உமார் கயாம்/28. மரணக்கொடி பறக்குதென்று மத குருக்கள் ஒலமிட்டார்!

விக்கிமூலம் இலிருந்து
28. மரணக்கொடி பறக்குதென்று மத குருக்கள் ஒலமிட்டார்!

ஓராண்டுகாலம் கழிந்தது. விண்மீன் வீட்டில் இருந்த ஆராய்ச்சியாளர்கள், தங்களுடைய புதிய கண்டுபிடிப்புடன், தினசரி மணிக்கணக்கை ஒப்பிட்டுப் பார்த்து மன நிறைவு பெற்றார்கள். மைமனுக்கும் இஸ்பிகாரிக்கும் மிகுந்த மகிழ்ச்சி, நட்சத்திரங்களின் இருப்பிடத்தைக் கொண்டு, நீர்க்கடிகாரத்தால் அளக்கப்படும் மணிக்கணக்கும், சூரியனுடைய நிழலின் மூலம் அளக்கப்படும் மணிக் கணக்கும் ஒன்றுக்கொன்று ஒத்து வந்தன. இவ்வாறு ஆராய்ச்சி செய்ததன் பலனாக, ஓர் ஆண்டில், 365 நாட்களும் ஐந்து அல்லது ஆறுமணி நேரமும் அடங்கியிருக்கின்றன என்று உறுதியாயிற்று. 354 நாட்களே கொண்ட பிறைக்கணக்கைக் காட்டிலும் இது நிச்சயமாகச் சரியானதென்றே தெரிந்தது. பிறைக் கணக்கில் உள்ள பிழையை உணர்ந்த எகிப்து தேசத்துப் பழங்கால வானநூல் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆண்டுக்கு 30 நாட்கள் கொண்ட 12 மாதங்களை வகுத்துக் கொண்டு, ஆண்டின் இறுதியில் ஐந்து நாட்களைத் திருவிழாவாகக் கொண்டாடி 365 நாட்கள் கொண்ட ஆண்டுக் கணக்கை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள்.

“அந்தக் கணக்கிலும், ஓர் ஆண்டில் கால் நாள் பொழுது விடுபட்டுப் போகிறது. நாம் ஓர் ஆண்டுக்குக் கால்நாள் கூட்டவேண்டும். அதை ஒரேயடியாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முழு நாளாகக் கூட்டிவிட்டால் என்ன?” என்று இஸ்பிகாரி கேட்டான்.

“நான்கு வருடங்களுக்கோ, அல்லது நாற்பது வருடங்களுக்கோ மட்டும் பயன்படக்கூடிய பஞ்சாங்கத்தை நாம் தயாரிக்கவில்லை. வரப்போகின்ற நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும், உலகம் உள்ள அளவும் ஓடுகின்ற காலத்திற்கும் ஓர் அளவு கருவியாகப் பயன்படும்படி இருக்க வேண்டும் நம்முடைய பஞ்சாங்கம்! அதற்கு இது வரையில் நாம் செய்த ஆராய்ச்சிகள் போதாது. இன்னும் துல்லியமாகக் கணக்குச் செய்யவேண்டும். மீண்டும், நாம் மனநிறைவு பெறுகிற வரையிலே தினந்தோறும், கால அளவுகளைக் கவனித்துக் குறித்துக்கொண்டு வர வேண்டும்” என்று உமார் கூற, மைமனும் அதை ஆதரித்தான். அதன்படியே, அவர்கள் மீண்டும் ஒருவருடம், காலங்காட்டும் கருவிகளையும், காலம் அளக்கும் கருவிகளையும் பயன்படுத்தி ஆராய்ச்சிக்குறிப்புகள் எடுத்து, முந்திய குறிப்புகளுடனும், திருத்தப்பட்ட நட்சத்திர அட்டவணையுடனும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு வந்தார்கள்.

விண்ணின் மீன்களை ஆராய்ச்சி செய்யும் இந்த மனிதர்கள், இடுகாட்டுப் புதைகுழியில் கிடக்கும் பிணங்களின் ஆவியோடு பேசியும், மத நம்பிக்கையற்றவர்களின் விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தியும் வருவதாக எதிர்ப் பிரசாரம் செய்து வந்த நிசாப்பூர் முல்லாக்களுக்கு, இவர்கள் ஆராய்ச்சியின் வெற்றிச் செய்தி, வதந்தி வடிவாகப்போய்ச் சேர்ந்தது. இவர்களுடைய கூக்குரலைப்பற்றி உமாரும் மைமனும் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், உமார் மீண்டும் இயற்கையின் தன்மையைப்பற்றி ஏதேர் ஆராய்ச்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதை மைமன் உணர்ந்தான். அவன் எந்த விஷயத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுப்ட்டிருக்கிறான் என்று மைமனால் யூகிக்க முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. அறிஞர் டோல்மியின் ஆராய்ச்சி முழுவதும், அவர் காலத்துக்கு முந்திய ஹிப்பார்க்கஸ் என்ற விஞ்ஞான மேதையின் ஞானத்தை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்டவையே என்பதை உமார் உணர்ந்து கொண்டதால், அவனும், அறிஞர், டோலமியைப் போலவே, ரோட்ஸ் தீவின் விஞ்ஞானப் பேராசிரியனின் புத்தகங்களிலே தன் கருத்தைச் செலுத்தி வருவது மட்டும் தெரிந்தது. ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில், ஹிப்பார்க்கஸ் நூல்களைப் பயன்படுத்த உமார் முயற்சிக்கிறான் என்பதை மட்டும் அவர் யூகித்துக்கொண்டார். எந்த விஷயம்? அதுதான் புரியவில்லை.

“என்ன ஒரேயடியாக ஆராய்ச்சியில் மூழ்கிவிட்டார்?” என்று இஸ்பிகாரி ஒருநாள் கேட்டான்.

“இதுதான் புரியவில்லை. கிரகணத்தில் ஏற்படும் நிழலின் வடிவத்தைப் பற்றியதா இருக்குமோ என்று நினைக்கிறேன். எல்லையில்லாது செல்லும் எண்களைப் பயன்படுத்தித் தீர்க்க வேண்டிய வளைவுகளைப்பற்றிய பிரச்சினைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் என்றுதான் எண்ணுகிறேன்!” என்று மைமன் சொன்னான்.

“அருளாளனாகிய அல்லா அவரைக் காப்பாற்றுவாராக. சாதாரண எண்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளே என் மூளையைச் சிதற வைக்கின்றன. அவர் மூளை என்ன வாகுமோ” என்று கூறி இஸ்பிகாரி சிரித்தான். இஸ்பிகாரி மைமனிலும் இளமையும் தைரியமும் உள்ளவன்.

“சைபர் வட்டத்துக் கணக்குகளை அவர் போட்டுக் கொண்டிருக்கிறான்.”

“சைபர் என்றால்தான் ஒன்றுமில்லையே. அப்புறம் அதில் என்ன கணக்கு இருக்கிறது?’ என்று இஸ்பிகாரி கேட்டான். பழைய இஸ்லாமிய முறைப்படி, சைபருக்குக் கீழே ஒன்றுமில்லை என்ற முடிவு அந்தக் காலத்தில் இருந்தது.

“சைபருக்கப்பால் ஒன்றுமில்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால், கிரேக்கர்கள் இதே சைபரை சீரோ என்று அழைக்கிறார்கள். அந்த சீரோவுக்கு அப்பால் எத்தனை பெரிய பெரிய எண்கள் எல்லாம் இருக்கின்றன!” இஸ்பிகாரிக்கோ, இது ஏதோ பெரிய நம்ப முடியாத விஷயமாகவும், மாயவித்தை போலவும் தோன்றியது.

“நீ சொல்வது, ஏதோ கிரேக்கர்கள் காணும் கனவு போல இருக்கிறது. கிரேக்கர்கள் இந்த மாதிரியான வீண் கனவு காண்பதில் பெரிய ஆட்கள்தான். இப்படிப்பட்ட கனவுகளைக் கண்டு அவர்கள் வெளியிலும் சொல்லுவார்கள். ஆனால், இதனால், அவர்களுக்காவது, வேறு யாருக்காவது ஏதாவது நன்மையுண்டா என்றால் கிடையாது. ஏதாவது நிறைவேறக்கூடிய சங்கதியுண்டா என்றால் கிடையாது. அவர்களாவது, நல்ல நிலையில் இருந்தார்களா என்றால் அதுவும் கிடையாது. ஒரு கிரேக்க விஞ்ஞானி, அவன் பெயர் எனக்கு நினைவு வரவில்லை. இப்படித்தான் ஒரு அபூர்வக் கனவு கண்டு அதை வெளியிட்டான். இந்தப் பூமிக்கு அப்பால் ஏதாவது ஒரு பொருளை நிறுத்தி விட்டால், அதைக் கொண்டு இந்தப்பூமியை, இடம் மாற்றி விடலாம் அல்லது நகர்த்தி விடலாம் என்று கண்டு பிடித்தான். இப்படிப்பட்ட கற்பனையில் ஈடுபட்டிருந்த அவன், ஒரு போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு சாதாரணச் சிப்பாயால் கொல்லப் பட்டான். அவர்களுடைய பெரும் பேரரசர் இஸ்கந்தர் (அலெக்சாண்டர்) என்பவன் ஒரு பெரிய கனவு கண்டான். ஆசியா முழுவதையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்தில் உலகம் முழுவதும் தன் ஆட்சியைப் பரப்ப வேண்டுமென்று மனக் கோட்டை கட்டினான். ஆனால் நம் பேராசிரியர் உமாரை விடக் கொஞ்சம் கூடுதலான வயதாகும் பொழுது, இளமைக் காலத்திலேயே அதிகமான குடிமயக்கத்தில் செத்துப்போனான். அவனுடைய அமீர்கள், தங்களுக்குள்ளேயே அந்தத் தேசங்களைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஒருவரோடொருவர் பொருதி, அந்த சாம்ராஜ்யத்தைச் சின்னாபின்னமாக்கிக் கெடுத்தார்கள். இப்பொழுது, அந்தக் கிரேக்கர்களையெல்லாம் சாய்த்து விட்டு நம்முடைய இஸ்லாமியப் பெரும் வீரர்கள் வந்து விட்டார்கள். கிரேக்கர்களின் கற்பனைகளால் சிறிதும் பயனில்லை” என்று இஸ்பிகாரி ஒரு பெரிய சொற்பொழிவே நிகழ்த்தினான்.

“ஒன்றுமில்லாத சைபருக்கப்பால் பெரிய பெரிய எண்கள் இருப்பதாக உமார் சொல்லுகிறாரே! அவரே, அந்த எண்களைப் பயன்படுத்திக் கணக்குகள் செய்கிறாரே!” என்று மைமன் விளக்கினான்.

“பெரிய முல்லாக்களின் காதிலே இந்த விஷயம் எட்டிவிடாமல் அல்லாதான் அருள் புரிய வேண்டும்” என்று கூறிவிட்டுப் போன இஸ்பிகாரி, தன் உதவியாளர் குறுக்கே வந்ததுமே, “உண்மையின் அத்தாட்சி மறுபடியும் குடிமயக்கத்தில் ஆழ்ந்து விட்டது! நட்சத்திரங்களின் மத்தியிலே ஒரு வளைவிலே ஏறிச் சென்று, செத்துக் கிடக்கும் எண்களின் ஆவிகளை ஆட்சி செலுத்துகிறார் ஆசிரியர் உமார்” என்று கூறினான்.

“ஆம் ஒருநாள் இரவு, புதைகுழிகளின் நடுவே சென்று அவர் உட்கார்ந்ததை நான் பார்த்தேன்” என்று அவர்களிலே ஒருவன் கூறினான். அந்த ஆண்டும் இறுதிக் கட்டத்தை அடைந்தது. கடைசிக் குறிப்புகள் முழுவதும் பதியப் பெற்ற பிறகு, உமாரும், மைமனும் உட்கார்ந்து, முடிவான, துல்லியமான, மிகமிகச் சரியான பஞ்சாங்கம் ஒன்றைக் கணக்குச் செய்து தயாரித்தார்கள்! அவர்களுடைய கண்டுபிடிப்பின்படி, ஓர் ஆண்டுக்கு 365 நாட்களுடன் 5 மணி 48 நிமிடம் 45 நொடி கால அளவு காணப் பட்டது. இன்று நாம் பயன்படுத்துகிற பஞ்சாங்கத்தைக் காட்டிலும் இது சரியான, கணக்கேயாகும். இதன்படி, 365 நாட்களுடன், 33 ஆண்டுகளுக்கொருமுறை 8 நாட்கள் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது, சூரிய வட்டக் கணக்கும், கடிகாரக் கணக்கும் மிகத் துல்லியமான முறையில் சரியாக இருக்க முடியும்.

இத்துடன், ஆண்டுகளின் அட்டவணையொன்றும், தயாரித்துப் பஞ்சாங்கத்தைப் பூர்த்தி செய்து, இவர்களுடைய முடிவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிசாம் அல் முல்க் அவர்களிடம் சமர்ப்பிக்கத் தயாரானார்கள். நிசாப்பூர்க் கோட்டையிலே யிருந்த உலக அமைப்பாளர் ஆகிய நிசாம் அல் முல்க் அவர்களின் திருமுன் தங்கள் புதிய பஞ்சாங்கத்தைச் சேர்ப்பதற்கு, பாக்தாத் கணிதப் பேராசிரியர் மைமன் அவர்களும், உர்கண்டு ஆராய்ச்சிக் கழகத்துப் பேராசிரியர் முசாபர் அல் இஸ்பிகாரி அவர்களும், தங்களுடைய பட்டங்களுக்குத் தகுந்த அரசியல் உடையலங்காரத்துடன் சென்றார்கள். தங்க முலாம் பூசிய எழுத்துக்களால் மினுமினுக்கும் பஞ்சாங்கப் பிரதி யொன்றைப் பறக்கும் நாகப் படம் பின்னப்பட்ட பட்டுத் துணிப் பைக்குள்ளே வைத்து நிசாம் அவர்களிடம் கொடுத்தார்கள். இதைத் தானே நேரடியாக சுல்தான் மாலிக்ஷாவிடம் அளிப்பதற்காக நிசாம் புறப்பட்டுச் சென்றார்.

“கீழ் நாடுகளுக்கும் மேல்நாடுகளுக்கும் தலைவரான எம் பேரரசரே! தங்களுடைய திருக் கட்டளையின் படி, தங்கள் பணியாளர்கள், காலத்தை அளந்து விட்டார்கள். இதுவரை உலகத்திலே கணிக்கப்பட்டு வந்த பஞ்சாங்கங்கள் எல்லாம் பிழையுடையன என்றும், தங்களுடைய சீரிய ஆட்சியிலே நிலைநிறுத்தப் படுகின்ற இந்தப் பஞ்சாங்கம் ஒன்றே சரியானதென்றும், நிலை நிறுத்தப் பெற்றது! அளவற்ற அருளாளரான அல்லா, உலகத்திலே மனித இனத்தை உலவ விடும், எல்லையில்லாத காலம் வரையிலே, என்றென்றும் சரியான அளவினைக் காண்பிக்கும் இந்தப் புதிய பஞ்சாங்கத்தை - தங்கள் திருவுளத்தின் பெரு விருப்பத்திற்கிணங்கத் தயாரிக்கப்பட்ட இந்தச் சரியான அளவு முறையை - வழக்காற்றில் கொண்டு வரக்கூடிய உரிமையுடைய தங்கள் திருமுன் படைக்கிறேன்!” என்று கூறி நிசாம் அல் முல்க் அவர்கள் சுல்தான் மாலிக்ஷா அவர்களின் கைகளிலே அதை அளித்தார்.

சுல்தான் மாலிக்ஷா, அதை ஆவலுடன் வாங்கிப் பார்த்தார். பஞ்சாங்கம், அவருடைய புரியும் தன்மைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருந்தாலும், அதைச் சுற்றிக் கொண்டு வந்த பட்டுத் துணியில் பின்னப்பட்டிருந்த பறக்கும் பாம்பின் அழகிய உருவம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. பறக்கும் பாம்பு, அவருடைய பரம்பரைச் சின்னமாகும். மேலும், விண்ணின் குறிகளை விளக்கும் ஆற்றல் படைத்த உமார் கயாம் தயாரித்த இந்தப் பஞ்சாங்கம், அவருடைய தொடர்ந்த ஆட்சியை அதிர்ஷ்டமுடைய தாக்கும் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. தன் ஆட்சியில் ஒரு புதிய பஞ்சாங்க முறை ஏற்படுத்துவது அவருக்குப் பெருமையாகவும் இருந்தது.

“விண்மீண் வீட்டிலே ஆராய்ச்சி செய்த கல்வி வல்ல மேதைகளுக்குச் சிறப்புப் பட்டங்களும், பொற்கிழிகளும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். என்னுடைய அரசவை வான நூல் அறிஞருக்குக் குன்றின் மேல் உள்ள காசர் குச்சிக் என்ற சிறிய அரண்மனையை வெகுமதியாகக் கொடுங்கள்” என்று சுல்தான் ஆணையிட்டார்.

அவருடைய பெருங் கொடையளிப்புக்கு வியந்து, அதை நிறைவேற்றுவதற்கு அடையாளமாகத் தலை குனிந்து நிசாம், சுல்தான் மாலிக்ஷா காதில் விழும்படியான குரலில் பணிவுடன், “வரும் இளவேனிற் காலத்திலே, கதிரவன் பூமத்திய ரேகைக் கோட்டிலே செல்லும் சரியான நாள் வருகிறது. அன்று மாலையுடன், பழைய பஞ்சாங்க வழக்கு நிறுத்தப் பட்டு, புதிய சகாப்தத்தின் ஆரம்ப விழா நடத்தப் படுவதற்கும், புதிய சகாப்தத்திற்குத் தங்கள் பெயரால், “ஜல்லாலியன் சகாப்தம்” என்ற பெயர் வைப்பதற்கும், தங்கள் பேராணைக்குக் காத்திருக்கிறேன்” என்று நிசாம் கூறினார். சுல்தானும், அதற்குச் சரியென்று கூறினார்.

அந்த இளவேனிற் காலத்தில், சூரியன் பூமத்தியரேகைக் கோட்டில் பவனி வரும் அந்த நாளில், இரவும் பகலும் சரிசமமாக இருக்கும் அந்த நாள் மாலையில், தன்னுடைய பிரபுக்கள் புடைசூழ, அரண்மனைக் கோட்டைக் கோபுரத்தின் உச்சியிலே, சுல்தான் மாலிக்ஷா ஏறி நின்றார்.

தூரத்துச் சமவெளியின் ஓரத்திலே, கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். வீட்டில் மேல்மொட்டை மாடிகளிலேயும் வெளி வராந்தாக்களிலேயும், நிசாப்பூர் மக்கள் இரத்தினக் கம்பளங்கள் விரித்துத் திருவிளக்குகள் ஏற்றி வைத்திருந்தார்கள். வீணையின் இசையும், மாதர்களின் சிரிப்பொலியும் மயங்கிய வெளிச்சத்தின் இடையிலே எழுந்து வீதியெங்கும் இன்பம் நிறைந்தன. வீதியின் வழியாக அரசாங்க அறிவிப்பாளர்கள், புதிய சகாப்தத்தின் முதல் நாளின் முதல் மணி தொடங்கி விட்டது என்று கூவிக் கொண்டு சென்றார்கள். தங்கச் சரிகையிட்ட அங்கியணிந்து, இளைஞரான சுல்தானின் தோளோடு தோளாக அருகிலே நின்றார் உமார். நிலப் பகுதியின் இருட் கோட்டிலே. பழைய சகாப்தத்தின் கதிரவன் மூழ்கி மறைவதை சுல்தான் பார்த்துக் கொண்டிருந்தார். வானம் தெளிவாக இருந்தது. சூரியன் மறைந்த அந்த இடத்திற்கு மேலே மட்டும் சிறிய மேகக் கூட்டம் ஒன்று இருந்தது. மறைந்த கதிரவனின் ஒளிக் கரங்கள் அந்த மேகங்களிலே பட்டுச் செம்மை படரச் செய்தன.

தாடி நரைத்த முல்லா ஒருவர் “அதோ பாருங்கள், வானத்திலே அல்லா சாவுக் கொடியைப் பறக்க விட்டிருக்கிறார்!” என்று கூறிக் கொண்டிருந்தார். சுற்றிலும் இருந்தவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர்கள் கவனம் முல்லாவிடம் ஈடுபடும் முன்னாலே “காணுங்கள்! காணுங்கள்! உலகத்தின் தலைவரே! பேரரசே! வெற்றி வீரரே! தங்கள் சகாப்தம் தொடங்கி விட்டது” என்று கூவினான். மக்கள் கவனம் அவன் பக்கம் திரும்பி விட்டது.

கதிரவனின் கடைசி ஒளியும் மறைந்து விட்டது. உலகத்தில் இருளும், வானில் வெறுமையும் நிலவியது. வீதிகளிலே, சேர்ந்து பாடிக் கொண்டு போகும் கூட்டத்தினரின் பாட்டொலியும், அரண்மனையின் சபா மண்டபத்திலே பேரிகைகளின் ஒலியும் எழுந்தன. எங்கும் திருவிழாக் கோலமாக இருந்தது. உமார் வராந்தா ஓரத்துக்கு வந்து கீழே நோக்கினான். மங்கலான அந்த அரைகுறை வெளிச்சத்திலே, நீர்க் கடிகாரம் ஒன்று புதிய சகாப்தத்தின் மணிக் கணக்குகளை எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். “உமார் காலத்தை மாற்றியமைத்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். முல்லாக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், காலம் மாறியா போய் விட்டது? இல்லை, கதிரவன்தான் மாறி விட்டானா?” என்று எண்ணி வியப்படைந்தான்.

“நாளைக் காலையில் நல்ல நேரந்தானோ? நான் மான் வேட்டைக்குப் போக வேண்டும்” என்று உமாரின் காதருகிலே வந்து சுல்தான் கேட்டார்.

உமார் புன்சிரிப்புடன், “நான் இங்கிருந்து செல்வதற்கு அனுமதியுங்கள். கிரக நிலைகளை ஆராய்ந்து சொல்கிறேன்” என்றான்.

அரண்மனையிலிருந்து தப்பி வந்தது உமாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. விகடன் ஜபாரக், அவனை எங்கும் தேடி விட்டு, இங்கே வந்த பொழுது, விண்மீன் வீட்டிலே ஆராய்ச்சிக் கூடத்திலே விளக்கேற்றி வைத்துக் கொண்டு, மேசையிலே வேலை செய்து கொண்டிருந்தான். நிசாப்பூரிலே, ஆட்டமும் பாட்டுமாக இருந்தது. இங்கே உடைகளைக் கூடக் கழட்டாமல் வேலையில் ஈடுபட்டிருந்தான் உமார்.

“வேட்டையாடப் போவதன் குறிகளைத் தெரிந்துவரும்படி வேந்தர் கூறினார்” என்றான் ஜபாரக்.

பொறுமையிழந்த உமார் அவனை நோக்கி, “காற்று எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.

“தென் திசையிலிருந்து அமைதியாக வீசிக்கொண்டிருக்கிறது.”

“சரி, எங்கு அவருக்கு விருப்பமோ, அங்கு வேட்டையாடலாம். பயப்பட வேண்டியதில்லை என்று சொல்” என்றார் உமார்.

“வானத்தில் சாவுக்கொடி தொங்க விடப் பட்டிருக்கிறது என்று முல்லாக்கள் சொல்கிறார்களே?”

“மதக்குருக்கள்தானே! அவர்களுக்குப் புதிய பஞ்சாங்கம் அமுலுக்கு வந்ததால் கோபம் உண்டாகியிருக்கிறது. அதனால் சபிக்கிறார்கள். நேற்று எப்படி யிருந்தாரோ, அப்படியே நாளையும் மாலிக் ஷாவுக்கு இருக்கும் என்றும் எவ்விதத் துன்பமும் வராது என்றும் சொல்.”

“உறுதியாகவா?”

“ஆம் ஆம்!” என்று அலுப்புடன் கூறினான் உமார். அப்படி யிருந்தும் மீண்டும், “சரி. நான் போகிறேன். சிரிப்பும், பாட்டும் நிறைந்திருக்கும் அரண்மனைக்கு நீங்களும் வந்தால் என்ன? அங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்றான் ஜபாரக்.

“என்னுடைய நண்பனே, நீ பார்த்திருக்கும் எந்த மனிதனையும் காட்டிலும், அதிகமான இன்பத்துடன் நான் இங்கே இருப்பேன். நீ கவலைப் படாதே!” என்று ஜபாரக்கை அடக்கினான், உமார்.

ஜபாரக் உமார் எதிரில் சரி சரி என்று கூறினாலும், அவன் கூற்றை நம்பவில்லை. தனியாக இருக்கும் சமயத்தில், அமைதியான சூழ்நிலையில் உமார் மகிழ்ச்சியாக இருந்ததே கிடையாது என்பது அவனுக்குத் தெரியும், விகடனுக்கு அரண்மனைக்குச் செல்ல வேண்டுமென்று இருந்தாலும் உமாரை உத்தேசித்து அங்கேயே தங்கிவிட்டான். தன்னுடைய, இறுக்கிக் கொண்டிருக்கும் அரசாங்க உடையைக் களையவேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் உமார் மேல் நோக்கிப் போகும் படிக் கட்டுகளிலே ஏறினான். அவர்கள் இருவரும், சூழ்ந்திருக்கும் இருட்டிலே தட்டித் தடவிக் கொண்டு ஏறி உச்சிக்குச் சென்றார்கள். அங்கே அவர்களின் அருகிலே பெரிய வெண்கலப் பூகோள உருண்டை இருந்தது.

“ஜபாரக்! அதோ மேலே பார். என்ன தெரிகிறது?”

“நட்சத்திரங்கள். தெளிவான வானத்தில் நட்சத்திரங்கள் தெரிகின்றன!”

“அவைகள் நகருகின்றனவா?”

அந்த விகடன், தலையை ஒருக்கணித்துக் கூர்ந்து கவனித்தான். உண்மையில், அந்த நட்சத்திரக் கூட்டங்கள் நகருவதை அவனால் காணமுடியவில்லை. இருப்பினும், கதிரும் நிலவும்போல அவைகளும் தோன்றுவதையும் மறைவதையும் அவன் கவனித்து வந்திருக்கிறான். நட்சத்திர வீட்டில் இத்தனை நாட்களாக இருக்கும் அவன் இவற்றைக் கவனிக்காமல் இருக்கவில்லை. நட்சத்திரங்களின் இடத்தையும் ஒளியையும்கொண்டு, இரவு நேரத்தைக் கணித்துச் சொல்லக் கூடிய சக்தியும் அவனுக்கு உண்டு. “இப்பொழுது சுற்றுவதுபோல தெரியவில்லை, ஆனால், அவை மிக மிக மெதுவாகச் சுற்றுகின்றன. ஒவ்வொரு நாளும் அவை பூமியைச் சுற்றுகின்றன. அதைநான் முன்பு கவனித்திருக்கிறேன்!” என்று கூறினான்.

“சரி, நம்முடைய பூமி, என்ன செய்கிறது? இதைப்பற்றி நீ என்ன தெரிந்து வைத்திருக்கிறாய்?”

“இதோ இந்தப் பூகோள உருண்டைபோல, இது, ஒருபந்து, எல்லாக் கோளங்களுக்கும் மத்தியில் இது இருக்கிற்து. அல்லாவின் ஆணைப்படி, இது ஒன்றே அசையாமல் இருக்கிறது, மைமன் எனக்குச் சொல்லி யிருக்கிறார்.”

உமார் இதைக் கேட்டான், கீழே ஆற்றோரத்தில், இரவுப் பறவைகள் இறக்கையடித்துப் பறந்து கொண்டிருந்தன. ஓர் ஆந்தை, அமைதியாக அவர்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று அவர்களுடைய முகத்தில் சிலு சிலுப்பை உண்டாக்கி வீசிக்கொண்டிருந்தது.

“ஜபாரக், இரண்டு வருடங்களாக இவற்றைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உழைத்தேன். அந்த ஆராய்ச்சியின் பலனாக நான் அறிந்து கொண்ட விஷயத்தைச் சொல்கிறேன், கேள்.

அதோ அங்கே சிறுசிறு புள்ளிகளாகத் தெரிகின்றனவே, நட்சத்திரங்கள்! அவை இருந்த இடத்திலேயேதான் இருக்கின்றன. அவை அசைவதேயில்லை. எத்தனையோ ஆண்டுகளாக அவை அங்கேயே தூரத்திலேயே நிலையாக இருக்கின்றன. என் அன்புக்குரிய மூடனே, கேள். இந்தப் பூமிதான், நாம் நிற்கிறோமே இந்தப் பூமிதான் ஓர் இரவும் பகலும் சேர்ந்த ஒருநாளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. மேலே பார், அந்த நட்சத்திரங்கள் சுற்றுவதேயில்லை!”

திடீரென்று ஜபாரக் உடலிலே நடுக்கங்கண்டது. அவனுடைய தலை ஒரு மாதிரியாகச் சாய்ந்தது. “தலைவரே! எனக்குப் பயமாக இருக்கிறது” என்று கூவினான்!

“எதற்காகப் பயப்படவேண்டும் ! எதைக் கண்டு பயப்படுகிறாய்?” என்று கேட்டான் உமார்.

“தலைவரே! வலு மிக்கச் சொற்களைக் கூறிவிட்டீர்கள். இதோ, இந்த இரவில் எத்தனை மாற்றங்கள். இந்தக் கோபுரம் அசைகிறதே!” என்று கூறிக்கொண்டே, வரந்தைக் கைப்பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். “தலைவரே! உடனே தங்கள் சாபத்தை மாற்றுங்கள். இல்லாவிட்டால் நாம் விழுந்து விடுவோம்! இந்தக் கோபுரம் சுற்றுவதுபோல இருக்கிறது. நாம் கீழே விழப் போகிறோம். ஐயோ, ஐயோ!” என்று கத்தினான் ஜபாரக்.

“முட்டாளே, நாம் விழமாட்டோம். பூமி சுற்றினாலும், நாம் பத்திரமாகவே இருக்கிறோம். அந்த உலகங்களின் ஊடே, சூரியனைப் போல் பெரியபெரிய நிலையான அந்தக் கோளங்களின் ஊடே, வானவெளி வழியாக நாம் போய்க் கொண்டே இருக்கிறோம். நாம் நகருகிறோமே தவிர, அவை நகருவதில்லை. இது உனக்குத் தெரியவில்லையா, புரியவில்லையா? என்று ஒருவித வேகத்தோடு கேட்டான்.

“அல்லா என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கூவிக் கொண்டே ஜபாரக், தன் இரு கைகளாலும் தன் தலையைப் பிடித்துக் கொண்டே அழுதான். தன் அருமைத் தலைவனான உமாருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவன் நிச்சயமாக நினைத்துக் கொண்டான். “சுல்தானிடம் வேட்டையாடுவது பற்றி சொல்ல வேண்டும்! நான் போகிறேன்” என்று பதிலை எதிர்பார்க்காமல் கூவிக்கொண்டே எழுந்திருந்தான். உமாரின் அருகில் இருக்க விகடனுக்குப் பயமாக இருந்தது. பைத்தியத்தில் உமார் என்ன செய்வானோ என்று எண்ணிப் பயந்து, இருட்டிலே தட்டி முட்டிக் கொண்டு படிகளின் வழியாகக் கீழே இறங்கிப்போக ஆரம்பித்தான்.