தான். கடைசியாக அமைதி நிலவியது. நெடுநேரத்திற்குப் பின்னர் ஜபாரக்தான் முதன் முதலில் பேசத் தொடங்கினான்.

“அவர்கள் நம்மைக் கவனிக்கவில்லை” என்று அவன் கூவினான். அவன் கூவி ஒரு மணிநேரம் சென்ற பிறகு, தொடர்ந்து அமைதி நிலவியதை மனமாற அறிந்த பிறகுதான் மது வியாபாரி, மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியில் வந்தான்.

மீண்டும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். சிறிது தூரம் சென்றவுடனேயே அவர்கள் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து தங்கள் மிருகங்களை நிறுத்தினார்கள். அவர்களின் எதிரில், சமதளமான ஓரிடத்திலே, தங்களுக்கு முன் போன வியாபாரிகள் கூட்டத்தின் தேவையற்ற பொருள்கள் பல சிதறிக்கிடந்தன. கயிறுகளும், சாக்குகளும், உடைந்த பெட்டிகளும் அங்கங்கே சிதறிக் கிடந்தன. ஒரு நொண்டிக் கழுதையும் சில நாய்களும் தவிர வேறு மிருகங்களோ, பொருள்களோ, அவற்றுடன் வந்த வியாபாரிகளோ யாரும் தட்டுப்படவில்லை. சிதறிக் கிடந்த அந்தப் பொருள்களுடன் நாலைந்து ஒட்டகக்காரர்கள் வாடிய முகத்துடன் குந்திக்கொண்டிருந்தார்கள். அவ்வளவுதான்.

எந்த விதமான ஆயுதமும் காணப்படவில்லை. ஆயுதந்தாங்கிய காவல் வீரர்கள் காற்றோடு காற்றாக மறைந்துவிட்டார்கள். பலப்பல வழிப்பறிக் கொள்ளைகளைப் பார்த்து அனுபவப்பட்ட அக்ரோனோஸ் வருத்தத்துடன் பேசினான்.

“நம் பாக்தாத் சகோதரர்கள் கூர்டியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தின்பதற்குரிய பறவையைப் பிடித்துச் சிறகுகளைப் பிய்த்தெரிந்து விட்டு உடலைக் கொண்டுபோனது போல வியாபாரிகளைக் கொண்டு போய்விட்டார்கள். வேகமாக ஓடும் குதிரைகளைப் பெற்றிருந்தவர்கள் சிலர் மட்டும் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். மற்றவர்கள் அனைவரும் பிடிபட்டிருக்கிறார்கள். இனி அவர்களை விலைகொடுத்துதான் திரும்ப மீட்கவேண்டும். அவர்களோடு வந்த வீரர்கள் அவர்களைக் காக்கப் பயன்படவில்லை. பாவம், கூர்டியர்களின் அடிமைகளாகி விட்டார்கள் அருமை சகோதரர்கள்!” என்று வருந்தினான்.

அந்த வியாபாரிகள் கூட்டத்தோடு தான் செல்வதை அவர்கள் மறுத்தபோது அக்ரோனோஸ் தான் மட்டும் பின் தங்கிவிட்டான். ஆனால், தன்னுடைய பட்டுத் துணி முட்டைகளைச் சுமந்து வந்த ஒட்டகங்களை அந்தக் கூட்டத்தோடேயே அனுப்பி வைத்திருந்தான். அவையெல்லாம் கொள்ளையிலே போய்விட்டான, ஆனால், அவன் தப்பிப் பிழைத்தானே, அந்த வரையிலே சந்தோஷந்தான்.

மது வியாபாரி, பெருமூச்சு விட்டுக்கொண்டே, “உம்! எழுதியபடி நடந்து விட்டது” என்றான்.

ஆனால், உமார் சிரித்தான். மேலும் உரக்கச் சிரித்தான். “நம்மிடம் அருமையான மது இருக்கிறது. அந்த வியாபாரிகள் இழந்த சொத்துக்கள் முழுவதும் சேர்த்தால்கூட இந்த மதுவின் மதிப்பில் பாதிக்குக்கூடச் சமமாகாது. தெரியுமா! ஹி!...” என்று உரக்கச் சிரித்தான்.

அங்கு குந்தியிருந்த ஆட்களையும் நாய்களையும் தங்களுடன் கூட்டிக்கொண்டு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். ஓரிடத்திலும் தங்காமல், வேகமாகத் தங்கள் ஒட்டகங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும் செலுத்திக்கொண்டு சென்றார்கள். கூர்டியர்கள் மறுபடியும் வந்து தாக்கக்கூடும் என்று பயப்பட்டதால், அன்று இரவு எங்கும் தங்காமல், தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். ஒளி வீசி ஒளிவீசி ஓய்ந்து காணப்பட்ட பழைய கிழவியான அந்த நிலவின் அடியிலே மலைமுகடுகளிலும் மேடுகளிலும் ஏறி இறங்கி அவர்கள் பயணம் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது.

இறந்துபோன மனிதர்கள் தங்கள் புதை குழியைத் தேடிக்கொண்டு செல்வதுபோல் சுரத்தில்லாமல், உற்சாகமில்லாமல், இந்தப் பயணம் இருப்பதாக ஜபாரக் கூறினான்.

“இருந்தாலும், காற்று நிறைந்த இந்த வெட்டவெளிப் பிரயாணம் உமாருக்குப் பிடித்தமாக இருப்பது போலத் தோன்றுகிறது” என்று அக்ரோனோஸ் கூறினான்.

அக்ரோனோஸ், ஜபாரக்கைப் பார்த்துக் கேட்டான். “இதோ, இங்கே பார், எனக்கு ஒரு விஷயம் தெரியவேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னாலே, நீ யாஸ்மி என்ற அந்தப் பெண்ணிடமிருந்து ஏதோ செய்தியுடன் இவரைத்தேடி, இவர் வீட்டுக்கு வந்ததாகச் சொன்னாய் அல்லவா? ஆனால், அவர் உன்னை அலெப்போ நகரில் பிச்சைக்காரர் கூட்டத்தில் பார்க்கும் வரையிலே எதுவும் தெரியாதென்று சொன்னாரே அதன் விவரம் என்ன? என்றான்.

“ஏனய்யா, நான் பொய் சொல்கிறேனென்றா நினைத்தாய்? அல்லாவே நீர்தாம் சாட்சி சொல்ல வேண்டும். ஆண்டவன் அறிய நான் அவரைத் தேடி, விண்மீன் வீட்டிற்குச் சென்றேன். ஆனால், அவர் அப்பொழுது ஊரில் இல்லை. வந்தவுடன் தகவல் சொல்லும்படி, கூறி அடையாளப் பொருளும் கொடுத்துவிட்டு வந்தேன்.”

“ஆனால், அவருக்குச் செய்தியே சொல்லப்படவில்லையே! அது எப்படி? வா! அவரிடம் வந்து சொல்லு’ என்று அவனை வற்புறுத்தினான். அக்ரோனோஸ்.

“முடியாது. அவர் அந்தப் பெண்ணின் ஏக்கமாகவே இருக்கிறார். அவளைப் பற்றி நினைவுபடுத்தினால் கெடுதலாக முடியும். பயமாக இருக்கிறது” என்று ஜபாரக் மறுத்துவிட்டான்.

“அதெல்லாம் ஒன்றும் நடக்காது. வா” என்று கூறி அந்த ஆர்மீனியன், விகடனின் கழுதையுடைய மூக்கணாங்கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டே தன் குதிரையைத் தட்டிவிட்டு, முன்னால் சென்று கொண்டிருந்த உமாருக்குப் பக்கத்திலே, வந்து குதிரையைச் செலுத்திக் கொண்டே பேசினான். “மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ஜபாரக் யாஸ்மியிடமிருந்து ஓர் அடையாளம் கொண்டு வந்தானாமே அதை மறந்து விட்டீர்களா?” என்று கேட்டான்.

உமார் தன் குதிரையை நிறுத்தி, அவர்களை நோக்கினான்.

“தலைவரே! நான்செய்தி தெரிவித்து விட்டு வந்தபிறகு கூட, மாதக் கணக்காக தாங்கள் தேடி வரவில்லையே, காரணம் என்னவென்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்” என்றான் ஜபாரக்.

“என்ன அடையாளப் பொருள்? என்ன செய்தி?”

“நீலக்கல் பதித்த வெள்ளி வளையல் ஒன்று கொண்டு வந்தேன். யாஸ்மி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். மேற்குத் திசையில் உள்ள அலெப்போ நகருக்குக் கொண்டு செல்லப் படுகிறாள் என்ற செய்தியைக் கொண்டு வந்தேன்.”

யாஸ்மியின் கைகளில், தான் அந்த வளையல்களை அணிவித்தது உமாருக்கு நன்றாக நினைவு இருந்தது. அந்த நினைவு வந்ததும், குதிரையின் கடிவாளத்தை இறுக்கிப் பிடித்தான்.

“எனக்குத் தெரியாது. நீ யாருடன் பேசினாய். வேலைக்காரனுடனா அல்லது பேராசிரியர் குவாஜா மைமனிடமா” என்று உமார் கேட்டான்.

“இல்லை, அவன் பெயர் எனக்குத் தெரியாது. பருமனாக இருந்தான். மணி போன்ற குரல், வானத்தையொத்த நீல நிறத் தலைப்பாகை அணிந்திருந்தான். நான் தகவல் சொல்லத் தொடங்கும் முன்பாகவே, “யாஸ்மிக்கு நோயாமே? என்று கேட்டான்” என்று ஜபாரக் சொல்லிக் கொண்டு, வரும்போதே, “நிறுத்து அவன்தான் டுன்டுஷ் என்னை ஏமாற்றிவிட்டான். என்னிடம் பொய் சொல்லியிருக்கிறான்” என்று வெறிபிடித்தவன் போல் கூவினான். பிறகு எதுவுமே பேசாமல் இருந்தான். பிரயாணம் தொடர்ந்து நடந்தது. ஜபாரக்கும் அக்ரோனோசும் பின் தங்கிச் செல்லும்போது, “உனக்கு இதனால் என்ன இலாபம்? இதனால் என்ன பயன், வீணாக, அவருக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும்படி செய்து விட்டாயே!” என்றான். 

“நேற்றுக் கொள்ளை கொடுத்தேனே பட்டுத் துணி மூட்டைகள் அவற்றின் விலைமதிப்புக்குச் சமமானது இந்த செயல்” என்றான் அந்த அர்மீனியன். அவனுடைய புன்சிரிப்பும், மேற்கண்ட சொற்களும் ஜபாரக்கிற்கு எதையும் புரிய வைக்கவில்லை. நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவன் டுன்டுஷை உமாரின் நேரடி எதிரியாக நிறுத்தவே இந்த வேலையைச் செய்கிறான் என்று யூகிக்க முடிந்ததே தவிர, இவனுக்கும் டுன்டுஷுக்கும் என்ன பகை என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.