உமார் கயாம்/7. அடிமைக்கும் கவலைகள் ஆயிரம் உண்டு!

விக்கிமூலம் இலிருந்து

7. அடிமைக்கும் கவலைகள் ஆயிரம் உண்டு!

உமார் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தான். உடம்பு களைத்துப் போய் இருந்தாலும்கூட மனம் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. தன் நண்பன் ரஹீம் சாகும்போது புது மாதிரியாகப் புன்னகை புரிந்த அவனுடைய முகம் உமாரின் மனக்கண்ணை விட்டு நீங்கவேயில்லை.

நண்பர்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றிலே பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல் ஒட்டிப் பழகியவர்கள். வழிநெடுக எல்லாவற்றையும் பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்தவர்கள். இப்போது தன் உடம்பில் சரிபாதி போலிருந்த நண்பன் செத்துப் போய்விட்டான்! இனி என்ன செய்வது? எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக இருந்துவந்த உமாருக்கு இப்பொழுது ரஹீமுக்குப் பதிலாக அவனுடைய பணியாட்களை நடத்தும்முறை தெரியவில்லை. ஆனால் பணியாட்களோ தங்கள் எஜமானன் இறந்துவிட்ட பிறகு உமாரிடமிருந்தே உத்தரவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

போரில் வெற்றி கண்ட அராபியர்களும் மற்றவர்களும் கொள்ளைப் பொருள்களோடும், பிடிபட்ட அடிமைகளோடும் தத்தம் பகுதிகளை நோக்கிப் பயணப்படத் தொடங்கினார்கள். உமாரும் நிஜாப்பூருக்குப் புறப்பட வேண்டிய காரியங்களில் ஈடுபட வேண்டியவனானான்.

ஆனால் உமார் போர்க்களத்திலிருந்து ஒருசிறு கத்திகூட எடுத்துக் கொண்டுபோக விரும்பவில்லை. தன் உயிர் நண்பனான ரஹீமைப் பறிகொடுத்த துயரத்தை நினைவூட்டக்கூடிய எந்தப் பொருளையுமே அவன் எடுத்துச் செல்ல விரும்பவில்லை.

ரஹீமின் பணியாளான யார்மார்க் தன் எஜமானனின் கருப்புக் குதிரைக்கு சேனங்கட்டி, இறந்துபோன தன் தலைவனுடைய ஆயுதங்களையும் பொருள்களையும் முட்டையாகச் சேணத்தின் பின்புறத்திலே கட்டினான். உமார் அந்தக் கருப்புக் குதிரையைப் பார்த்தான். வெறும் சேணத்துடன், அதைத்தன் பக்கத்தில் நடத்திக் கொண்டு வழி முழுவதும் செல்வது இயலாத காரியம் என்று தோன்றியது. ஆனால் அவற்றை ரஹீமுடைய தகப்பனாரிடத்தில் ஒப்படைக்க வேண்டிய கடமையும் அவனுக்கு இருந்தது.

“இந்த ரோமானியப் பெண்ணை அந்தக் குதிரையைச் செலுத்திக் கொண்டுவரச் செய்யலாமே! அவளைச் சுமந்து செல்ல வேறு மிருகங்களும் இல்லை” என்று யார்மார்க் சொன்னான்.

அடிமையாகப் பிடிபட்ட அந்தப் பெண் ரஹீமின் சொத்தாவாள். அவளையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும். பட்டுப் போன்ற கூந்தலும், அழகும் இளமையும் பொருந்திய அவளை, நிசாப்பூர் அடிமைச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம். ரோமானியர்களின் தேசத்தைச் சேர்ந்த அவளோடு கிரேக்க மொழியில்தான் பேசமுடியும். பள்ளிக் கூடத்தில் உமார் படிக்கும்போது, பல கிரீக் வார்த்தைகளைத் தெரிந்து கொண்டிருந்தான். அந்த அரைகுறைக் கிரேக்கச் சொற்களை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணோடு பேசி, அவளைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொண்டான்.

அவளுடைய பெயர் அழகி ஸோயி என்பது. கான்ஸ்டான்டிநோபிள் நகரில் அவள் எப்போதும் அடிமைப் பெண்ணாகவே இருந்து வந்ததால் அவளுக்கு வேறு உறவு எதுவும் கிடையாது. ரோமானியச் சக்கரவர்த்தியைப் போலவே, இஸ்லாமியர்களை எளிதாக அடித்து விரட்டி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த கிறிஸ்துவ இராணுவ அதிகாரி ஒருவர் அவளைத் தன் அடிமைப் பெண்ணாகப் போர்க்களத்திற்குக் கூட்டி வந்திருந்தார். அந்த அதிகாரி முறியடிக்கப்பட்டு அவரிடமிருந்து அழகி ஸோயி பறிக்கப்பட்டு எதிரிகளின் கையில் சிக்கிக் கொண்டு விட்டாள். இவ்வளவுதான் அவளுடைய கதை!

‘நான் அந்தக் கறுப்பு குதிரையில் ஏறி வருகிறேன். அழகி ஸோயிக்கு என்னுடைய குதிரையைக் கொடுங்கள்!’ என்றான் உமார். வீர மரணம் அடைந்த, செல்வனான தன் நண்பனின் கறுப்பு குதிரையில் ஓர் அடிமைப்பெண் ஏறிவரக் கூடாதென்று நினைத்தான் போலும்.

அழகி ஸோயி முக்காடு போட்டுக் கொண்டு, உமாருக்குப் பின்னாலே வந்துங்கூட, வழியில் கண்டவர் எல்லாம், அவளுடைய உடையையும், பழுப்பான கூந்தலையும் பார்த்து, அவள் போரிலே பிடிபட்ட ஓர் அடிமைப்பெண் என்றும் அவள் அருகில் தனியாகவும் அமைதியாகவும் வரும் வீரனுடைய உடைமை என்றும் எண்ணிக் கொண்டார்கள்.

நீண்டவழிப் பயணத்தின்போது, முதன்முதலாக இரவிலே தங்குவதற்காக அவர்கள் பிடித்த இடம் மிகவும் வசதிக் குறைவாக இருந்தது. ஒட்டகப்பாதை முழுவதும் ஒரே கூட்டம்! ஏராளமான படைகளோடு முகாமிட்டிருந்த ஒர் அமீரின் கூடாரத்திற்கு அருகில், ஒரு சுனை நீர்க்கிணற்றின் பக்கத்தில் உமார் தன்னுடைய கூடாரத்தை அமைக்கும்படி நேரிட்டது. அவனுடன் வந்த வேலைக்காரர்களோ, எந்த விஷயத்தையும் சொல்லாமல் செய்வதேயில்லை என்றிருந்தது. குதிரைகளை எங்கு கட்டவேண்டுமென்றும், அமீருடைய ஆட்களிடம், பேரம் பேசி ரொட்டியும் பார்லியும் வாங்கி வருவது எப்படி என்றும் அவன் ஒவ்வொன்றும் அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது. அந்த இரவில் உமார் படுத்துறங்கப் போகும் சமயத்தில் ரஹீமின் நினைவு அவன் மனத்திலே வந்து நிறைந்து கொண்டது.

கூடாரம் நட்டு வைத்திருந்த கம்பின் அருகிலே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அது அடங்கிச் சாம்பலாகும் வரையில், படுக்கையில் உட்கார்ந்தபடி உமார் விழித்துக் கொண்டேயிருந்தான். முதல் நாள் காலையில் குடித்த மது சிலமணி நேரங்கள் அவனைத் தன்னை மறக்கச் செய்திருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் இப்பொழுது மதுக்குவளைதான் இருந்தது; மது இல்லை! மது ஜாடியில் கொஞ்ச நஞ்சமாவது மீதியிருக்காதா என்ற ஆவலோடு மூட்டையை அவிழ்த்து, அதில் இருந்த வெள்ளி ஜாடியைக் கையில் எடுத்துப் பார்த்தான். ரஹீமின் வாழ்வு என்னும் மது இருந்த கோப்பை அதிவிரைவில் காலியாகிவிட்டது அவன் இப்பொழுது சாவைத் தழுவிக் கொண்டு புதை குழியிலே கிடக்கிறான்.

அந்தத் துயர நினைவைக் கலைப்பது போல் அவனருகில் ஓர் ஒசை உண்டாயிற்று. படுக்கையறை உடைகளுடன் அவனருகில் தூங்கிக் கொண்டிருந்த அடிமைப்பெண் ஸோயி புரண்டு படுத்துப் பெருமூச்சு விட்டாள். உமார் குனிந்து அவள் கண்களை மூடிக் கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவளுடைய அழகிய கண்கள் இருண்டு நனைந்து போய் இருந்தன. ஏதோ கவலையின் மிகுதியால் அந்தப் பெண் தனக்குத்தானே அழுது கொண்டு இருந்திருக்கிறாள்.

அவளை எழுப்பியபடி, “என்ன ஸோயி? என்று மிருதுவாக உமார் கேட்டான்.

கண்விழித்த அழகிஸோயி தன் உதடுகளை விரித்து உமாரை நோக்கிச் சிறிய புன்னகையொன்றை நெளியவிட்டாள். தான் கண்ணிர் விட்டதாக உமார் அறிந்து கொள்ளக் கூடாதென்று அவள் எண்ணினாள். தன் சொந்த தேசத்தை விட்டுப் புறப்படும் இந்த நீண்ட பயணத்தில், இந்தப்பெண் எதைப்பற்றி நினைத்துக் கொண்டு இருந்திருப்பாள் என்று உமார் வியந்தான். இப்படி, அவளைப்பற்றி அவன் சிந்தித்தது இதுதான் முதல் தடவை. ஓர் அடிமைப் பெண்ணுக்கும் பேரரசனாகிய சுல்தானுக்கு இருப்பது போல் கவலைகள் உண்டு. ஆனால் அதை வெளியே சொல்லிக் குறைப்படுவதற்குத்தான் அனுமதிக்கப் படுவதில்லை!

உமார், அழகி ஸோயியை நெருங்கி அவளுடைய கூந்தலைப் பரிவோடு ஒதுக்கிவிட்டான். அழகி வியப்போடும் ஆவலோடும் உமாரை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு அவனுக்குத் தன் பக்கத்தில் இடம் கொடுப்பதற்காக கொஞ்சம் பின்னுக்கு நகர்ந்து படுத்துக் கொண்டாள். இப்பொழுது அவள் அழுகையெல்லாம் எங்கேயோ போய்விட்டது. உமாரின் கைபட்டதும் அழகியின் நாடித் துடிப்பு அதிகமாகியது. அவளை உமார் தன் கைகளுக்குள்ளே வாஞ்சையோடு அணைத்துக் கொண்டான். தான் போர்த்தியிருந்த துணியை எடுத்து இருவருக்கும் சேர்த்துப் போர்த்திக் கொண்டான். குழம்பிய சததியும், இராக்காற்றும், ரஹீமின் சாவுப் புன்னகையும் தன் நினைவைவிட்டு இப்பொழுதாவது அகலும் என்று எதிர்பார்த்தான்.

தன் தோளுக்குக் கீழே புரண்டு கொண்டிருந்த தலை மயிரை ஒதுக்கிவிட்டுக் கொள்வதற்காக அழகி ஸோயி அசைந்தாள். உமாரின் பக்கமாகப் புரண்டாள். அப்பொழுது உமாரின் உதடுகள் அழகியின் கழுத்தில் பதிந்தன. தேகத்தின் கதகதப்பும் கூந்தலின் மணமும் உமாருக்கு இதமாக இருந்தன. அந்தக் கதகதப்பே ஒரு வேட்கையாக மாறி உமாரின் களைப்பையெல்லாம் மறக்கடித்தது.

அழகி ஸோயியின் ஒவ்வொரு அசைவும் உமாரிடம் தன்னை மறந்த ஒரு நிலையையுண்டாக்கின.

அந்த இரவிலே அழகியின் கையணைப்பிலே, போர்க்களச் சகதியும், நண்பனின் சாவும் உமாருக்கு மறந்து போய்விட்டன. அமைதியாக மூச்சுவிட்டுக் கொண்டு உலக நினைவு எதுவுமில்லாமல் உமார் அயர்ந்து உறங்கினான்!