உமார் கயாம்/27. பழைய மது! புதிய கிண்ணம்!

விக்கிமூலம் இலிருந்து

27. பழைய மது! புதிய கிண்ணம்!

ஆராய்ச்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த பளிங்குத் தூணின் நிழலைக் கொண்டு, குர்யோதயத்தையும் மறைவையும் நீர்க்கடிகாரத்தின் உதவியால் கணக்கிடுவதும், அவற்றைக் குறித்துவைப்பதும் தவிர வேறு வேலைகள் எதுவும் நடைபெறவில்லை.

உமார் மட்டும், தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தான். முதலில் நூல் நிலையத்திலிருந்து அறிஞர் டோலமியின் பூமிநூல் புத்தகம் ஒன்றை வாங்கிவரச் சொன்னான். பிறகு, முற்காலத்தில் இருந்த கிரேக்க விஞ்ஞானிகளின் பட்டியல் ஒன்று தயாரித்துக்கொண்டு வரும்படி கூறினான்.

பெரும்பாலும், அமைதியாக உட்கார்ந்து, அவன் வேலையைக் கவனித்து வந்தான். மேசையில் நிறையத் தாள்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துக் கணக்குப் போட்டுப் பார்த்துக்கொண்டேயிருந்தான். தான் போட்ட கணக்குகள் சரியா என்று மீண்டும் பார்க்கும்படி அருகில் இருந்த மைமனிடம்கொடுத்தான். மைமன் எதோ தெரியாத விஷயத்தைப்பற்றி ஒன்றும் புரியாமல் செய்யும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபாடு கொள்ளவில்லை. இது பெரும் பாலும் பயனளிக்காதென்பதே என்னுடைய எண்ணம். ஆனால், உமார் எந்த அடிப்படையிலே வேலை செய்கிறான் என்பதை அவன் போகப் போகப் புரிந்துகொண்டான்.

வித்தியாசப்படும் மணிக்கணக்கை அடிப்படையாகக் கொண்டு, அந்த வித்தியாசப்படும் மணியளவுக்கு, எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதைக் கண்டு பிடித்துவிட்டால், அந்த இடைவெளித்துரத்தில் இருக்கும் ஊர் ஒன்றைத் தெற்கு அல்லது வடக்குத் திசையில் கண்டுபிடிக்க வேண்டும். இதிலிருந்து அந்த இடத்தை உத்தேசமாகத்தான் சொல்ல முடியும். உறுதிப்படுத்த முடியாது, அவர்களுடைய கணக்கு வேலையிலிருந்து, அந்த இடம் கீழ்மேல் ரேகையின் ஐந்தாவது டிகிரிக் கோட்டில் ஓரிடத்தில் இருக்க வேண்டுமென்ற அளவுக்குத் தெரிந்தது.

“நாம் அறியாத அந்த ஆராய்ச்சிக் கூடம் அலெக்சாண்டிரியா நகரின் வடக்கில் ஐந்தாவது டிகிரியில் இருக்கவேண்டும்” என்று உமார் கூறினான்.

“தெற்கில் ஐந்தாவது டிகிரியிலும் இருக்கலாமே?” என்று மைமன் தன் ஐயப்பாட்டைக் கூறினான்.

உண்மையில் அந்தக் குறிப்பிட்ட இடத்தின் தென்பகுதியில், பாலைவனங்களும், யாருக்கும் தெரியாத மலைப்பிரதேசங்களும் இருப்பதாகத்தான் பூகோளப் படம் காட்டியது. உமார் பூகோளப் படங்களை நம்பிக் கொண்டிருப்பவனல்ல. ஆனால் பெரும்பாலான நட்சத்திரங்கள் அலெக்சாண்டிரியாவின் தென் பகுதியிலிருந்து பார்த்தால் தென்படாது, ஆகவேதான் வடபகுதியில் இருக்கும் என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறினான். “அந்த டிகிரிக் கோட்டில் நிசாப்பூர் கூடத்தான் இருக்கிறது இன்னும் அலெப்போ, பார்க் முதலிய எத்தனையோ பட்டணங்கள் இருக்கின்றன?” என்று மைமன் விளக்கினான்.

அவர்கள் தேடும் அந்த இடம், இந்தியாவில் இருக்க முடியாதென்றும் நிசாப்பூருக்கும் மேற்கேதான் இருக்க வண்டுமென்றும் தீர்மானித்தார்கள். அலப்போ நகருக்கும் மேற்கே கூட இருக்கலாமென்று உமார் எண்ணினான். ஆனால், அப்படிப் பார்க்கும்பொழுது, ஆராய்ந்து முடிவு காண்பது என்பது எளிதாகத் தோன்றவில்லை. ஏனெனில் மேலைத் திசையில் உள்ள பட்டணங்களின் பெயரெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. அதுவும், அந்த அட்டவணை தயாரிக்கப்பட்ட காலத்திலே, முப்பது தலைமுறைகளுக்கும் முன்னே எப்பொழுதோ இருந்த ஒரு பட்டணத்தைப்பற்றிய தகவல் தெரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து ஆராய்வதும் ஆலோசனை புரிவதுமாக இருந்தார்கள்.

ஒருநாள் மாலை அவர்கள் இருவரும் தங்களுடைய ஆராய்ச்சி வேலையில் ஆழ்ந்து இருந்தபொழுது, வாசலில் இருந்தவாறே பழக்கமான ஒரு குரல் வணக்கம் தெரிவித்தது.

“ஞானமண்டபத்தின் இரண்டு தூண்களுக்கும் நலம் வருவதாக! உங்கள் உழைப்பு பலன் தருவதாக!” என்று வாழ்த்திக்கொண்டே, நீலத்தலைப்பாகையின் கீழே இருந்த முகத்தில் நிலவிய புன்சிரிப்புடன், நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவன் டுன்டுஷ் வருவதை மைமன் கண்டான். அவன் குரலைக்கேட்டதும், ஈட்டியால் குத்துப்பட்டது போன்ற எரிச்சலுடன் உமார் திரும்பிப்பார்த்தான். அவன் உள்ளத்திலே கோபம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. தடுக்க முடியாத ஆத்திரம் குமுறிக்கொண்டிருந்தது.

“நட்சத்திர வீட்டிலே ஒரு பெரிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அங்காடியில் பேசிக்கொள்கிறார்களே! உண்மையா? அது என்ன?” என்று கேட்டான் டுன்டுஷ்.

உமார் கையிலிருந்த பேனாவைக் கீழே போட்டுவிட்டு எழுந்திருந்தான். “நான் வருகின்றபொழுது, வழியிலேதான் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தேன். நீதான் அதன் உண்மையை எனக்குத் தெரிவிக்கவேண்டும்” என்றான் உமார்.

“அடிமையாகிய நான் தங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறேன். மேலும் நீண்டநாள் நண்பனாகவும் இருந்த என்னை நீங்கள் கேட்டால், உடனே எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்” என்று டுன்டுஷ் வணக்கத்துடன் கூறினான்.

“நீலக்கல் பதித்த வளையலை எந்த இடத்திலே ஒளித்து வைத்திருக்கிறாய் என்பதையும் அந்த வளையலுடன் கூறப்பட்ட சங்கதி எது என்பதையும் நான் இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டும். சொல்!” என்றான்.

ஒற்றர் தலைவனான டுன்டுஷுக்கு மூளை வேகமாக வேலைசெய்யும் சக்தி வாய்ந்தது. இந்த வார்த்தைகளைக் கேட்டதும், அவனுக்கு உடனே, தான் ஊற்றுக் கிணற்றுக்குள்ளே தூக்கி எறிந்த வளையல் நினைவுக்கு வந்தது.

எப்படி, அந்த விஷயம் இவனுக்குத் தெரியவந்தது என்று ஆச்சரியப்பட்டு முதலில் விழித்தான். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டான்.

“தங்களுக்கு நீலக்கல் பதித்த வளையல்தானே வேண்டும்? எத்தனை இலட்சம் வேண்டும் சொல்லுங்கள்; இப்பொழுதே கொண்டு வருகிறேன்” என்று விஷயத்தைப் புரியாதவன் போல் பேசினான்.

“இந்த இடத்திலே, ஒரு விகடன் வந்து உன்னிடம் ஒரு செய்தி கூறி அந்த வளையலைக் கொடுத்தான். அந்தச் செய்தியை நான் தெரிந்துகொள்ளாதபடி நீ மறைத்து வைத்துவிட்டாய். இப்பொழுது செய்தியனுப்பிய அந்தப் பெண் இறந்து போய்விட்டாள். அவளுடைய சாவு என்னுடைய உயிரை வாட்டிக்கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், அவளைத்தான்... அந்த ஒருத்தியைத்தான் நான் காதலித்தேன். அது உனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும், நீ என்னிடம் பொய்கூறியிருக்கிறாய் என்னை ஏமாற்றியிருக்கிறாய் - உண்மைதானே? ஏன் விழிக்கிறாய்?”

உமாரின் குரல் கடுகடுத்தது. முகம் கோபத்தால் சிவந்தது. கைகளை இடுப்பில் பிடித்தபடியே, கொல்லவரும் மதயானையைப்போல உமார் டுன்டுஷை நோக்கி நடந்தான். தன் உயிரைப் பறிக்கவரும் கொள்ளியைப்போல் எரியும் அந்தக் கண்களையும் தன் உள்ளத்தை ஊடுருவிச்செல்லும் நஞ்சு தோய்ந்த அந்த அம்புபோன்ற பார்வையையும் பார்த்த டுன்டுஷ் பயந்துவிட்டான், அவனுடைய உள்ளத்தின் நினைவுகளையும், பயத்தின் பொருளையும் உமாரும் அறிந்து கொண்டான்.

“ஆண்டவனின் தொண்ணுற்றொன்பது பெயர்களின் ஆணையாகவும் கூறுகிறேன். எனக்கு இந்த விஷயமே தெரியாது. தங்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பெண்ணையும் நான் பார்த்ததுகூடக் கிடையாது. ஐயோ! மைமன்; உதவி உதவி!” என்று டுன்டுஷ் கத்தினான்.

உமாரின் கைகள் அவனுடைய கழுத்தை இறுக்கிப் பிடித்தன. அவனை ஓர் ஆட்டு ஆட்டினான். டுன்டுஷ் வலையில் சிக்கிய மிருகம்போலத் திணறினான். உமாரின் கை விரல்கள், அவனுடைய சதைக்குள்ளே கத்தி பாய்வதைப்போல ஆழப் பதித்தன. அவனுடைய கண்கள் எரியும் நெருப்புப்போல இருந்தன. மைமன் உதவிக்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான் டுன்டுஷ்.

டுன்டுஷ் அடைந்த அதிகமான பயத்தின் காரணமாக, தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எப்படியோ உருவிக்கொண்டு, கண்மூடித்தனமாக உமாரைக்குத்தினான். கத்தியின் முனைஉமாரின் துணியைக் கிழித்து, சதையைக் கீறி எலும்பையும் தாக்கிவிட்டது. இரத்தம் ஒழுகியது. ஆட்கள் வந்து அவனை விடுவித்துத் தரையில் தள்ளினார்கள். அங்கே நீட்டிப்படுத்துப் பெருமூச்சு வாங்கிக்கொண்டு கிடந்தான். அவனுடைய கலங்கிய கண்களிலே மங்கிய தோற்றத்தில் ஐந்தாறு பேர், பாயும் வேங்கையைப் போல் நின்ற உமாரைச் சுற்றிவளைத்துப் பிடித்துக்கொண்டு நிற்பதையும், கிழிந்த துணியின் கீழே வெட்டுப் பட்ட தோளிலிருந்து வடியும் குருதி நெஞ்சில் வழிவதையும் தெரியக் கண்டான்.

“நாயே! நமக்கிடையிலே இரத்தப் பகை தோன்றிவிட்டது. தெரிந்துகொள். ஆனால், இப்பொழுது சிந்துகிறேனே; இந்த இரத்தத்தினால் அந்தப் பகை வரவில்லை. தெரிந்து கொள்; அந்த இரத்தம் எனக்குள்ளேயே நாளுக்குநாள் சிந்திக்கொண்டு வருகிறது. அது இப்படி வழியவிடமாட்டேன். போ! என் எதிரில் மீண்டும் தோன்றாதே! அப்படி வருவாயானால் நீ செத்துப் போவாய்!” என்று கொஞ்சங்கூடப் பதட்டமில்லாமல் அமைதியாகவும் அழுத்தமாகவும் கூறினான் உமார்.

வேலைக்காரர்கள் மூலமாக நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜபாரக், அன்று இரவு, தாக்கின் வாசல் அருகிலே வியாபாரி அக்ரோனோசைச் சந்திக்க நேர்ந்தபோது, அவனிடம் கூறினான். பிறகு ஜபாரக் பிரிந்து சென்ற பின், அங்கே அங்காடிச் சந்தையிலே, கூலிக்குச் செய்தி கொண்டுபோகும் ஒருவனைக் கூப்பிட்டு, ஒரு தாளிலே, இரண்டுசொற்களை எழுதி, அதை ஒட்டி, முத்திரை வைக்காமல் அவனிடம் கொடுத்து, “இதை ரே நகருக்கு எடுத்துச்செல். அங்கே பிரயாணிகள் தங்கும் சத்திரத்திலே சென்று, மண்டபத்திலே நின்றுகொள், ஏழின் இறையவருக்கு ஒரு கடிதம் கொண்டுவந்திருப்பதாகக் கூறவும். அவர் உன்னை நோக்கி வருவார். அவரிடம் கொடு” என்றான்.

“ஐயா! அந்த ஆள்தான் ஏழின் இறையவர் என்று நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்? பெயரும் புதுமாதிரியாக இருக்கிறதே?” என்று அந்த அடிமை ஐயங் கிளப்பினான்.

“அவரே உன்னிடம் வந்து கூறுவார்!”

“ஆ! இது என்ன விந்தையோ?” என்று ஆச்சரியப்பட்டுவிட்டு, அந்தச் செய்தியை வாங்கிக் கொண்டு போனான். அவ்விடத்தை விட்டு அகன்றதும் - அதைப் பிரித்துப் பார்த்தான். படிக்கத் தெரியா விட்டாலும் அது சாதாரணச் சொற்களைப் போலவே தோன்றியது, அதனால் தனக்கு ஏதேனும் ஆபத்து வராமல் இருக்க வேண்டுமே என்பதற்காக, ஒரு முல்லாவிடம் போய் அதைப் படித்துத் தெரிந்து கொள்ள விரும்பினான். அவர் உரக்கப் படித்தார். காலம் வந்து விட்டது என்று இருந்தது. இதிலே பயப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று மனம் தெளிந்து அந்த அடிமை ரே நகர் நோக்கிச் சென்றான்.

தோள் காயத்திற்குக் கட்டுப் போட்ட பிறகு உமார் தன் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். கதவு வழியாக அவனைக் கவனித்த இஸ்பிகாரி, அவன் ஏதோ சிறு சிறு துண்டுத் தாள்களிலே என்னவோ எழுதிக் கொண்டிருப்பதாகவும், அந்தத் தாள்களிலே சில தரையிலே விழுந்து கிடப்பதாகவும் கூறினான்.

ஆராய்ச்சிக் கூடத்தில், முடிக்கப்படாது, கண்டு பிடிக்காமல் பாக்கியிருந்த விஷயங்களை மேற்கொண்டு கணக்குச் செய்து கண்டு பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் மைமன் என்ற கிழப் பேராசிரியன், உமார் இல்லாமல், எதையும் செய்ய முடியவில்லை அவனால், பூகோளப் படம் சரியானதல்ல. கிரேக்க வான நூலாசிரியர்களின் பெயர்கள் அவனுக்கு வாய்க்குள் நுழையாதவையாக இருந்தன.

சிலச் சில வழிகளில் ஆராய்ச்சி செய்த பிறகு, பலன் எதுவும் ஏற்படாததால், தன் வேலையை முடிந்துக் கொண்டு, ஆராய்ச்சிக் கூடத்தைவிட்டு வெளியேறினான் மைமன். நகரத்திற்குப்போன அவன் திரும்பவும் இரவில்தான் வந்தான். வந்ததும் இஸ்பிகாரி அவனிடம் மேலே ஆராய்ச்சிக் கூடாரத்தில் ளக்கு எரிவதாகவும், உதவியாளர்கள் ஒருவரும் அங்கே இல்லை என்றும் கூறினான். உமார்தான் அங்கே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே, அங்கே சென்றான் மைமன். தாழ்ந்த ஒரு மேசையின் மேல் சாய்ந்து விரித்து வைத்திருந்த டோலமியின் கையெழுத்துப் பிரதியை உமார் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

“நாம் தேடும் அந்த இடம் ஆசியா மைனருக்கு மேற்கே இருக்கிறது!” என்றான்.

“ஆசியாமைனருக்கு மேற்கே வெறுங் கடல்தான் இருக்கிறது. உம், இத்தனை நாள் ஆராய்ச்சியும் பயனில்லாமல் போய் விட்டதே!” என்று மைமன் வருந்தினான்.

“இல்லை, பலன் கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது. முன் காலத்தில், பூபாகத்தில் பலப் பல நகரங்கள் இருந்தன. கடலின் இடையேயும் சிலச் சில நகரங்கள் இருந்திருக்கின்றன” என்று சொல்லிக் கொண்டே வந்தவன், தன் எதிரில் இருந்த வான சாஸ்திரிகளின் பட்டியலில் இருந்த பெயரை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டே வந்தான். பெயர்களின் கீழே ஒடிக் கொண்டிருந்த அவனுடைய பேனா ஓரிடத்திலே நின்றது.

“ரோட்ஸ் தீவுதான் நாம் தேடிய இடம். ரோட்ஸ் தீவில் இருந்த ஹிப்பார்க்கஸ் என்ற வான நூற்கலைஞன் ஆயிரம் நட்சத்திரங்களின் இடங்களைப் பற்றிக் குறிப்பு எடுத்திருக்கிறான். அவன் தயாரித்த அட்டவணையாகத்தான் இருக்க வேண்டும் இது.”

மைமன் என்ற அந்தக் கிழட்டு வான சாஸ்திரியின் உதடுகள் ஒலியில்லாமல் அசைந்தன. பெரும் பசியாளன் அல்லது பேராசை பிடித்த கருமியைப் போல் அவனுடைய நாடி நரம்புகளிலெல்லாம் ஒரு பேராசை யோட்டமெடுத்தது. ஒன்பது நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த ஒரு விஞ்ஞான இரகசியத்தைக் கண்டு பிடிக்கக் கூடிய ஒரு பெருஞ் செயலும் இதன் பலனாகக் கிடைக்கக் கூடிய பெரும் புகழும் அவர்கள் எதிரிலே காத்துக் கொண்டிருக்கிறது.

“ஆம்! ஆம்! டோலமியே, அவருடைய வானநூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலே, ஹிப்பார்க்கஸ் கண்டு பிடித்த ஆயிரத்து எண்பது நட்சத்திரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது மட்டும் உண்மையாக இருந்தால்...” தன் மதிப்பு உயரும், புகழும் உயரும் என்ற இன்பக் கனவு மைமன் உள்ளத்திலே எழுந்து அவனை மெய்மறக்கச் செய்தது.

“அது உண்மையாகத்தான் இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இயேசுநாதர் பிறப்பதற்கு நூற்றி முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், ரோட்ஸ் தீவின் கோணத்திற்குச் சரியாக இருக்கிறதா என்று இந்த அட்டவணையைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்”.

“நாம் இரண்டுபேரும் தனித்தனியாகக் கணக்குச்செய்து பார்ப்போம், அப்பொழுதுதான், தவறு ஏற்படாமல் செய்யமுடியும்!” என்று கூறினான் மைமன். மறுபடியும் தவறு வந்து வேலை பயனற்றுப் போய்விடக் கூடாது என்று பயப்பட்டான். கண்டுபிடிப்பு பெருமையிலும், புகழிலும் தனக்கும் பங்கிருக்க வேண்டும் என்ற பேராசையும் அவனுக்கு இருந்தது. புகழ் என்றால் உயிரையும் கொடுக்கும் பேரார்வம் அவன் குருதியிலே ஓடிக் கொண்டிருந்தது.

மூன்று நாட்கள் அவர்கள் வேலை செய்தார்கள். அரை குறையாகத் தூங்கினார்கள். இரவில் வெகுநேரம் கழித்தே படுக்கச் சென்றார்கள். காலையில் விடிவதற்கு நெடுநேரம் முன்பே எழுந்தார்கள். எதிரில் இருக்கும் தாள்களிலே இரண்டு கண்களும் மொய்த்த வண்ணம், மைமன் வேலையை விடாமல் செய்தான்.

அசதியாக இருப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்தக் கிழவன் வேலையிலே ஈடுபட்டிருந்தான். உமார் வாய் முணமுணவென்று பெருக்குவதும் கூட்டுவதும் கழிப்பதும் வகுப்பதும் சரிபார்ப்பதுமாக இருந்தான். கடைசியாகச் சிரித்துக் கொண்டே, “போதும் போதும்! அந்த இடமேதான், எல்லாம் அதற்குச் சரியாக இருக்கின்றன!” என்றான்.

“இரு, இரு இன்னும் சிறிதுதான்” என்று கூறிக்கொண்டே, மைமன் தன்னுடைய வேலையைச் சுறுசுறுப்பாகப் பார்க்கத் தொடங்கினான். அவன் கணக்குகளெல்லாம் செய்து சரிபார்த்து, மனஅமைதியடைந்த பிறகுதான், அதை ஒப்புக் கொண்டான்.

“சரியாக இருக்கிறது. சரியாக இருக்கிறது. அட்டவணை சரியாகவே இருக்கிறது. அறிஞர் அலிசென்னாவும் இதைச் சரியென்றே ஒப்புக் கொள்வார். பேராசிரியர் உமார் அவர்களே, அறிஞர் டோலமியைப் போலவே, நாமும் ரோட்ஸ் தீவின் விஞ்ஞானி வானநூல் அறிஞன் ஹிப்பார்க்கஸ் வகுத்த இந்த அட்டவணையை இனி எளிதாகப் பயன்படுத்தலாம்” என்றான், மைமன்.

மைமனுக்கு உடனே ஆஸ்தான மண்டபத்திலேபோய் உட்கார வேண்டும்போல் இருந்தது. தன்னுடைய மாணவர்களுக்கெல்லாம் இந்தப் புதிய உண்மையைப் போதிக்க வேண்டும்போல் இருந்தது. நிசாப்பூர் கலைக் கழகத்திலே உள்ள ஆசிரியர்களுக்கெல்லாம் இந்தப் புதிய உண்மையைப் போதிக்க வேண்டும்போல் இருந்தது. நிசாப்பூர் கலைக் கழகத்திலே உள்ள ஆசிரியர்களுக்கெல்லாம் அரிய ஆராய்ச்சியைப்பற்றிக் கூறவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால், உமார் அவனைத் தடுத்துவிட்டான்.

“ஏற்கெனவே, உலேமாத் தலைவர்கள் காலத்தை அளப்பது புனித மறையால் தடுக்கப்பட்ட செயல் என்றும், நமக்கு இந்த விண் மீன் வீட்டில் தீய ஆவிகள் உதவிசெய்கின்றன என்றும் கூறி வருகிறார்கள். மத விரோதியான ஒரு கிரேக்கனுடைய அட்டவணையை நாம் உபயோகிக்கிறோம் என்று தெரிந்தால் என்ன சொல்லுவார்களோ, என்ன செய்வார்களோ? பொறுத்திருந்து, எல்லா வேலைகளும் பூர்த்தியான பிறகு, முதலில் நம் ஆராய்ச்சியின் பலனை சுல்தான் முன்னிலையில் சமர்ப்பிப்போம். அதுவரை எதுவும் பேசக்கூடாது” என்றான் உமார்.

“உண்மைதான்! ஒருமுறை மதவெறி பிடித்தவர்கள் சிலர் நம்முடைய கோபுரத்தின்மேல் எரிகிற தீவட்டியைத் தூக்கி எறிந்தார்கள். தாங்கள் அலெப்போவில் இருந்த சமயம், நிழற்குறிகாட்டும் பளிங்குக் கம்பத்தின்மேல் கற்களை வீசியெறிந்தார்கள். மசூதியிலிருந்து கூட்டங் கூட்டமாக வந்த அவர்கள் செய்த அட்டகாசங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது இந்த விஷயங்களையறிந்தால், மதவாதிகள் என்ன செய்வார்களோ, சொல்ல முடியாது, நம் சிந்தனை முடிவுகளைச் சிறிது காலத்திற்கு முத்திரையிட்டு மூடிவைக்க வேண்டியதுதான். உதடுகளுக்கும் பூட்டுப்போட்டு வைக்க வேண்டியதுதான்” என்றான்.

உமார் திடீரென்று புதுப்புது வேலைகளில் ஈடுபடுவதன் இரகசியமும் மைமனுக்குப் புரியவில்லை. ஆராய்ச்சி வேலையிலிருந்து சிந்தனை அதை மறந்து வேறு எங்கோ தாவுவதன் காரணமும் அவனுக்குப் புரியவில்லை, தூரத்திலே உள்ள ஊரிலே, ஓர் அழகிய இளம்பெண் அழுது வாடுவதும், உமாரின் தோளிலே தொத்திக்கொள்வதும், தோற்றமளிக்கும் போது உமார் தன் இருப்பிடத்தையும் வேலையையும் எல்லாவற்றையும் மறந்து விடுவான். யாஸ்மியின் நினைவு வந்ததும் பித்துப் பிடித்தவன் போல் மாறிவிடுவான். இது மைமனுக்குத் தெரியாத விஷயம்!

பெருக்கெடுத்தோடும் ஆற்றின் அருகிலே எரிக்கும் வெயில் ரேன் நரகத்தைப்போல் தோன்றிய் அந்தக் கூடாரம் அவன் நினைவுக்கு வரும். சில சமயம் பிரகாசமான கண்களுடன் கூந்தல் கற்றை ஆடி அசைந்துவரப் புன்சிரிப்புடன் துள்ளி ஓடிவரும் யாஸ்மியின் அழகுருவம் தோன்றும். இப்படி மாறி மாறி இன்பக்காட்சிகளும் துன்பத் தோற்றமும் தோன்றுமாயினும், பெரும்பாலும், அவளுடைய நோய் வலியும், மரண வேதனையும்தான் அடிக்கடி தோற்றமளிக்கும்.

“இவருடைய போக்கே புரிபடவில்லையே. வேலை செய்தால், ஒரேயடியாக அதிலேயே ஆழ்ந்துவிடுகிறார். “இல்லாவிட்டால் மதுக் குவளையுடன் மனம் பேதலித்தவர்போல் தனியே உட்கார்ந்திருக்கிறார்” என்று இஸ்பிகாரி ஒருநாள் ஆச்சரியத்துடன் கூறினான்.

அவரைப்பற்றி அதிகம் தெரிந்தவர் போல், மைமன் “அவரிடம் ஓர் அதிசய சக்தியிருக்கிறது; ஆனால், அவர் போக்கு இப்படி யிருக்கிறது. மனத் தளர்ச்சி மட்டும் ஏற்படாவிட்டால், டோலமியைக் காட்டிலும் உமார் சிறந்து விளங்க முடியும்!” என்றான்.

ஆனால், கல்வியறிவில்லாத அங்க ஹீனனான ஜபாரக் மட்டும், உமாரின் நிலைமையை நன்கு உணர்ந்தவனாக இருந்ததால், இரவு நேரங்களில் எல்லாம் அவன் கூடவே உட்கார்ந்திருப்பான். தன் நண்பன் அருகிலே முடங்கிப் படுத்துக்கொண்டு, அல்லது உட்கார்ந்து கொண்டு, விளக்கு நாக்கு ஆடும்போதெல்லாம் உண்டாகும் நிழல் அசைவுகளைப் பார்த்துக்கொண்டே இருப்பான்.

அந்த மாதிரியான நேரங்களில் வேடிக்கைபேசுவது கிடையாது. “என் தலைவர் சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்கள் இறந்தபோது, கடல்போல் கண்ணிர் பெருக்கி என் துன்பத்தைக் கழுவிக்கொண்டு விட்டேன். ஆனால் கூடாரமடிப்பவரே! நீங்கள் குடிக்கும் அந்தக் கோப்பை மது, அது உங்களை அழுது கண்ணிர் விடச் செய்யும் ஆற்றல் இல்லாததாக இருக்கிறதே! அழுது தீர்த்தால் அல்லவா துன்பம் ஆறும்? என்று சொல்லுவார்கள்.”

அப்படிச் சொன்னபொழுது, உமார் அந்தக் கோப்பையை உற்று நோக்கினான். “துங்கும் பொழுது துன்பத்தை மறக்கலாம். தூங்கமுடியாத பொழுது குடித்து மயங்கலாம். அதனால் மறதி ஏற்படும். நீ யார் என்றும், எதற்காக இந்த உலகத்திலே பிறந்தாய் என்றும் நீ உன்னையே தேடித் திரிவதைக் காட்டிலும் குடிப்பது சிறந்தது அல்லவா?

“ஆனால், அது அமைதியைத் தருவதில்லையே!”

“மறதியைக் கொண்டு வருகிறதல்லவா? ஜபாரக், இதோ கவனி. இந்த கோப்பையிலே இரசாயன சாஸ்திரத்தின் இரகசியம் எப்படி அடங்கியிருக்கிறதென்று பார். குறிப்பிட்ட ஓர் அளவு குடித்து விட்டாயானால் உலகக்கவலைகள் ஆயிரத்தையும் ஒரு நொடியிலே மறக்கலாம். கோப்பை மது முழுவதையும் குடித்து விட்டால், மாமூது அரசரின் தங்கச் சிங்காதனத்திலே இருந்து இந்தத் தரணியையே அரசாளலாம்; தாவூதின் இதழ்கள் அசையப் பிறக்கும் இசையைக்காட்டிலும் மேலான இனிய சங்கீதத்தைக் கேட்கலாம். சொலு இந்தக் கோப்பையைச் செய்தவன் இதைத் தரையிலே தூக்கியெறிந்து துண்டு துண்டாய் உடையச் செய்வானா?”

“செய்ய மாட்டான்!”

“அப்படியானால் அழகிய மனித உடலை உருவாக்கும் அன்பும் இருக்கிறது; அதை அழிக்கும் சினமும் இருக்கிறதே! இது ஏன்?”

தரையில் கிடந்த கசங்கிய தாள் ஒன்றை எடுத்து உமார் ஜபாரக்கின் கையில் கொடுத்தான். அவன் அதை விளக்கின் அருகிலே கொண்டு போய் விரித்துப் படித்தான். உமாரின் அழகிய கையெழுத்தில், பாரசீகமொழியில் நான்கு அடிகள் கொண்டு கவிதை ஒன்று எழுதப் பெற்றிருந்தது.

புதிரான பாதையிலே
போகுமிந்தப் பயணமே
இதில் இன்பம் இல்லையே
என்றுந் துன்பம் துன்பமே!
மதுக் கிண்ணம் கொண்டு நீ
மகிழ வைப்பாய் இரவிலே!
எதிர் கால எண்ணமே
ஏதும் வேண்டாம் அன்னமே!

இதைப் படித்துவிட்டு “ஐயோ!” என்று பெருமூச்சு விட்டான் ஜபாரக் பிறகு திடீரென்று சுருங்கியிருந்த அவன் முகம் மலர்ந்து விரிந்தது. “எழுதும்! எழுதும் அதிகமான கவிதைகளை எழுதும்! அவையே உம் கண்ணின் பரிசாக இருக்கட்டும்” என்று கூறினான்.