உமார் கயாம்/8. கணிதம் கற்க வந்தவன் ஒற்றனா? திருடனா?

விக்கிமூலம் இலிருந்து

8. கணிதம் கற்க வந்தவன் ஒற்றனா? திருடனா?

உமார் தன் தந்தை இறந்த பிறகு தன் நண்பன் ரஹீமின் வீட்டிலே உல்லாசமாக வாழ்ந்தவன். ஆனால் போர்க்களத்திலிருந்து அவன் திரும்பி வந்ததும், ரஹீமின் சாவுச் செய்தியைக் கொண்டுவந்த அவனை ரஹீமின் பெற்றோர்கள் துர்க்குறியென்றே நினைத்துக் கடுமையாக நடத்தினார்கள். அவன் அழைத்து வந்த அழகி ஸோயியையும் அடிமைச் சந்தையிலே விற்பதற்காகப் பறித்துக் கொண்டு போய்விட்டார்கள். உமார் தங்குவதற்கு இடமில்லாமல் நிஜாப்பூர் பட்டணத்தின் தெருக்களில் சில நாட்கள் அலைந்தான். ஒரு காலத்தில் தன் உயிர் நண்பனோடு உல்லாசமாகத் திரிந்த வீதிகளில் இப்போது நடமாடுவதுகூட அவனுக்குப் பொறுக்க முடியாத துயரமாக இருந்தது. அதை மறப்பதற்காகத் தன் கவனத்தை வேறுவழியில் திருப்ப வேண்டுமென்று நினைத்துக் கணிதப் பேராசிரியர் அலி அவர்களிடம் வந்து அவருடைய மாணவனாக அவருடைய மாளிகையிலே தங்கியிருந்தான்.

பேராசிரியர் அலி அவர்களுக்கு எழுபத்து மூன்று வயதாகிவிட்டது. பழுத்த கிழவர், “ஞானக்கண்ணாடி’ என்ற பட்டப் பெயரால் பலராலும் சிறப்பிக்கப்படுபவர். சுல்தான் அரண்மனையிலுள்ள அமைச்சர்கள் ஆதரவால் அவர் வாழ்ந்து வந்தார். புனித நூலாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக, அவர் மனப்பூர்வமாகவும் உயிருக்குயிராகவும் விரும்புவது கணிதநூல் ஆகும். அவருடைய வீட்டில் எல்லாச்செயல்களும் மணிப்படிதான் நடக்கும். மணி அறிந்து கொள்வதற்காக முன் கூடத்தில் மீன் தொட்டிக்கு அருகில் ஒரு நீர்க்கடிகாரம் அமைக்கப்பட்டிருந்தது.

அவருடைய உதவியாட்கள், அவருடைய வேலைகளை நேரத்தைப் பார்த்தே கணக்குச் செய்து விடுவார்கள். இத்தனை மணியாகியதால் ஆசிரியர் குளித்துக் கொண்டிருப்பார்; இப்பொழுது படித்துக் கொண்டிருப்பார், இந்நேரம் எழுதிக் கொண்டிருப்பார், இந்தச்சமயம் சாப்பாடு நடந்து, கொண்டிருக்கும் என்று கணக்காகச் சொல்லிவிடுவார்கள்.

வானவெளியிலுள்ள கோளங்கள் கணக்காகச் சுழல்வது போல் பேராசிரியர் அலி அவர்களின் வீட்டில் நீர்க்கடிகாரப்படி, ஜந்து வேளைத் தொழுகையும், இரண்டு வேளைச் சாப்பாடும். பனிரெண்டு மணிநேர வேலையும் மாறிமாறி நடந்து கொண்டிருக்கும். அவர் தம் மாணவர்களுக்குப் போடும் சாப்பாட்டில்கூட எந்தவிதமான மாற்றமும் கிடையாது. எப்படித் தினந்தினமும் ஒரே கதிரவன் உதிக்கிறானோ, அது போலவே தினந்தினமும் ஒரேவிதமான சாப்பாடும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்!

பேராசிரியர் அலி சில சமயங்களில் நிஜாப்பூர் பட்டணத்திற்குக் கிளம்பிப்போவதுண்டு. அப்பொழுது அவர்தம் பதவிக்குத் தகுந்த ஆடம்பரமான பழுப்புநிற உடையணிந்து கொண்டிருப்பார். ஒரு மட்டக் குதிரையின்மேல் சவாரி செய்து கொண்டு போவார். சின்னப் பட்டுக் குடையொன்று வெயிலை மறைப்பதற்காகவும், கரிய அடிமைப் பையன் ஒருவன், குதிரையை அடித்து நடத்துவதற்காகவும் அவர் உடன் கொண்டு செல்வது வழக்கம். அவருடைய வீடு நிஜாப்பூருக்குத் தெற்கே, விளைநிலங்களுக்கெல்லாம் அப்பால், பாலைவனத்தின் உப்புப் படுகைகளின் அருகிலே தனியாக இருந்தது. இது தொந்தரவு எதுவுமில்லாமல் நிம்மதியாகக் கணித ஆராய்ச்சியும் கல்வி போதனையும் செய்வதற்கு வசதியாக இருந்தது.

சுல்தான் அவர்களின் அமைச்சர், பல ஆண்டுகளுக்கு முன், பேராசிரியர் அலியை, கணிதநூல் ஒன்று, புது முறையிலே ஆக்கும்படி பணித்தார். அதற்கிணங்க அடையாள எழுத்துக்களின் மூலமாகவே எண்களின் நுட்பத்தன்மையைக் கணிக்கும் (அல்ஜீப்ரா) நூலொன்றை அலி எழுதி முடித்திருந்தார். அவருடைய மாணவர்களின் வேலை என்னவென்றால், அவர் கூறும் விஷயங்களைக் குறிப்பெடுப்பதும், அவர் கட்டளையிடும்போது, கணக்குகளைப் போட்டுக் காண்பிப்பதும், பழைய நூல்களிலிருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தேவையான விஷயங்களைத் திரட்டிக் கொடுப்பதுமாகும். அதற்குப் பதிலாக, அந்தப் பேராசிரியர் அலி பிற்பகலில் மூன்று மணிநேரம் கணித விஞ்ஞானக்கலை நுட்பம் பற்றி விரிவுரை நிகழ்த்துவார். தம் செலவில் சாப்பாடும்போட்டு அவர்களை ஆதரித்தும் வந்தார்.

அவருடைய மாளிகையில் எட்டு மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கணித விஞ்ஞானக்கலையை, அவர்கள் ஒவ்வொருவரும் கசடறக் கற்றுத் தெளியவேண்டுமென்று அவர் அரும்பாடுபட்டு வந்தார். அவருடைய மரணத்திற்குப்பிறகு அல்லாவை வணங்கும் உலகப் பகுதியிலே கணித விஞ்ஞானம் அழிந்து போய்விடக் கூடாதென்பதற்காகவும், தம்முடைய ஆராய்ச்சி நூல்கள் பிற்கால உலகிற்குப் பயன்பட வேண்டுமென்பதற்காகவும், அவர் ஆர்வத்துடன் போதித்து வந்தார். அந்த எட்டுப்பேரிலும் உமார் மீதுதான் அவருக்கு நம்பிக்கையில்லை. பத்து மாதங்களுக்கு முன்வந்து அவரிடம் அண்டிய உமார் எதிர்காலத்தில் எப்படியிருக்கப் போகிறான் என்பது ஆசிரியருக்குப் புரியவேயில்லை. சிக்கலான கணித பிரச்சினைகளை எளிதாகக் கண்டு பிடிக்கும் சக்தியும் ஆபத்தைத் தரக்கூடிய கற்பனைத் திறமையும் உமாரிடம் மிதமாக இருப்பதாக ஆசிரியர் எண்ணினார். “கணிதம் என்பது, அஞ்ஞானத்திலிருந்து, அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாலம் போன்றது, அஞ்ஞானத்தைக் கடப்பதற்குக் கணிதத்தைவிடச் சரியான பாலம் வேறு எதுவுமில்லை” என்று பேராசிரியர் அலி அடிக்கடி தம் மாணவர்களுக்குச் சொல்வது வழக்கம்.

மத நம்பிக்கையற்ற கிரேக்கர்களின் கணித ஆராய்ச்சியை அவர் அடியோடு வெறுத்தார். எண்களைத் தங்கள் அடிமைகளாக்கிய முதல் கணிதநூல் ஆசிரியர்களான பழங்காலத்து எகிப்தியர்களின் கணிதக் கலைகளை அவர் மனதாரப் பாராட்டினார். எகிப்தியரின் கணித வேலைகள் பலப்பல பெரிய கட்டிடங்களை எழுப்பப் பயன்பட்டு வந்தது.

ஒருநாள் மாணவர்களில் ஒருவன் ஆசிரியர் அலியை நோக்கி, “குவாஜா இமாம் அவர்களே! நமக்கு மாதங்களைக் கணக்கிடுவதற்கு தீர்க்கதரிசி முகமது நபியவர்கள் ஏற்பாடு செய்த பிறைக்கணக்கு இருக்கிறது, ஒளி வருவதற்குக் கதிரவன் இருக்கிறான். அப்படியிருக்கும்போது, நட்சத்திரங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது என்ன பயன் தரும்? என்று கேட்டான்.

பேராசிரியர் அலி அவர்கள், மெக்காவுக்குப் போய் வந்தவர். புனிதமான ஹஜ்யாத்திரை செய்து வந்ததற்கு அடையாளமாக அவர் ஒரு பச்சைத் தலைப்பாகை அணிந்திருப்பார். அவருக்கு நட்சத்திரப் பலன்களிலோ சோதிடத்திலோ சிறிதுகூட நம்பிக்கை கிடையாது. ஆனால் சுல்தானும், பெரிய பெரிய பிரபுக்களும் சோதிடத்திலே நீங்காத நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினால், ஆந்த நம்பிக்கைக்குப் பாதகமான தம்முடைய கருத்தை அவர் வெளியிடுவதில்லை.

சுல்தானின் அமைச்சர், தம் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு, யாரேனும் உளவாளிகளை அடிக்கடி அனுப்பி வைக்கக்கூடும் என்ற சந்தேகம் வேறு இருந்தது.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட உளவாளியாக உமார் இருக்கக்கூடும் என்றும் எண்ணினார். அப்படி எண்ணுவதற்கு ஆதாரம் இல்லாமலும் இல்லை. உமார் தனக்கு உறவினர்கள் யாரும் இல்லையென்று சொல்லியிருக்கிறான். இது உண்மையாக இருக்காது. நிஜாப்பூருக்கு வெளியே, பல நாட்கள் சுற்றியலைந்துவிட்டுத் தன்னந்தனியாகத் தன்னிடம் வந்து, கணிதப் பேராசிரியரிடம் பாடம் கேட்க ஆவலுடன் வந்திருப்பதாகத் தெரிவித்தான். பார்ப்பதற்கு ஒரு போர் வீரனைப் போலவும், பசியெடுத்து இரைதேடிக் கொண்டிருக்கும் சிங்கத்தைப் போன்ற உடற்கட்டும் கொண்டிருக்கும் இவன் படித்துவிட்டுப் பள்ளியாசிரியனாகவா வரப்போகிறான்? பின் எதற்காக இவன் என்னிடம் பாடம் கற்க வரவேண்டும்? நிச்சயமாக இவன் உளவாளிதான்!” என்று அவனைப்பற்றி ஆசிரியர் அலி தீர்மானித்து வைத்திருந்தார். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லத் தொடங்கினார்.

“கற்றறிந்த மேதையான அபூரயான் பிருனி என்ற நூலாசிரியர் தம்முடைய சோதிடக்கலை நூலின் முதல் அதிகாரத்திலே, நட்சத்திரங்களைப்பற்றிய அறிவு ஒரு விஞ்ஞானம் என்றும், அந்த அறிவிருந்தால், அதன் உதவியால், மனிதர்கள், அரசர்கள், நகரங்கள், அரசியல் இவற்றிலே ஏற்படக்கூடிய மாறுதல்களைப்பற்றி முன்கூட்டியே அறிந்துசொல்ல முடியுமென்றும் கூறியிருக்கிறார். சோதிடநூல் அறியாமலேயே ஒருவன் வானநூலில் தேர்ச்சி பெற்ற அறிவுடையவனாயிருக்கலாம். ஆனால் வானநூல் அறியாதவன் சோதிடம் சொல்லுவதென்பது முடியாத காரியம். ஆகவே நட்சத்திரங்களைப் பற்றிய ஆராய்ச்சி சோதிடக்கலைக்கு முக்கியம்” என்று ஆசிரியர் பதில் கூறியார்.

கேள்விகேட்ட மாணவனுக்கு ஒரு நப்பாசையிருந்தது. தங்கம் செய்யக்கூடிய முறைகள் ஏதாவது தென்படுமா என்று பேராசிரியருடைய புத்தகங்களிலே புரட்டிப்புரட்டி ஆராய்ச்சி செய்து பார்த்தான். ஆனால், அவன் கண்ணுக்கு அது அகப்படவேயில்லை அடுத்தபடியாக அவன் ஒரு கேள்வி கேட்டான்.

“பழையநூல் ஒன்றிலே பொன்னின் தன்மை சூரியனிடம் இருக்கிறதென்று எழுதியிருக்கிறது. சூரியனுடைய சத்து நெருப்பு. நெருப்பின் மூலமாக நாம் பொன்னைப் பெறலாம், நெருப்பின் சத்தை நாம் கண்டுபிடித்துவிட்டால் தங்கம் பெறலாம். நெருப்பின் சத்தை நாம்பெறுவதற்கு... வழி... எதுவும் இருக்கிறதா?” என்று ஐயம் கேட்பவன்போல் கேட்டான். பக்கத்திலேயிருந்த மாணவன் வேடிக்கையாக “அடுப்பின் மூலம் அடையலாமே!” என்றான்.

பேராசிரியர் அலி பேசத் தொடங்கினார்! “எல்லாம்வல்ல அல்லா அவர்கள் தங்கத்தை மண்ணின் கீழிருந்துதான் பெற வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள். உண்மையான அறிவுள்ளவர்கள், இது போன்ற வீணான ஆராய்ச்சிகளில் இறங்கக்கூடாது” - இதைச் சொல்வதற்கு முன் பேராசிரியர் தம் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. சுல்தான் போன்றவர்கள், தங்கம் செய்யும் வித்தை தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்களை நம்பிப் பலமுறை ஏமாந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஏமாந்ததன் மூலமாக, யாராலும் தங்கம் செய்யமுடியாது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை மனத்தில் இருத்திக் கொண்டுதான் அவர், தம் கருத்தைத் தைரியமாகச் சொன்னார். இருந்தாலும் உளவாளி என்று கருதப்படுகிற உமார் தம்மைக் கவனிக்கிறானா, என்ன நினைக்கிறான் என்று அவன் முகத்தை லேசாகப் பார்த்துக் கொண்டார். உமாரோ ஒரு தாளில் இறகு பேனாவில் ஏதோ வரைந்து கொண்டிருந்தான்.

பேராசிரியர் விரிவுரையாற்றும் போதும் உமார் அடிக்கடி இந்த மாதிரிப் பேனாவினால் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதை அவர் கவனித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவன் தன்னுடைய உரைகளைக் குறிப்பெடுக்கிறான் என்று அசட்டையாக இருந்தார். அவன் அமைச்சருடைய ஒற்றனாக இருப்பானோ என்ற எண்ணம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் குறிப்புகளை அவன் அமைச்சரிடம் கொண்டு போய்க் காண்பிப்பதற்கு அத்தாட்சியாகப் பயன்படுத்தக்கூடுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் இப்படி அவன் எழுதும் தாள்களை அவனுடைய படுக்கைக்குப் பக்கத்திலேயுள்ள மரப்பெட்டியில் பூட்டி வைத்துக் கொள்ளும் வழக்கமும் வைத்திருந்தான். ஆகவே, ஆசிரியரின் சந்தேகம் உறுதிப்பட்டது.

அன்று பேராசிரியர் திடீரென்று எழுந்து உமாரின் அருகிலே வந்து அவன் எழுதிக் கொண்டிருந்த தாளை கவனித்தார். ஒரு கனஅளவைக் காட்டும் படம் வரைந்து, பல கோடுகளால் பிரிக்கப்பட்டிருந்ததையும் அவற்றின் இடையே எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் அந்தத் தாளிலே கண்டார். வியப்புடன் “இது என்ன?” என்றார்.

“கனஅளவின் மூலங்களின் கணக்கு” என்று பதில் சொன்னான் உமார்.

கனஅளவு மூலங்களைப்பற்றிய கஷ்டமான கணக்கொன்றை அவனுக்குக் கொடுத்திருந்தது அவருக்கு நினைவுவந்தது.

“எவ்வளவு தூரம் செய்திருக்கிறாய்?” என்று கேட்டார்.

“முடிந்து விட்டது” என்றான்.

அவரால் நம்ப முடியவில்லை. அந்தக் கணக்கை அவரால் செய்ய முடியவில்லை. கிரேக்கர்கள் அந்த மாதிரியான கணக்கிற்கு விடைகண்டு பிடித்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் உமார் அதற்கு விடைகண்டு பிடித்திருக்கிறான் என்பது அவருக்குச் சந்தேகமான விஷயமாகயிருந்தது, ஆகவே, வகுப்பைக் கலைத்துவிட்டு, உமாரைத் தம்முடன் தனிஅறைக்கு அழைத்துச்சென்று அந்தத்தாளில் உள்ள விஷயங்களை ஆராய்ந்தார்.

“இந்த விஷயம் என்னால் புரிந்துகொள்ள இயலாததாயிருக்கிறது. கனஅளவைச் சிறுசிறு கோள அளவுகளாகப் பிரித்திருக்கிறாய் அல்லவா? கிரேக்கர்களின் விடையை நீயும் தெரிந்து கொண்டிருக்கிறாய்!” என்றார் அலி.

“அவர்கள் எப்படி இதன் விடையைக் கணக்கிட்டார்கள்? என்று உமார் கேட்டான்.

“இதுவரை நான் அதை அறிந்து கொள்ளவில்லை”

உமாருக்குக் கணக்குக் கொடுக்கும் போது, அதன் விடையைச் சொல்லவில்லை என்பது பேராசிரியருக்கு நினைவு இருந்தது. அவருடைய குறிப்புத் தாள்களுக்கிடையே, அந்தக் கணக்கைப்பற்றிய குறிப்பும் விடையும் வைத்திருந்தார். அவருடைய ஆசனத்தின் அருகிலே இருந்த திருக்குர்ஆன் புத்தகத்துக்குள்ளே அந்தக் குறிப்பைத் திணித்து வைத்திருந்தார். அவருடைய அறையைத் தவிர்த்து அந்தப் புத்தகத்தை அவர் வெளியில் எடுத்து வருவது கிடையாது. தம் மாணவர்களையும் அறைக்குள் தாம் இல்லாதபோது வரக்கூடாதென்று கட்டுப்படுத்தி வைத்திருந்தார். ஆகவே ஒன்று உமார் அதைத் திருடிப்பார்த்து விடையைத் தெரிந்து கொண்டு கணக்கைச் செய்திருக்க வேண்டும் அல்லது அவன் இந்தக் கற்பனைக் கோடுகளின் உதவியால் தானாகவே செய்திருக்க வேண்டும்.

“இந்த முழுச்சதுரங்களின் அளவுகளைக் கொண்டு கனஅளவு மூலங்களைக்காட்டி வரைந்திருக்கிறாய், ஆனால் விடையை எந்த வழியாகக் கண்டு பிடித்தாய்? என்று அலி கேட்டார்.

உமார் குனிந்து வரைவுப் படத்தில் கைவைத்துக் காட்டியபடி “இந்தப் பகுதியைக் கழித்து இதையும் இதையும் கூட்டிப் பாருங்கள். விடைகிடைத்து விடுகிறது!” என்று காண்பித்தான்.

“என்னைக் குருடனென்றா நினைத்துக் கொண்டாய்? இது நான் உனக்குச் சொல்லிக் கொடுத்த அடையாளமுறைக் கணிதம் (அல்ஜிப்ரா) அல்லவே. மதநம்பிக்கை அற்ற கிரேக்கர்கள் கையாளுகின்ற இடைவெளிக் (ஜியோமிதி) கணிதம் அல்லவா இது.”

“இருக்கலாம், ஆனாலும் விடை கிடைத்து விட்டதல்லவா? எனக்கு அடையாள முறைக் கணிதத்தின் மூலம் செய்வது எளிமையாகத் தோன்றவில்லை.”

“இருந்தாலும் நான் கொடுத்தது அடையாள முறைக் கணிதம்தானே!”

“ஆம்! இப்பொழுது வழி கண்டுபிடித்து விட்டபடியால் அந்த முறையில் மாற்றிச் செய்வதும் கஷ்டமல்ல, எளிது தான்!” என்று சொல்லிக் கொண்டே உமார் அந்தக் கனஅளவு பார்த்துக் கொண்டே அடையாளக் கணித முறையின்படி அந்தக் கணக்கைச் செய்து காண்பித்தான். பேராசிரியர் அலி, உமாரின் திறமையைத் தெரிந்து கொண்டதுடன், அந்தக் கணித முறையையும் தம் நூலிலே சேர்த்துக் கொண்டார்.

இந்தக் கணிதத்தைச் செய்வதற்கு காரெஸ்மி என்ற கணிதப் பேராசிரியர் கூட முடியாதென்று சொல்லி முயற்சிக்காமலே போய்விட்டார். பாக்தாத் கல்லூரியில் இருந்த பேராசிரியர் உஸ்தாத், இம்மாதிரிக் கணக்குகளைச் செய்யப் பல்லைக் கடித்துக் கொண்டு முயற்சி செய்தும் பலன் ஏற்படவில்லை. “இது மாதிரியே வேறு கணக்குகளையும் செய்ய முயற்சிக்கிறாயா?” என்று பேராசிரியர் அலி வியப்போடு கேட்டார்.

“எத்தனையோ தடவை செய்திருக்கிறேன்” என்றான் உமார்.

“விடைகள் கிடைத்தனவா?”

“கிடைத்தன, ஆனால் ஒவ்வொரு முறை கிடைக்காமலும் போயிருக்கின்றன!”

“நீ செய்திருக்கும் மற்ற கணிதங்களையும் நான் பார்வையிடலாமா” என்று குழைந்து கொண்டே கேட்டார் அலி.

உமார் சற்று நிதானித்து ‘ஐயா நான் உங்கள் உப்பைத் தின்று வருகிறேன். உங்கள் காலடியில் இருந்து எத்தனையோ அறிய முடியாத விவரங்களை அறிந்திருக்கிறேன். நீங்கள் செய்யச் சொன்ன வேலைகளை நான் செய்து வந்திருக்கிறேன். ஆனால் இந்தக் கணித முறைகளெல்லாம், நான் சொந்தமாகக் கண்டு பிடித்தவை. அவற்றை உங்களுக்குக் காண்பிக்க இயலாதவனாக இருக்கிறேன். மன்னிக்க வேண்டும்” என்றான்.

பேராசிரியர் அலியின் கண்களிலே கடுகடுப்பு மிதந்தது. “அவற்றை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”

“இன்னும் நான் அதைப்பற்றி ஒன்றும் முடிவு செய்யவில்லை” என்று கொஞ்சங்கூட அஞ்சாமல் உமார் பதில் கூறினான்.

“நீ செய்த கணிதங்களை யெல்லாம் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறாய் அல்லவா?” என்று கேட்டார் அலி.

“ஆம்” என்றான் உமார்.

அவனை அனுப்பிவிட்டுப் பேராசிரியர் அலி, கன அளவுகளைப்பற்றிய கணக்குகளிலேயே தம் நினைவுகளை செலுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அன்று பிற்பகல் வகுப்பு நடத்த வேண்டியதையும் மறந்து விட்டார். உமார் செய்தது போலவே, மற்றொரு கணக்கைச் செய்து பார்த்தார். வெற்றி கிடைக்கவில்லை. அடையாள முறை மூலம் செய்ய வேண்டிய கணிதத்தை இடைவெளிக்கணித முறையில் செய்யலாம் என்பதை அவரால் நம்பக்கூட முடியவில்லை. செய்யமுடியும் என்று உமார் செய்து காண்பித்துவிட்டான். இருந்தாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சலிப்போடு தன் பேனாவையும் தாளையும் வீசி எறிந்தார்.