உமார் கயாம்/35. சொர்க்கத்திலே ஒரு சுந்தரி
தூரத்திலே நட்சத்திரங்கள் ஒரே கூட்டமாக இருந்தன. அவற்றிற்கிடையிலே ஒளி மயமான இரட்டைத் தலைகள் தோன்றின. முதலில் ஒரு நண்டு தன் கால்களை விரிப்பது போலிருந்த அந்த இரட்டை ஒளிக்கோடுகள் பிறகு நிலவாக உருவெடுத்தன. உமார் தன்னுடைய தலையைத் திருப்பிப் பார்த்தான். வானிலே அவையவையிருக்க வேண்டிய இடத்திலே இருந்தன.
ஆனால், அடிவானத்தின் மேலே தங்க மயமாகத் தோன்றிய அந்த நிலவு மட்டும் இங்கே இருக்க வேண்டாததாகத் தோன்றியது. மேலும் தன் கையை நீட்டினால் எட்டிப் பிடித்து விடக்கூடிய அவ்வளவு அருகிலேயே அந்த நிலவு ஒளிவீசிக் கொண்டிருந்தது. இது நம்ப முடியாததாக இருந்தது.
படுத்திருந்த அவன் எழுந்து உட்கார்ந்தபொழுது, தன் உடல் சிறிது கூடக் கனமில்லாமல் நினைத்த போது முயற்சியில்லாமலே அசைவது போலத் தெரிந்தது. எழுந்து நின்றான்.
ஒரு பழமரம் அவனைக் கவர்ந்தது. அந்த மரம் முழுவதும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பூக்களிலே நிலவொளி பலவிதமான வண்ணங்களைப் பரப்பி யிருந்தது, திரும்பிப்பார்த்தால் அந்த நிலவைக் காணவில்லை. உமார் அதை நன்றாக அறிந்து கொண்டான். தன்னுடைய காலடியிலே பசும் புல்தரை யிருப்பதை உணர்ந்தான். அவன் தன் கைகளை நீட்டினான். அந்தக் கைகளிலே பட்டுச் சட்டையின் மிருதுவான துணி பளபளத்தது. தன்னுடைய உடலில் தோன்றிய இந்த எதிர்பாராத அழகுக் காட்சி அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அடுத்து, ஒடிக் கொண்டிருக்கும் தண்ணிர் அவன் உணர்ச்சியிற் கலந்தது. அவனுடைய கால்கள் அவன் நினைக்கும் திசையில் செல்ல மறுத்தன மிகுந்த கஷ்டத்துடன், தண்ணீர் தொடங்கும் இடத்திற்கு வந்தான். அது ஒர் ஊற்று அது ஒரு பாறையின் இடையிலிருந்து ஓடியது. அவன் அதிலே இறங்கி நீரைக் குடிக்கச்சென்றான். அதன் சுவையையறிந்த பிறகு நீண்ட நேரத்திற்கு ஏராளமாக அள்ளியள்ளிக் குடித்தான். வரண்டுகிடந்த தன் நாவை நனைத்த அந்த நீர் வெறும் தண்ணிர் அல்ல. அருமையான திராட்சை மது என்பதை அறிந்தான்.
நல்ல மது என்று கூறிக்கொண்டே நிமிர்ந்தவன் எதிரில் நிமிர்ந்து நிற்கும் சிங்கம் ஒன்றைக் கண்டான். அந்தச் சிங்கத்தை நோக்கி நேராக நடந்தான். அதன் தலையைத் தொட்டான். அது கடினமாக இருந்தது. சீனத்துப் பீங்கானில் செய்த அது, வேறு எப்படியிருக்கும்? எப்படியும் அது அசையவில்லை. உமார் அதனுடைய முதுகிலே ஏறி உட்கார்ந்து கொண்ட பிறகு கூட அது நகரவில்லை. கொஞ்சங்கூட ஐயத்திற் கிடமில்லாமல் இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அவன் நினைத்தான். இந்தத் தோட்டத்தைப் பற்றியும் சந்திரனைப்பற்றியும் மூன்று விஷயங்களைக் கண்டு பிடித்தான்.
முதலாவது, அந்த நிலவு உண்மையான நிலவல்ல, இரண்டாவது, அந்தத் தண்ணீர் தண்ணீர் அல்ல; திராட்சை மது, மூன்றாவது அந்த மிருகங்களின் அரசனாகிய சிங்கம் சீனத்துப் பீங்கானால் செய்யப்பட்டது.
இவ்வளவு தூரம் வந்து தான் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த தன் புத்திசாலித்தனத்தைப் பற்றித் தானே பெருமைப்பட்டுக் கொண்டான். ஆனால், அவனுடைய மனம் இந்தத் தர்க்கவாத நிலையிலிருந்து திடீரென்று அலுத்துக் கொள்ளத் தொடங்கியது. அவன் தன் விருப்பம் இல்லாமலே, சிங்கத்தின் அருகில் நிற்பதைவிட்டுக் கிளம்பி, ஒரு நீர்க்குளத்தை நோக்கிச் சென்றது. வெள்ளிய தாமரைப் பூக்கள் அதன் மேற்பரப்பை மறைத்துக் கொண்டிருந்தன. ஒரு வெள்ளை நிறம் கொண்ட அன்னம் தூரத்திலே நீந்திக் கொண்டிருந்தது. அது, தன் தலையை இறக்கைக்குள்ளே வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது.
பிறகு, தோட்டத்திற்குள்ளே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்தான். நிலவுத் தோட்டத்திலே வானம்பாடி புகுந்து பாடுவதுபோல் இருந்தது. ஆனால் அது வானம்பாடியல்ல ஓர் இளம்பெண்தான் பாடிக்கொண்டிருந்தாள். அவள் பாட்டோடு வீணையின் ஒலியும் இழைந்து வந்தது.
அவனை உண்மையில் வரவேற்றது நீரின்மேல் இருந்த வீடுதான். ஒரு வேளை அது மிதக்கிறதோ அல்லது நீர்க்குளம் ஏற்படும்போதே கட்டப்பட்டு விளங்குகிறதோ தெரியவில்லை. எப்படியிருந்தால் என்ன? அதோ அழகாக இருக்கிறது. அதற்குப் போகும் வழிமட்டும் தெரியுமானால்...!
கொடிகள் அவன் காலைப் பின்னிக் கொண்டு தடுமாறச்செய்தன. அவன் கீழே விழுந்தான். அதோ மரங்களுக்கெல்லாம் கீழே ஒரு விந்தையான ஒளியில்லாத நிலவு ஒன்று இருக்கிறது. கொடிகள் அவன் காலைப் பின்னிக்கொண்டன. அவன் சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் அங்கேயே கிடந்தான்.
அவன் தன்னைச் சுற்றியுள்ள கொடிகளை அகற்றிக்கொண்டு நீர்க்கரையோரமாக வந்தான். ஒரு சிறிய குறுக்குப் பாலம் இருக்கக் கண்டான். அந்தப் பாலத்தின் மறுமுனையில், அந்த வீடு அல்லது படகு இருந்தது. நீர் நடுவில் கவர்ச்சிகரமாக விளங்கிய அந்த வீட்டுக்குச் செல்ல அவன் விரும்பினான். விஞ்ஞான ஆராய்ச்சிக்காகப் போகாவிட்டாலும், தன் மன எழுச்சிக்காக அவன் அங்கே போவதை முக்கியமாகக் கொண்டான்.
பாலத்தின் மீது செல்லும்போது பாதிவழியில் அவன் கீழே குனிந்து பார்த்தான். தன் நிழல் தண்ணின் மேல் நடந்து வருவதுபோல் இருந்தது நின்று கவனித்தான். அந்த நிழலும் நின்றது, நல்ல வேடிக்கை என்று அவன் சிரித்தான்.
அவன் ஆந்த விட்டுக்குள்ளே நுழைந்ததும், அது மெதுவாக ஆடியது. எதிரில் இருந்த திரையை இழுத்துவிட்டு உள்ளே பார்த்தான், இரத்தினக் கம்பள விரிப்பின்மீது இன்னொரு வெள்ளி நிலாவைக் கண்டான், அவன் அதைத் தொட்டுப் பார்த்தான். அ கதகதப்பான ஒளிப்பந்து போன்ற வட்டவிளக்காக இருந்தது. ஆனால் அவனால் அதை எடுக்க முடியவில்லை, அதன் பின்னால் ஏதோ அசைந்தது. ஒரு குரல் மல்லிய குரலிலே அவனை அழைத்தது.
“இபுராகீம் மகனே!” அந்தக் குரலைக் கேட்ட உமார் கீழே உட்கார்ந்து, சிந்திக்கத் தொடங்கினான்.
“இல்லை இப்ராகீம் மகன் இல்லை, இப்பொழுது நான் யார் தெரியுமா? நட்சத்திரப் பேராசிரியரும், அரசசபை வான நூற்கலைஞரும் ஆகிய மேன்மை பொருந்திய குவாஜா இமாம் உமார் அவர்கள், தெரிகிறதா? இருட்டில் இருக்கும் சிறு பிராணியே; சலாம் செய்!” என்றான்.
“இதோ நான் சலாம் செய்கிறேன். தங்கள் அடிமையிடம் கருணை காட்டுங்கள்.”
அந்த சொர்க்கத்தின் அழகு தேவதையின் குரல் தாழ்ந்ததாகவும் விசித்திரமாகவும் இருந்தது. கனவிலே தோன்றும் பிராணிகள், அரபியிலோ, பாரசீகத்திலோ பேசுவதில்லை. ஆனால், இந்த அழகி பேசுகிறாள். பேசுவதும் புரிகிறது. அவன் காலிலே விழுந்து வணங்கிய அவளுடைய தங்கமயமான நீண்ட கூந்தலை அவனுடைய விரல்கள் தடவின. அது பட்டுப் போல் மிருதுவாக இருந்தது.
“இந்தப் படகு எல்லையில்லாத இரவின் வழியாக மிதந்து செல்லுமா!”
“ஓர் இரவு மற்றோர் இரவு போலவேதான் இருக்கும்.”
“ஆனால், இந்த நிலவு மாறாது போலிருக்கிறது. அது தோன்றுவதுமில்லை மறைவதுமில்லை; வளர்வதுமில்லை, தேய்வதுமில்லை; வேதாளங்கள் அதன் அருகிலே இருந்துபாடும் போதும்.”பிறகு, அவன் அவள் முகத்தைத் திருப்பிப் பார்த்தான். அது வெளுத்துப் போய் இருந்தது. அந்தக் கண்கள் அர்த்தமில்லாமல் அவனை நோக்கின. உதடுகள் உணர்ச்சியற்று இருந்தன.
அது, உமாரின் நினைவைக் குழப்பியது.
கடைசியாக நினைவு வந்து விட்டது. “ஸோயி, நீ ஸோயி தானே! அன்று கொரசான் பாதையிலே, என் நண்பனுக்காக நான் அழுதேனே. அப்பொழுது, நான் சாதாரண உமாராக, இபுராகீம் மகனாக இருந்தேன் உன்னை என்னிடமிருந்து அழைத்துச் சென்று விட்டார்கள்.” என்று கூறினான்.
வெள்ளி மயமான அந்த ஒளியிலே அசையாமல் கிடக்கும் ஸோயினுடைய உடல் சில்லிட்டு இருந்தது. அவன் கட்டியணைத்து முத்தமிட்ட போது அவளுடைய உதடுகளும் குளிர்ச்சியாக இருந்தன. அவளுடைய கையிலே தலையை வைத்துப் படுத்திருந்த அவன், அவனைப் பயமுறுத்தியதும் ஆடைகளை அகற்றியதும் எதுவென்று தெரியாமல் அதிசயப்பட்டான். ஆனால் எல்லையில்லாத இந்த இரவிலே, மிதந்து செல்லும் படகிலே, செத்தவள் போல் கிடந்தாலும், ஸோயி அழகாகவே இருந்தாள்.
“நான் உன்னை என்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தேன்” என்று அவன் தன் எண்ணத்தை வெளியிட்டு விட்டுச் சிரித்துக் கொண்டே “நான் பழைய உமார்தான். இபுராகீம் மகன்தான்! வேறு யாருமல்ல!” என்று கூறினான்.
அவள் கண்களில் கவிந்திருந்த பயம் அகன்றது. உதடுகள் குவிந்தன. அவனுடைய முகத்தைத் தன் முகத்தோடு அழுத்திக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டான். படகு மிதந்து கொண்டே யிருந்தது. சிங்க உருவத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.