உள்ளடக்கத்துக்குச் செல்

உமார் கயாம்/36. எதற்கும் துணிந்த புது மதத்தலைவன்

விக்கிமூலம் இலிருந்து
410095உமார் கயாம் — 36. எதற்கும் துணிந்த புது மதத்தலைவன்பாவலர் நாரா. நாச்சியப்பன்

36. எதற்கும் துணிந்த புது மதத்தலைவன்

இரண்டாவது நாள் காலையில் உமார் விழித்து எழுந்திருக்கும் போது, அவனைச் சந்திப்பதற்கென்று ஹாஸான் சென்றான். முன்னாலேயே அறிவிக்காமல், அவன் திடுமென்று அந்த அறைக்குள்ளே நுழைந்ததும் அந்தக் கரிய அடிமைப் பையன் பயந்து ஓடிப் போனான். கவனமாகக் கதவை முடிக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த உமாரின் பக்கத்திலே விரிப்பில் உட்கார்ந்து கொண்டான். மெல்லிய குரலிலே அவனுடன் பேச்சுக் கொடுத்தான். உமார் புரண்டு படுத்தான்.

“நீ எங்கே போயிருந்தாய்? சொல்!”

சிறிது நேரம் உமார் அறையின் மேற்பகுதியைப் பார்த்தான். அவனுடைய கண்ணுக்குக் கீழே இருண்ட நிழல் உருவங்கள் இருந்தன. ‘தூங்கிக் கனவு கண்டு கொண்டிருந்தேன்!”

“அது ஒரு கனவா?”

“இல்லை, ஓரளவு கனவுதான்.ஆனால் எல்லாம் கனவென்று சொல்ல முடியாது.”

“அப்படியானால் நீ எங்கே போயிருந்தாய்?” - இது போன்ற மாயமான தூக்கத்திலிருந்து எழும் மனிதர்களிடம் ஹாஸான் இதுவரை நூற்றுக் கணக்கான தடவைகள் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறான். அந்த நூற்றுக் கணக்கானவர்களும் கூறிய அதே பதில்தான் கிடைக்குமென்று நம்பிக்கையுடன் அவன் உமார் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

“அதுவா? அது ஒரு குறிப்பிடத் தகுந்த செயற்கை சொர்க்கம்” என்று உமார் சிந்தித்துப் பதில் கூறினான். தன்னுடைய பார்வையிலோ, குரலிலோ வியப்புச் சற்றும் வெளிப்படாதபடி, “செயற்கையா? என்று ஹாஸான் கேட்டான்.

“ஆம்! நிலவு வானிலே மிகமிகத் தாழ்ந்து இருந்தது.”

“அப்புறம்?”

உமார் மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டான். இப்பொழுது அவனுடைய அரைகுறைத் தூக்கமும் போய் முழு விழிப்பு ஏற்பட்டு விட்டது. ‘உன்னுடைய சொர்க்கத்திலே இருந்த அந்த அழகு தேவதை ஏற்கெனவே எனக்குத் தெரிந்த பெண்.’,

“இருக்க முடியாதே! அந்தப் பெண் யார்?”

“ஏரியிலே மிதந்த படகிலே இருந்தவள், பைஸாஸ்டின் நகரத்து ஸோயி என்பவள்.”

சாதாரணமாக எந்த மனிதரிடமும் இல்லாத ஒரு திறமை ஹாஸானிடம் இருந்தது. அவன் தன்னுடைய திட்டத்தை உடனுக்குடன் மாற்றிக் கொள்வான். தன்னுடைய நோக்கம் வெளித் தோற்றத்தில் தெரியாதபடியே நடந்து கொள்வதில் சமர்த்தன். அவனுடைய ஒற்றர்கள் மிகத் திறமையும் முன்யோசனையும் வாய்ந்தவர்கள். அவர்கள், மதுவும் மங்கையரும் இருந்தால், உமார் மனத்தை அடிமைப் படுத்துவது மிக எளிதென்று உறுதியாகக் கூறியிருந்தார்கள்.

இனி, அவற்றை நம்பிப் பயனில்லை என்று ஹாஸான் தெரிந்து கொண்டான். அவன் புன்சிரிப்புடன்

“என்னுடைய சுவர்க்கத்தில் மது எப்படியிருந்தது? உனக்குப் பிடித்திருக்குமே?”

“ஆகா! மிக நன்றாக இருந்தது!”

“வான நூல் சாஸ்திரியான உனக்கு நிலவு மனதுக்குப் பிடித்தமாயில்லை என்பதைக் காண வருந்துகிறேன். துரதிர்ஷ்டவசமாகப் பகல் வெளிச்சம் தன் ஒளியை அதற்குக் கடன் கொடுக்க முடியாது போய்விட்டது. ஆனால் என்னுடைய “அர்ப்பணம் செய்தோர்” யாரும் அதைப்பற்றி ஐயப்பட்டதில்லை. ஒருமுறை சொர்க்கம் சென்றவர்கள், மறுபடியும் செல்லும் சந்தர்ப்பம் வருமா என்றே எதிர்பார்த்து நிற்பார்கள். அவர்கள் அனைவரும் இளைஞர்கள், அதை விரும்புவதும் இயற்கையேதான். என்னைப் பின்பற்றுவோரும் அதற்காக ஏங்குகிறார்கள். ரே நகரிலே சந்தித்தாயே, கூட்டாளிகள் சிலர், அவர்கள் வான அமைப்பைப்பற் ஐயப்பட்டாலும்கூட, அந்த சொர்க்க போகத்தை அனுபவிப்பதில் மற்றவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.”

“ரக்கின் உட்டினும் அவனைச் சேர்ந்த பிரசாரகர்களும் எப்படி? அவர்கள் உன் சொர்க்கத்திற்குப் போவதுண்டா?”

“இல்லை, என்றுமே செல்வதில்லை. அவர்கள் அனைவரும் அறிவு வேலைக்காரர்கள், நூல் நிலையமும், ஆராய்ச்சிக்கூடமுமே அவர்களுடைய கேந்திரங்கள். அவர்கள் தங்கள் நோக்கத்திற்குத் தகுந்த இன்பங்களைக் காணுகிறார்கள். என்னுடைய வேலைக்காரர்கள் பல பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்டிருப்பதை நீ புரிந்து கொண்டிருக்கலாமே!”

‘ஆம்! அர்ப்பணம் செய்தவர்கள் என்ற காவற்படைகளும், பின்பற்றுவோர் என்ற தொண்டர் கூட்டமும், கூட்டாளிகள் என்ற தலைவர்களும், அறிஞர்களும் ஆக நான்கு வகையான பிரிவுகளைக் கூறினாய்!”

“ஐந்தாவது பிரிவிலே வெளிப்புறத்தார். அதாவது அக்ரோனோஸ் போன்ற வியாபாரிகள் அடங்குவார்கள். அவர்கள் வெளியுலகத்திலிருந்து பொருள்கள் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறிவுக் கோட்டையின் வாசலுக்கு அப்பால் நுழைய விடப்படுவதில்லை.”

அக்ரோனோஸ், ஒருமுறை கழுகுக் கூட்டின் வாசல்வரை வந்திருப்பதாகக் கூறியது உமாருக்கு நினைவு வந்தது.

“ஹாஸான், உனக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றனவே!”

“ஏன் இருக்காது? வெளிப்புறத்தாருக்கும் அர்ப்பணம் செய்தோருக்கும் உண்மையில் பிறப்பிறப்புப் பெருந்தலைவன் நானே! நீ அதிலே ஐயங்கொண்டால், விரைவில் அதற்கு ஆதாரங்காணலாம். அவர்கள் என்னை மலைத்தலைவன் என்று அழைப்பதன் காரணம் என்னவென்றால், எங்களுடைய பலம் பொருந்திய கோட்டைகளெல்லாம், இந்தக் கழுகுக் கூட்டைப்போல மலையுச்சிகளிலேயே கட்டப் பெறுகின்றன. இது போன்ற இடங்களிலிருந்து சிலரே பல பகைவர்களை எளிதில் கொல்ல முடியும்” என்று உஷாராகச் சொன்னான் அவன்.

“கூட்டாளிகள் என்ற அவர்கள் உன்னை எப்படி அழைக்கிறார்கள்?”

“அவர்கள், இந்தப் புதிய மதத்தை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அவர்களே என் மதவாதிகள், அவர்களே தலைவர்கள். அவர்கள் என்னை மாதியின் தூதன் என்று எண்ணுகிறார்கள், மாதியைப்பற்றிய செய்தியறிவிப்பவன் என்று. ஜெருசலத்தில் நான் உனக்குக் கூறவில்லையா, அது போல. அவர்கள் என்னைக் கருதுகிறார்கள்.

“ஆனால், இப்பொழுதும் நான் உன்னை அப்படி (மாதியின் தூதர் என்று) நினைக்கவில்லை. சரி, வேறு இரண்டு பிரிவினரும் உன்னை எப்படி நம்புகிறார்கள்?”

“வேறு இரண்டு பிரிவா? ஐந்தும்தான் கூறிவிட்டேனே!”

“ஐந்துடன் எப்படி முடியும்? மொத்தம் ஏழு பிரிவுகள் அல்லவா?”

ஹாஸானுடைய கரிய கண்களிலே வியப்புப் படர்ந்தது. “நீ கணிதப் பேராசிரியன் என்பதை நான் மறந்துவிட்டேன். கொஞ்சம் எனக்குப் புரியும்படி கேள். நீ ஏன் ஏழு பிரிவுகள் என்று சொல்கிறாய்?”

“ஏழாவது கொள்கைக்காரர் என்று உங்களைப்பற்றிக் கூறுகிறார்கள். மேலும் உங்கள் பிரசாரர்கள், பாமர மக்களிடம், வாரத்தில் ஏழு நாட்கள் இருப்பது போலவும் வானத்தில் ஏழு கிரகங்கள் இருப்பது போலவும் உலகத்தில் ஏழு கொள்கைகள் இருக்கின்றன என்று பிரசாரம் செய்கிறார்கள். அது போலவே உங்களிலேயும் ஏழு பிரிவுகள் இருக்குமென்று நான் எதிர்பார்த்தேன்.”

“நன்று நன்று!” என்று சிரித்துக் கொண்டே பாராட்டிப் பேசிய ஹாஸான், “நீ இரும்பைப் பிளக்கும் கூரிய பதமுள்ள உருக்குக் கத்தி போன்றவன். நீ மிகப் புகழ் அடைவாய் என்று அக்ரோனோஸ் கூறுவான். ஆனால் நீ புகழுக்கும் மேலான மதிப்புக்குரியவன் என்றே நான் கூறுவேன். கழுகுக்கூட்டில் வேறு என்ன இரகசியங்களை நீ கண்டு பிடித்தாய்? என்று மெதுவாகப் பதம் பார்க்கத் தொடங்கினான்.

ஹாஸானை நேரடியாக எதிர்த்துக் கொள்வதா அல்லது, அவனை நயந்து பேசுவதா என்று சற்றுநேரமே உமார் யோசித்தான். தன்னுடைய பலக்குறைவைக் காண்பித்துக் கொள்வதற்கு அந்தக் கழுகுக்கூடு ஏற்றதல்ல என்று முடிவுக்கு வந்தான்.

“குதிரைத் தபாலில் செய்தி வந்து சேருவதற்கு முன்பாகவே, அந்தச் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் உன் இரகசியத்தை நான் தெரிந்து கொண்டேன்” என்றான் உமார்.

“நான் தந்திரங்களைக் கையாளுகிறேன் என்று எந்த நாய் சொன்னது? இது என்ன பொய்?” என்று கேட்டான். அவனுடைய கண்கள் நம்பிக்கையில்லாமல் உமாரை நோக்கின.

“எந்த நாயும் இல்லை! ஒரு பருந்து இதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தது. அபபொழுது நான் ரே நகருக்குச் சென்று கொண்டிருந்தேன்” என்று கூறித் தன் இடுப்பில் இருந்த குழாயை எடுத்து அவன் கையில் கொடுத்தான்.

ஹாஸான் அதை வாங்கி விரைவாகப் படித்தான். உமார் ரே நகருக்குச் செல்வதாக அதன் உள் இருந்த கடிதத்தில் எழுதியிருந்தது. அவனுடைய கோபத்தை வியப்பு பறக்கடித்தது.

“அல்லா அல்லா! ஆனால் நீ அதிர்ஷ்டக்காரன்தான். நினைக்க முடியாத அதிர்ஷ்டம் உன்னைச் சேர்ந்திருக்கிறது. தபால் புறாவைப் பிடித்து வருவதற்குப் பருந்தைத் தவிர வேறு எதனாலும் முடியாது” என்று கூறிக்கொண்டே, தனக்குள்ளே வேறோரு திட்டம் போட்டுக் கொண்டு, “உலகத்துச் செய்திகளை அறிந்து கொள்வதற்காக நான் சில சமயங்களில் தபால் புறாக்களைப் பயன்படுத்துவதுண்டு. என்னுடைய பிரசாரகர்களுக்குக்கூட இந்த விஷயம் தெரியாது. ஏனெனில் அந்தப் புறாக்கள் கோட்டைக்கு வருவதில்லை. பக்கத்துக் கிராமத்துக்கே வரும் சரி. நமது பகைமை உணர்ச்சி என்ற கத்திப் பிடியிலிருந்து நம் கைகளை அகற்றி விடுவோம்; நமக்கிடையேயுள்ள கருத்து வேற்றுமை என்ற திரையைக் கிழித்து விடுவோம்” என்றான், ஹாஸான் விசித்திர தொனியில்.

பிறகு, உமாரின் அருகிலே நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு அவனுடைய தோளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, “ஹாஸான் என்றால் யார்?” என்று நீயே உன்னைக் கேட்டுக் கொண்டிருப்பாய். அப்படியானால் கேள். நான் யார் என்பதைக் கூறுகிறேன். ஒரு காலத்திலே, மாணவனாக இருந்த நேரத்திலே கீழ்த்தரமான ஓர் உயிர்ப்பிராணியாக அனாதையாக இருந்தவன்தான் இந்த ஹாஸான். அரசர்களும் அமைச்சர்களும் இருந்து நம் உடல்களையும் ஆத்மாக்களையும் ஆளுகின்ற இடத்திலே அறிவைத் தேடுகின்றவனுக்கு என்ன நன்மையிருக்கிறது? கெய்ரோ நகரத்தில் ஆயுதந்தாங்கிய காவற்படை வீரர்களால் தெரு நாயைப் போல் அடிக்கப் பெற்றேன்! அந்த இளம் பருவத்திலே அவமானப் படுத்தப்பட்டு - ஏழ்மையின் காரணமாக ஏளனஞ்செய்யப்பட்டு வாழ்விலே நொந்து போயிருக்கிறேன்.

கெய்ரோவிலே உள்ள பேராசிரியர் சிலரிடமும், கடல் கடந்து சென்று திபேரியர்களின் முதுகுரவர்களான கபாலியரிடமும் நான் பற்பல நூல்களைக் கற்றேன். பலப்பல வார்த்தைகளைச் சொல்லி நான் உன்னைக் குழப்ப விரும்பவில்லை. கற்பனையான சொப்பன உலகில் நட்சத்திரங்கள் மங்கிய மாயாஜாலத்தை நீயே கண்டிருக்கிறாய். அறிவு என்கிற பழத்தின் கசப்பான பருப்பை நான் சுவை பார்த்திருக்கிறேன். என் முடிவு இதுதான் கடவுள் என்பதாக ஒன்று இல்லை.

உலகில் உள்ள மதங்கள் அனைத்தும் வயது முதிர்ந்துவரும் பெண்களைப் போன்றவையே. அவற்றின் அழகும் பயனும் மறைந்துவிட்டன. அவை, மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக நம்பிக்கை என்னும் காய்ந்துபோன எலும்புக் கூட்டிலேயே ஒட்டிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அவை அழிந்து, ஒன்றும் மிஞ்சாமல் போய்விடும்! கோயில்களிலும் மட்ங்களிலும் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற மகான்களின் எலும்புகள், மயிர்கள், பற்கள்போல், மதங்களின் சிற்சில பகுதிகளே மிஞ்சும்.

பூமியில் இருக்கும் மதவாதிகள் அனைவருக்கும் நான் ஒரு செய்தி கூற முடியுமானால், நான் என்ன சொல்லுவேன் தெரியுமா! கோயில்களையும், தொழுகை மடங்களையும், சிங்காதனங்களையும் தூக்கி எறியுங்கள். சிங்காதனங்களின் மேல் இருப்பவர்களும், மதங்களின் வணங்கு நிலையங்களைக் காத்துக் கொண்டு கிடப்பவர்களும் சாதாரண மனிதர்களே! பொய்யுரைகளின் பின்னாலே மறைந்து கொண்டு சக்திவாய்ந்தவர்களாகக் காட்சியளிக்கிறார்கள் தொடக்க காலத்தில் சூரிய தேவனுக்குப் படையலிட்ட காட்டுமிராண்டிகளைக் காட்டிலும் இறையைத் தொழும் மக்களும் உயர்ந்தவர்கள் அல்ல என்றே நான் கூறுவேன். இது உண்மையல்லவா?”

“சுல்தான் மாலிக்ஷா சாதாரண மனிதர்தான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவரைச் சிங்காதனத்திலிருந்து அப்புறப் படுத்திவிட்டால், அவருடைய இடத்தில் நீ எதை உட்காரவைப்பாய்? அந்தக் கடமையைச் செய்ய ஏதாவது ஒன்று வேண்டுமே!” என்று அறிஞன் உமார் கேட்டான்.

“முதல் வேலை, சிங்காதனத்தையும் அதனைச் சேர்ந்த ஆட்சிக்குழுக்களையும் ஒழிப்பதாகும். உனக்கு நான்கு மாலிக்ஷா காட்டிலும் அதிகமான அறிவு இருக்கிறது. நாம் ஏன் அரச வணக்கத்திற்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்? அறியாமை சூழ்ந்திருந்த அந்தக் காலத்திலிருந்து மனிதர்கள் காரண ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். முடிவில் மனிதர்கள் பூரணமான காரண அறிவைப் பெறுவார்கள், அவை இருக்கட்டும், இப்பொழுது நான் என்ன செய்திருக்கிறேன். பலரை மதமாற்றம் செய்திருக்கிறேன். பலரைக் கூட்டாளிகளாக்கியிருக்கிறேன். அவர்கள் பழைய மதத்தில் அதிருப்தி அடைந்தவர்கள். இரகசியமாக நாங்கள் புதிய பிரசாரத்தை போதித்து வருகிறோம்.”

ஹாசான், இந்த இடத்தில், சிறிது நேரம் பேசாமலிருந்து, மறுபடியும் தொடர்ந்து பேசினான். “நீ நூல் நிலையத்தைப் பார்த்தாய், பிரசாரகர்களுடன் பேசினாய். நாங்கள் எல்லா விஷயங்களைப் பற்றியும் எங்கள் அறிவை முழுமையடைய முயல்கிறோம் என்பதை நீ அறிந்திருக்கக்கூடும். ஆனால், பாரசீகர்கள், மறையில் உள்ளது தவிர வேறு எதையும் கண் கொடுத்துப் பார்க்கவோ. காது கொடுத்துக் கேட்கவோ மாட்டார்கள் என்பதை நீ அறிவாய். அதை மறுக்க முடியாது, ஒன்றுமே அறியாத பாமரர் பலர் எங்களிடையே தேவைப் படுகிறது. கூட்டத்தைப் பெருக்குவதற்கும் உயிர் கொடுத்துப் போராடுவதற்கும் எந்தவிதமான அறிவும் இல்லாத அந்தக் கூட்டத்தின் உதவி தேவைப்படுகிற காரணத்தால், அறிவில்லாத மக்களிடையே, ஏழாவது மாதி ஒருவர் வருவார் என்று பிரசாரம் செய்கிறோம். இது வழக்கத்திலே இருந்து வருகிற ஒரு இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பிரசாரமே. அறிவுள்ளவர்களுக்கு, நாங்கள் விஞ்ஞானப் புதுப்பேரொளியை அடையுமாறு போதிக்கிறோம்” உறுதியான தவிர்க்க முடியாத ஒரு விஷயத்தைப் பற்றி விளக்கிக் கூறுபவன் போல் தோளைக் குலுக்கிக் கொண்டான் ஹாஸான்.

“உயிர்ப் பிறப்பின் அடிப்படையே இந்த முறையில் தானே அமைக்கப்பட்டிருக்கிறது? உன்னிடம் தன் தனியறையில் பேசுகிற விஷயங்களை நிசாம் முல்லாக்களிடம் பேசுகிறாரா?” என்று கேட்டான்.

“அந்த மாதிரி நடந்து விடாமல் அவர் கவனமாக இருக்கிறார்” என்றான் உமார்.

“அது போலத்தான் நாங்கள் பாமரருக்கொரு பழங் கொள்கையும், பகுத்தறிவாளர்க்கொரு விஞ்ஞான முறையும் வைத்திருக்கிறோம். பிளாட்டோவின் அறிவு விளக்க நூலிலே கூறப்படுகிற விஷயம் உனக்குத் தெரிந்திருக்கும். அதுதான் உலகங்களின் அமைப்பு. வெளிச்சம் இருந்தால் இருட்டும் இருக்கும். மனிதன் இருந்தால் அவனுக்குத் துணையாகப் பெண்ணும் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்று சேரும்போதுதான் குறிக்கோள் நிறைவேற முடியும். அதுபோலவே, எங்களுடைய அமைப்பு இந்த மாற்றத்தின் மூலம் ஒன்று படுகிறது. எல்லாவிதமான இனத்தாரிடமிருந்தும் மதமாறிய உண்மையானவர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.” “நீ ஏன் மாய வித்தையைப் பயன்படுத்துகிறாய்?”

“ஏன் கூடாது? அதுதான் மிக உயர்ந்த ஞானம்!”

“சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அது உயர்ந்த ஞானமாக இருக்கலாம். உன்னுடைய தபால் புறாக்களும், பழக்கப்பட்ட கழுகும் பாமர மனிதனுக்கு வீதி வித்தையாகத் தோன்றலாம்.”

“புத்திசாலிகளுக்கும், அதைக் காட்டிலும் உயர்ந்த கண்கட்டுவித்தை என்னிடம் இருக்கிறது. எகிப்து தேசத்திலே நான் பயின்ற சில மாய வித்தைகள் இருக்கின்றன” என் சடக்கென்று தன் பேச்சை நிறுத்திய ஹாஸான், உமாரை நோக்கி, “பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னாலே ரோமானியப் பேரரசனும், சுல்தான் ஆல்ப் அர்சலானும் இறந்து போவார்கள் என்று மாலிக்ஷாவுக்குச் சோதிடம் கூறினாயே, அது எந்தவிதமான கலை?” என்று கேட்டான்.

பதில் கூறப்போகும் சமயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஓர் உள் உணர்வு உண்டாகவே, உமார், கவனத்துடன் அமைதியாக, “அது ஓர் அற்புத சக்தி, அது என்னுடைய இரகசியம்” என்று கூறினான்.

“நான் உன்னிடம் என்னுடைய இரகசியங்கள் அனைத்தையும் உடைத்துப் பேசி விட்டேன். ஆனால்... நீ...?” என்று ஹாசான் கேட்டான்.

“எல்லாம் சொன்னாய். ஆனால், ஒன்று சொல்லவில்லை.”

அவனைக் குறிப்பாகப் பார்த்த ஹாஸான் “அது என்ன?” என்று கேட்டான்.

“உன்னுடைய மதத்திலே உள்ள அந்த உயர்ந்த இரு பிரிவினரும் எதை நம்புகிறார்கள்? உன்னுடைய பிரசாரங்களுக்கும் உயர்ந்த தகுதியுடைய அவர்கள். எகிப்திலே உள்ளவர்கள் எதை நம்புகிறார்கள் என்று நீ கூறவில்லையே.”

“பிஸ்மில்லா!... நான் அவர்கள் எகிப்திலே இருக்கிறார்கள் என்று சொல்லவில்லையே!”

“நீ சொல்லவில்லை. ஆனால் நான் அங்கே அவர்கள் இருக்கலாமென்று எண்ணினேன்.” “நீ நினைத்தாயா? அது ஒரு வீண் நினைப்பாக இருக்குமானால், அந்த நினைப்புக்கு நீ என்ன காரணம் கூறப் போகிறாய்?” என்று கேட்ட ஹாஸான், எழுந்து அந்த அறையில் அங்குமிங்கும் நடந்து கொண்டே, “குவாஜா, உமார்! பாபிலோனில் உன்னைப் பார்த்த பொழுது நான் புகழ்ந்தேன். ஜெருசலத்திலே சந்தித்தபோது உன்னைக் கூட்டாளியாகப் பெற வேண்டுமென்று விரும்பினேன். ஆண்டுகள் கடந்து கொண்டு போகும்போது, காலப்போக்கில் நான் எத்தனையோ விஷயங்களைக் கற்றேன். ஆனால், உமார், நீ அப்படியே இருக்கிறாய். உன் அறிவு விசாலமடையவில்லை. உன்னுடைய முட்டாள்தனமான ஜோதிடங்கள் இனிப் பலிக்கப்போவதில்லை.”

“உலக அமைப்பாளருடன் தொடர்ந்து இருப்பதற்கு, இனிமேல் உனக்குச் சரிப்பட்டு வராது. மேலும் நிசாமின் ஆதரவை நீ இழந்து விட்டாய் என்று எண்ணுகிறேன், புதிய மத அமைப்பாளராகிய நாங்கள் உனக்காகச் செய்திருப்பதை நீ நினைத்துப்பார். நான் அக்ரோனோசிடம் உன்னுடைய எதிர்காலத்திற்குப் பொருள் பெருக்கி உதவும்படி கூறினேன். அவன் அவ்வாறே உனக்குப் பலவித உதவிகள் உள்ளத்தின் உண்மையாகச் செய்திருக்கிறான். பாலைவனப் பிரதேசத்திலே எபிரேட்ஸ் ஆற்றிலே விழுந்து இறக்கப் போன உன்னை, துன்பத்தால் செத்துப்போகக்கூடிய உன்னை அக்ரோனோஸ் காப்பாற்றி இருக்கிறான். அவன் உன்னுடைய அரண்மனைகளில், நாகரிகப் பொருள்கள் பலவற்றைக் கொண்டு வந்து நிரப்பி உன்னை உல்லாச வாழ்க்கை வாழச் செய்திருக்கிறான். நீ எங்களிடம் திரும்ப வேண்டுமென்று அவனும் நானும் காத்திருந்தோம்.”

“நான் உன் நடவடிக்கைகளைக் கவனித்து வந்திருக்கிறேன் என்று நீ சொல்லக்கூடும். அப்படியே நான் எதிர்பார்த்து உனக்கு நன்மை செய்வதாக ஒப்புக் கொண்டாலும்கூட, நண்பன் ஒருவன் உன் நட்பை எதிர்பார்க்கும் முறையிலேதான் இவற்றைச் செய்தேன். உன்னுடைய புதிய பஞ்சாங்கம், உன்னுடைய புத்தகங்கள், நிசாப்பூரிலேயுள்ள உன்னுடைய ஆராய்ச்சிக்கூடம் இவை ஒவ்வொன்றையும் நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

இதுபோல, இஸ்லாத்தின் தலைவர்கள் உனக்குத் தங்கள் ஆதரவைக் காட்டுகிறார்களா? உன்னை நேசிக்கும் மாலிக்ஷா கூட நான் உன்னை உணர்ந்திருக்கும் அளவு தெரிந்து வைத்திருக்கிறாரா? ஒரு வினாடியில் ஏற்படும் கோபத்தாலோ மன மாற்றத்தாலோ, சுல்தான் உன்னை ராஜ சபையிலிருந்து வெளியேற்றி விட முடியும்.

இதை நினைவிலே வைத்துக் கொள். என்னைப் பொறுத்தவரை, நான் உன்னை வெளியேற்றவே முடியாத ஆளாகிவிட்டாய்! இதையும் எண்ணிப் பார். நீ என்னிடமே வந்துவிடு. இந்தக் கழுகுக் கூட்டின் பலத்தை எண்ணிப்பார். இதுவரையிலே இங்குள்ள விஷயங்களை என்னைப் பின்தொடருவோரின் மனப்போக்கின்படி அவர்களுடைய பார்வையில் கவனித்தாய். இப்பொழுது என் கண்களின் மூலமாகவே கவனித்துப் பார்” என்று ஹாஸான் பேச்சு முடிந்தது.

உமாருக்கு உடனே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவனுக்குத் தலைவலியாக இருந்தது. சுவர்த் துவாரத்திலிருந்து வந்த சூரிய வெளிச்சம்வேறு அவன் கண்ணுக்கு முன்னால் ஆடிக் கொண்டிருந்தது.

ஹாஸனுடன் போட்டியாகப் பேசுவது என்பது சாதாரணமானதல்ல; பயங்கரமான போட்டியாகி விடும். அவன் யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் கொடுப்பவனாகவும் தோன்றவில்லை. உமார் அமைதியாகிவிடவே, ஹாஸான் அவனை அழைத்துக்கொண்டு மலைப் பிரதேசத்தின் அடிப்பாகத்திற்குச் சென்றான்.

சுண்ணாம்புக் கல்லிலே இழைத்த நடைபாதை வழியாக அவன் ஒரு குகைப்புறமாக அழைத்துச் சென்றான். அந்தக் குகைக்குள்ளே மனிதர்கள் பட்டறைகளிலே வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு புறத்திலே, பெரிய பெரிய நெருப்பு அடுப்புகளும், அவற்றின் மேலே உருகிக் குழம்பாக இருந்த கண்ணாடி, கொதித்துக் குமிழி விட்டுக்கொண்டிருந்ததையும், அங்கு பலர் வேலை செய்து கொண்டிருந்ததையும் உமார் கண்டான்.

“இந்தக் கண்ணாடித் தொழிற்சாலையின் இரகசியங்களை எகிப்து தேசத்திலிருந்து தெரிந்துகொண்டு வந்தார்கள். இதுவரையிலே, கண்ணாடிச் சாமான்கள் சுல்தானின் அரண்மனையிலே மட்டும்தான் காணப்பட்டன. அவருடைய அரண்மனைச் சுவர்களிலே மட்டும்தான் பதிக்கப் பெற்றிருந்தன. நவீன வசதிகளை சுல்தான் மட்டுந்தான் அனுபவிக்க வேண்டுமா?

இப்போது, என்னுடைய வியாபாரிகள், ஊர் ஊராக அங்காடிச் சந்தைதோறும் இந்தக் கண்ணாடிப் பொருள்களை விற்று வருகிறார்கள். எல்லாவிதமான கண்ணாடிப் பொருள்களும் எல்லாவிதமான மக்களுக்கும் எளிய விலையில் ஏராளமாகக் கிடைக்க முடிகிறது” என்று கூறித் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து, சரக்கறைக்குக் கூட்டிச் சென்றான்.

அங்கே மதுச்சாடிகளும், கோப்பைகளும், தேன் வைக்கும் போத்தல்களும், தட்டுகளும், குவளைகளும் மற்றும் பலப்பல விதமான கண்ணாடிச் சாமான்களையும் உமார் கண்டான். ஓர் அடிமையை விளக்குக் கொண்டு வரும்படி கூறி, அது வந்ததும், வேறோர் அகன்ற அறைக்குள்ளே கூட்டிச் சென்ற ஹாசான், விளக்கின் ஒளியிலே அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி முட்டைகளைக் காண்பித்தான். “இந்தக் குகைகளிலே என்னைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் இரண்டு வருடங்களுக்குப் போதுமான அளவு சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு வேளை பகைவர்களால் முற்றுகை நேரிடுமாயின் அப்பொழுது நாங்கள் உணவுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறினான்.

அந்த நிலவறைகளின் கீழேயுள்ள தாழ்ந்த பாகத்திற்கு வந்தார்கள். அங்கே சில மரப்பீப்பாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த இடத்திலே ஒரு பாறையின் இடையிலே, கரிய துவாரம் ஒன்று இருந்தது. அந்தத் துவாரத்திலிருந்து, வெகு வேகமாகப் பீறிக் கொண்டு வந்த தண்ணி, சிறிது தூரத்திலே இருந்த குட்டையிலே விழுந்தது.

“வெகு காலத்துக்கு முன்னாலே, இந்த ஓடை ஓர் ஆறாக இருந்திருக்க வேண்டும். அது கொஞ்சம் உயர்ந்த இடத்தில் இருந்திருக்க வேண்டும். அது, இந்தச் சுண்ணாம்புக் கற்களின் வழியாகத் தன் வழியை அறுத்துக் கொண்டு வந்து, இந்த மலையின் ஊடே பெரிய பெரிய பாதைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நீ இதுவரை பார்த்த நிலவறைகளும், குகைகளும் அந்த ஆறு அறுத்துக் கொண்டுபோன பாதையேயாகும். பிற்காலத்திலே பூமியில் ஏற்பட்ட ஏதோ மாறுபட்டால், ஆற்றின் உற்பத்தியிடமான இந்த ஊற்றுத் தாழ்ந்த இடத்திற்கு மாறியிருக்கிறது. ஆற்றின் படுகை காய்ந்து, குகையாக மாறிப் போயிருக்கிறது. நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே, சில மனிதர்கள் மலையின் மேற்புறத்திலேயுள்ள குகைகளையடைந்து, படிக்கட்டுகளும் நடைபாதைகளும் அமைந்திருக்கிறார்கள். மலையின் அடித்தளத்திலே, நடு மையத்திலே அவர்கள் ஒரு கோயில் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அவர்கள் தொழுகை செய்த இடத்திற்குப் போவோம், வா” என்று உமாரை அழைத்துச் சென்றான்.

மலையின்மேல் உள்ள இந்தக் கழுகுக்கூடு என்ற கோட்டை, மற்ற எந்தக் கோட்டைகளைக் காட்டிலும் பெரிதாக இருக்க முடியாதென்றே எண்ணியிருந்தான். ஆனால், பாறைகளின் ஆழத்திலே, பலப்பல வழிகளையுடைய ஒரு பெருங்குகையாக இருப்பதைக் கண்டான். அந்த மலையின் உட்புறத்திலே இருக்கும் எந்த இரகசியத்தையும் வெளியில் செல்வோர் எத்தனை தலைமுறையானாலும் அறிய முடியாதபடி அமைந்திருந்தது, அந்தக் குகைக்கோட்டை. வெளியுலகம் அறியாமல் ஆயிரக்கணக்கான மனிதர்கள் அங்கே வாழ்ந்து வரமுடியும்.

அவர்கள் சென்ற வழியில் ஒரு கரியகாவற்காரன் நின்று கொண்டிருந்தான். இவர்கள் கடந்து சென்ற பொழுது, ஹாஸானைப் பார்த்துவிட்டு அவன் தரையில் விழுந்து வணங்கினான். அந்தக் குறுகிய வழியின் மூலையில் உள்ள ஒரு கதவை ஹாஸான் இழுத்துத் திறந்ததும், உமார், அந்தக்கல் மிருகம் இருக்கும் குகைக்கூடத்திலே மீண்டும் தான் வந்து சேர்ந்திருப்பதையறிந்தான்.

ஆனால், அந்தக்கூடம் இப்பொழுது சங்கீதம் நடனம் போன்ற எவ்வித ஒலியுமின்றி அமைதியாக இருந்தது. அங்கு அர்ப்பணம் செய்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், நடனக்காரர்கள் ஆடிக் கொண்டிருந்த இடத்திலே மட்டும், கற்பாறைகளின் வெடிப்பிலிருந்து வெளிவந்த நெருப்பு நாக்குகள் இன்னும் எரிந்து கொண்டே யிருந்தன. நெருப்பு நாக்குகள் ஓங்கி எரிகின்றபொழுது, கல்மிருகம் விளக்கமாகத் தெரிந்தது. அவை சற்று மறைந்து காணப்படும் போது அந்தக்கூடம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் அங்கு வந்திருந்தபோது கவனிக்காத இரண்டு புது விஷயங்களை உமார் அப்பொழுது கவனித்தான். அந்தக் கூடத்தின் காற்று கதகதப்பாக இருந்தது ஒன்று ஒருவிதமான எண்ணெய் நாற்றம் மற்றொன்று.

உள்ளே நுழைந்த ஹாஸான் என்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த நெருப்பைப் பார்த்தபடியே சற்றுநேரம் பேசாமல் இருந்தான்.

“இதன் இரகசியம் யாருக்குத் தெரியுமோ?” என்று ஆரம்பித்த ஹாஸான், “இதோ, இந்தப் பாறை வெடிப்புக்களுக்குக் கீழே எங்கோ ஒருவிதமான எண்ணெய் ஊற்று இருக்கவேண்டும். ஆனால், முதலில் நெருப்பு எப்படி இங்கு வந்தது என்பதும், அது எவ்வாறு இடைவிடாமல் எரிகிறது என்பதும்தான் புரியாத விஷயமாக இருக்கிறது. இதுமிகப் பழமையான காலத்திலிருந்து தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது என்பது மட்டும் உறுதி. எகிப்தியர்கள் ராதேவனை வழிபடும் வழக்கம் தொடங்குவதற்கும் முன்னால், சாரதுஸ்திரியர்களுக்கும் முன்னால், சூரியதேவனை வழிபாடு நடத்தும் வழக்கம் தொடங்கப் பெறுவதற்கும் முன்னால் இந்த நெருப்பு வணக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், இது பழங்காலத்து மக்களுக்குப் பெரிய மாயமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையில் மாயமான நிகழ்ச்சிதான்.”

“இந்த இறக்கை படைத்த எருதை அந்தப் பழங்காலத்து மக்கள் செய்திருக்க மாட்டார்கள், இல்லையா?” என்று உமார் கேட்டான்.

“இல்லை, இது பழைய பாரசீகத்தாரால் ஏற்படுத்தப் பெற்றது. பாரசீகத்தாரும் முற்காலத்தில் நெருப்பு வணக்கம் செய்திருக்கிறார்கள். பாரசீகர்கள், இந்த இடத்தைப் புனிதமான இடமென்று நினைத்து வந்ததற்குக் காரணம் என்னவென்றால், தங்கள் மூதாதையர்களின் கோயிலாக இது இருந்திருப்பதும், இடைவிடாது தொழுகை நடந்து வந்திருப்பதுமே ஆகும். புனிதமான நெருப்புக் கடவுளுக்குத் தங்கள் மரியாதையைக் காட்டுவதற்காக, அவர்கள் இந்த மிருகத்தைச் செய்து இங்கே நிறுத்தி இருக்கிறார்கள். இது போன்ற பழைய உருவங்களை, இஸ்பாஹாளிலேயுள்ள பாழடைந்த அரண்மனைகளிலே நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது என்னுடைய “அர்ப்பணம் செய்தவர்கள்” கூட்டத்தின் பக்தியை வளர்ப்பதற்காக, இந்த இடத்திலே இஸ்லாமியத் தொழுகை முறையைச் சில புதிய மாறுதல்களுடன் வகுத்து நடத்துகிறேன்.”

இந்த இடத்திலே ஹாஸான் குரலிலே ஒரு மாற்றம் ஏற்பட்டது!

“ஏன் கூடாது? ஜெருசலத்தில் யூத அரசன் டேவிட் ஒரு பாறையருகிலே படுத்துக் கனவு கண்டான் என்பதற்காக அந்த இடத்தில் இருந்து ரோமானிய மத குருக்கள் பக்திசெய்து வந்தார்கள். அதே ஜெருசலத்துப் பாறை உள்ள இடத்தை முகமது புனித ஸ்தலமாக ஆக்கவில்லையா? யூத அரசன் கனவு காண்பதற்கு முன்னாலே அந்தப்பாறை எதுவாக இருந்திருக்கும்? ஒரு சாதாரணக் கல்லாக அல்லது பழங்காலத்து அநாகரிக மக்கள் வழிபட்டுவந்த உருவமாகவோதான் இருந்திருக்க வேண்டும்.”

இந்த இரண்டு நிமிட நேரமும் புது மனிதனாக மாறிக் கேள்விகளை அள்ளிப் பொழிந்த ஹாஸான் ஓர் இருண்ட பாதை வழியாக உமாரை அழைத்துக் கொண்டு சென்றான். கதகதப்பான காற்று அவர்களைத் தள்ளிக் கொண்டு போனது. இந்த வெளிக்காற்று குகையின் பகுதிகளில் எல்லாம் புகுந்து வீசியதால்தான், மனிதர்கள் மூச்சுவிட முடிகிற தென்பதையும், நெருப்பு எரிய முடிகிறதென்பதையும் உமார் உணர்ந்து கொண்டான். இருண்ட வழியாகப் பல திருப்பங்களிலும் திரும்பித் திரும்பிக் கடைசியாக அவர்கள், வெளிப்புறத்திற்கு வந்தார்கள், நீலவானும் நிறைந்த வெளிச்சமும் மலையின் வெளிப்புறத்திலே வந்ததும், சிதறிக்கிடந்த பாறைத் துண்டுகளின்மேல் ஏறிச்சென்று ஒரு செங்குத்தான பாறையுச்சிக்கு வந்து நின்றார்கள். அங்கே நின்று கொண்டிருந்த ஹாஸான், தன் இரு கைகளையும் விரித்துக்கொண்டு, “ஓ! என் அர்ப்பணம் செய்தவர்களே! சொர்க்கபோகம் உங்களை வந்து சேர்வதாகுக! அல்லாவின் ஆற்றல் உங்கள் கரங்களை ஆற்றலுடையதாக்குக?” என்று கூவினான்.

அவர்கள் நின்று கொண்டிருந்த பாறையுச்சி, இயற்கையாக அமைந்த ஒரு மேடைபோல் இருந்தது. அதன் எதிரில் இருந்த சமதளத்திலே, அன்று கத்தி நடனத்தின்போது கூடியிருந்த கூட்டத்தார் அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குரலிலே “எங்கள் தலைவரே! தங்களுக்கு சாந்தியுண்டாவதாக!” என்று கூவினார்கள்.

உயர்த்திய குரலிலே, அந்தப்பாறை மேட்டின் உச்சியிலே, கீழே நின்றுகொண்டிருக்கும் மக்கள் கூட்டத்திற்கு நேரே நின்ற ஹாஸ்ான் பார்ப்பதற்கு ஒரு தேவதூதன் போல காட்சியளித்தான். கீழே கூடியிருக்கும் அறிவற்ற மக்களுக்கு, அவன் தங்களை எந்த சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடியவன் என்ற நம்பிக்கையை அந்தத் தோற்றம் அளித்தது. அங்கே தொடர்ந்து நின்று கொண்டிருந்து தன் மகத்துவத்தை வீண் ஆக்காமல், சட்டென்று திரும்பிப் பாறையைவிட்டுக் கீழே உமாரையும் இழுத்துக் கொண்டு இறங்கினான்.

பிறகு அவர்கள் கோட்டைச் சுவற்றின்மீது காவலுக்காக உள்ள அகன்ற இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது கதிரவன் மறைந்து கொண்டிருந்தது. அர்ப்பணம் செய்தவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அங்கே காவல் காத்துக்கொண்டு நின்றவர்கள், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு மாலைத் தொழுகை நடத்துவதற்காக ஆயத்தமானார்கள்.

“நீ இதற்கு முன்னால், அதிசய சம்பவங்கள் நடந்ததைக்கண்டிருக்க மாட்டாயே! இதோ பார்!” என்று உமாரிடம் கூறிய ஹாஸான் மண்டியிட்டிருந்த அந்த இளைஞர்களின் பின்புறமாகச் சென்று, வணங்கிக் குனிந்த அவர்களின் தோள்களிலே தன் கைகளை வைத்தான். அவர்கள் நிமிர்ந்து பார்த்து, அவர்களுடைய தலைவனின் முகத்தை ரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களுடைய கண்கள் ஹாஸானுடைய கண்களில் பிணிப்புண்டு கிடந்தன.

“ஊய்! உங்களுடைய காலம் நெருங்கிவிட்டது. சொர்க்கம் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. நான் உங்களை விடுவிக்கிறேன்! பாய்ந்து செல்லுங்கள்!” என்றான். கடைசிச் சொற்கள் சவுக்கு வீச்சுப்போல வெளிப்பட்டதும், மூன்று மெல்லிய உருவங்கள் நடுங்கித் துடித்துக் கொண்டே கோட்டைச் சுவர் வரந்தையை விட்டு குதித்தன.

ஒரு முகத்திலே, சொர்க்கத்தைக் காணவேண்டும் என்கிற ஆவல் உணர்ச்சியும், மற்றொரு முகத்திலே பயத்தின் குறிகளும் தோன்றியிருப்பதைக் கண்டான். எந்த உணர்ச்சிகள் இருப்பினும் அந்த இரண்டு உருவங்களும் குதித்த குதியிலே, சுவர் வரந்தையைத் தாண்டி அப்பால் மறைந்து போயின. மூன்றாவது உருவம் வரந்தை ஓரத்திலே நின்று தடுமாறிக் கொண்டிருந்தது. “உன்னையும்தான் சொர்க்கம் அழைக்கிறது” என்று அமைதியாக ஆனால் அவசரமாகக் கூறினான் ஹாஸான்.

வரந்தை யோரத்திலே தடுமாறி நின்று கொண்டிருந்த அந்த மூன்றாவது ஆளும், வெளிப்புறத்திலே சாய்ந்து கீழே விழுந்தான். உமார் சுவர் ஓரத்தைக் கெட்டியாகப் பிடித்தபடியே வெளிப்புறத்திலே கீழ்நோக்கி எட்டிப்பார்த்தான். முன்னால் குதித்த இருவருக்கும் பின்னால் மூன்றாவது ஆளும் கீழே விழுந்து கொண்டிருந்தான். ஆடைகள் காற்றில் பறக்க ஆடிக்கொண்டே செல்லும் மூன்று பந்துகள்போல், அந்த மலையுச்சியிலிருந்து கீழேயுள்ள செங்குத்தான, ஆழமான பள்ளத்தாக்கிலே நூற்றுக் கணக்கான அடிகளுக்குக் கீழே உள்ள மரக்கூட்டத்தின் இடையிலே அந்த உருவங்கள் விழுந்து கொண்டிருந்தன. அடிவாரத்திலே உள்ள பாறைகளிலே விழுந்து எலும்பு நொறுங்கி மண்டையுடைந்து, சதை கிழிந்து, குருதியொழுகிச் செத்துத் தொலைவதற்காகச் சென்றுகொண்டிருந்த அந்த உருவங்களைப் பார்த்த உமார் ஹாஸானைத் திரும்பிப் பார்த்தான்.

ஹாஸான், தன் கண்களிலே பிரகாசத்துடன், “பார்த்தாயா? அவர்கள் எனக்கு எவ்வளவு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்? யாராவது மாலிக்ஷாவிற்கு இவ்வளவு உண்மையாகக் கீழ்ப்படிந்து நடந்ததுண்டா?” என்று உமாரை நோக்கிக் கேட்டான்.

அவன் அருகிலே வந்த உமார், “எந்தவிதமான பயனுமில்லாமல், மூன்று உயிர்கள் வீணாகச் சாகடிக்கப்பட்டதைதான் நான் கண்டேன்” என்றான்.

“இல்லை, உனக்கு என்னுடைய சக்தியைக் காட்டுவதற்கு ஆதாரமாக அவை சாகடிக்கப்பட்டன. இந்த மூன்று உயிர்கள் போய்விட்டதனால் என்ன நஷ்டம் வந்துவிட்டது? அவையிருந்து என்ன சாதிக்கப்போகின்றது? இதோ மறைந்து கொண்டிருக்கும் கதிரவன், மீண்டும் கீழ்த்திசையிலே தோன்றுவதற்கு முன்னால் உள்ள இடை நேரத்திலே எத்தனையோ ஆயிரம் மனிதப் பூச்சிகள் இறந்து மறைந்து, இந்த உலக மென்றும் சாணிமேட்டிலே இன்னும் ஆயிரக்கணக்கான பூச்சிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தனை வெள்ளத்திலே இந்த மூன்று உயிர்களும் மூன்று துளிகளே! இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இப்பொழுது நீ என்னுடைய சக்தியின் ஒரு சிறுபாகத்தை ஓரளவு தெரிந்து கொண்டிருக்கிறாய். இதிலிருந்து என்னுடைய சக்தி எவ்வளவு பெரியதென்று நீ தெரிந்து கொள்ளலாம். நீ என்னுடைய கூட்டாளியாக என்னுடைய அறிஞர்களின் கூட்டத்திலே இருக்கலாமல்லவா? உன்னுடைய வேலை இப்பொழுது உள்ளதுபோலவே வானநூல், கணிதநூல் ஆராய்ச்சியாகவே இருக்கும்.”

“இங்கேயா? இந்தக் கழுகுக் கூட்டிலா?”

“இல்லை, இந்த உலகத்திலேயே. நீ முன் இருந்ததுபோலவே முழு உரிமையுடன் இருக்கலாம். உனக்கு என்ன வேண்டுமோ கேள். ஸோயி என்ற அந்த அழகிய பெண் வேண்டுமா? அலெக்ஸாண்டிரியா தேசத்து ஆராய்ச்சி நூல்கள் வேண்டுமா? எது வேண்டுமானாலும் கொண்டு வந்து கொடுப்பதாக உறுதியளிக்கிறேன். என் சொல்லுறுதி எப்பொழுதும் மாறியதில்லை. இப்பொழுது உனக்கிருக்கும் செல்வமும் செல்வாக்கும் என்னிடமிருந்து நீ பெறப்போகின்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகச் சாதாரணமாகிவிடும்.”

இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஆழமான பள்ளத்தாக்கை உமார் உற்று நோக்கினான். ஹாஸானை நோக்கி, “நான் ஒப்புக் கொள்ளாவிட்டால்?” என்று கேட்டான்.

“இப்பொழுதே உன்னை நிசாப்பூருக்குத் திருப்பியனுப்பிவிட மாட்டேன். சில காரியங்கள் நடந்து முடியும் வரையிலே, நீ இப்பொழுதிருப்பது போலவே இங்கேயே தங்கியிருக்க வேண்டியதுதான் அதன்பிறகு, நீ விரும்பினால் பிரிந்து செல்லலாம்.”

சிறிது நேரம் உமார் அமைதியாக நின்றான். பிறகு “நான் யோசித்து முடிவு செய்வதற்கு ஒரு வாரம் தவணைகொடு” என்று கேட்டான்.

“நிச்சயமாக இந்தவார முடிவில் நீ கூறும் பதிலுக்காகக் காத்திருப்பேன். அதுவரையிலே இந்தக் கோட்டைக்குள்ளே உள்ள என்னுடைய அடிமைகள் அனைவரும் என் ஆணைக்குக் காத்திருப்பார்கள்” என்று ஹாஸான் கூறினான்.