உள்ளடக்கத்துக்குச் செல்

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/உரைநயம் கண்ட உரவோர்

விக்கிமூலம் இலிருந்து
4

உரைநயம் கண்ட உரவோர்

“பழைய உரைகள் பொழிப்புரைகளாக உள்ளன. நீண்ட தொடர்களாக அமைந்துள்ளன. அவற்றை எளிதில் மனங்கொள்வது அரிய முயற்சியாகும். எனவே பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து, அத் தொடருக்குரிய பழைய உரையைப் பொருத்திப் பாட்டுப் பொருளை எளிதாக மனம் பற்றுமாறு செய்கிறார். பாட்டின் சொற்புணர்ச்சிகளில் அமைந்த வினை முடிபுகளைச் சுட்டி, பொருளின் திட்பத்தையும் நுட்பத்தையும் உணர்த்துதல், அருஞ் சொற்களுக்குப் பொருள் கூறுதல், பிற நூல்களிலிருந்து ஒப்புமை காட்டுதல், இலக்கண அமைதியைப் புலப்படுத்துதல், வரலாற்றுச் செய்திகளைத் தொடர்புபடுத்தல் முதலான அரிய செய்திகள் பலவும் ஔவை நூல்களில் காணப்படுவன!”

என்று பேராசிரியர் கு.சிவமணி குறிப்பிடுவார்.

இக்கூற்றுக்கு ஏற்ப, எந்த ஒரு நூலாயினும் அதற்குச் சிறந்த முறையில் உரைகாணும் திறம், உரைவேந்தருக்குக் கருவிலே வாய்த்த திரு எனலாம். இலக்கிய நூலாயினும், இலக்கண நூலாயினும் அதன் பண்டை உரைகளை ஆழ்ந்து பயின்று, தோய்ந்து, நுகர்ந்து, ஆய்ந்து தெளிந்தார். பிறர் கருத்தோடோ தம் கருத்தோடோ மாறுபட அமைந்திருக்கும் உரையை, உடனே ‘பிழையுரை’ என்று முடிவு செய்து விடாமல், அவர் அவ்வாறு உரை வகுத்திருப்பதற்கான காரணத்தைக் கண்டறிந்தார். பொருந்தா தாயின் புத்துரைகாண முயன்றார்.

உரைவேந்தர் நூல்களில் காணப்படும் ‘உரைத் திறன்கள்’ பலவாகும். இங்கே சில மட்டும் எடுத்துக் காட்டப்படுகின்றன. கண்ணழித்துப் பொருள்கூறுதல்

‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்’ (புறம்134) என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்குப் பழைய உரை:

“இப்பிறப்பின்கட் செய்ததொன்று, மறுபிறப்பிற்கு உதவு மென்று கருதிப் பொருளை விலையாகக்கொடுத்து, அதற்கு அறம் கொள்ளும் வணிகன் ஆய் அலன் அமைந்தோர் பிறரும் போய வழியென்று உலகத்தார் கருத, அந்த நற்செய்கையிலே பட்டது. அவனது கைவண்மை!”

இப்பழைய உரையை உரைவேந்தர், பின்வருமாறு கண்ணழித்துப் பொருள் கூறுகின்றார்:

“இம்மைச் செய்தது-இப்பிறப்பின்கட்செய்ததொன்று; மறுமைக்காம்-மறுபிறப்பிற்குதவும்;எனும்அறவிலை வணிகன் ஆய் அலன்-என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறம் கொள்ளும் வணிகன் ஆய்அல்லன்; சான்றோர் பிறரும் சென்ற நெறி என- அமைந்தோர் பிறரும் போய வழியென்று உலகத்தார் கருத; ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மை-அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்மை.”

புறநானூற்றைப் படிப்போர்க்கு இஃது எத்துணையளவு பயன் படுகிறது என்பது சொல்லாமலே விளங்கும். இவ்வாறே உரை வேந்தர் எழுதிய பாடலுரைகள் அமைந்துள்ளன.

உள்ளத்து உணர்ச்சிகளைச் சொல்லில்வடித்தல் “செய்யுட் பொருளையுணர்ந்து இன்புறுதற்கு அவ்வச் செய்யுள் பாடப்பெற்ற செவ்வியினை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அதனால் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் புலவருள்ளத்திலிருந்து அப்பாடல் தோன்று- தற்குரிய சூழ்நிலையினையும், உள்ளத்துணர்ச்சிகளையும் சொல்லோவியமாக இவ்விளக்கவுரையாசிரியர் (உரைவேந்தர்) புனைந்துரைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்முறை, படிப் போருள்ளத்திற் பாடற்பொருளை நன்கு பதியும்படி செய்யும்!”

எனப் புறநானூற்று உரைநூல் அணிந்துரையில் அ. சிதம்பரநாதச் செட்டியார், உரைவேந்தரின் உரைத்திறம் பற்றிக் குறிப்பிடுவர். இதற்கு ஒரு சான்று:

புறநானூற்றில் வரும், ‘நுங்கோ யாரென வினவின்’(212) எனும் பாடல், கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது. இதன் முன்னுரையில்,இப்பாடல் தோன்றிய சூழலைச் சுருக்கமாக இனிதெடுத்து மொழிகின்றார் உரைவேந்தர்:

“பிசிராந்தையார், பாண்டி நாட்டுப் ‘பிசிர்’ என்னும் ஊரில், இருந்து வருகையில்,கோப்பெருஞ் சோழனுடைய அறிவு நலமும் ஆட்சி நலமும் கேள்வியுற்று, அவன்பாற் பெருங் காதல் கொண் டொழுகினார். பாண்டிநாட்டிலிருந்தது அவருடல் எனினும், அவரது உயிர், உறையூரிலிருந்த கோப் பெருஞ்சோழனையே சூழ்ந்து கொண்டிருந்தது. ‘பிசிர்’ இப்போது ‘பிசிர்குடி’ என வழங்குகிறது. அவரது நினைவு முற்றும் சோழன்பால் ஒன்றி யிருந்தமையின், யாவரேனும் நும்முடைய வேந்தன் யாவன்?’ என்று கேட்பின், 'எம் வேந்தன் கோப் பெருஞ்சோழன். அவன் உறையூரில், ‘பொத்தியார்’ என்னும் புலவர் பெருந்தகையுடன் இனிதிருக் கின்றான்' என்று கூறுவர். இவ்வாறு பன்முறையும் கூறிப் பயின்ற அக்கூற்று, இப் பாட்டாய் உருக்கொண்டு நிற்கின்றது!”

-இதனைப் படித்த மாத்திரத்திலேயே இப்பாடலை அறிய வேண்டும் எனும் அவா தோன்றுமன்றே!

பாடற்கருத்தை வரன்முறைப்படுத்தித் தெளிவுறுத்தல்

“தொலி(தோல்) நீக்கியபின், பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துண்டு மகிழ்வது போலப்

பாட்டினுள் ஒவ்வொரு கருத்தாக எடுத்து,வரன் முறையில் தெளிவுபடுத்துவதும், அத்தெளிவுரையைத் ‘தென்னுண் தேக்கிய செஞ்சொற்’களில் தொடுத்து உரைப்பதும் (உரைவேந்தரின்) உரை நடையின் மாண்பாகும்!”

என்பர் ‘கலையன்னை’ இராதா தியாகராசனார். இதற்குக் கீழ்க்கண்ட நற்றிணைப் பாடலைச் சான்றாகவும் காட்டுவர்.

‘பொருள் வயிற் பிரிந்த தலைவன், பருவமுணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது’ என்னும் துறையமைந்த பாடல், ‘இருங்கண் ஞாலத்து’ (நற்றிணை:157) என்று தொடங்குவது. இளவேட்டனார் பாடியது. ‘இளவேனிற் பருவத்து வருவேன்’ என்று கூறிப் பொருள் வயிற் பிரிந்துபோன தலைமகன், சென்று வினை முடிக்குமுன்பே, கூறிய பருவம் வந்துவிட்டது; அதனை அறிந்து தன் நெஞ்சை நோக்கி, 'நெஞ்சமே இளவேனில் நாளிலே குயில் கூவும் பொழுதெல்லாம் அவ் ஒசையை, நம் காதலி கேட்டுக் கேட்டு மாறாது வருந்துவாளே’ என்று வருந்திக் கூறியதாக அமைந்த பாடல். இதன்கண்

“...நாட்பத வேனில் இணர்துதை மாஅத்த புணர்குயில் விளித்தொறும் நம்வயின் நினையும் நெஞ்சம்”

எனும் பகுதி வந்துள்ளது. இதனை, உரைவேந்தர் விளக்கும் திறம் வருமாறு:

“காவும் சோலையும் கவின்பெறு பொழிலும் புதுத்தளிரும் புதுப்பூவும் தாங்கி, மாவும்புள்ளும் மகிழ்ந்து விளையாட, மன்றல் கலந்து தென்றல் உலவும் வேனிற்காலம், காதலில் பிணிப்புண்ட இளமை உள்ளங்கட்கு இன்பக் காட்சியும் கூட்டமும் வளம்பட நல்கும் மாண்புடைமையால், அக்காலத்து மாங்குயிலின் தேங்கோள் இன்னிசைக் கண், தலைமகனது கருத்துச் சென்றமையின் ‘இணர்துதை மாஅத்த புணர்குயில்’ என்றும்; குயிலின் இன்னிசை கேட்போர் உள்ளத்தில்

               வேட்கையை எழுப்பிக் காதலரை நினைப்பித்தல்
               இயல்பாதல் பற்றிப் ‘புணர்குயில் விளித்தொறும்
               நம்வயின் நினையும் நெஞ்சம்’ என்றும் கூறினான்!”


இவை போல்வன, உரைவேந்தர்தம் உரைகளில் பாக்கக் காணலாம்.


புத்துரை காண்டல்

            “உழுதசால்வழியே உழுவான்பொருட்டு, இழுதை
               நெஞ்சம் இதென்படுகிறதே’ எனத் திருநாவுக்கரசர்
               வருந்திக் கூறியவாறு உழுதசால் வழியே உழுது
               செல்லாமல்... செவ்விய இனிய பழுதற்ற முறையிற்
               பொன்னினும், மணியினும் போற்ற வேண்டுவதாய்
               எழுதியுள்ள உரை விளக்கம் சாலவும் பாராட்டற்
               பாலதாகும்!”

என்று ந.ரா. முருகவேள், புத்துரை, காணும் உரைவேந்தரின் திறத்தை வியந்து பாராட்டுவர்.

        
              “கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
               பரந்திலங் கருவியொடு நரந்தம் கனவும்
              ஆரியர் துவன்ற பேரிசை இமயம்”

(பதி.11:21-23)

என வரும் பதிற்றுப்பத்து அடிகளுக்குப் பழைய உரைகாரர் “ஆரியத்து ஆணையினாலே பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிக் கவரிமான் பகற்காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும், நரந்தம் புல்லையும் கனவிலும் கண்டு மகிழும்” என்று பொருள் கொண்டார்.

இப்பாடலைப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரின் கருத்துக்குப் பொருந்தாத உரை இது என்று உணர்ந்த உரைவேந்தர், பின்வருமாறு புத்துரை காண்கின்றார்:

             “முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில்
              உறங்கும்கவரிமான்கள், பகற்பொழுதில் தாம்
              மேய்ந்த நரந்தம் புற்களையும் அவை வளர்தற்குக்

                    காரணமாகப் பரந்து விளங்கும் அருவிகளையும்
                    கனவிற்கண்டு மகிழ்தற்கு இடனாய் விளங்கும்
                    ஆரியர் நிறைந்து வாழும் இமயம்!... கவரிமானும்
                    நரந்தம் புல்லும் இமயமலைச் சாரலில் மிகுதியாக
                    வுண்மையின் இவற்றை விதந்தோதினார்!”

என்று புத்துரை காணும் உரைவேந்தர், இதற்குச் சான்றாக, ‘நரந்தம் நறும்புல் மேய்ந்த கவரி, குவளைப் பைஞ்சுனை பருகியயல. தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும், வடதிசை யதுவே வான்றோய் இமயம்’ என்று ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடலை (132) மேற்கோள் காட்டிப் பழைய உரையை மறுக்கின்றார்.


சிக்கலை அவிழ்த்தல்

திருவள்ளுவர்,

                   “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
                    சூழினும் தான் முந்துறும்”

(குறள் 380)

என்று கூறியவர்,

                   “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
                    தாழா(து) உஞற்று பவர்”

(குறள்:620)

என்று கூறியுள்ளார். இஃது ஒரு சிக்கலான இடம். பலரும் பலவிதமாக அமைதி கூறுவர். உரைவேந்தர், மிக அருமையான விளக்கம் தந்து, சிக்கலை அவிழ்த்து விடுகின்றார்:

“‘பழுத்த பழம் மரத்தில் நில்லாது’ என்பது உலகுரை. நன்கு முதிர்ந்த கனி, தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப் படுத்தி விடுமே யன்றித் தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம். மரம் ஒன்று பழம் ஊழ்த்தல், விதைபயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல் போல், வினை ஊழ்த்தல் தன் பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி, மேலும் வினைகளாகிய தன்

இனத்தைப் பெருக்கும் இயல்பிற்றாம். பழுத்த பழம் விதைப் பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல, ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது. ஊழ்கனிக்கு அஃது இயற்கையறமாதல் போல, ஊழ் வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாம். இயற்கை யறம் எல்லா ஆற்றலினும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலி மிகப்பெரிது என்பதுபற்றி, ஆசிரியர், ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று அதன் வலிமிகுதியை விளக்குகின்றார்!”

-இவ்வாறு 'ஊழின் வலிமை' பற்றிக் கூறும் உரைவேந்தர், 'உப்பக்கம் காண்பர்' என்பதற்கும் சரியான விளக்கம் தருகின்றார்.

“பழுத்துவரும்பழம் இடையே மாறுபட்ட பொருள்களால் வெம்பிப் பயன் ஊழ்க்காது போதலும் உண்டு. அதுவும் இயற்கை நிகழ்ச்சி. அதனால் ஊழ்த்துவரும் வினையும் பயன் நல்காது கெடுதற்கு வாய்ப்புண்டு என்பது பெறப்படும். கனி வகைகள் பலவும் பெரும்பாலும் ஊழ்த்துப் பயன்படுதலும் மிகச் சிலவே; இடையிற் கெடுதலும் இயல்பு. அதுபோல ஊழ்வினையுள் ஒரு சில மாறுபட்ட வினைகளால் பயன் ஊழ்க்காது கெடுதற்கு இடமுண்டு என்று சான்றோர் கண்டனர். அதனை ஆராய்ந்தவர், உலையா முயற்சியில் ஊழ்வினையும் பயன் ஊழ்க்காது கெடும் என்று தெளிந்து, ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்’ என்றனர். ‘ஊழையும் ஊழ்க்காது கெடும்’ என அதன் வினையால் கூறாமல், ‘ஊழையும் ஊழ்க்காதவாறு இடையூறு செய்வர்’ என்பது தோன்ற, ‘உப்பக்கம் காண்பர்’ என்று ஆசிரியர் கூறுவது, நினைவு கூரத்தக்கது. பள்ளம் நோக்கி ஓடுவதை இயற்கை யறமாகக் கொண்ட தண்ணீரும், இடை நிகழ்த்தும் தடையால், நின்று வற்றுதல் போல் ஊழ்வினையும் இடை நிகழ்த்தும் முயற்சிகளால் நின்று வற்றுவது

இயல்பாதலின், ஊழை உப்பக்கம் காண்பது உயிர் கட்கு இயல்வ தொன்றாயிற்று. ஆகவே ஊழ்வினை தனக்குரிய பயனை ஊழ்த்து நல்குவதில் பெருவலி இயற்கை அறமாக உடைய தென்பதும், எனினும், மாறுபட்ட வினையால் அவ்வலி தடையுற்று நின்று வற்றும் என்பதும் முடிவாயின!”

(1954 இல் எழுதிய கட்டுரை)

வரலாறு உரைத்தல்

“பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறை புலமை பெற்றவர் ஔவை துரைசாமி அவர்கள்!”

என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் கூறுவதற்கேற்பப் பல்துறை வல்லுநராக விளங்கிய உரைவேந்தர், தம் பேருரை பலவற்றில் ஆங்காங்கு வரலாற்றுச் செய்திகளைக் கூறாமலிரார். இங்கே ஒரு சான்று:

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் மணிமுடியாகத் திகழும் ‘சிவஞான போத’ நூலின் ஆசிரியர், அருளாளர் மெய்கண்டாரின் தந்தை பெயர் ‘அச்சுதக் களப்பாளர்’ என்பது. இச் சொல்லை வைத்துக் கொண்டு, ‘மெய்கண்டார், களப்பிரர் வழியில் வந்தவர்’ என்று சிலர் கூறியதும் உண்டு. இதனை உரைவேந்தர், வரலாற்றுச் சான்று காட்டி மறுக்கின்றார்.

“...இடைக்காலத்தே நம் தமிழகத்தை ஆண்ட வேந்தர்பால் அரசியற் பணிபுரிவோர், ‘களப்பாள ராயர், பல்லவராயர், வாணாதிராயர், மழவராயர், சேதிராயர்’ என்பன முதலிய சிறப்புப் பெயர்களை வேந்தரால் தரப்பெற்றனர். இடைக் காலத்தே இந்த நாட்டில் ‘களப்பிரர், பல்லவர், வாணர், மழவர்’ முதலியோர் ஆட்சி செய்தனர். பல்லவராட்சி வீழ்ந்ததும் பாண்டியரும் சோழரும் நாட்டாட்சி பெற்றனர். அக்காலையில் அவர்கள், அரசியல் வகையிலும், பிற வகையிலும் சிறந்த பணிசெய்த சான்றோர்க்கு, மேலே சொன்ன சிறப்புப் பெயர்- களைத் தந்து சிறப்பித்தனர். களப்பிரரை வென்று

உயர்ந் தோர்க்குத் ‘களப்பாளராயர்’ என்றும்; வாணர்களை வென்று சிறந்தோர்க்கு ‘வானாதி ராயர்’ என்றும், மழவர்பால் வெற்றி பெற்றோர் ‘மழவராயர்’ என்றும் இவ்வாறே பிறரும் சிறப்புப் பெற்றனர். இப்பெயர் கொண்டவர் பலரும் தமிழ்

வேளாண் மக்களேயாவர்”

என்று கூறும் உரைவேந்தர், ‘சிவஞான போத மூலமும் சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்’ என்ற நூலில், ‘களப்பிரர்’ பற்றி விரிவாகவும் ஆய்வு செய்துள்ளார்.

கல்வெட்டுச் சான்று தருதல்

உரைவேந்தர், கல்வெட்டுக்களிலும் ஆழ்ந்த பயிற்சி உடையவராதலின், உரைகூறும் இடங்கள் பெரும்பாலானவற்றில் கல்வெட்டுச் சான்றுகள் தருவதிலும் வல்லமை பெற்றவராக விளங்குகின்றார்.

சங்கப் புலவருள் ஒருவர், ‘தாமற்பல் கண்ணனார்’. இவரைக் குறித்து உரைவேந்தர் எழுதும் விளக்கம் வருமாறு:

“இவர், பார்ப்பனர்; கூர்த்த புலமை நலம் சிறந்தவர்; தாம் செய்த தவற்றை விரைந்துணரும் நல்லறிஞர். ‘தாமப் பல்கண்ணனார்’ என்றும் பாடம் உண்டு. ‘தாமல்’ என்ற ஊரினர். இது, காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ளது. இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் இவ்வூர் மிகச் சிறப்புற்று விளங்கிய தென்பதை இவ்வூர்க் கோயிற் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இக் கல்வெட்டுக்கள் ‘தாமர்’ என்று கூறுதலின் (S.I.Vol. V. 1004 A.R. 139 of 1896) இவர் பெயர் ‘தாமர்ப்பல்கண்ணனார்’ என இருக்க வேண்டும். ஏடெழுதினோர் ‘தாமற்பல் கண்ணனார்’ என எழுதிவிட்டனர். ‘பல்கண்ணன்’ என்பது இந்திரனையும் குறிக்கும் பெயர்!”

உரைவேந்தர் காட்டும் கல்வெட்டுச் சான்றுகள், எண்ணில் பலவாக உள்ளன. ஈண்டு மற்றொன்றும் காட்டுதல் பொருந்தும்.

நெல்லையில் 12-2-1956இல், நடந்த ‘பதினெண் கீழ்க் கணக்குச் சொற்பொழிவு’த் தலைமையுரையில் உரைவேந்தர், ‘புத்திரமுக தரிசனம்’ என்பது குறித்துப் பின்வருமாறு விளக்கம் தருகின்றார்:

“சங்க காலத்தில், இல்லிருந்து நல்லறம் புரியும் மக்கள் வாழ்வில், மனைக்கிழத்திக்கு மகன் பிறந்தானாயின் குறித்த நாள் ஒன்றில் தலைமகன், தன் மகனைக் காண்டல் ஒரு சிறப்பாக நிலவிற்று. அதியமான் நெடுமான் அஞ்சி, தனக்கு மகன் பிறந்தானைக் காணப்போந்த காட்சியை ஔவையார் வியந்து பாடியது புறநானூற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மகனைத் தோளிடைக் கொண்டு நிற்கும் தந்தையின் தோற்றத்திற்கு இந்திரனை உவமமாக்கி, ‘தடுத்த மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு புகுதந் தோனே’ (அகம்: 66) என்று அகநானூறு கூறுகின்றது. “இவ்வழக்காறு, ‘புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின்... ஐயர் பாங்கினும், அமரர்ச் சுட்டியும் செய் பெருஞ்சிறப்பொடு சேர்தல்’ (தொல். பொருள். 146) எனத் தொல்காப்பியனார்க்கு முன்பிருந்தே தொன்றுதொட்டு வருவதாயினும், இக்கீழ்க் கணக்குப் பாடிய சான்றோர் காலத்தும் இருந்த தனை, ‘பாட்டரவம் பண்ணரவம்’ (திணை மாலைநூற்.145) என்று குறிக்கின்றனர். “பிற்காலத்தே இவ்வழக்காறு, ‘புத்திரமுக தரிசனம்’ என வழங்கியது, இதனைத் திருமயம் பகுதியைச் சேர்ந்த நெக்கோணத்திலுள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு, (கி.பி. 1483) வீரப்பிரதாப சுந்தரத் தோளுடையார் மகாபலி வாணாதிராயர், தன் மகன் திருமாலிருஞ்சோலை நின்றான்’ பிறந்த காலத்தே ‘புத்திரமுக தரிசனம்’ என்னும் இம்முறையைச் செய்தான் என்று (P.S.No.672) குறிக்கின்றது!”

இவைபோல் அரிய செய்திகளைத் தருவதில் உரைவேந்தருக்கு ஆரா இன்பம்! சொற்பொருள் ஆய்வு

உரை கூறுங்கால், சொற்களுக்கு அருமையான பொருள் தந்து விளக்குவது உரைவேந்தரின் இயல்பு. இங்கே ஒரு சில சொற்பட்டியல் தரப்படுகின்றது:

மூவன்

இஃது இயற்பெயர். ‘மூப்பன்’ என்னும் சொல் போல்வது. ‘அம்மூவனார்’ என்பதும் இப்பெயரடியாக வருவதே.

பாடவேறுபாடு காட்டல்

உரைவேந்தர், தாம் ஆராய்ந்த ஏடுகள், கல்வெட்டுக்கள் முதலியன கொண்டு, ‘பாடவேறுபாடுகள்’ பலவற்றைத் தெளிந்து கூறுகின்றார். அவற்றுட் சில:

தவறானவை சரியானவை
கருங்குழலாதனார் - கருங்குளவாதனார்
ஆடுதுறை மாசாத்தனார் - ஆவடுதுறை மாசாத்தனார்
தும்பி சொகினனார் - தும்பைச் சொகினனார்
மாற்பித்தியார் - மாரிப்பித்தியார்
வெறிபாடி காமக்கண்ணியார் - வெறியாடிய காமக்காணியார்
நெடுங்கழுத்துப் பரணர் - நெடுங்களத்துப் பரணர்
ஐயூர் முடவனார் - ஐயூர் மூவனார்
அரிமணம் - அரிமளம்


வானநூற்கருத்து

உரைவேந்தர், தம் உரை நூல்களில், வானநூற் கருத்துக்களையும், சோதிடக் கருத்துக்களையும் சுட்டிச் செல்கின்றார். சங்க காலத்தே, வானநூற் புலமை சான்ற தமிழ்ப்புலவர்கள் இருந்துள்ளனர் என்பதையும் குறிப்பிடுகின்றார் இவர்

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையைக் கூடலூர்கிழார் பாடிய ‘ஆடியல் அழற்குட்டத்து’ (புறம், 229) என்ற பாடலுக்கு இவர் தரும் விளக்கம் வருமாறு:

“சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையின் இறுதிநாளில் அவன் இறத்தற்கு ஏழு நாட்களுக்குமுன், நாட்டில் புதுமையான நிகழ்ச்சி ஒன்று உண்டாயிற்று. தி நிமித்தங்கள் பல உண்டாயின. அவற்றைக் கண்ட சான்றோருள் ‘கூடலூர் கிழார்’ என்பார் ஒருவர். அவர், வானநூல் வல்லவர் விண்ணிடத்தே ஒரு விண்மீன் தீப்பரக்கக் காற்றால் பிதிர்ந்து, கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்திரம், மிருக சீரிடம் முதலிய விண்மீன்களின் நிலையினைக் கண்டார். இந்நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில், உலகாளும் வேந்தன் உயிர்நீப்பன் என்று உணர்ந்தார். வேந்தன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை யாகலின், அவற்கு என்ன தீங்கு நேருமோ எனக் கலக்க முற்றார். அவர் கலங்கியவாறே ஏழாம் நாளில் சேரமான் உயிர்துறந்தான் (புறம் 229)

“இப்பாடலில், ‘அழல்சேர் குட்டம்’ என்பது கார்த்திகை நாள். அக்கினியை அதிதேவதையாக உடைமையின், கார்த்திகைக்கு ‘அழல்’ என்பது பெயராயிற்று என்ப. ஆட்டினை, வடநூலார் ‘மேடராசி’ என்பர். ‘ஆடு’ முதல் ‘மீன்’ ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் ‘அசுவனி’ முதல், ‘இரேவதி’ ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால் நாள் ஆடாகிய ‘மேடத்து’க்குரியவாதலின், கார்த்திகை யின் முதற்காலை ‘ஆடியல் அழற்குட்டம்’ என்றார். ‘அனுடம்’ என்பது ஆறுமீன்களின் தொகுதி. அது, வளைந்த பனைமரம்போல் அமைதலின் ‘முடப் பனையம்’ எனப்பட்டது. “வேர் முதலா - அடியின் வெள்ளி. அதாவது முதல் நாள்மீன்; உயரழுவம் - முதற் பதினைந்து நாள்.

தலைநாண்மீன் -உத்தரநாள். நிலைநாண்மீன் - எட்டாம்மீன் ‘உச்சிமீனுக்கு முன் எட்டாவது மீன்’ அத்தமித்தலும், பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு. ‘உச்சிமீனுக்கு எட்டாம் மீன் உதயமீன்’ என்ப. தொன்னாண்மீன் - எட்டாம் மீனாகிய மிருக சீரிடம். பாசி - கிழக்குத் திசை; ஊசி - வடக்குத்திசை. பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின் ‘இராச பீடை’ என்பர். ‘ஆடுகயல் தேள் தனுச்சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசழிவாம்’ என்பர். ‘கயமாகிய குளம்’ என்றது. ‘கயக்குளம்’ என்றார். அஃதாவது ‘புனர்பூசம்’. இது, குளம் போலும் வடிவுடையது.

இது பற்றியே ‘பிங்கலந்தை’யும், ‘அதிதிநாள் கழையா வனமேரி புணர்தங் கரும்பிவை புனர்பூசம் ஆகும் என்று கூறுவதாயிற்று!”

(புறம்:229)

இதனால் உரைவேந்தர், சோதிட நூல் பற்றியும் அறிந்துள்ளார் என்று உணர முடிகின்றது.

அரிய செய்தி கூறுதல்

உரைவேந்தர், பல்வேறு அரிய பல செய்திகளை உரைநூலினிடையிடையே கூறிச் செல்வார். அவற்றில் ஒன்று:

புறநானூறு 358ஆம் பாடலைப் பாடியவர் ‘வான்மீகியார்’. இவரைக் குறித்து உரைவேந்தர் கூறுவது:

“வடமொழியில் இராமாயணம் எழுதிய வான்மீகியார் வேறு; இவர் வேறு! தமிழ் நல்லிசைச் சான்றோராகிய இவர், வடமொழிப் புலவரான வான்மீகியாரது நூலில் பேரீடுபாடு கொண்டிருந்த- தனாலோ, இவர் தந்தையார்க்கு வான்மீகிபால் உண்டாகிய அன்பினாலோ இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்று எனக் கொள்ளலாம்... வடமொழியில் வல்ல முனிவர் பெயர்களைப் பண்டைத் தமிழாசிரியர் புனைந்து விளங்கினர் என்பது

செந்தமிழ் நாட்டு நல்லிசைப் புலவர் பெயர்கள் பலகொண்டு தெரியலாம். “இனி வடமொழியிலுள்ள வான்மீகி முனிவர் வழியினர் இவராவரென்று கருதுவாருமுண்டு. (தமிழ் வரலாறு, பக்.246) என்று திரு.ரா. இராகவையங்கார் அவர்கள் கூறுவர். இதனால் இப்புறப்பாட்டாசிரியர் காலத்தில் வடவர் கூட்டுறவு, தமிழகத்தில் நன்கு பரவியிருந்த தென்பது தெளிய விளங்குகிறது! “இந்தப் பாட்டைப் பாடிய ஆசிரியர் பெயர் ‘வான்மீகையார்’ எனவும் காணப்படுகிறது. வாள்மீகையார் என்பது உண்மைப் பாடமாயின் இது, செந்தமிழ்ச் சான்றோர் ஒருவரது தமிழியற் பெயராம்!”

தமிழர் நிலை குறித்து இரங்குதல்

உரைவேந்தர் நூல்களை நுணுகி ஆராய்ந்தால், பண்டைத் தமிழரின் வீறு கொண்ட வாழ்வும், பிற்காலத்தே வீழ்ச்சியுற்ற நிலையும் சுட்டிச் செல்வது புலனாகும். இதற்கு ஒரு சான்று:

புறநானூறு இறுதிப்பாடல் ‘மாக விசும்பின் வெண்டிங்கள்’ என்பது. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. இதில், இடையிடையே சில அடிகள் இல்லை! கிடைத்த பிரதியிலும் இரண்டொரு திருத்தம் தவிர, இப்பாட்டின் முழுவடிவமும் கிடைக்கவில்லை! இது குறித்து மனம் நொந்து எழுதுகின்றார் உரைவேந்தர்:

“இடைக்காலத் தமிழகம், தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணும் துறையில் கருத்தைச் செலுத்தி யிருக்குமாயின், ஆ! இத்தமிழகம், இகழ்வார் தலைமடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறியில் வீழ்ந்து, அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில், அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது. பிறநாட்டார் தலைவணங்க இருந்த தனது

பண்டைச் சிறப்பை எண்ணு கிறது. இடை யூறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது! சுருங்கச் சொல்லின் தமிழகம் பண்டைய தமிழ் கூறும் நல்லுலகமாகும் பணியில் பெரும்பாடு படுகிறது; வாழ்க தமிழ்! வீழ்க பகை! வெல்க தமிழகம்! வெல்க தமிழர்!”

(புறம்:400)

இதனால், தமிழகம் முன்னைப் பழம் பெருமைதனை மீண்டும் நிலைநாட்டத் துடிக்கும் உரைவேந்தரின் உளப்பாங்கினை அறியலாம்!


சொற்பொருள் நயங்காண்டல்: அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்

சொல்லழகும் பொருளழகும் என்ற அழகு அமையச் சொல்லுதலும், பிறர் சொல்வனவற்றின்கண்ணும் நூலின்கண்ணும் ஆழ்ந்து கிடக்கும் நுண் பொருளைத் தேர்தலுமுடைய புலவர்.

விதுப்பு

வேட்கை மிகுதியால் உள்ளத்து எழும் விரைவுத் துடிப்பு; அது, கட்பார்வையிலும் சொற்செயல்களிலும் மெய்ப்பட்டுத் தோன்றும்.

காலன்

உயிர்கள் அவைநின்ற உடம்பினின்று நீங்குதற்குரிய காலம்பார்த்து நீக்கும் இயல்பு பற்றிக் கூற்றுவனைக் காலன் என்ப.

அவினாபாவம்

விட்டு நீங்காத் தன்மை மட்குடத்துக்கும் மண்ணுக்குமுள்ள இயைபு போல.

ஆரியன்

அரியவன். இது, தமிழ்ச்சொல். ‘வடசொல்’ என வாய் வதறுவாருமுளர்.

வாயாத்துரிசு

வாய்மை அல்லாத பொய்ம்மைக் குற்றம்.

சம்பு

சிவபெருமானைச் சிறப்பிக்கும் பெயர் ஆயிரத்துள் ‘சம்பு’ என்பதும் ஒன்று. ‘சம்பு’ என்பது நாவல் மரத்துக்கும் பெயர். நாவல் மரங்களைச் சிறப்பாகவுடைமை பற்றி நமது பாரத நாட்டை ‘நாவலந் தீவு’ என்றும், ‘சம்புத்தீவு’ என்றும் புராணிகர் உரைப்பர்.

ஞானாமிர்தம்

‘ஞானமாகிய அமுதம்’ என விரியும். ஞானமாவது சிவநெறி பற்றிய அறிவு. சிவம், உயிர், உலகு என்ற முப்பொருளின் உண்மையும் ஒவ்வொன்றிற்கும் உள்ள இயல்பும் தொடர்பும் அறிந்து கொள்ளும் அறிவு. அமுதம், தன்னை உண்டாரை உலகில் நெடிது செய்யும் இயல்புடையது; அதுபோலவே சிவநெறி பற்றிய அறிவாகிய ஞானம், வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, சிவ பரம்பொருளின் திருவருள் இன்ப வாழ்வில் என்றும் பொன்றாது நின்று நிலவச் செய்யும் செயல் நலம் உடையது.

அருஞ்சிறை

உடம்பு, நீங்குதற்கு அரிய சிறை. எத்துணைத் துன்பம் உறினும், உயிர் அதற்கு ஏதுவாய தன்னையே காதலித்துத் தன்னகத்து வாழ்வதையே காதலிக்கச் செய்யும் அருமையுடைமை பற்றி ‘உடம்பு’, ‘அருஞ்சிறை’ எனப்பட்டது.

இவை போன்ற சொற்பொருள் நயங்களை, உரைவேந்தரின் நூல்களில் பரக்கக் காணலாம்.

ஊரின் உண்மைப் பெயர் இயம்பல்

வரலாற்றாசிரியர் ஒருவர்க்கு உண்டான ஆய்வு நோக்கு, உரைவேந்தர்பாலும் இருந்தமையாலும்; கல்வெட்டு செப்பேட்டுப் பயிற்சி பெற்றவராகத் திகழ்ந்தமையாலும், தமிழகத்து ஊர்ப் பெயர்களின் உண்மைதனை ஆங்காங்கு எடுத்து மொழிகின்றார். இங்கே ஒரு சில மட்டும் தரப்படுகின்றன:

ஒல்லையூர்

புதுக்கோட்டைத் தனியரசின் கீழ் இருந்த ஊர்களுள் ஒன்று. இப்போது ‘ஒலியமங்கலம்’ என்று பெயர்.

கோட்டம்பலம்

சேரநாட்டு ஊர்களுள் ஒன்று. இக் ‘கோட்டம்பலம்’ இப்போது, ‘அம்பலப்புழை’ என்னும் இடமாகும். கடற்கோட்டில் உள்ள அம்பலம் ஆதலின் இது, ‘கோட்டம்பலம்’ எனப் பண்டை நாளில் பெயர் பெற்றுப் பிற்காலத்தே ‘அம்பலப் புழை’ என மாறிற்றாதல் வேண்டும். இது, சில ஏடுகளில் ‘கூத்தம்பலம்’ எனப் பாடம் வேறுபடுகிறது. சேரநாட்டில் பல கூத்தம்பலங்கள் உள்ளன. திருவாங்கூர் நாட்டு அரிப்பாடு முதலிய இடங்களில் கூத்தம்பலங்கள் இருந்திருக்கின்றன என அந்நாட்டுக் கல்வெட்டறிக்கைகள் (TAS. Vol. VI of 1927 p.35) கூறுகின்றன.

மாறோக்கம்

இது, ‘மாறோகம்’ என்றும் வழங்கும். பாண்டிநாட்டில் கொற்கையைச் சூழ்ந்த பகுதி.

தருமபுரி

முன்பு ‘தகடூர்’

பிரான்மலை

முன்பு ‘பறம்புமலை’.

பூங்குன்றம்

இராமநாதபுர மாவட்டத்திலுள்ள ‘மகிபாலன்ப ட்டி’.

கருங்குழல்

திருநெல்வெலி மாவட்டத்தில் கோட்டைக் கருங்குளம் என்ற ஊரில் ‘ஆதனார்’ என்ற நல்லிசைச் சான்றோர் வாழ்ந்தார். ‘கருங்குளவாதனார் பெயரை, ஏடெழுதினோர், ‘ளகரத்’ தை, ‘ழகர’ மாக்கி, ‘வகர’த்தை ‘லகரமா’க மாற்றிக் ‘கருங்குழலாதனார்’ என மாற்றி விட்டனர்.

பூந்தமல்லி

இவ்வூர்க்குச் சிலர் ‘பூவிருந்த வல்லி’ எனப் பெயர் குறிப்பர். அதன் பழம் பெயர், ‘பூந்தண் மலி’ என்பது. (கல்வெட்டு: AR.No. 302 of 1938-39)இவ்வாறே, இன்னும் பல ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளால் மெய்ப்பிக்கின்றார் உரைவேந்தர்.

இலக்கணச் சான்று தருதல்

உரைவேந்தர், பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தை ஓதி உணர்ந்த பெரும் புலவராதலின், அப்புலமை நலத்தைத் தாம் எழுதிய உரைநூல்களில் காட்டியுள்ளார். இவண், சில மட்டும் எடுத்துக் காட்டப்படுகின்றன:

நும்மனோர்(புறம் 210)

“அன்னோர்” என்பது ‘இடைச்சொல்’ முதனிலையாகப் பிறந்த குறிப்புப் பெயர் என்று சேனாவரையர் முதலியோர் கூறுவர்.

செவிசெஞ்சேவல் (புறம் 238)

எதுகை நோக்கி மொழி மாறி நின்றது. அது, ‘செஞ்செவிச் சேவல்’ என நிற்றற்பாலது என்று தெய்வச் சிலையார்(கிளவியாக்கம்: 25)கூறுவர். இவ்வுரைகாரர், கிடந்த படியே கொள்வர்.

ஒடுங்கி

பெயர். சுமைதாங்கி, முள்வாங்கி என்பவற்றைப் போலும் ‘இகர’ வீற்றுப் பெயர். ஒடுங்கு+இ. ‘இகரம்’ ஒடுக்கத்தைச் செய்யும் வினைமுதற்பொருண்மை உணர்த்தும் விகுதி. இது போலவே ‘அமர்தாங்கி’, ‘புகழ் வேண்டி’ என்று மக்கட்குப் பெயருண்மை கல்வெட்டுக்களால் (S.I. Vol.V.585, 641) தெரிகிறது.

‘சிவஞானபோதச் சிற்றுரை’யில் மாதவச் சிவஞான முனிவர் கூறும் பல்வேறு இலக்கணக் குறிப்புக்களுக்கும் உரைவேந்தர் அடிக்குறிப்பில் தொல்காப்பியம் முதலான இலக்கணநூல்களிலிருந்து விளக்கம் தருவது, இலக்கணம் கற்றார்க்குக் கழிபேருவகை நல்குவதாம். இங்கே சில சான்றுகள்:

‘சிவஞான போத மூலமும் சிற்றுரையும்’ என்ற பதிப்பு நூலில், உரைவேந்தர், ‘சிவஞான போதச் செம்பொருள்’ என்று. தொடக்கத்தில், நூலில் நுவலப்படும் கருத்துக்களைச் செம்பாகத் தமிழில் உரைக்கின்றார்.

சிவஞான போதத்தில், முதல் சூத்திரத்தில், ‘ஒடுங்கி மலத்து உளதாம்’ எனும் தொடர் வருகின்றது. அதற்கு விரிவான விளக்கம் தருகின்றார் உரைவேந்தர், அதில் வரும் ஒரு சிறு பகுதி:-

“உலகில் நாம் கூட்டக்கூடும் அவை(சபை) முடிந்த வழி, அவ் அவையிற் கூடியிருந்தோர் தத்தம் மனைக்குச் சென்று ஒடுங்குவர்; மீள நாம் கூட்டும்போது அவர்கள் தாம் ஒடுங்கியிருந்த மனையிலிருந்து வந்து கூடுவர். இவ் வண்ணமே இவ்வுலகமாகிய ‘அவை’யும் ஒடுங்கும் போது இறைவனிடத்திலே சென்றொடுங்கி, மீளத்தோற்று விக்கும் போது, அவனிடத்திருந்தே வந்து உலகமாகிய ‘அவை’யாய்க் காட்சியளிக்கிறது. உலகத்தை ஒடுக்கும்போது, அஃது ஒடுங்கி யிருப்பதற்குத் தானே இடமாதலால், இறைவனை ‘ஒடுங்கி’ என்று ஆசிரியர் கூறுகின்றார். ஒடுங்கிய உலகம், தான் ஒடுங்கியிருப்பதற்கு இடமான ஒடுங்கியிலிருந்தே தோன்றுவது கொண்டு ‘ஒடுங்கி உளதாம்’ என்றார். எனவே, ‘அவன், அவள், அது’ என்பவற்றின் தொகுதியாகிய அவை, ‘தோற்றிய திதி’ யாய்க் காட்சியளித்து, ஒடுங்கும் என்றும்; தான் ஒடுங்கியிருந்த ஒடுங்கியினின்றே மீள உளதாம் என்றும் தெரிவித்தவாறாயிற்று. “ஒரு நாள் கூடிய பேரவை மறுநாளும் மீளக் கூடுமாயின் நாம் என்ன நினைப்போம் முன்னாள் கூடியதன் நோக்கம் கைகூடாமையால் மறுநாளும் கூடியிருக்கிறதென்றும்; கைகூடாமைக்குக் காரண மாயிருந்த தடை முன்னாளே நீங்காது மறுநாள் கூடுவதற்குக் காரணமாயிற்றென்றும் தானே


                      நினைப்போம்.அதுபோலவே, ஒருகால் தோற்று -
                      விக்கப் பட்ட உலகம், தோன்றியது கொண்டு
                      பெற்றுக் கொள்ள வேண்டிய பயனைப் பெற்றுக்
                      கொள்ளாமையால் ஒடுங்கி மீளத் தோற்றுவிக்கப்
                      படுவதாயிற் றென்றும், பெற்றுக் கொள்ளாவாறு
                      தடுத்திருந்த தடையினால் மீளத் தோற்று
                      விக்கப்படுகிற தென்றும் எண்ண வேண்டும்.
                      ‘அத்தடை யாது?’ என ஆராய்ந்து, அதாவது ‘மலம்’
                      என்று கண்டதனால், உலகமாகிய அவை ஒடுங்கி,
                      மலத்தால் மீள அவ் ஒடுங்கி யினின்றே உளதாம்
                      என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்!”

                                                                                    (பக். 58,59)

இவ்வாறு எளிய உதாரணங்களால் அரிய கருத்தை விளக்குவது உரைவேந்தரின் இயல்பு.

இது, சிவஞான முனிவரின் ‘சிவஞான போதச் சிற்றுரை’ கற்று வல்லார்க்கே யன்றி ஏனையோர்க்கு அத்துணை எளிதில் புரியாது. இதனை உளங்கொண்ட உரைவேந்தர், பலர்க்கும் புரியும் வண்ணம் அடிக்குறிப்பில் விளக்கம் தருகின்றார். அவற்றில் சில:

நூலின் தொடக்கத்தில் ‘உரைப்பாயிரம்’ ஒன்று உள்ளது. அதற்கு உரை கூறும் போது சிவஞான முனிவர்,

                   
                   “சைவாகமங்களின் உளவாகிய நாற்பாதங்களுள்
                                                                        வைத்து,
                    ஞானபாதத்தோதியபொருள்களைஆராயும்ஆராய்ச்சி,
                    இந்நூலின்கண் எடுத்துக் கொள்ளப்பட்டது...!"

என்று குறிப்பிடுவர்.

இதில் கூறப்படும் ‘சைவ ஆகமங்கள்’ எத்தனை என்பதும், ‘நாற்பாதங்கள்’ எவை என்பதும் பலர்க்கும் தெரியாவாதலின் உரைவேந்தர், பின்வருமாறு விளக்கம் தருகின்றார்:

                  “சைவாகமங்கள், ‘காமிகம்’ முதலாக இருபத்தெட்டு
                   வகைப்படும். அவை: காமிகம், யோகசம், சிந்தியம்,
                   காரணம், அசிந்தம், தீபிதம், சூக்குமம், சகச்சிரம்,
                   அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம்,

சுயம்பு, ஆக்கிநேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோத்தமம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் என்ற இருபத் தெட்டாம். “நாற்பாதங்கள்: சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பது. ‘திருமிகு ஞானம், இலங்கொளி யோகம், நலங்கிளர் கிரியை, சரியை என்ற விரிதரு பாதம்”(ஞானா.7.) என்று வாகீச முனிவரும் கூறுவர்!”

ஆங்காங்கே பல்வேறு நூற்சான்றுகளை மேற்கோளாகக் காட்டிச் செல்வதும் உரைவேந்தரின் தனித்திறமை.

இந்நூலில் வரும் சிறப்புப் பாயிரச் செய்யுளில், ‘பொய்கண்டகன்ற மெய்கண்ட தேவன்’ எனும் ஓர் அடி வருகின்றது. இதற்கு உரைவேந்தர்,

         “பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதா நந்தப் பொருளாம்
          மெய்காட்டும் மெய்கண்டாய்!”

என்ற ‘உண்மை விளக்கம்’ என்ற நூலினைச் சான்று காட்டுவர்.

சிவஞான முனிவர், தென்மொழிக் கடலையும் வடமொழிக் கடலையும் நிலை கண்டுணர்ந்த சான்றோர். எனவே இவருடைய நூல்களில் வடமொழி பற்றிய கருத்துக்கள் நிறைய வருதல் இயல்பு.

அவர், இந்நூலில்,

“வடநூலார் யாப்பை ‘ஆனந்தரிய’ மென்றும், நுதலிய பொருளை ‘விடய’ மென்றும்; கேட்போரை ‘அதிகாரிகளெ’ன்றும்; பயனைப் ‘பிரயோசனமெ’ன்றும் கூறுப; யாப்புச் சம்பந்த மென்பாருமுளர்!”

என்று குறிப்பிடுகின்றார்.

இதனை உரைவேந்தர், பின்வருமாறு விளக்குவர்.

“ஆனந்தரிய மாவது, இன்னது கேட்டபின்பு, இன்னது கேட்கவேண்டுமென்னும் முறைமை உணர்த்துவது. ‘பின்’ என்னும் பொருளதாகிய ‘ஆநந்தரம்’ என்பது ‘ஆனந்தரியம்’ என வந்தது”

(ப VII)

இவ்வாறே சிவஞானமுனிவர், பல்வேறிடங்களிலும் வட சொற்களை ஆள்வர். அவற்றிற்கெல்லாம், உரைவேந்தர் விளக்கம் தந்து செல்வர்.

‘அவினா பாவம்’, ‘அருத்தாபத்தி’, ‘புனருற்பவம்’ ‘பிரவாகா நாதி’ முதலான பல்வேறு வடசொற்கள் வருகின்றன.

அவினா பாவம்-விட்டு நீங்காத் தன்மை; மட்குடத்துக்கும் மண்ணுக்குமுள்ள இயைபு போல. (ப.19)

அருத்தாபத்தி-பகலுண்ணான் சாத்தன், பருத்திருப்பான் என்ற - வழிப் பருத்திருத்தற்கேதுவாய உணவுண்டல், இரவில் நிகழ்கிறதெனத் துணிதல். அதுபோல, உடற்குஇட்ட பெயரால் அழைக்க, உயிர் விடையிறுத்தற்கேதுவாய அபேதக் கலப்புண்மை துணியப் படுகிறது.(ப.44)

புனருற்பவம் - மீளவும் படைத்தல்.(ப.52)

பிரவாகாநாதி - பிரவாகம் போல அநாதி. ஓடுகிற தண்ணீரில் ஓட்டம் இருப்பினும், தண்ணீர் நிலையாய்க் காணப்படுவது போல, வினை செயப்பட்டும் நுகரப்பட்டும் வரினும் இடையறாது உளதாதல்.(ப.67)

இவ்வாறு உரைவேந்தர் கூறும் விளக்கங்கள் மிகப் பல எனலாம்.

‘தொல்காப்பியம்’ போன்ற இலக்கண நூல்களில் மிக்க புலமையுடையவர் உரைவேந்தர் என்பதற்கு, இச் ‘சிவஞான போத மூலமும் சிற்றுரையும்’ என்ற பதிப்பு சான்று பகரும். இங்கே சில மட்டும் சுட்டப்படுகின்றன:

“சொற்பொருட்பின்வருநிலை’ எனச் சிவஞானமுனிவர் கூறிய போது,

               “முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்
                பின்வரும் என்னில் பின்வரு நிலையே”

(தண்டிசொல். 63)

என்றும் (ப.35):

‘பண்ணை என்னும் ஐகாரம், ‘பகுதிப்பொருள் விகுதி’ என முனிவர் கூறிய இடத்தில்,

               
               “ஐகாரம், பண் என்னும் சொல் இறுதிக்கண் நின்று
                அச்சொற் பொருளையே உணர்த்திற்றாதலால்,
                பகுதிப் பொருள் விகுதி எனப்பட்டது. முன்னர்,

பின்னர் என்ற சொற்களின் ஈற்றில் நிற்கும் ‘அர்’ என்பது போல, ‘ஐ’ என்னும் இறுதிநிலையை நோக்கப் ‘பண்’ என்பது முதனிலையாதலின், அதனைப்பகுதி என்றும், அப்பொருளே ஐகாரத் தாலும் வற்புறுத்தப்படுதல் பற்றி, பகுதிப் பொருள் விகுதி என்றும் கூறினார். ‘பழமதுவும்’ என்ற இடத்து, ’அது’ என்பதும் பகுதிப் பொருள் விகுதி!”

(ப.48)

என்றும்;

“உண்டிவினை-உம்மைத் தொகை” என முனிவர் கூறியதற்கு,

“உண்டியும் வினையும் வருதற்குரியது, ‘உம்’மை யின்றி, ‘உண்டிவினை’ எனவந்தமையின் ‘உம்மைத் தொகை’ யாயிற்று”

(ப.99)

என்றும்;

முனிவர், “தனது சத்தி சங்கற்ப மாத்திரையான் அனைத்தும் செய்தல் கூடுமென்பது ‘குறிப்பெச்சம்’... ‘இன்றி’ என்னும் வினையெச்சக் குறிப்பின் ‘இகரம்’ செய்யுளாகலின் உகரமாய்த் திரிந்தது. அன்றே-அசை, இவ்வியல்பு சித்தாந்த நெறி யுணர்ந்தார்க்கு அன்றி விளங்காது என்பார் ‘அருட்கண்ணார் கண்ணுக்கு’ என்றார்!” என ஓரிடத்து எழுதுவர்.

இதற்கு,

“திருவருளாகி சத்தி, சங்கற்ப மாத்திரையான் அனைத்தும் செய்தலை, காரைக்காலம்மையார், ‘அருளே உலகெல்லாம் ஆள்விப்ப தீசன், அருளே பிறப்பறுப்பதானால்-அருளாலே, மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும், எப்பொருளு மாவதெனக்கு!’(அற்பு.9) என்று அருளுவது காண்க! “குறிப்பெச்சம், ‘சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை புல்லிய கிளவி எச்சமாகும்’

(தொல். சொல்.24)

                  “இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி, நின்ற
                                                       இகரம் உகரமாதல்,
                   தொன்றியல் மருங்கின் செய்யுளு ளுரித்தே’

(தொல், எழுத்து.உயிர் மயங்கு.35)

“சித்தாந்த நெறியுணராதார், அருளாகிய மெய்ப் பொருளை நோக்கும் விதியுடையாரல்லாதலின், அவர்க்கன்றி ஏனை யோர்க்கு விளங்காது என்றார். ‘அவனருளாலே கண்ணாகக் காணினல்லால்’ என நாவரசரும்; ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என மணிவாசகரும் அருட் கண்ணுடையராய் உரைத்தருளுவன காண்க!”

(ப.162)

என்றும், உரைவேந்தர் கூறும் நயவுரைகளும், இலக்கண மேற்கோள்களும் எண்ணில் பலவாம். இந்நூல் குறித்து மிக விரிவாக ஆராய்வதற்கும் இடனுண்டு!

உரைவேந்தரின் நூல்களனைத்தையும் ஆராய்ந்தால், மேலே கூறியன தவிர மேலும் பலவற்றை நோக்கலாம். அவையெல்லாம் தனித்தனியாக ஆய்வு செய்தற்குரியன.