உமார் கயாம்/39. "தப்பி ஓடிய பாதையில்!"

விக்கிமூலம் இலிருந்து

39. “தப்பி ஓடிய பாதையில்!"

இரவு நேரத்திலே, உமார் தன் அறையைவிட்டு வெளியேறிய போதெல்லாம், நடைபாதையிலே உள்ள காவல்காரர்கள் அவனைப் பின்தொடர்வதைப் பார்த்திருக்கிறான். ஆகவே இரவில் தப்பிப்பறப்பதென்பது இயலாத காரியம். சிறு கதவு இரவிலேதான் திறக்கப்படும். பகலில் பூட்டப்பெற்றிருக்கும். ஆகவே, பகலில் பெரிய நுழைவாசல் கதவின் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்று உமார் முடிவு செய்து கொண்டான்.

அதன் பிறகு கோட்டையின் உச்சியில் இருந்த ஓரிடத்திலிருந்து பகல் முழுவதும் தலைவாசலைக் கவனித்துக் கொண்டேயிருந்தான். அவனுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகள் எதுவுமே அகப்படவில்லை. சாதாரணமாகக் கிராமத்து மக்கள் அல்லது வியாபாரிகள், அந்த வாசலிலே கொண்டுவந்து பொருள்களை வைத்து விடுவதும், கோட்டைக்குள்ளே இருப்பவர்கள் அவற்றையுள்ளே தூக்கிவருவதும் வழக்கமாக இருந்தது.

அர்ப்பணம் செய்தவர்கள் என்ற கூட்டத்தாரில் சிலர் எப்போதாவது சிறுசிறு குழுக்களாக வெளியே செல்வதும், உள்ளே வருவதுமாக இருந்தார்கள். எப்போதாவது ஒருமுறை பிரசாரகர் ஒருவர் அல்லது இருவர் வெளியே செல்வதும் அல்லது உள்ளே வருவதும் உண்டு. அவர்கள் பிரசாரத்திற்காகவும், வெளியுலக நடப்புகளைத் தெரிந்து வருவதற்காகவும் அனுப்பப்படுவதுண்டு. ஆனால், ஹாஸானை உமார் அதன் பிறகு பார்க்கவேயில்லை.

மூன்று நாட்கள் தொடர்ந்து கவனித்ததில் ஓர் உண்மை உமாருக்குப் புலப்பட்டது. ஒருநாள் இரவு சிறுகதவு வழியாக அடையாளச் சீட்டுக் காண்பித்து வெளியேறிய அந்த நெட்டையான பிரசாரகன். பிற்பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் வெளியே செல்வதும், அரைமணி நேரம் கழித்து உள்ளே வருவதுமாக இருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் இந்தச் செயல் உமாரின் புத்திக்கு வேலை கொடுத்தது. அந்தப் பிரசாரகனின் நடையைக் கவனித்தபோது அவன் ஹாஸான் என்பது பளிச்சென்று தெரிந்தது.

சைனாக்காரனைப்போல் வேஷம் போட்டுக்கொண்டு, பிரசாரகனுடைய உடையில் ஹாஸான் தினமும் மாற்றுருவில் ஏன் வெளியே சென்று வருகிறான் என்பதையும் ரே நகரிலிருந்து யாருக்கும் தெரியாமல் கழுகுக்கூட்டுக்கு வந்துவிட்டான் என்பதையும் பொருத்திப் பார்க்கிறபோது, தன் மாயவித்தையால் தன் கூட்டத்தாரின் கண்ணுக்குப் பெரிய தேவதூதன்போல் காட்சியளிக்கும் ஹாஸான், தான் வெளியே போவதும் வருவதும் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் தன் தெய்வீகத் தன்மையை நிலை நிறுத்தவும் இந்த மாறுவேடம் போடுகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

தலைவாசலில் காவல் இருப்பவர்களான அர்ப்பணம் செய்தவர்களுக்கும் பிரசாரகர்களுக்கும் தொடர்பில்லாதபடி இரு பிரிவுகளாக அவர்கள் இருப்பதால், காவல் வீரர்களுக்கு எல்லாப் பிரசாரகர்களையும் அடையாளம் தெரியாது அவர்கள் உடையே சரியான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரசாரகர்களே ஹாஸ்ானைப் பார்க்க நேர்ந்தால் யாரோ புதிதாக மதத்திலே சேர்ந்தவர் என்றே எண்ணிக்கொள்வார்கள். அவ்வளவு திறமையாகத் தன் வேஷத்தை மாற்றிக் கொண்டிருந்தான் ஹாஸான். ஆனால், அவனுடைய நடை, உமாருக்கு அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

ஹாஸான், தனக்குப் புறாக்கள் மூலம் செய்திவரும் விஷயம் கோட்டையில் இருப்பவர்களுக்கே தெரியாதென்று ஏற்கெனவே கூறியது உமாருக்கு நினைவுவந்தது.

அப்படியானால், பக்கத்திலேயுள்ள கிராமத்துக்கு செய்தியனுப்பவும் சேகரிக்கவும் அவன் தினமும் வெளியில் சென்று வருகிறான் என்பதை எண்ணி முடிவுகட்ட முடிந்தது.

“தலைவாசல் வழியாக, ஒரு பிரசாரகனைப்போல ஹாஸானுடைய நடை நடந்து வெளியேறவேண்டும்” என்று உமார் தனக்குள் தீர்மானித்தான்.

அடுத்து, பிரசாரகனுடைய உடையை எப்படி சம்பாதிப்பது? ரக்கின் உட்டின் என்ற அந்த அறிஞன் பலமுறை சொர்க்கத்தைப் பற்றியும் சொர்க்கத்து மதுவைப் பற்றியும் அவனிடம் கேட்டிருக்கிறான். அத்தோடு முதல்நாள் கத்தி நடனத்தின்போது, நடுங்கும் கைகளுடன் ஆவலாக மதுவை அவன் ஒரே வாயில் குடித்ததையும் உமார் பார்த்திருந்தான் எனவே அவனைத் தன் அறைக்கு அழைத்து வந்தான்.

அவனைப் படுக்கையிலே உட்கார வைத்துவிட்டு ஜாடியில் இருந்த மதுவைக் கிண்ணத்தில் ஊற்றித் தன் உதட்டருகே கொண்டுபோய் வைத்துக்கொண்டு, “சொர்க்கத்தின் மது!” என்று கூறினான்.

ஹாஸான், விஞ்ஞான ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு மது கொடுத்து மயக்குவதில்லை. சொர்க்கபோகம் அவர்களுக்குத் தடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறான். ரக்கின் உட்டின் என்ற இந்த அறிஞனோ, ஒரு முறையாவது சொர்க்க போகத்தின் இன்பத்தை அனுபவித்துப் பார்க்கத் துடித்தான்.

“உண்மையாகவா? அதே மதுதானா?” என்று ஆவல் பொங்கக் கேட்டான் ரக்கின்.

“சந்தேகமாயிருந்தால் குடித்துப்பார்” என்று உமார் மதுக்கிண்ணத்தைக் கொடுத்தான். கதவு அடைத்திருக்கிறதா என்று கவனித்துவிட்டு, ரக்கின் உட்டின் அந்தக் கோப்பையைக் காலி செய்தான், கோப்பையைக் கீழே வைத்தான்.

“இன்னும் வேண்டுமா?” என்று கேட்ட உமார் அவன் பதிலுக்குக்கூடக் காத்திராமல் மற்றொரு கோப்பை ஊற்றிக் கொடுத்தான். அவனோ ஊற்ற ஊற்றக் குடித்துக் கொண்டேயிருந்தான். மருந்து வேலை செய்யத் தொடங்கியது பிதற்றத் தொடங்கினான். பிறகு மேலும் மேலும் குடிக்கப் பேச்சும் நின்று மயங்கிய நிலையில் தூங்கத்தொடங்கிவிட்டான் இனி அவன் என்ன கனவு காணுவானோ? உமார் வேலையைத் தொடங்கினான். அவனுடைய உடைகளை எடுத்து அணிந்து கொண்டான் ரக்கின் உட்டினுக்குத் தன் உடைகளைப் போட்டு விட்டான். மெதுவாகக் கதவைத் திறந்து வெளியேறி வந்து மீண்டும் தன் அறைக்கதவைச் சாத்திவிட்டு நடைபாதையில் நடந்தான். தூரத்தில் பேச்சுக்குரல் எங்கோ கேட்டது. நடைபாதையில் யாரும் இல்லை. கோட்டைப்புறத்துக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். தலைவாசலை நோக்கி நடந்தான். கீழேயிருந்த சுண்ணாம்புக்கல் தரையில்பட்டுப் பிரதிபலித்து சூரிய வெளிச்சம் கண்களைக் கூச வைத்தது.

இரண்டு அடிமைகள் சாடியிலே எதையோ தூக்கிக்கொண்டு குறுக்கே சென்றார்கள். தலைவாசலிலே இருந்த காவல் தலைவன் உமாரின் பக்கம் திரும்பிப் பார்த்தான். ஆனால் யாரும் அசையவில்லை. வாசல் இன்னும் நாலடிதுரத்தில் இருந்தது ஒன்று. இரண்டு. மன்று. என்ற எண்ணிக் கொண்டே படபடக்கும் இதயத்தோடு நெருங்கி வந்த உமாரை காவல் தலைவன், “அறிஞரே! இன்றைய அடையாளச் சொல் என்ன?” என்று கேட்டான்.

படைவீரர்களும், இரகசியக் கூட்டத்தினரும், தங்கள் ஆட்களைத் தெரிந்து கொள்வதற்கு அடையாளச்சொல் ஒன்று வைத்துக் கொள்வது வழக்கம். அதைத் தினந்தோறும் வெவ்வேறு சொல்லாக மாற்றுவார்கள். வெளியே செல்வோருக்கும் காவலர்களுக்கும், தலைவர்களுக்கும் மட்டுமே அந்தச் சொல் தெரியும். உமார் இந்த விஷயத்தை யோசித்துப்பார்க்க மறந்துவிட்டான். மூச்சைப் பிடித்துக்கொண்டு மிகுந்த அமைதியான குரலில், “நான் அவசரத்தில் அதை மறந்துவிட்டேன். நினைவுக்கும் வரவில்லை. நம் தலைவரே என்னை அனுப்பினார். கிராமத்திற்குப் போய்ப் புறாக்களின் மூலம் செய்தி அனுப்பவேண்டும்” என்று கூறியவன் தன் இடுப்பிலே யிருந்த, அந்தப் பழைய செய்திக் குழாயை வெளியில் எடுத்தான். காவல் இருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாத விஷயம். அவர்களுடைய தலைவன் இந்த மாதிரியான விஷயங்களை அவர்களிடம் தெரிவிப்பதேயில்லை, குழம்பிக் கொண்டிருந்தார்கள். காவல் தலைவன், ஆயுதங்களிலே பயிற்சி பெற்றவனே தவிர, அறிவை உபயோகிக்கத் தெரிந்தவன் அல்ல. எனவே, உமார் அவனிடம் அந்தக் குழாயைக் கொடுத்து, “இதோ இதை நீ வைத்துக்கொள். நான் புறாக்கள் இருக்கும் வீட்டிற்குச் சென்று தபால் குதிரைகளைக் கொண்டு வருகிறேன். செய்திக் குழாயைத் தொலைத்துவிடாதே. தலைவர் அறிந்தால். அவருடைய கோபம் உன் தலைமேல்விழும்” என்று கூறிவிட்டு வேகமாக நடந்தான்.

அவன் அந்தக் குழாயைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டே, “சரி, சீக்கிரம் திரும்பி வா!” என்று கூறினான்.

அக்ரோனோஸ் போன்ற முகம் தெரிந்த பேர்வழிகள் எதிரில் வராமல் அருள்செய்ய வேண்டுமென்று அல்லாவை வேண்டிக் கொண்டு வைக்கோல் போர்களுக்கும், குப்பை மேடுகளுக்கும் நடுவே புகுந்து அந்தக் கிராமத்திலே புறாக்கள் இருக்கும் வீட்டைத் தேடினான். ஒரு வீட்டின் அருகிலே, வானிலே புறாக்கள் பறந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன, புறாக்கூடுகளும் இருந்தன. அங்கே முன்னால் இருந்த மனிதனிடம் “ஒரு கூண்டிலே இரண்டு புறாக்கள் போட்டுக் கொடு, சீக்கிரம்” என்று உமார் கேட்டான்.

“ஐயா, கழுகுக் கூட்டுத் தலைவரின் புறாக்களையா கேட்கிறீர்கள்?”

“வேறு என்ன? மலைத்தலைவர் ஷேக் அல் ஜெபல் அவர்களே கட்ளை யிட்டார்” என்றான் உமார் தடுமாற்றமில்லாமல். ஹாஸான் புறாக்களை வாங்கிவரச் சொல்லும் பழக்கம் இல்லையோ, அல்லது அவன் பெயர் அவனைப் பயமுறுத்தியதோ தெரியவில்லை. அந்த மனிதன் குழம்பிப் போய் நின்றான்.

பிறகு அவன் புறாக்கூட்டை நோக்கிச் செல்லும்போது, “சேணம் பூட்டிய நல்ல குதிரை ஒன்று வேண்டும். சீக்கிரம், வேறொருவனை அனுப்பு” என்றான் உமார்.

குதிரை வரும் வரையிலே உமார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவன் உள்ளம் பரபரத்துக் கொண்டிருந்தது. குதிரை வந்ததும், புறாக் கூண்டைத் தூக்கிக்கொண்டு வந்த அந்த மனிதன், “இதோ பாருங்கள் இந்தப் புறாக்களை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக உள் இறக்கை ஒன்று மடித்து வைக்கப் பட்டிருக்கிறது அதன் வால் புறத்திலே இதோ சிவப்புமை போடப் பட்டிருக்கிறது. இவைதான் மற்ற புறாக்களுக்கும் நமது புறாக்களுக்கும் உள்ள வேற்றுமை தாங்கள்...”

இப்படி அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே பின்னால் ஒரு குதிரை வரும் காலடிச் சத்தம் கேட்டது. ஏற்கெனவே பயந்து கொண்டிருந்த உமார், மிகவும் பயந்து தன் குதிரையைத் தட்டிவிட்டான்.

புறாக்கூண்டை அந்த மனிதன் கையிலிருந்து பறித்துக் கொண்டான், குதிரை பறந்தது. கிராமத்தின் நடுவிதி வழியாகச் சென்று கொண்டிருந்த அவன், ஆற்றுப் பக்கம் செல்லாமல், வலது பக்கம் செல்லும் பாதையில் தன் குதிரையைத் திருப்பிவிட்டான்.

ஆற்றுப் பக்கத்துப்பாதை வழியாகத்தான் அக்ரோனோஸ் அவனை அழைத்து வந்தான். அங்கே பாதி வழியிலே காவல்வீரர்கள் இருப்பார்கள். ஆனால், மற்றபாதை எங்கே செல்கிறதென்று அவனுக்குத் தெரியாது. எங்கு சென்றாலும், ஹாஸானுக்கும் தனக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வேகமாகச் சென்று கொண்டிருந்தான். ஒட்டகப்பாதை போல் தோன்றிய ஒரு சிறுபாதை வழியாகச் சென்று கொண்டிருந்த அவன் குறுகிய பள்ளத்தாக்கு ஒன்றின் வழியாகப் போகும்போது, கற்களுக்குப் பின்னாலிருந்து இருபுறமும் ஈட்டிகளுடன் கூடிய படைவீரர்கள் போன்ற மனிதர்கள் திடீரென்று தோன்றினார்கள் உமாருக்குப் பயமாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து மேல் சென்றான். அவனுடைய உடையைப் பார்த்த அவர்கள், ஈட்டிகளைத் தூக்கிக் கொண்டு, “கடவுள் காப்பாராக!” என்று கூவினார்கள்.

“கடவுள் உங்களையும் காப்பாராக!” என்று கூவியபடி பறந்தான் உமார். அவர்கள் பார்வைக்குத் தப்பிச் செல்லும் வரையிலே, குதிரையை இரத்தம் வரும்படி அடித்துப் பாய்ந்து பாய்ந்து செல்லும்படி செய்தான். பைன் மரக்காடுகளுக்கு அப்பால் வந்ததும்தான் அவனுக்கு முச்சு வந்தது.

திடீரென்று அவனுக்குச் சிரிப்பு வந்தது. கழுகுக்கூட்டுக் காவலன் கையிலேயுள்ள குழாய்ச் செய்தியில் “உமார் ரே நகர் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்” என்று எழுதியிருந்ததை நினைத்தால் சிரிப்பு வராமல் என்ன செய்யும்?