உமார் கயாம்/26. ஆராய்ச்சியில் நேர்ந்த அதிசயத் தவறு

விக்கிமூலம் இலிருந்து

26. ஆராய்ச்சியில் நேர்ந்த அதிசயத் தவறு

நிசாப்பூர் ஆற்றங்கரையில் இருந்த விண்மீன் வீட்டிலே பேராசிரியர் குவாஜா மைமன் இபின் நஜீப் ஆலவைஸ்தி என்ற பாக்தாது தேசத்துக் கணிதப் பேராசிரியன் ஆராய்ச்சிக் கூடத்திலே உட்கார்ந்திருந்தான். அந்தக் கிழவனுக்குப் பக்கத்திலே உர்கண்டு ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்த முசாபர் அல் இஸ்பிகாரி என்ற பேராசிரியன் ஒருவனும், கடந்த ஓராண்டு காலமாக அவர்களுடன் கூட வேலை செய்த மற்ற அறுவரும் உட்கார்ந்திருந்தார்கள்.

ஓராண்டு காலமாக அவர்கள் செய்து வந்த ஆராய்ச்சியின் பலன் எதிரிலே இருந்த மேசைமேல், எழுதப் பெற்ற காகிதங்களாகக் கிடந்தது. அவற்றிலே, குறிப்பிடப் பட்டிருந்த கணக்கு விவரங்கள் அவர்களுடைய தினசரி ஆராய்ச்சிக் குறிப்புகளாகும். பேராசிரியர் மைமன், தங்கள் வேலையின் பயனைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமார் அங்கு கிடந்த மெத்தை தைத்த நாற்காலியில் கையையும் காலையும் நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தான். மேலைத் தேயத்திலிருந்து திரும்பிய அவனைப் பார்த்த மைமனும் மற்றவர்களும், அவன் குடிமயக்கத்தில் இருக்கிறான் என்று எண்ணினார்கள். அவன் குடிக்காத போதும் கூடக் குடிகாரனைப்போலவே தோன்றினான். சுற்றிலும் ஆட்க்ள் இருக்கும்பொழுதே, தனக்குள்ளே மெல்லிய குரலிலே ஏதோ பாட்டை இராகம் இழுத்துக் கொண்டிருந்தான்.

மேலும் அவனுக்குப் பின்னாலே அருவருப்பான உடலமைப்புடைய விகடன் ஒருவனும், நரைத்த தாடிக்காரன் ஒருவனும் இருந்தார்கள். விஞ்ஞான மேதைகளின் இடையிலே ஒரு முழு முடனான விகடனைக் கொண்டுவந்து வைத்திருப்பதன் மூலம், உமார், தன் மதிப்பை இழக்கின்றான் என்று மைமன் நினைத்தான்.

அருவருப்பான குரலில், மைமன் தன்னுடைய அறிக்கையை உமாரின் முன் வைத்தான். அந்த அறிக்கையிலே, ஓராண்டின், மணிக்கணக்கும், கதிரவன் நேரத்தின் கணக்கும் இருந்தன.

பூமத்திய ரேகைச் சூரியோதயக் கணக்கு, ஏற்கெனவே நிலைநிறுத்தப்பெற்ற காலக்கணக்கிற்கு, மூன்று மணி ஒன்பது நிமிடம் வேற்றுமைப்படுகிறது” என்று மைமன் தன் கணக்கின் முடிவைத் தெரிவித்தான்.

“என்ன, ஒருமுறை பூமத்திய ரேகையிலிருந்து புறப்பட்டு, மறுபடி சூரியன் அங்கு வந்து சேர்வதற்கு, மூன்று மணி ஒன்பது நிமிடம் தாமதமாக வருகிறதா?” என்று உமார் விளக்கமாகக் கேட்டான்.

“ஆம்” என்று உறுதியான குரலில் மைமன் கூறினான். உமார் இல்லாத போது சூரியோதயக்கணக்கை தான் மிக அக்கறையாகவும் ஆழ்ந்தும் கவனித்திருப்பதைச் சொல்லிக் கொள்வதில் அவனுக்குப் பெருமையாக் இருந்தது. உமார் இல்லாதபோது தானே செய்ததால், பெருமை தனக்கேயுரியது என்று நினைத்துப் பூரித்தான்.

“இருக்க முடியாது. உன்னுடையூ_நீர்க் கடிகாரம்தான் தவறானது. அதை உடைத்து எறிந்துவிடு” என்றான் உமார்.

அதற்குள்ளே, இஸ்பிகாரி என்ற இன்னொரு பேராசிரியன், “தலைவரே! நீர்க்கடிகாரத்திலே அப்படி ஒன்றும் தவறு இல்லை. அதற்கும் சூரியோதயத்திற்கும் ஏறக்குறையப் பதினேழு நிமிடங்கள்தான் வேற்றுமையிருக்கிறது, அது அப்படி ஒன்றும் பெரிய வேற்றுமையல்ல!” என்றான்.

“அட கடவுளே! அவ்வளவு சரியாக வேலை செய்கிறதா அந்தக் கடிகாரம்? அப்படிச் சரியாக இருந்து ஆண்டொன்றில் மணி பதினெட்டு நிமிடங்கள் கணக்கு வித்தியாசப்படுகிறதா?” என்று கேட்டான். “அதற்கு நாங்கள் என்ன செய்வோம் நம்முடைய் விதி” என்று இழுத்தான் அவன். “மடையர்களே! என்ன செய்வதாம் என்ன செய்வது! போங்கள். அங்காடிச் சந்தையிலே அழகான ஆட்டக்காரிகள் நிற்பார்கள். போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து விட்டுத் திரும்பி வாருங்கள். நீே வித்தியாசப்படுகின்ற மணிக்கணக்கு ஓடி மறைந்துவிடும். பெரிய கணிதப் பேராசிரியர்கள் ஆராய்ச்சிசெய்ய வந்து விட்டார்கள்! எங்கேயாவது பள்ளிக்கூடத்திலே போய்ப் பாடம் நடத்துவதை விட்டு விட்டு, ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டார்கள்! போங்கள், போங்கள்! உபயோகமற்றவர்கள்!” என்று பொரிந்து தள்ளினான் உமார். இஸ்பிகாரியும் மற்ற ஆராய்ச்சியாளர்களும், வாயை முடிக்கொண்டு வெளியேறி விட்டார்கள். மைமன் மட்டும் ஆடாமல் அசையாமல் அச்சடித்த பதுமைபோல நின்றுகொண்டிருந்தான்.

படிமம்:Page189 உமார் கயாம் (புதினம்).jpg

“தலைவரே! ஆறுமணி நேரம் என்பது அப்படி என்ன பெரியது? ஒரு வெள்ளரிப் பழத்தைத் தின்றுவிட்டுக் குறட்டைவிட்டால் எழுந்திருக்கும் போது மணி சரியாக வந்துவிடும்!” என்று ஜபாரக் கூறினான்.

“ஆகா! நீயும் வானசாஸ்திரிதான்! பலே, பலே! அவர்களுக்கு நீ ஒன்றும் குறைச்சலில்லை” என்று கோபத்துடன் வேடிக்கையாகக் குமுறிவிட்டு, “அரக்கு வைத்து மூடியிருக்கும் அந்தச் சாடியைத் திறந்து - மது ஊற்றிக் கொண்டுவா” என்று உமார் கட்டளையிட்டான்.

அவன் குவளையில் ஊற்ற ஊற்ற உமார் குடித்துக் கொண்டிருந்தான். இந்தக் கூடாரம் அடிப்பவன் உடலுக்குள்ளே - ஏதோ பேய் குடிகொண்டிருப்பதாகவே மைமன் நினைத்தான். தன்னுடைய மனது தெளியும்வரை அந்த இடத்தை விட்டுப் போகக் கூடாதென்று அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். ஏனெனில் அவன் அதுவரை குறித்து வைத்திருந்த கணக்குகள் அனைத்தும் ஒழுங்காக ஒருநாள் கூடத் தவறாமல், மிகக் கவனமாக எடுக்கப்பட்ட குறிப்புகளாகும். சிறிது நேரம் சென்றதும் உமார், மேசைமேல் கிடந்த குறிப்புத் தாள்களைக் கைகளில் எடுத்துக் கொண்டே, “இந்தக் குறிப்பெல்லாம் யார் எடுத்தது? என்று கேட்டான்.

“தலைவரே! நானே எடுத்த குறிப்புகள்! பலமுறை சரிபார்த்துவிட்டேன்! தாங்கள் அதில் ஏதும் தவறு காணமுடியாது” என்று மைமன் உறுதியளித்தான்.

உமார், முதல் காகிதத்தில் இருந்த அந்தக் குறிப்புகளை ஒரு பார்வை பார்த்தான். அடுத்த காகிதத்தை எடுத்தான். ஆழ்ந்த கவனம் செலுத்தி அதைப் பார்த்தான். பிறகு மைமனை நோக்கி “நீ உன்னுடைய குறிப்புகள் எல்லாம் சரியானவை என்று அடித்துப் பேசுகிறாய். இஸ்பிகாரி, அவனுடைய கடிகாரத்தில் தவறு கிடையாதென்று உறுதி சொல்லுகிறான். ஆக, உங்களில் எவனோ ஒருவன் தவறு செய்திருக்கிறீர்கள்? அது யார்? அதுதான் தெரியவேண்டும்!” என்று கேட்டான்.

“நீர்க்கடிகாரம் சரியாகவே வேலை செய்கிறது. அதை நானும் உறுதியாகச் சொல்லமுடியும். ஏனெனில் அதை ஒரு மாதம் முடிந்தவுடனேயே சரிபார்த்துக் கொண்டுதான் தொடர்ந்து வேலைக்குப் பயன்படுத்தினோம். காயாவின் ஆணையாக நான் செய்துவைத்த குறிப்புகள் என் கையாலேயே தவறு இல்லாமல் குறிக்கப்பட்டவை என்று உறுதியாக நான் கூற முடியும்”.

“அறிஞர் டோலமி அவர்களின் நட்சத்திர அட்டவணையின் உதவியைக் கொண்டுதானே இதைக் கணக்குச்செய்து எழுதினாய்?”

“ஆம்!”

“டோலமி அவர்கள் தன் ஆராய்ச்சியை அலெக்சாண்டிரியா நகரத்தில் இருந்து செய்தார். நீ இப்பொழுது நிசாப்பூரிலிருந்து செய்கிறாய். இரண்டும் வேறு வேறு பூரேகைகளில் உள்ள இடங்கள். அவற்றின் கால வித்தியாசத்தைக் கணக்கில் சேர்த்துக்கொண்டாயா?

“அப்படியேதான் செய்தேன். இதோ கடந்தமாதத்தின் நட்சத்திர அட்டவணை. தாங்களே இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.”

பேனாவை எடுத்து உமார் ஒரு சிறு கணக்குப் போட்டுப்பார்த்தான். நட்சத்திர அட்டவணையில் ஒரு குறிப்பை எடுத்துக்கொண்டு, அதிலிருந்த இட வித்தியாசத்தைக் கணக்குச்செய்து, மைமன் தயாரித்திருந்த குறிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தான். கணக்குச் சரியாகவே இருந்தது. உமார் ஒன்றும் புரியாமல் முகத்தைச் சுளித்துக்கொண்டான். என்னடா இது! கணக்கில் தவறில்லை. நட்சத்திரங்களின் நிலையில் வேற்றுமையில்லை. கடிகாரமும் தவறானதல்ல. இருந்தும் ஆறு மணிநேரம் வித்தியாசம் என்றால் ஒன்றும் புரியவில்லையே! உனக்கு ஏதாவது படுகிறதா?” என்று மைமனைக் கேட்டான்.

“எனக்கும் அதுதானே விளங்கவில்லை”

“டோலமியின் நட்சத்திர அட்டவணையைக் கொண்டு வா!” என்று கேட்டுப் பெற்று, அதை மேசைமேல் விரித்து வைத்துக் கொண்டான். மைமன் குறிப்புகளின் முதல் காகிதத்தையும் எடுத்துக் கொண்டான். குனிந்த தலையுடன். தன் வேலையைத் தொடங்கினான். விளக்கு எரிந்து கொண்டிருக்க, நேரங்கடந்து கொண்டிருந்தது. அக்ரோனோஸ் தன் படுக்கையில் போய் சாய்ந்தான். குறட்டை விடத்தொடங்கி விட்டான். ஜபாரக் ஒரு மூலையிலே கந்தைத் துணியை விரித்துப் படுத்துக் கொண்டான். மைமன் மட்டும் ஆந்தையைப் போல் விழித்துக் கொண்டு உமார் வேலை செய்வதைக் கவனித்துக் கொண்டேயிருந்தான். எரியும் விளக்கில் எண்ணெய் குறையும் போதெல்லாம், மேலும் மேலும் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான்.

“இப்படி யிருக்க முடியாது” என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு காகிதமாக எடுத்துக் கணக்குச் செய்து கொண்டே இருந்தான். காலைப்பொழுது விடியும் நேரத்தில்தான், மைமனின் குறிப்புகளின் கடைசித் தாளைப் பரிசோதனை செய்து முடித்தான் உமார்.

“என்னுடைய எண்கள். சரியாக இருக்கின்றனவா?” என்று தயங்கிக் கொண்டே மைமன் கேட்டான்.

சிறிது நேரம், டோலமியின் அட்டவணையின் முதல் பக்கத்தையும் கடைசிப் பக்கத்தையும் ஆழ்ந்து கவனித்தான் உமார். “உன்னுடைய கணக்குக் குறிப்பில் எந்தவிதமான பிழையும் இல்லை. ஆறு மணி பதினெட்டு நிமிடம் என்ற தவறு நிலையான தவறு. இதோ பார், முதல் எண்ணும் ஒரே மாதிரியாக ஆறு மணி பதினெட்டு நிமிடங்கள் வேற்றுமைப் படுகின்றன. முதலிலிருந்து கடைசி வரை அந்தத் தவறு நிலையாக இருக்கிறது!”

தன்னுடைய கணக்கு முழுவதுமே தவறு என்று கூறுகிறாரே என்று மனம் வருந்தி விழித்துக் கொண்டு நின்றான் மைமன். “புரியாத விஷயமாக இருக்கிறது. அதை ஒப்புக் கொள்வதைத் தவிர! வேறு வழி என்ன இருக்கிறது? என்று வருந்தினான். ஆனால் அந்த சமயத்தில், உமார் “இதோ பார்! தவறு இங்கே இருக்கிறது!” என்று கூறி டோலமியின் கையெழுத்துப் பிரதியைக் காட்டினான்.

“கடவுளே என்ன சொல்கிறீர்கள். அதிலேயே பிழை? இருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளாகப் பயன்பட்டு வந்திருக்கும் இந்த அட்டவணையில் பிழையிருக்க முடியாது.” என்று மைமன் குளறினான். தன்னுடைய கணக்குத் தவறு என்பதை ஒப்புக் கொள்ள அவன் தயாராக இருந்தான். ஆனால் அறிஞர் டோலமியின் ஆராய்ச்சி முடிவைத் தவறு என்று கூற அவனுக்கு அச்சமாயிருந்தது.

“ஆம்! அந்த நிலையான தவறு இங்கேதான் இருக்கிறது!” என்று மறுபடியும் உமார் கூறினான்.

“அது எப்படி இருக்க முடியும் அப்படிப்பட்ட பெரிய ஆராய்ச்சியாளர் தவறு செய்வாரா? இருக்க முடியாது!” என்றான் மைமன்.

இரவு முழுவதும் விழித்து அயர்ந்த கண்களில் சிந்தனையின் அறிகுறியைக் காட்டியபடி மைமனை நோக்கி உமார் கூறினான்.” அந்தத் தவறு எப்படி நேர்ந்தது என்பது தெரிந்தால் நாம் அவரையே திருத்தலாம். ஆனால், அலெக்சாண்டரியாவைச் சேர்ந்த அந்த மனிதன் புதைகுழியில் போய் வெகு நாட்களாகி விட்டனவே!”

அந்தக் கிழட்டுப் பேராசிரியன் உமாரின் இந்தக் கூற்றை நம்பவில்லை. இஸ்லாமிய விஞ்ஞானிகளால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரப்படும் டோலமி அட்டவணையைத் தவறு என்று சொன்னால், நிசாப்பூர் மசூதியின் தூண்கள் ஆடி விழுந்துவிடும், உலகமே அழிந்து விடும் என்பது திண்ணம்.

“நாம் இவ்வளவு நாளும் செய்த ஆராய்ச்சிகள் வீணானவை, பயனற்றவை. பேராசிரியர் காரெஸ்மியின் உழைப்பும், மற்றவர்களின் பணியும் வீணானவை. நம்முடைய குறிப்புக்களே தவறானவை, பொய்யானவை” என்று திரும்பத் திரும்பக் கூறினான். அவன் மூளை குழம்பியது. தரையே உயரக் கிளம்பினாலும் அவன் ஆச்சரியப் படமாட்டான். ஆனால் டோலமியின் அட்டவணை தவறு என்பதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் உமாரின் கரிய கண்களிலே உறுதியான பார்வையிருந்தது.

“மைமன், கொஞ்சம் பொறு. தவறு சாதாரணமானது தான். ஆனால் நிலையானது. முதல் குறிப்பிலும் தவறு இருக்கிறது. கடைசிக் குறிப்பிலும் தவறு இருக்கிறது. நீயோ, உண்மையான குறிப்புகளையே எடுத்துக் கணக்குச் செய்து போட்டிருக்கிறாய். ஆனால் அது தவறாக இருக்கிறது. உண்மையே தவறாக இருக்க முடியாது. ஆனால் அந்த இடத்திலே அப்படித் தோற்றமளிக்கிறது. இந்த இரகசியத்தை முடியிருக்கும் முக்காட்டைக் கிழித்து எறிந்து விட்டோமானால், பயன் கிடைக்கும்.” மைமன் தலையாட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்யக்கூடிய நிலையில் இல்லை. “ஆ! அந்தச் சாவியை மட்டும் தேடி எடுத்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்று கூறிய உமார்,

“என்னிடம் சொல். டோலமியின் கீழ்மேல் ரேகைகளும், தென் வட ரேகைகளும் சரியானவை அல்லவா? என்று மைமனைக் கேட்டான்.

“சரியானவைதான்! இதில் சந்தேகமென்ன? முப்பது தலைமுறைகளாக அதைப் பின்பற்றி வருகிறோமே!” என்றான்.

“அப்படியானால், இந்த நட்சத்திர அட்டவணையைப் பயன்படுத்துவதற்குரிய வழி அவருக்கு (டோலமிக்கு)த் தெரிந்திருக்கத்தான் வேண்டும். அவரால், இந்த அட்டவணைகளைச் சரியாகப் பயன்படுத்தமுடியும். ஆனால், நம்மைப் போல் வழி தெரியாமல் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் தவறும்படியே நேரிடும். ஆனால், இப்பொழுது நாம் இந்த அட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாம் மட்டுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று கூறி உமார் அந்த அட்டவணையின் மீது தன் கையை வைத்துக்காண்பித்தான்.

“உண்மையிலிருந்து பொய்யை ஒரு சின்னஞ்சிறிய மயிரே பிரித்துக் காண்பிக்க முடியுமானால், பொய் உண்மையாகி விடாது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று மைமன் வேதாந்தம் பேசினான்.

உமார் மைமனைக் கூர்ந்து நோக்கினான். “மைமன், நீ வயது முதிர்ந்தவன், என்னை மன்னித்து விடு. பொய்யே உண்மையாக மாறக்கூடிய வழியை நீ எனக்குக் காட்டி இருப்பது தெரிகிறது; நன்றாகத் தெரிகிறது” என்றான்.

“யா அல்லா அதை யாராலும் பார்க்க முடியாது!”

“அப்படிச் சொல்லாதே! வழி மிக எளிமையானதுதான். நான் கேட்பதற்குப் பதில் சொல். இந்த அட்டவணையை நிசாப்பூரின் ரேகைக்குச் சரியாக மாற்றித் திருத்தினாய் அல்லவா? ஏன் அதை அப்படித் திருத்தினாய்?

இந்தக் கேள்வி, மைமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகச் சாதாரணமாக இந்தக் கேள்வியை, ஏதோ ஒன்றும் தெரியாதவனைக் கேட்பது போல உமார் கேட்டான். இருப்பினும் மைமன் பதில் கூறினான். “விண் மீன்கள் நிலையாக இருக்கின்றன. நிசாப்பூரிலிருந்து நாம் அவற்றைப் பார்க்கும் கோணத்திற்கும், டோலமி ஆராய்ச்சி செய்த இடமான அலெக்சாண்டரியாவிலிருந்து பார்க்கும் கோணத்திற்கும் வேற்றுமையுண்டு. அந்த வேற்றுமையின் அளவுக்கு, அந்த அட்டவணையை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.”

“சரி, அலெக்சாண்டிரியாவிலிருந்து அவை பார்க்கப்படவில்லை; ஆராய்ச்சி செய்யப் படவில்லை என்று இருந்தால்...!

“அது எப்படி? அறிஞர் டோலமியின் ஆராய்ச்சிக்கூடம் அலெக்சாண்டிரியாவில்தானே இருந்தது?”

“ஆம்! அந்த விஷயத்தில்தான் நாம் தவறு செய்திருக்கிறோம்!”

பொறுமையிழந்தவனாகவும், புரிந்து கொள்ள முடியாதவனாகவும் இருந்த மைமன், உமாரை நோக்கி, “தங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று மெதுவாகக் கூறினான்.

“இல்லை, கவனி. அலெக்சாண்டிரியாவில் ஆராய்ச்சி செய்த அறிஞர் டோலமி இந்த அட்டவணையைத் தயாரிக்கவில்லை. இது வேறோர் இடத்திலே, எப்பொழுதோயிருந்த யாரோ ஒருவரால், அவருடைய, காலத்துக்கு முன்னாலேயே தயாரிக்கப் பட்டிருக்கிறது. இதை இன்று நாம் பயன்படுத்துவது போல - அவரும் பயன்படுத்தி வந்திருக்கிறார். நாம் இது டோலமியின் அட்டவணை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம் . ஆனால், அவருக்கு இது யாரால், எந்த இடத்தில் தயாரிக்கப்பட்டதென்பது நன்றாகத் தெரியும். ஆகவேதான் அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றன.”

மைமனுடைய கண்களிலே புதிய ஒளி பிறந்தது. இப்பொழுதுதான் அவனுடைய குழப்பம் தெளிந்தது. திடீரென்று அவன் பிரச்சினையின் உண்மையைப் புரிந்து கொண்டான். ஒன்பது நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த உண்மையை இப்படி ஆராய்ந்து கண்டு பிடிப்பதென்றால், உமாருக்கு ஏதோ விசேஷ சக்தியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.

“உமாரிடம் ஓர் அபூர்வ ஆற்றல் இருக்கிறதென்று நிசாம் முன்பே சொல்லியிருக்கிறாரே!” அப்படித்தான் இருக்க வேண்டும், இருப்பினும், யார் இந்த அட்டவணையைத் தயாரித்தவர் என்பதும் எந்த ஊரில் என்பதும் நமக்குத் தெரியவில்லையே! இதைத் தயாரித்தவன் பாபிலோனைச் சேர்ந்த ஒரு சாலடியவனாகவோ, இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு ஹிந்துவாகவோ, மேலை நாட்டைச் சேர்ந்த ஒரு கிரேக்கனாகவோ இருக்கலாம். யாருக்குத் தெரியும்?” என்று பெருமூச்சு விட்டான் மைமன்.

எந்த இடத்திலிருந்து ஆராய்ச்சி செய்து இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டது என்பது தெரியும் வரை அதைப் பயன்படுத்துவது முடியாத செயல். அதைக் கொண்டு மேற்கொண்டு ஆராய்ச்சி செய்வது கடினம். அறிஞர் டோலமிக்கு அதன் மர்மம் தெரிந்திருந்தது.

ஆனால், முதலில் கண்டு பிடித்த ஆராய்ச்சியாளனின் பெயரையும் ஊரையும் மர்மமாகவே விட்டு விட்டுச் செத்து விட்டார் டோலமி.

“இன்னும் சில நாட்களில், ஆராய்ச்சி செய்த இடத்தை இந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட இடத்தை - நான் கண்டு பிடித்துச் சொல்கிறேன். இப்பொழுது நான் தூங்க வேண்டும்” என்று சொல்லி விட்டு உமார் தன் அறைக்குச் சென்றான்.

ஒரு முறை அதிசயச் செயல் புரிந்தவன் மறுபடியும் செய்வானென்று எதிர்பார்க்கலாம். ஆனால், கணித விஷயத்தில் இப்படி ஓர் ஆபூர்வக் கண்டுபிடிப்பை மைமன் இது வரை பார்த்ததுமில்லை. கேள்விப் பட்டதுமில்லை.

மைமனுடன் கூட வேலை செய்த மற்றவர்கள் அனைவரும், காலைத் தொழுகையை முடித்து விட்டு, உமாருடன் பேசிக் கொண்டிருக்கும் மைமனுடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெருமித உணர்ச்சியுடனும், நிமிர்ந்த தலையுடனும், ராஜநடை போட்டு வந்த மைமன் அவர்கள் எதிரே நின்று கொண்டு கம்பீரமாகப் பேசினான்.

“சிறுவர்களே! பேராசிரியர் குவாஜா உமார் அவர்களும், நானும் சேர்ந்து ஒரு பிழையைக் கண்டு பிடித்தோம். பூமி சாஸ்திர நிபுணராகிய அறிஞர் டோலமியின் நட்சத்திர அட்டவணையில் தொளாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு பிழையை நான் கண்டு பிடித்தேன். இன்னும் சிறிது காலத்தில் நாங்கள் அதனைத் திருத்தி அமைத்து விடுவோம். இப்பொழுது மிக அலுப்பாக இருக்கிறது. நான் தூங்கச் செல்கிறேன்” என்று கூறிவிட்டுத் தன் மேல் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு தன்னுடைய பகுதிக்குச் சென்றான்.

தன்னுடைய பெருமையை அவர்கள் அறியும்படி சொல்லிவிட்ட மகிழ்ச்சியிலே அவன் இருந்தான்.

அவன் அகன்ற பிறகு சிறிது நேரம் அந்த உதவியாட்கள் அமைதியாக இருந்தார்கள். பிறகு அவர்களிலே ஒருவன் “யா அல்லா இல்லல்லா! இந்தக் கிழடும் அவரோடு சேர்ந்து குடிகாரனாக மாறிவிட்டதே!” என்று சொல்லி வருத்தப்பட்டான்.