உள்ளடக்கத்துக்குச் செல்

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/நூலாசிரியர்

விக்கிமூலம் இலிருந்து
3
நூலாசிரியர்


"பயனுள்ள வரலாற்றைத் தந்த தாலே
    பரணர்தான்; பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
    நக்கீரர் தான், தாங்கள்! இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால், தொல்
    காப்பியர்தான்! காப்பியர்தான் எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
    தாங்கள், அவ் ஔவைதான்! ஔவை யேதான்!”


என்பது உரைவேந்தரிடம் கல்வி கற்றுப் பலர்போற்றும் கவிஞராகத் திகழ்ந்த மீ இராசேந்திரனின் கவிதை!

இத் தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்ப் பேரறிஞர்கள், மாநாடுகளிலும் மேடைகளிலும் பேசிய பேச்சுக்கள், நூலாக எழுதாமையால், காற்றோடு காற்றாக மறைந்து போயின. அவ்வாறே கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெரும் பேராசிரியர்களாக இருந்தவர்கள்கூடத் தமது நுண்மாண் நுழைபுலத்தை நூல்வடிவில் காட்டாது போயினர்! சிலர், மேடை முழக்கமிடுவர்; ஆனால் எழுத்துத் திறமை இருக்காது! அவ்வாறே, அரிய பல நூல்களை எழுதுவர்; ஆனால், மேடையேறிப் பேசும் நாவன்மை இருக்காது! இவ்விரண்டும் ஒரு சேரப் பெற்றவர் ஒரு சிலரே! அவருள் ஒருவராக விளங்குபவர் உரைவேந்தர்!

"பிள்ளையவர்கள் (உரைவேந்தர்) இணையற்ற நிறுவவும், தம் பெயர் பரப்பவும், தம் வாழ்வுக்கு வசதி பெறவும் நூலியற்றுவோர் பலர்! தமிழ்மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை

நிறைவு செய்யவும், அதன் நூல்வளம் பெருக்கவும், நூலியற்றுவோர் ஒரு சிலரே!அவ்வொரு சிலருள், பிள்ளையவர்களும் ஒருவராவர்”

என்று உரைவேந்தரின் நூலாக்கப் பணியைப் போற்றுகின்றார், அவரின் மாணவர் ம.வி. இராகவன்.

நூற் பட்டியல்

பி.வி. கிரி என்பார் தாம் தொகுத்த 'உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு' என்னும் சிறுவெளியீட்டில், உரைவேந்தர் எழுதிய நூல்களைப் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டுகின்றார்:

1. திருமாற் பேற்றுத் திருப்பதிகவுரை,

2. திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை,

3. ஐங்குறுநூறு உரை,

4. புறநானூறு உரை,

5. பதிற்றுப்பத்து உரை,

6. நற்றிணை உரை,

7. ஞானாமிர்தம் உரையும் விளக்கமும்,

8. சிவஞானபோத மூலமும் சிற்றுரையும் பதிப்பும்,

9. சிலப்பதிகாரச் சுருக்கம்,

10. மணிமேகலைச் சுருக்கம்,

11. சீவகசிந்தாமணிச் சுருக்கம்,

12. சூளாமணி,

13. சிலப்பதிகார ஆராய்ச்சி,

14. மணிமேகலை ஆராய்ச்சி,

15. சீவகசிந்தாமணி ஆராய்ச்சி,

16. யசோதர காவியம் மூலமும் உரையும்,

17. தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்,

18. சைவ இலக்கிய வரலாறு,

19. நந்தா விளக்கு,

20. ஔவைத் தமிழ்,

21. தமிழ்த் தாமரை,

22. பெருந்தகைப் பெண்டிர்,

23. மதுரைக் குமரனார்,

24. வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்),

25. சேரமன்னர் வரலாறு,

26. சிவஞானபோதச் செம்பொருள்,

27. திருவருட்பாப் பேருரை,

28. ஞானவுரை,

29. பரணர் (கரந்தை),

30. தெய்வப்புலவர் திருவள்ளுவர்,

31. புதுநெறித் தமிழ் இலக்கணம் (இரு பகுதிகள்),

32. மருள் நீக்கியார் நாடகம்,

33. மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு),

34. Introduction to the Study of Thiruvalluvar.

உரைவேந்தர், அக்காலத்தில், 'தமிழ்ப் பொழில்', 'செந்தமிழ்ச் செல்வி', 'செந்தமிழ் மற்றும் மலர்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த சில நூல்களும் இப்பட்டியலில் உள்ளன.'ஔவைத் தமிழ்' எனும் பெயரில் வெளிவந்த நூல்தான், 'நந்தா விளக்கு' எனும் பெயரில் மறுபதிப்பாக வந்துள்ளது.

இவற்றை ஊன்றி நோக்கினால், இவற்றில், சங்க இலக்கியங்கள் உண்டு; காப்பியங்கள் உண்டு; வரலாறு உண்டு, சைவமும் சைவ சித்தாந்தமும் உண்டு; நாடகம் உண்டு; மொழிபெயர்ப்பும் உண்டு; ஆங்கிலமும் உண்டு என்பது தெரியவரும்.

மேலும், முதன்முதலாக உரைவேந்தர் எழுதியது. 'மருள் நீக்கியார்' என்ற நாடக நூல் என்றும், அஃது அச்சாகவில்லை என்றும் கூறுகின்றார் தி.நா. அறிவொளி. ஏடுபெயர்த்தலும் கல்வெட்டுஆய்வும்

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், அச்சுக் கருவிகள் வருவதற்கு முன்பு, பனை ஓலையில் எழுதும் பழக்கமே இருந்தது. சங்க காலத்திற்கு முன்பிருந்தே இத்தகு பழக்கம் தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது. இரண்டு கடல் கோளினால் அழிந்துபோன ஏடுகள் எண்ணில் பலவாம்! தமிழர் செய்தவத்தால் எப்படியோ தொல்காப்பியம் மட்டும் கிடைத்தது. மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்தபின், வேற்றவராட்சியால், தமிழகம் பட்டயாடு சொல்லுந் தரமன்று அந்நிலையில் ஏடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் பலருக்கு இல்லாமற் போனதில் வியப்பேதுமில்லை. அன்றியும் அறியாமையால் அழித்த ஏடுகள் எண்ணிறந்தன. ஆடிப்பதினெட்டாம் பெருக்கின்போது, ஒவ்வொருவரும் தத்தம் வீட்டிலிருந்த ஏடுகளைக் காவிரியாற்றில் போட்டனர் என்பது வரலாறு. எப்படியோ சில ஏடுகள் தப்பித்தன. இவ் வேடுகளைத் தேடிக் கண்டுபிடித்து அச்சுக்குக் கொண்டுவந்த பெருமை 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயருக்கு உண்டு. அதில் அவர்பட்ட பாடுகளை 'என் சரித்திரம்' நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

உரைவேந்தருக்கு இளமையிலிருந்தே ஏடு படிக்கும் ஆர்வம் இருந்து வந்தது. அவருக்கு முதன்முதல் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியர், திண்டிவனம் அ, ஆ, ந. உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராய் இருந்த சீகாழி கோவிந்தசாமி ரெட்டியார், தம் வீட்டில் ஏடுகள் பல வைத்திருந்ததை அறிந்த உரைவேந்தர், ஆர்வம் காரணமாக அவ்வப்போது, அந்த ஏடுகளைப் படிப்பது வழக்கம். அதுவே பிற்காலத்தில் நூல் ஆய்வு செய்வதற்கு உறுதுணையாயிற்று எனலாம்.

"1921ஆம் ஆண்டில், கோடைவிடுமுறையில், எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர், சீகாழி திரு. கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள், இந்நூலின் (சூளாமணி) அச்சுப்படி ஒன்றும், ஏட்டுச் சுவடி ஒன்றும் வைத்து, ஒப்புநோக்கிப் பல திருத்தங்களும் விடுபட்டசிலபாட்டுக்களும்சேர்த்துக்கையெழுத்துப் படியொன்று ஆயத்தம் செய்தார்கள். ஏடு படித்த வருள் யானும் ஒருவன் ஆயினும், அத்துணைத் தமிழ்ப் பயிற்சியில்லாமையால், அப் படி'யில் கருத்துன்றாது போயினேன்!”

என்று உரைவேந்தர் குறிப்பிடுவது இங்குக் குறிக்கத் தகும். தமிழ் ஏடுகளைப் படித்து உண்மை காண்டல் என்பது ஓர் அரிய செயல். இது குறித்து உ.வே. சாமிநாத ஐயர் என் சரித்திரத்தில் கூறுவது இங்கு நோக்கத் தகும்:

"பாடபேதக் கடலுக்குக் கரைகாணவே முடியவில்லை. மனம் போன போக்கிலே எழுதிய கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு. இது கொம்பு, இது 'சுழி', என்று வேறுபிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்குப் புள்ளியே இராது. 'ரகரத்திற்கும், 'காலு'க்கும் (ரா) வேற்றுமை தெரியாது. 'சரபம்', 'சாபமா' கத் தோற்றும்; 'சாபம்', 'சரபமா'கத் தோற்றும். "இடையின 'ரகரத்திற்கும், வல்லின 'றகரத்'திற்கும் பேதம் தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள் பல! உரை இது, மூலம் இது, மேற்கோள் இது என்ற வேறுபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள் பல!”

-இத்தகைய இடர்ப்பாடுகள் உள்ளமையால்தான், தமிழ்ப் புலவர் பலரும் ஏடுபடிப்பதிலும், படி எடுப்பதிலும் ஆர்வம் காட்டாது போயினர். அந்த நிலையிலும் ஒரு சிலர் அரும்பாடுபட்டு அவற்றை நுட்பமாகப் படித்துப் பொருள் உணர்ந்து, நூல் வடிவில் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் உரைவேந்தர்!

உரைவேந்தர் கரந்தையிலிருந்தபோது தம் ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்கச் சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்த உ.வே. சாமிநாத ஐயரிடமிருந்து தொல்காப்பியம்-சொல்லதிகாரம்- தெய்வச் சிலையார் உரையின் ஏட்டுச்சுவடியை வாங்கிவரச் சென்றார். ஆங்கு ஐயரைக் கண்டு, விவரம் கூறினார். அவரும் அந்த ஏட்டை உரைவேந்தரிடம் கொடுத்து, இதனைப் படி என்று சொல்ல, எவ்விதப் பிழையுமின்றி ஏட்டினைப் படித்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்த ஐயர், "நீங்களும், ஏட்டில் உள்ள பழைய நூல்களைக் கண்டு ஆராய்ச்சி செய்யலாம்; அதற்கான தகுதி உங்களிடம் உள்ளது!" என்று பாராட்டினார். அப்பாராட்டு, உரைவேந்தருக்குப் பேருக்கம் அளித்தது. அன்றுமுதல், ஏடு படித்து ஆராய்வதில் மேலும் ஆர்வமுடையவரானார்! கரந்தையில் இருந்தபோது, மேற்கூறிய தொல்காப்பியம்- தெய்வச் சிலையார் உரையுள்ள ஏட்டினைப் படிப்பதும் அதனைப் பெயர்த்து எழுதலுமாகிய பணிகள் தரப்பட்டன. பின்பு, 'தமிழ்ப் பொழில்' இதழில் தொடர்ந்து அது வெளிவந்தது. அப்போது இதழாசிரியராக இருந்த 'கவியரசு' அரங்க. வேங்கடாசலம் பிள்ளை, அந்த ஓலைச்சுவடி படிப்பதில் உரைவேந்தருக்கு இடையிடையே எழும் ஐயங்களைப் போக்குவதிலும், பிற உரையாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகியோரின் உரை நலங்களை ஒப்பிட்டு விளக்கம் அளிப்பதிலும், உரைவேந்தருக்குப் பெருந்துணை புரிந்தார்.

ஏடு படித்தல், பெயர்த்தெழுதல் முதலானவற்றில் போதிய பயிற்சி பெற்ற உரைவேந்தர், கல்வெட்டறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தாரின் உதவியால் கல்வெட்டுக்களைப் படிப்பதிலும், 'படி' எடுப்பதிலும் திறமை பெற்றார். இதற்கான சான்று ஒன்று:

மதுரைத் தமிழ்ச் சங்கச்செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த ச. சாம்பசிவனார், புலவர் இறுதியாண்டு மாணவர்கட்குத் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் பாடம் நடத்த வேண்டியிருந்தது. மதுரைக்கு அருகே உள்ள ஒற்றைக்கடை மலையடிவாரத்தில் நரசிங்கப் பெருமாள் கோயிலைப் பற்றிய கல்வெட்டும் பாடத்தில் இடம் பெற்றிருந்தது. இதுபற்றி மாணவர்கட்கு நேர்முகப் பயிற்சி அளிப்பதற்காகச் சங்கச் செயலர் 'அற நெறியண்ணல்' கி. பழநியப்பனார், மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், வகுப்பு மாணவர்கள் ஆகியோருடன் உரைவேந்தரையும் உடன் அழைத்துக்கொண்டு கல்வெட்டுப் படி' எடுப்பதற்கான கரி, மெல்லிய தாள் முதலான கருவிகளுடன் ஆங்கே சென்றோம். உரைவேந்தர், அக் கல்வெட்டைப் படித்துப் பாடநூலோடு ஒப்பிட்டுக் காட்டி விளக்கமளித்ததுடன், அதனை எவ்வாறு 'படி' எடுப்பது என்பதையும் செயல்முறைப் பயிற்சியால் செய்து காட்டினார். ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் பெரும் பயனாக அமைந்தது!

இவ்வாறு கல்வெட்டில் நல்ல பயிற்சியும், திறமையும் பெற்றதனால்தான், உரைவேந்தர் தாம் எழுதிய பல்வேறு நூல்களிலும் ஆங்காங்கே கல்வெட்டுச் சான்றுகள் தந்து, மெய்ப்பிக்க முடிந்தது!

நூல்களும் உரைகளும்

முன்னர்க் காட்டியவாறு உரைவேந்தர் எழுதிய நூல்கள் முப்பத்து நான்கு எனத் தெரிய வருகின்றது. இவற்றில் சிலவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிவதற்கில்லை. இருப்பினும் இன்றியமையாத நூல்களைப் பற்றியும், உரைகளைப் பற்றியும் இவண் அறியலாம்.

சங்க இலக்கியமான எட்டுத் தொகையில் நற்றிணை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, புறநானூறு எனும் நான்கு நூல்களுக்கு விரிவான விளக்கஉரை எழுதியுள்ளார் உரைவேந்தர். ஒவ்வொரு நூலைப் பற்றியும் விரிவாக எழுத இடமுண்டு. ஈண்டுச் சிலவே சுட்டப்படுகின்றன.

புறநானூறு மூலமும் உரையும்

400 பாடல்கள் கொண்ட இதனை முதன்முதல் அச்சேற்றி நூல்வடிவில் கொணர்ந்தவர் உ.வே. சாமிநாத ஐயராவர்! எனினும் உரைவேந்தர் எழுதிய இந்நூலில் சில தனிச் சிறப்புக்கள் உண்டு.

உண்மையில் இந்நூலுக்குப் பழையோர் ஒருவர் எழுதிய பழைய உரையும் ஒன்று உண்டு. அஃது 1 முதல் 266 வரையுள்ள பாட்டுக்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 267,268 ஆகிய இரண்டும், முற்றிலுமாக இல்லை. 269 முதல் 400 வரையுள்ள பாடல்களுக்கு உ.வே. சாமிநாதஐயர் குறிப்புரை தந்துள்ளார்.

உரைவேந்தர் எழுதிய உரை நூல், இரண்டு பகுதிகளாக 1947; 1951ஆம் ஆண்டுகளில் வெளி வந்துள்ளன.

எனினும் பழைய உரை கிடைக்காத 269 முதல் 400 வரையுள்ள 132 செய்யுள்களுக்கும் உரைவேந்தர், புத்துரை வரைந்திருப்பது பெருஞ் சிறப்பாகும்.

உ.வே.சா.வின் புறநானூற்றுப் பதிப்பை ஒப்பிட்டுச் செப்பம் செய்வதற்கு வாய்ப்பாகப் புறநானூறு ஓலைச்சுவடி ஒன்று உரைவேந்தருக்குக் கிடைத்தது. பல்கலை வல்லுநரும் பெருஞ் செல்வருமாகிய அரித்துவாரமங்கலம் வா.கோபாலசாமி ரகுநாத ராசாளியாரின் விருப்பப்படி, அவரிடமிருந்த புறநானூற்று ஓலைச் சுவடியைப் பள்ளியூர்த் தமிழாசிரியர் கிருட்டிணசாமி சேனை நாட்டார் 'படி' எடுத்து வைத்திருந்தார். அந்தப் 'படி'(copy) உரைவேந்தரின் புறநானூற்றுப்பதிப்புக்கு அடித்தளமாக அமைந்தது. உ.வே.சா.வின் அச்சுப்புத்தகத்தில், பின்னுள்ள 200 செய்யுட்களில் சிலபாட்டுக்களில் விடுபட்டிருந்த அடிகளும், சிலவற்றில் சில திருத்தங்களும், இந்த ஓலைச் சுவடி உதவியினால் செப்பம் பெற்றன. இது குறித்து உரைவேந்தர்,

"இப் பிரதி திரு. டாக்டர் ஐயரவர்களுக்குக் கிடைக்காது போனது பற்றி என் மனத்தில் ஐயமொன்று ஊசலாடிக் கொண்டிருந்தது. டாக்டர் ஐயரவர்களுடைய முயற்சிக்கும் அகப்படாத நிலையில் ஏடுகள் பல தமிழ்நாட்டில் உள்ளன என்று ஐயம் தெளிந்தேன்!”

என்கிறார்.

பதிற்றுப்பத்து உரை

பண்டைநாளைச் சேமன்னர் வரலாற்றை அறியப் பெரிதும் துணைபுரிவது 'பதிற்றுப்பத்து' என்னும் சங்க இலக்கிய நூலாகும். இதனை முதன்முதல் 1904ஆம் ஆண்டு, பழைய உரையுடன் வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார். இந்த அச்சுப் பதிப்பை வேறு இரண்டு சுவடிகளுடன் ஒப்பு நோக்கி விளக்கவுரை எழுதினார் உரை வேந்தர். அப்பதிப்பு 1951இல் கழக வெளியீடாக வெளிவந்தது.

'பதிற்றுப்பத்து'க்கு உரைவேந்தர், உரை எழுதுவது அறிந்த அவருடைய ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளை, மிக்க மகிழ்ச்சி கொண்டு, தாம் அந்நூலுக்கு எழுதி வைத்திருந்த உரையையும் கொடுத்து உதவினார், அவ்வாறே ந.மு.வே. நாட்டாரும், "பதிற்றுப்பத்துப் பதிகங்கள், ஆராய்ச்சிக்கு இடமளிப்பதால் அவற்றுக்கு உரையெழுத வேண்டா பதிற்றுப்பத்து ஒலைச் சுவடியில் 'கடவுள் வாழ்த்து'ச் செய்யுள் காணக்கிடைக்கவில்லை யாதலால் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் வரும் எரியன்ன நிறுத்தன் என்று தொடங்கும் பாடலையே கடவுள் வாழ்த்தாகக் கொள்ளலாம்!" என்றும் உரைவேந்தருக்குக் கூறினார். இவ்வகையில் தம் ஆசிரியர் இருவர்க்கும் உரைவேந்தர் நன்றி பாராட்டுகின்றார்.

பதிகங்களுக்கு உரை எழுதப் பெறவில்லை ஆதலால், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய 'பதிகங்கள் பற்றிய ஆராய்ச்சி'யை, இப்பதிற்றுப்பத்து நூலின் முன்னுரையில் அமைத்துக்கொண்டார் உரைவேந்தர்.

ஐங்குறுநூறு உரை

சங்க இலக்கியங்களில் ஒன்றான 'ஐங்குறுநூற்றி'ல், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என ஐந்து அகத்திணைப் பாடல்கள் உண்டு. இவற்றில், 'மருதத்திணை'க்கு மட்டும், முதற்கண் உரையெழுதத் தொடங்கினார் உரைவேந்தர். இந்நூல் 1938இல் வெளிவந்தது. இதனைப் பதிப்பித்தவர், உரைவேந்தரின் நன் மாணாக்கராகிய புலவர் கா. கோவிந்தன். இந்நூல் தோன்றிய காரணத்தைப் பின்வருமாறு புலப்படுத்துகின்றார் கோவிந்தன்:

"யாங்கள் சேயாறு போர்டு உயர்கலாசாலையிற் கல்வி பயின்று வரும்போது, ஆசிரியர் திரு. ஔவை சு. துரைசாமி பிள்ளையவர்கள் இவ்விளக்கவுரை யினை எழுதிவரக் கண்டோம். அவர்கள், எங்களுக்குத் திருக்குறளும் தொல்காப்பியச் சேனாவரையமும் கற்பித்து வருகையில், இடை யிடையே இந்நூற் செய்யுள்களின் பொருணலங்களை எடுத்துக் கூறுவர். யாங்களும் கேட்டுப் பெருமகிழ்வு கொள்வோம். மேலும், யாங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சைக்குப் படிக்க விரும்பியகாலத்தில், அப்பரீட்சைக்காக வரை யறுக்கப் பெற்ற மருதப் பகுதியின் உரையினைப் படிக்கநேர்ந்தபோது, இவ்வுரை எங்கட்குப் பேரின்பம் பயந்தது. இன்னோரன்ன நலங்களால் பேருக்கம் கொளுத்தப் பெற்ற யாங்கள் இதனை வெளியிடுவது தக்கதெனத் துணிந்து இவ்வெளி யீட்டுச் செயலில் மேற்கொள்ளத் தொடங்கினோம்!”

மேலும், இவ்வுரைநூல் அத்துணை எளிதாக வெளிவரவில்லை. தமிழ்ப்புலவர் சிலரும், செல்வர் சிலரும், "விளக்கவுரை எழுதிப் பதிப்பிக்கும் பணியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு" உரை வேந்தரை வற்புறுத்திப் பல்வேறு இடையூறுகளும் செய்யலாயினர். இத் தடைகளை எல்லாம் தாண்டித்தான் இவ்வுரைநூல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐங்குறுநூறு முழுமைக்கும், உரைவேந்தர் எழுதிய உரை விளக்கத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

நற்றிணை உரை

சங்க இலக்கியங்களில் ஒன்றான 'நற்றிணை'யை முதன்முதல் வெளியிட்டவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆவார். ஓலைச் சுவடியிலிருந்து இந்நூலின் மூலத்தைத் தாம் எழுதிய உரையுடன் அச்சு வடிவில் கொணர்ந்தவர்.

ஒருமுறை, சென்னை சைவசித்தாந்த மகாசமாசத்தின் செயலாளராக இருந்த மா. பாலசுப்பிரமணிய முதலியாருடன், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையைக் காணச் சென்றார் உரைவேந்தர். அப்போது, உரைவேந்தரின் ஐங்குறுநூற்று உரை விளக்கத்தைத் தாம் படித்து மகிழ்ந்ததாகக் கூறிய வையாபுரிப் பிள்ளை, தம்மிடமிருந்த 'நற்றிணை' ஏடு ஒன்றைத் தந்து, 'இதனையும் நீங்கள் ஆராய்ந்து வெளியிட வேண்டும்' என்று கூறினார். அவ்வாறே நற்றிணைக்கு உரைஎழுதத் தொடங்கிய உரைவேந்தர், பின்னத்துராரின் அச்சுப் பதிப்பை, நற்றிணையின் நான்கு ஏடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பாட வேறுபாடுகள் காணப்பட்டன. எனவே, போதிய உரை விளக்கத்துடன் கூடிய நற்றிணையை உருவாக்கினார் இவர்!

"கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவை காண்பது போலப் பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது, பழைய உரைகாரர் களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறை யாகும். அம்முறையிலேயே இவ்வுரையும் அமைந் திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ, பரிமேலழகர் முதலியோர் உரையோ?” எனப் பல முறையும் நம்மை மருட்டுகிறது!"

என இந்நூலின் சிறப்பை விதந்து பாராட்டுகின்றார், 'கலையன்னை' இராதா தியாகராசனார்!

காப்பிய நூல்கள்

ஐம்பெருங் காப்பியங்களில், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலான மூன்றுக்கும்; ஐஞ்சிறுகாப்பியங்களில் சூளாமணி, யசோதர காவியம் எனும் இரண்டுக்கும்; உரை கண்டுள்ளார் உரைவேந்தர். இவற்றில் முதல் மூன்றுக்கும் 'சுருக்கம்' எழுதியதனோடு அமையாமல் விரிந்த 'ஆராய்ச்சி’யும் எழுதியுள்ளார்.

கழகம் 1985இல், வெளியிட்ட ‘மணிமேகலை' உரைநூலுக்கு முதல் 26 காதைகளுக்கு ந.மு.வே. நாட்டார் உரை எழுதியுள்ளார் அவரது உடல்நிலை காரணமாக அதற்குமேல் எழுத இயலவில்லை எனவே, எஞ்சிய 4 காதைகளுக்கு உரைஎழுதும் பணி உரைவேந்தருக்குத் தரப்பட்டது. இந்நான்கு காதைகளுமே, பௌத்த சமயக் கருத்துக்களையும், பிறசமய வாதங்களையும் விரித்துரைக்கும் சிக்கலானவை என்பர் அறிஞர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த போது, உரைவேந்தர், இப்பகுதிகட்கு நாட்டார் கையாண்ட அதே முறையைப் பின்பற்றி எழுதினார். 'காதை'யின் தொடக்கத்தில் அதன் சுருக்கம்; பின்பு, பகுதி பகுதியாக உரை என அமைந்துள்ளது. 'சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதை'யில், அளவை வாதம், நிகண்ட வாதம், சாங்கிய வாதம், வைசேடிகவாதம், பூதவாதம் விளக்கப்படுவது கொண்டு உரைவேந்தரின் கடின உழைப்பைப் புரிந்து கொள்ளலாம்.

இதற்குமுன்பே, 'மணிமேகலைச் சுருக்கம்' 1943ஆம் ஆண்டிலேயே, அதாவது, உரைவேந்தர், திருப்பதியில் பணிபுரிந்த காலத்திலேயே வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மணிமேகலை’க் காப்பியத்தின் சிறப்புக் குறித்து உரைவேந்தர் கூறுவது, மனங்கொளத்தகும்:

"பண்டை நாளில் விளங்கியிருந்த நூலாசிரியர், உரையாசிரியர் பலரும் பெரிதும் ஈடுபட்ட தமிழருமை வாய்ந்தது இந்த அரிய காப்பிய நூல் கற்பனைக் களஞ்சியமாக விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள், தாம் அருளிய 'திருவெங்கைக் கோவை'யில், கொந்தார் குழல் மணிமேகலை நூல் நுட்பம் கொள்வதெங்ங்ன்?" என்றும்; அம்பிகாபதி என்பவரால், 'அம்பிகாபதிக் கோவை'க்கண், 'மாதவிபெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே' என்றும், தொனிநயம்படப் போற்றி உரைத்த அருமையுடையது; அழகிய செம்பாகமான நடையழகு வாய்ந்தது; ஏனைச் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் என்ற இரண்டினும் எளிய நடை பொருந்தியது; ஆங்காங்குச் சிதறித் தோன்றும் வளையாபதி, குண்டலகேசி என்ற காப்பியச் செய்யுட்களை நோக்க அவற்றினும் நடையழகு சிறந்திருப்பது. காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி, காஞ்சி முதலிய பெருநகரங்களின் பண்டைச் சிறப்பை எடுத்துக் காட்டுவது இயற்கை அழகை இனிது காட்டி மகிழ்வுறுத்துவது; புத்த தருமங்களையும் பண்டைநாளில் தமிழகத்தில் நிலவிய பல சமயக் கருத்துக்களையும் விளங்க அறிவிப்பது; நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக, கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாக மணிமேகலையின் துறவு நெறியைச் செஞ்சொற் சுவை ததும்பச் சொல்லும் சீர்மையுடையதாகும்!”

உரைவேந்தர், செங்கம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தபோதே எழுதிய நூல் 'சீவக சிந்தாமணிச் சுருக்கம்!' ஏறத்தாழ 3000க்கு மேற்பட்ட செய்யுட்கள் கொண்ட இந்நூலினைப் படிக்க மலையுறுவோர்க்குப் பெரிதும் பயன்படுமாறு கதைத் தொடர்பும், இனிமையும் குறையாதவாறு, சுருக்கி எழுதப்பட்ட ஓர் அருமையான நூல் இது நூலின் தொடக்கத்தில் ஓர் ஆராய்ச்சி முன்னுரையும் தந்துள்ளார்!

ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான 'சூளாமணிச்சுருக்கம்' கழக வெளியீடாக 1970இல், வெளி வந்துள்ளது. இதன் முன்னுரையில் உரைவேந்தர் எழுதும் பகுதி, சிந்தனைக்கு விருந்தாக உள்ளது:

“சமணமுனிவர்கள் நம் இனிய தமிழ் மொழிக்கண் செய்துள்ளகாவியங்களுள், தேன் மணக்கும் தமிழ் நடையும், செம்மை மணக்கும் கருத்துக்களும் கொண்டு, படிப்போருள்ளத்தை உண்மைப் புலமையின் நுட்பத்தை நன்கறிந்து பேரின்ப மடையச் செய்யும் பெருமை யுடையது, இச் 'சூளாமணி' யேயாகும்... இயற்கை யன்னையின் இன்பத் தோற்றத்தை நம் உள்ளக் கிழியில் எழிலொழுக எழுதிக் காட்டும் இனிய தூரியக் கோல் இச் செந்தமிழ்க் காவியம் என்பதற்கு என் உள்ளம் ஆசைப்படுகின்றது!”

இவ்வாறு கூறும் இவர், இந்நூலினைச் சிறுகாப்பிய வரிசையில் சேர்த்தவரின் சிறுமை எத்தகையது என்பதைப் பின்வருமாறு சுட்டுகின்றார்:

"சிறுகாவிய மென்பனவற்றுள் இதனை ஒன்றாக வைத்தவர், சிறுமை பெருமைகளைத்தெரிந்துணரும் மதுகையில்லாதவர் என்று கூறலாம்; ஏனெனில் காவிய நெறியிலாதல், கவிநடையிலாதல், கருத்து வகையிலாதல் இதன்கண் எத்தகைய சிறுமையும் காணப்படவேயில்லை”

"சிந்தாமணிக்குப் போல, இச்சூளாமணிக்கும்.உச்சி மேற் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியர் ஓர் உரை எழுதி யிருப்பாராயின், இச்சூளாமணி, தமிழ்ப் புலவர் அனைவர்க்கும் சூளாமணியாய் மிகவிளங்கி யிருக்கும் என்று இனிது எடுத்து மொழியலாம்!"

உரைவேந்தர் எழுதிய உரைநூல்களில் 'யசோதர காவியம்' என்பதுமொன்று. பொதுவாக, மிகுந்த அளவில் பயிற்சியில்லாத நூல், எனினும் இதற்கும் உரை எழுதியுள்ளார். இஃது ஒரு சமண சமயநூல், முதன்முதலில் வடமொழியில் இயற்றப்பட்டது. பின்பு தமிழில் யாக்கப்பட்டது. 5 சருக்கம் 330 செய்யுட்கள் கொண்டது. ஆனால் இதன் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. முதலில் மூலநூல் மட்டுமே அச்சில் வந்துள்ளது. உரைவேந்தரே முதன்முதலாக இதற்கு உரை எழுதியவர். பல படிகளை ஒப்பு நோக்கித் திருத்தங்கள் கண்டு, புத்துரை வகுத்துள்ளார். தொடக்கத்தில் ஓர் ஆராய்ச்சி முன்னுரை உள்ளது.

இந்நூலாசிரியர், இசையைப் பற்றித் தவறான எண்ணத்துடன், நூலினை உருவாக்கியுள்ளார். அது தவறு என்பதை உரைவேந்தர், இம்முன்னுரையில் விரிவாக எடுத்து விளக்குவது அறிவுக்கு விருந்து எனலாம்.

"இந்நூலாசிரியரால் பழி தூற்றப்பட்ட இசை யினைப் பற்றிச் சிறிது ஈண்டுக் கூறுவது வேண்டற் பாலதொன்று. இசை என்பது வழுத்த வாயும், கேட்கச் செவியும் பெற்ற உயிர்கட்கு இயல்பா யமைந்த இன்பப் பொருளாகும். நிலவுலக வாழ் விற்கு நான்கு பொருள்கள் இன்றியமை யாதன என்றும், அவை முறையே உணவு, உடை, உறையுள், இசை என்பன வாம் என்றும் அமெரிக்க நாட்டு அறிஞர் ஒருவர், “Music is the fourth great material want of our nature-first food, then raiment, then shelter, then music”

-N.Bovee

கூறுகின்றார்.... இவ்விசை உடலோடு கூடி வாழும் மக்கட்கு மிகஇன்றியமையாததென்பது...நாடோறும்

ஓய்வின்றி உழைக்கும் எந்திரமொன்றும் உழைப்பிடையே மாசுபடிந்து அழுக்குறுவது போல், உடலோடியங்கும் உயிரும் மனத்தகத்தே தளர்ச்சியும், தூய்மையில்லாத உணர்ச்சியும் பெறுவது இயல்பு. எந்திரங்கள் அழுக்கு அகற்றப்படுவது போல, மனமும் நாடோறும் தூய்மை செய்யப்பட வேண்டும். அதற்கு இசையே உரியதாகும். இசை, மனத்திற்படியும் திய உணர்வுகளைப் போக்கி நல்லுணர்வுகளை-எழுப்புவதாகும். 'ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை' என்று பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த முடத்தாமக் கண்ணியார் மொழிந் தருளினர். சென்ற நூற்றாண்டில் செருமனியில் வாழ்ந்த ஆவர் பாச் (Averbach) என்பவர், 'மனத்திற்படியும் மாசுகளைக் கழுவித் தூய்மை செய்கிறது இசை' என்று கூறினார். ...இசையும் ஒரோவழிக் காமம் முதலிய தீமை விளைப்பது குறித்து, அதனை விலக்குவது அறமன்று!... பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'மார்டின் லூதர்' என்பவர், சமய உணர்வுகளுக்கு அடுத்த நிலையில் வைத்துச் சிறப்பிக்கத் தகுவது இசையே என்றும், தாவீது முதலிய தங்கள் சமய ஞானிகள், தம் கடவுட் கருத்துக்களை, இனிய இசைப்பாட்டுக்களில் வைத்துப் பாடியே செயற் கருஞ் செயல்களைச் செய்தனர் என்றும் கூறுவாராயினர்!"

இம்முன்னுரை ஒன்றே போதும், உரைவேந்தரின் நுட்பமான புலமைத் திறத்தை அறிந்து கொள்ள! அன்றியும் இவரது ஆங்கில மொழியறிவு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதும் இதனால் அறியலாம்.

சமய நூல்கள்

உரைவேந்தர், அன்னைத் தமிழின்பால் எத்தகைய புலமையும் ஈடுபாடும் கொண்டவரோ, சைவசமயத்தின்பாலும் அவ்வாறே ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய சைவசமய-சைவசித்தாந்த நூல்கள் சிலவேயாயினும், மிக்க பெருமையுடையன. 'திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உரை' நூல் ஏறத்தாழ 1935ஆம் ஆண்டில் வெளிவந்ததாகக் கொள்ளலாம். இஃது உரைவேந்தர் மறைந்தபின், அவர்தம் 23 ஆம் ஆண்டு நினைவு வெளியீடாக 1985இல் ஔவை து.நடராசனாரால் வெளியிடப் பெற்றது.

திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய 'பூத் தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி' எனத் தொடங்கும் திருவோத்தூர்த் தேவராப் பதிகத்திற்கு அற்புதமான உரை தந்துள்ளார் உரைவேந்தர்.

தொடக்கத்தில், ஓத்தூர் என்ற ஊரின் விளக்கத்தையும் பின்னர்த் தேவாரம்' என்பதற்குரிய பல்வேறு பொருள் நயங்களையும் விளக்குகின்றார். "ஓத்தூர் என்பது ஓத்து+ஊர் எனப் பிரியும். ஓத்து, ஓதப்படுவது, பாடப்படுவது பாட்டு என்றாற் போல. சேயோனாகிய முருகனுக்கு மலை நிலமும், பெருமான் என்ற பிரமனுக்குத் தாமரைப் பூவும் இடமானதுபோல, திருவோத்தூர், பரமனுக்கு உரிய இடமென்பதாம்!" என்று கூறிவிட்டு,

"சுவாமிகள்(சம்பந்தர்) தேவாரத்திற்குச், சுமார் ஐந்நூறு வருடங்களுக்குப் பின் தோன்றிய நன்னூல் இலக்கணமாகா தாகையால், தொல்காப்பியமே ஈண்டுக் கொள்ளப்படுவதாயிற்று”

என்று கூறுவது, இவருக்குரிய நுட்பான இலக்கணப் புலமைக்குச் சான்றாகும்.

இனித் 'தேவாரம்' என்பதற்குரிய பல்வேறு பொருள் நயங்களைக் கூற வந்தவர், சைவத்திரு யாழ்ப்பாணத்து வண்ணைநகர் சுவாமிநாத பண்டிதர், விரித்தெழுதியவற்றைச் சுட்டிக் காட்டி, அதனை அப்படியே தந்துரைக்கின்றார் உரைவேந்தர்.

'தேவாரம்' என்பதற்குப் பல்வேறு பொருள் நயங்களில் ஒன்றை மட்டும் இவண் சுட்டலாம்:

"பேரழகு, பேராண்மை, பெருங்கல்வி, பேரறம் முதலியவற்றை உடைய ஆண்மகனது இலக்கண முதலிய வற்றை ஓதல், கேட்டல்களைச் செய்த துணையானே, மகளிர்க்கு அவன்மாட்டுக் கழிபெருங் காமம் மீதுர்வதுபோல் சிவபிரானது

இலக்கணங்களும் அருட் குணங்களும் பிறவும் திராவிட வேதத்தின்கண்(தேவாரத் திருமுறையில்) கூறப்பட்டிருத்தலான் அவற்றை ஓதல்,கேட்டல்களைச் செய்த துணையானே மக்கட்குக் கழிபெருங் காதல் மீதுாரு மென்று உணர்க!”

இவ்வாறு இன்னும் பல பொருள் நயங்களை எடுத்துரைக்கின்றார் உரைவேந்தர்!

இத்தேவாரப் பதிகப் பாடலுக்கு 33 பக்க அளவில் உரைவிளக்கம் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் பழைமையானது 'ஞானாமிர்தம்' என்ற நூல். மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்திற்கும் காலத்தால் முந்தியது. இது பழமையானது என்பதன்றி, நடையிலும் சற்றுக் கடின முடையது. இரும்புக் கடலை என்று எண்ணி, ஒதுங்கியவர்களும் உண்டு.

வாகீச முனிவர் என்பார் எழுதிய இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அதனை ஏறத்தாழ 70 ஆண்டுகட்குமுன், மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ளது. இதனை ஆராய்ந்து வெளியிடும் பணியைச் செய்தவர் சேற்றூர் சுப்பிரமணிய கவிராயர் ஆவார். அவர் தமக்குக் கிடைத்த சில ஏடுகளைக் கொண்டு, அரும்பாடு பட்டு, அந்நாளில் எழுதியது, மிகவும் பெருமைக்குரிய தொண்டாகும். சங்கநூல் வெளியீடுகளும், கல்வெட்டிலாகா வெளியீடுகளும் போதிய அளவு வெளிவராத காலம். அத்தகு நிலையிலும் கடும் உழைப்பால் இந்நூல் பதிப்பைச் செய்துமுடித்த சிறப்பு கவிராயருக்கே உண்டு என உரைவேந்தரே புகழ்ந்து போற்றுகின்றார்!

'ஞானாமிர்தத்' திற்குப் பின்னர்த் தோன்றிய சைவசித்தாந்த நூல்களின் உரைகளில் இவ் ஞானாமிர்தப் பகுதிகள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. 'சிவப்பிரகாசம்' என்பது சைவ சித்தாந்த நூல்; அதனைக் குறித்த மற்றொன்று, 'சிவப்பிரகாசப் பெருந்திரட்டு'. இத் தொகைநூலில் ஞானாமிர்தத் திருவகவல்கள் பல கோத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறே, 'முத்து முடிவு' என்ற பழைய நூல் ஒன்றிலும் ஞானாமிர்தப்பகுதிகள் சில இடம் பெற்றுள்ளன. இவற்றால் சமயதத்துவ ஆராய்ச்சி உலகில் இந்நூல் மிக்க மதிப்பும் பயிற்சியும் பெற்றிருந்தது என்பது புலனாகும்.

இவ்வுண்மைகளை நன்கறிந்த உரைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணிபுரிந்த போது, 'ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்' பதிப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. இது குறித்து உரைவேந்தர் கூறுவது வருமாறு:

“சிறந்த நூற் பயிற்சி எனக்கு வாய்த்தபோது, ஞானாமிர்தக் குறிப்புக்கள் சில, சிவஞான பாடியத்தில் வரக் கண்டு, நூலை முழுவடிவில் படிக்க வேண்டும் என்ற வேட்கை உண்டாவ தாயிற்று. ஆகவே அதனை வாங்கிப் படித்த போது அதன் நலம் முற்றும் துய்ப்பதற்கு உரிய தமிழறிவு என்பால் இல்லாமை, மிக்க இடரை விளைத்தது. அதனால் சங்க நூற்பயிற்சியில் என் கருத்துப் படர்ந்தது. ஒரு சில நூல்களைப் பயின்றபின், ஞானாமிர்தத்தின் தமிழ்நலம் எனக்கு இன்பம் செய்வதாயிற்று!”

என்று இந்நூலின்பால் ஆர்வம் ஏற்பட்டமை குறித்துக் குறிப்பிடுவர். இது குறித்த ஏடுகள் கிடைக்கின்றனவா என்று தேடுவதில் முனைப்பாக இருந்தார்.

"1932ஆம் ஆண்டுக் கோடை விடுமுறைக்கு யான், என் ஊராகிய ஔவையார் குப்பம் சென்றிருந்த போது, வீட்டின் ஒரு மூலையில் கிடந்த ஏடுகளைப் புரட்டிப் பார்க்கலானேன். அவற்றுள், ஒரு ஏட்டின் மேல், 'பெருமண்டுர்ச் சிபாலன் எழுதியது' என்ற குறிப்பு இருக்கக் கண்டு, அதனைப் பிரித்துப் பார்த்தேன். ஏடு ஒன்றைப் படிக்கவும், அதன்கண், 'இன்னிசை எழுவர்ப் பயந்தோள் - சுநந்தன் முதலிய எழுவரைப் பெற்றாள்' என்ற உரை இருக்கக் கண்டு, இது, ‘ஞானாமிர்தம்' என்று அறிந்து அதனைப் படியெடுத்துஅச்சுப் பிரதியோடு ஒப்புநோக்கி னேனாக, வேறுபாடுகள் பல இருப்பது புலனா யிற்று!”

என்று உரைவேந்தர் கூறுவதுகொண்டு, ஞானாமிர்த நூலைப் பதிப்பிக்க மேற்கொண்ட இவரது முயற்சி தெரிகிறது.

பின்னர்க் குன்றக்குடியில், சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைமையில் நடந்த ஓர் ஆண்டு விழாவில், ஞானாமிர்தம் என்ற பொருள் பற்றி உரைநிகழ்த்தினார் உரைவேந்தர். அதனைக் கேட்ட 'சித்தாந்த சரபம்' ஈசான சிவாசாரியார், இவரை அன்போடு நோக்கி, 'இரும்புக் கடலையைப் பக்குவமாக வேக வைத்துவிட்டீர்கள்!' என்று பாராட்டினார். பண்டிதமணியும், சிவக்கவிமணியும், இந்நூலை நன்கு ஆராய்ந்து வெளியிடுமாறு உரைவேந்தரிடம் கூறினர்.

ஆனாலும் ஏடுதேடும் முயற்சியைக் கைவிடாமல், மேலும் சில கிடைக்கின்றனவா என்று முனைப்போடு செயல்பட்டார் உரைவேந்தர். நெல்லைக்கு அருகே இருந்த இராசவல்லிபுரம் சென்று, செப்பறைமடத்துத் தலைவராக இருந்த அழகிய கூத்தத் தேசிகரைக் கண்டு, உரையுடன் கூடிய ஞானாமிர்த ஏடு ஒன்றினைப் பெற்றார். அதன் பின்பு மேலும் சில ஏடுகள் கிடைத்தன. பெருமண்டுர்ச் சீபாலன் எழுதிய ஏடு ஒன்று திருவெண்ணெய் நல்லூர் ஏடு ஒன்று; ஏனாதிபாடி ஏடு ஒன்று. இவ்வேடுகள் அனைத்தையும், மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீட்டுடன் ஒப்பிட்டு நோக்குங்கால் வேறுபாடுகள் பல கண்டு, புதிதாகக் குறிப்புரையுடன் ஞானாமிர்த நூலை வெளியிடத் துணிந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைத் தலைவராக விளங்கிய கா.சுப்பிரமணிய பிள்ளையும், 'பல்வேறு ஏடுகளை ஒப்புநோக்கி, வேண்டிய ஆராய்ச்சிக் குறிப்புக்களோடு இந்நூலை வெளியிட வேண்டும்' என்று கூறி, உரைவேந்தரின் இனிய நண்பர் க.வெள்ளைவாரணனாரை உறுதுணையாக வைத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தார்.

ஆனால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்தபோது செய்துவந்த இந்நூல் வெளியீட்டுப் பணி, மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்த பின்னரே நிறைவு பெற்றது. அதற்கு முழு ஆதரவு நல்கிய கருமுத்து, தியாகராசச் செட்டியாருக்கு நூன் முன்னுரையில் நன்றி தெரிவித்துள்ளார் உரைவேந்தர்!

அண்ணாமலைப்பல்கலைக் கழக வெளியீடாக வந்த மற்றொரு சைவசித்தாந்த நூல், 'சிவஞானபோத மூலமும் சிவஞான முனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்' என்பது.

சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. இவற்றிற்கெல்லாம் மணிமுடியாய்த் திகழ்வது, மெய்கண்டார் அருளிய 'சிவஞான போதம்'. இதன்கண் அமைந்துள்ள நூற்பாக்கள் - 12 அதில் உள்ள அடிகள் - 40, மொத்தச் சொற்கள்-216: மொத்த எழுத்துக்கள்-624. இப் பன்னிரண்டு நூற்பாப் பொருளை ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் ஆராய்ந்து கூறுதற்கு ஏதுவாக 39 அதிகரணங்களும் 81 வெண்பாக்களும் உள்ளன.

இவ் அரிய நூலுக்குப் பாட்டும் உரையுமாகிய வடிவில், சான்றோர் உரைகண்டுள்ளனர். பாட்டில், முதலுரை கண்டவர், திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார். அதற்குச் 'சிவஞான சித்தியார்' என்று பெயர். அதற்குப்பின் கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியார், 'சிவப்பிரகாசம்' என்ற பெயரில், எளிய முறையில் பாட்டுவடிவில் உரைகண்டுரைத்தார். இவ்வாறே, வடமொழிவல்ல சான்றோர் ஒருவர். இச் சிவஞான போதத்தை வடமொழியில் மிகவும் எளிய நடையில் பன்னிரு சுலோகங்களாக மொழிபெயர்த்துத் தமிழ் அறியாத வடபுல வாழ்நர்க்கு அறிவுறுத்தினார். அவர்க்குப்பின் சிவாக்கிரயோகிகள் என்பார், அவ் வடமொழிச் சிவஞான போதத்துக்கு வடமொழியிலேயே சிற்றுரையும் பேருரையுமாக உரையொன்று கண்டார்.

நம் நாட்டில் ஆங்கில மொழி முதலிடம் பெற்றபோது, ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை என்பார், இச்சிவஞான போதப் பொருளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பிறகு, டாக்டர் பென்னத் (Dr.Bennet)முதலிய ஆங்கிலநாட்டார், ஆங்கிலத்திலும்; ஷாமாஸ் (Schomorus)என்ற ஜெர்மானியர் ஜெர்மனியிலும் எழுதினர்.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த, முனிவர் பெருமக்களில் ஒருவராய் விளங்கியவரும், 'வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டுணர்ந்தவர்' என்று போற்றப் படுபவருமான மாதவச் சிவஞான சுவாமிகள், 'சிவஞான மாபாடியம்' என்ற பெயரால் பேருரையும் சிற்றுரையுமாக இரண்டினை எழுதினார்.

அவரது சிற்றுரை நூலே உரைவேந்தரால் பதிப்பிக்கப் பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் 1953இல், வெளியிடப் பெற்றது.

இப்பதிப்பின் சிறப்புக்கள் பல. அவற்றுள் சில, இவண் குறிக்கத் தகும்:

1. மாணவர்கட்கும் ஆராய்ச்சியாளர்கட்கும்
பயன்படும் முறையில், உரையில் காணப்படும்
இலக்கணக் குறிப்புக்களும், அரும் பொருள்களும்
அடிக்குறிப்பில் விளக்கப்படுகின்றன;

                                 2.  ஆராய்ச்சி நெறியின் பொருட்டு, அருஞ்
                                                 சொற்பொருள் அகரநிரலும், துணைசெய்த
                                                 நூல்நிரலும் சேர்க்கப்பட்டுள்ளன.

                                 3.  ஒப்புநோக்கும் கருத்தால் ஒருசில இடங்களில்
                                                 சிவஞானமாபாடியக் கருத்துக்களும், பாண்டிப்
                                                 பெருமாள் உரையும் காட்டப்பட்டுள்ளன.

                                 4.  நூன்முகத்துக்கு இன்றியமையாமைபற்றி,
                                                 நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறும்;
                                                 நூற்பொருளைப் பயில விரும்புவோர்
                                                 பொருட்டுச் சிவஞானபோதச் செம்
                                                பொருளும் பிறவும் முன்னர்த் தரப்பட்டுள்ளன.
                                                (இதில் வரும் ‘சிவஞான போதச் செம்பொருள்’
                                                பின்னர்த் தனி சிறுநூலாகவும்,வெளிவந்துள்ளது!)


சிவஞானமுனிவரின் ‘சிவஞான மாபாடியம்’ என்னும் பேருரையையும், சிற்றுரையையும் படித்துப் பொருள் காண்பதென்பது கற்றுவல்ல புலவர்க்கே சிறிது கடின்மாகும். ஆயினும் உரைவேந்தர், துணிந்து இப்பணியைச் செய்துமுடித்தார். இது குறித்து இவர் கூறுவது வருமாறு:

“சிவஞான போதத்தின் சிறப்பையும்,சிற்றுரையின் மாண்பையும் நோக்குமிடத்து, எனது அறிவின் சிறுமை கண்டு என் உள்ளம் பேரச்சம் கொண்டது. எனினும் எந்தை மெய்கண்ட சிவத்தின் திருவடியை நினைவிற் கொண்டு, அவரது அருள் ஞானத்தை நன்குபெற்ற பெருமக்கள் வழங்கியிருக்கும் அருளுரைகளைக் கருவியாகவும், திருஞான சம்பந்தர் முதலிய சிவஞானப் பெருஞ் செல்வர் களின் செம்மொழிகளை முதலாகவும் கொண்டு, இப்பணியினை ஆற்றுதற்கு என் உள்ளம் ஒருப்படவே, ஒருவாறு யான் இயன்ற அளவு செய்துள்ளேன்!”

சைவசிந்தாந்த ஆழ்கடலில் நன்முத்து எடுத்துக் கொணரும் வல்லமைபடைத்தவர் உரைவேந்தர். எனினும் இவ்வாறு கூறுவது, இவரது பணிவுடைமையைக் காட்டுவதாகும்.

இந்நூலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த போது மேற்கொண்ட பணி; ஆனால் மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்தபின்பே நிறைவுற்றது.

உரைவேந்தர் எழுதிய நூல்களிலெல்லாம், தலையாயதும் மிகுதியான பக்கங்கள் கொண்டதுமான நூல், ‘திருவருட்பா மூலமும் உரையும்’ ஆகும். இஃது ஆறு ‘திருமுறைகள்’ கொண்டது; 5818 பாடல்கள் உடையது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,தனது பொன்விழாவைக் கொண்டாடியஞான்று. திருவருட்டாவை உரையுடன் வெளியிடும் செந்தமிழ்ப் பணியைத் தொடங்கியது. பொன்விழாவினில், இதன் முதற்பகுதி மட்டும் வெளிவந்தது; பின்னர் ஒவ்வொன்றாக வெளியிடப் பெற்றது.

இந்நூல் முன்னுரையில், பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த வ.சொ. சோமசுந்தரம், பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தே, வள்ளல் இராமலிங்க அடிகளார் என்னும் ஓர் ஒளிப்பிழம்பு வடலூரில் தோன்றி, உலகுக்கே ஒளிசெய்தது. அவ் ஒளியிடைத் தோன்றிய இறைமுறையீடுகள் ‘அருட்பா’ என்னும் அரிய பெயரோடு ஆறுதிரு முறைகளாக வகுக்கப்பெற்றன... உயிர்களின் ஆன்மநேய ஒருமைப்பாட்டினை வற்புறுத்திய பெரும் அருளாளராக இவரை நாம் காண்கிறோம். மக்கள் பலரும் அருட்டிரு வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் படித்த அளவிலேயே இறை வனிடத்து ஈடுபாடு கொள்வரேனும், முற்றிலும் பொருள் உணர்ந்து கொள்வார்களெனக் கூற இயலாது. இந்நிலையில் நல்லதொரு உரையை எழுதி நமக்களித்தவர் உரைவேந்தர் வை சு.துரைசாமி பிள்ளையவர்கள் சிறந்த முறையில் எழுதிய இவ்வுரை, அருள்மணம் கொண்டு விளங்கு வதை யாவரும் உணர்வர்!”

திருவருட்விபாவில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர் ‘அருட் செல்வர்’ நா. மகாலிங்கனார் ஆவார். இவர், ஊரன் அடிகளாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருவருட்பா 6 திருமுறைகளையும் திருந்திய பதிப்பாக வெளியிட்டுள்ளார். தேனினும் இனிய இத்திருவருட்பாப் பாடலின் செம்பொருள் நுட்பங்களைத் தமிழ் இலக்கண இலக்கிய வரம்பினை உளங் கொண்டு, நுண்ணிதின் ஆராய்ந்து வெளிப்படுத்தும் முறையில் திருவருட்பாவுக்கு உரைகாணும் திட்டமொன்று இவரால் வகுக்கப்பட்டது. இவ் உரைப் பணியைச் சிறப்பாகச் செய்து முடிக்க முற்றிலும் தகுதிபடைத்தவர் உரைவேந்தரே எனத் தேர்ந்து, கோவை சக்தி அறநிலையத்தின் சார்பில், பல்கலைக் கழக மூலமாகத் திருவருட்பா முழுமைக்கும் விளக்கவுரை காணச் செய்த பெருமை நா.மகாலிங்கனாருக்கு உண்டு.

உரைவேந்தர் எழுதிய திருவருட்பா உரைநூலின் முதற்பகுதி 582 பக்கம் கொண்டது; இவ்வாறே ஏனைய 5 பகுதிகளுமெனில் உரைப் பெருக்கத்தின் மாண்பை ஓரளவு அறிதல் கூடும். பாடல் தலைப்பு: யாப்பு இன்னதென்பது: பாடப்பெற்ற தலம் ஆகியனவற்றை முதற்கண் கூறிப் பின்பு, ‘பாடல்-உரை- பெரியதோர் விளக்கம்’ என அமைத்துக் கொண்டார் உரைவேந்தர்.

வரலாற்று நூல்கள்

உரைவேந்தர் பல்துறை அறிவினர். ஆங்கில அறிவு, கல்வெட்டு ஆய்வு ஆகியன, இவர்தம் வரலாற்று நூல்கட்குப் பெரிதும் துணைபுரிந்தன. இவ்வகையில் இவர் எழுதியன, சைவ இலக்கிய வரலாறு, சேரமன்னர் வரலாறு, தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும், வரலாற்றுக் காட்சிகள் ஆகியன குறிப்பிடத் தக்கன.

சைவ இலக்கிய வரலாறு (கி.பி. 7 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை): இஃது அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக 1978இல், வந்தது.

தமிழ்மொழி வாயிலாகத் தமிழர்கள் போற்றி வளர்த்த- பேரறிவு நிறைந்த இலக்கியம் பற்றியும், புலவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றியும், அவர்கள் வாழ்ந்தகாலம், அரசியல் நிலை, சமயநிலை, சமுதாய வாழ்வு, கலை வளர்ச்சி முதலியன பற்றியும், தக்க அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து, தமிழ் இலக்கிய வரலாற்றினை எழுதி வெளியிடுதல், தமிழ் வளர்ச்சிக்குரிய சிறந்த பணிகளில் ஒன்றாகும். இதன் தேவையை நன்குணர்ந்த பெருந்தகை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிறுவிய கொடை வள்ளல் அண்ணாமலை அரசராவர்! அவர்தம் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அப் பல்கலைக் கழக ஆராய்ச்சித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்டு, தமிழ் இலக்கிய வரலாற்றை விரிவாக ஆராய்ந்து வெளியிடுவதெனத் திட்டம் வகுத்து அதன்படி நூல்களை வெளியிட்டனர். அவ்வகையில் வெளிவந்ததே ‘சைவ இலக்கிய வரலாறு’ என்னும் நூல்!

பல்கலைக் கழக ஆராய்ச்சித்துறையில் பணிபுரியும் ஆசிரியர் களைக் கொண்டு ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதும் பணி உருவாயிற்று. அவ்வகையில், ஆங்குப் பணியிலிருந்த உரை வேந்தருக்குச் சைவ இலக்கிய வரலாறு எழுதும் பணி அளிக்கப்பட்டது.

இந்நூலுக்கு அரியதொரு முன்னுரை வழங்கியுள்ளார் உரைவேந்தர். அதில் வரும் சில பகுதிகள்:

“இலக்கியங்கள் பலவும், தாம் தோன்றிய காலத்து மக்கட் சமுதாயத்தின் சூழ்நிலையை எடுத்துக் காட்டும் இயல்பின என்பது அறிஞர் உலகம் நன்கறிந்த செய்தி. அந்நெறியில் சைவ லக்கியங்கள், தாம்பிறந்த காலத்து வாழ்ந்த சைவமக்களின் சமய உணர்வு ஒழுக்கங்களைத் தம்மைப்பயில்வோர்க்கு உணர்த்தும் அறக் கருவூலங் களாகும். ஆயினும் இவ்விலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவைதோன்றிய காலத்து, நாட்டு வரலாற்று அறிவு பெருந்துணையாகும். அக்காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல், பொருளியல், வாணிபம், தொழில் முதலியவற்றை உரைக்கும் நாட்டுப் பொது வரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று. நம் தமிழ் நாட்டின் தவக்குறைவாலும் தமிழ் மக்களின் ஊக்கமின்மையாலும் அத்தகைய பொது வரலாறு ஒன்று இதுகாறும் எழுதப்படவே இல்லை!”

‘சைவ இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூலில், உரைவேந்தர் எடுத்துக் கொண்ட பகுதி, கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு முடிய அமைந்த காலமாகும். சிறந்த செந்தமிழ் நூல்களாகிய சைவ இலக்கியங்கள் பற்றிய செய்திகள், தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பிறநாட்டார் யாத்திரைக் குறிப்புக்கள் முதலிய வரலாற்றுச் சான்றுகள் கொண்டு தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன.

உரைவேந்தர், சைவ நூல்கள் தோன்றி வளர்ந்த கால நிலை, சூழ்நிலையை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ளுமாறு, சைவ இலக்கிய வரலாற்றின் தோற்றுவாயாகத் தமிழ்நாட்டு வரலாற்றைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். ‘திருஞான சம்பந்தர்’ முதல், வேம்பையர்கோன் நாராயணன்' ஈறாகவுள்ள ஆசிரியர் வரலாறுகளை எழுதியுள்ளார்!

இந்நூலின் சிறப்புக் குறித்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் தி.மு.நாராயணசாமி பிள்ளை,

“பிள்ளையவர்கள் தமது புலமைநலம் அனைத்தும் தமிழ் நாட்டிற்குப் பயன்படும் முறையில் இவ் இலக்கிய வரலாற்றினை இனிமையும் தெளிவும் பொருந்திய செந்தமிழ் நடையில் எழுதி யுள்ளார்கள்!”

என்று பாராட்டுகின்றார்.

இவ் இலக்கிய வரலாறு மேலும் தொடர்ந்து வெளிவர வில்லை. உரைவேந்தர் மதுரைத் தியாகராசர் கல்லூரிப் பணிக்கு வந்தமையே காரணம்.

“...... ஆசிரியர் வரலாறுகள் எழுதிமுடித்ததும், யான், மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்து சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டதனால் இந்த அளவோடு இவ்விலக்கிய வரலாறு வெளிவர வேண்டுவதாயிற்று. இக்கால எல்லைக்குள் நிற்கும் பெருமானடிகள் வரலாறு, இன்னும் காணப்படவில்லை! அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையம் போலும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணை செய்யும் நூல்களும், பிற வெளியீடுகளும் மதுரையில் கிடைத்தல் அரிதானமையின் இவ்வரலாற்றினை மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்!”

என உரைவேந்தர் வருந்தியுரைப்பது, இவரது சைவ இலக்கியப் பற்றினைப் புலப்படுத்துவதாக உள்ளது.

உரைவேந்தர் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்பிடத் தக்க பெருமைக்குரியது, ‘பண்டைநாளைச் சேரமன்னர் வரலாறு’. இந்த நூலை எழுத இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அளப்பரியன. இது குறித்து உரைவேந்தர் கூறுவது இவண் அறியத்தகும்:

“சங்க காலச் சேரர் இலக்கியங்களை யான் ஆராயத் தலைப்பட்டபோது, சேரநாட்டைப்பற்றிய குறிப்புக் களைத் தேடித் தொகுக்கும் கடமை உண்டாயிற்று. அக்காலை, மேனாட்டறிஞரான வில்லியம் லோகன் எழுதியனவும்; நம் நாட்டவரான திரு. நாகமையர், திரு.கே.பி.பதுமநாப மேனன், திரு.கே.ஜி. சேவைடியர், திரு. சி.கோபாலன் நாயர் முதலியோர் எழுதியுள்ள நூல்களும்; திருவாங்கூர்,கொச்சி, குடகு, தென் கன்னடம் ஆகிய பகுதிகளைப் பற்றிய அரசியல் வெளயிடுகளும் பெருந்துணை செய்தன. பழை யங்காடி, உடுப்பி, ஹொன்னாவர், கோழிக் கோடு, கண்ணனூர், பெல்காம் முதலிய பேரூர்களில் வாழ்ந்து வரும் நண்பர்கள் பலர் தெரிவித்த குறிப்புக் களும் எனக்கு மிக்க ஊக்கம் தந்தன. அதனால் சேரர் வரலாற்றைக் காண்பதற்கெழுந்த வேட்கை உறுதிப் படுவதாயிற்று. "சேர நாடு, கேரள நாடாயினபின், சேரமக்கள் வாழ்ந்த ஊர்களும் அவர்களிடையே நிலவிய ஒழுக்க நெறிகளும் மறைந்து ஒடுங்கின வாயினும், பழங்கால இலக்கியக் கண்கொண்டு நேரில் சென்று காண்போர்க்குப் புலனாகாமற் போக வில்லை!”

இந்நூலில், இவர் மேற்கோளாக எடுத்தாண்ட நூல்களும் பலவாம். தமிழ் இலக்கண இலக்கியங்கள் தவிர, வடமொழி - ரிக் வேதம், தைத்திரீய ஆரணியகம், வியாசபாரதம், கல்வெட்டு, செப்பேடு, பிறவரலாறு, ஆராய்ச்சி உரைகள் எனப்பலவும் காட்டியுள்ளார் உரைவேந்தர். டாக்டர் எம்.எஸ். வைரண பிள்ளை, இந்நூலுக்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரையில், இவரைப் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே மா. இராசமாணிக்கனாரும், “இதுவரையில், இருள்படர்ந் திருந்த சங்ககாலச் சேரர் வரலாறு, இவ்வரலாற்று நூலால் விளக்க மடையும் என்று கூறுதல் பொருந்தும்!” என்று பாராட்டுகின்றார்.

‘தமிழ்நாவலர் சரிதை’ என்ற நூல், முன்பே அச்சானது; இதன்கண் ‘இறையனார்’. முதல் ‘அந்தகக் கவி வீரராகவ முதலியார்’ வரை 51 புலவர்களின் வரலாறும், அவர்கள் பாடிய பாடல்கள், அவை பாடப்பட்ட சந்தர்ப்பத்தோடு யாரோ ஒருவரால் தொகுக்கப் பட்டிருந்தன. இது, சென்னைப் பல்கலைக்கழக ‘வித்துவான்’ தேர்வுக்குப் பாடமாக இருந்தது; அத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்க்கு இந்நூலைக் கற்பிக்கும் பணியை மேற்கொண்டிருந்த உரைவேந்தர், கல்வெட்டுக்களையும், பிற வரலாற்று நூல்களையும் ஒப்ப நோக்கிக் கற்பித்து வந்தார். அப்போது இதன்கண் காணப்படும் பாடல்களுக்கு இயன்ற அளவு குறிப்புக்கள் தேடித் தொகுத்து வைத்திருந்தார்.

இதற்கிடையில் தி.த.கனகசுந்தரம்பிள்ளை வெளியிட்ட பிரதியும், உரைவேந்தரின் தமிழாசிரியர் சீகாழி கோவிந்தசாமி ரெட்டியாரிடமிருந்த கையெழுத்துப் பிரதியும், கோவை சி.கு. நாராயணசாமி முதலியார் வெளியிட்ட பிரதியும் வைத்திருந்தாராதலின், இம்மூன்றையும் கொண்டு ஒப்பு நோக்கியதில் பல திருத்தங்கள் செய்யவேண்டியதாயிற்று. அத்தகு திருத்தங்களுடன் கழக வெளியீடாக இந்நூல் 1972இல் வெளிவந்தது.

இதன்கண், செய்யுள்தோறும் ஆராய்ச்சிக்குறிப்புக்கள் தரப் பட்டுள்ளன. இடையிடையே கல்வெட்டுச் சான்றும் உள்ளன. மேற்கோளாக ஆங்கிலம் உட்பட 64 நூல்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் உள்ள அரும்பொருள் அகரவரிசை படிப்பவர்க்குப் பெரிதும் பயன்படும்.

‘உரைவேந்தர், ஒரு வரலாற்றுப் பேராசிரியர்’ என்று சொல்வதற்கு ஏற்ப, இவர் எழுதிய மற்றொரு நூல், வரலாற்றுக் காட்சிகள் என்பது. இதனை மதுரையிலுள்ள ஒரு புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நாட்டு வரலாற்று அறிவு, சென்ற காலங்களில் மக்கள் முன்னேற்றத்துக்கு இடையூறு செய்த தடைகளை உணர்ந்து, எதிர்காலத்தில் அவை மீளவும் தலைகாட்டாதவாறு தற்காத்துக் கொள்ளு தற்குத் துணைபுரிகிறது. இந்த உண்மையை அறிந்த மேனாட்டு வரலாற்று அறிஞர்கள், வரலாற்றுப் புகழ் படைத்தவர் சிலருடைய வாழ்வில் சிறப்பாகக் குறிக்கத் தக்க நிகழ்ச்சிகளைத் தேர்ந்து, சிறு சிறு கதை வடிவில் தந்து, கல்வி பயிலும் மாணவர்களின் இளமையுள்ளங்களைப் பண் படுத்தியுள்ளனர். அவர்களுடைய இந்த நன்முயற்சி

பெரும்பயனை விளைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து நமது நாட்டு வரலாற்றில் சிறந்து விளங்கிய வேந்தர் சிலருடைய வாழ்க்கை நிகழ்ச்சி களில் சிலவற்றைத் தேர்ந்து சிறுகதை வடிவில் கூறுவது கருத்தாகக் கொண்டு, ‘வரலாற்றுக் காட்சிகள்’ என்ற தலைப்பில் இந்த நூல் தோன்றுகிறது...!”

என்று உரைவேந்தர், நூல் முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அவ்வாறே, தமிழகச் செய்திகள், சங்ககாலச் சோழர், சங்க காலப் பாண்டியர், பல்லவ வேந்தர், இடைக்காலப் பாண்டியர், இடைக் காலச் சோழர் என்னும் தலைப்புகளில் சுவையான வரலாற்றைத் தந்துள்ளார் உரைவேந்தர். ஆங்காங்கே கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன.

இவை தவிர, ‘மதுரைக் குமரனார்’(கழகம்) ‘ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை’ (தருமையாதீனம் 1945), ‘சிவபுராணம்’ (ஆம்பூர் சைவசித்தாந்த விழா - 1940), தெய்வப்புலவர் திருவள்ளுவர் (கழகம்) ‘மருள் நீக்கியார் நாடகம்’, ‘மத்தவிலாசப் பிரகசனம்’ (மொழிபெயர்ப்பு) என்னும் நூல்கள் தவிர ஆங்கிலத்திலும் Introduction to the Study of Thiruvalluvar என்ற நூலும் எழுதியுள்ளார் உரைவேந்தர்.

இனி இவர், அவ்வப்போது, ‘தமிழ்ப்பொழில்’, ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘செந்தமிழ்’ முதலான இதழ்களிலும்; விழாமலர்களிலும், எழுதிய கட்டுரைகள் எண்ணில் பலவாம். மாநாட்டுத் தலைமை யுரையாகவும், விரிவுரையாகவும், வரவேற்புரையாகவும் இவர் ஆற்றிய செந்தமிழ் உரைகளும் உண்டு. இவற்றில் ஒரு சில தனித்தனி நூல்வடிவம் பெற்றுள்ளன. வெளிவராத கட்டுரைகளனைத்தையும் தொகுத்தால், பல நூல்களாக அமையும்!

1940 ஆம் ஆண்டில் ஆம்பூரில் நடந்த சைவசித்தாந்த விழாவில் இவர் ஆற்றிய பேருரை, ‘சிவபுராணம்’ என்ற தலைப்பாகவும் தூத்துக் குடி சைவசிந்தாந்த சபை 65 ஆம் ஆண்டு நிறைவு விழாத் தலைமைப் பேருரை, சிறுதுண்டு வெளியீடாகவும், மயிலம் சிவஞானபாலய சுவாமிகள் மணிவிழா மலரில் (1954) வெளிவந்த கட்டுரை ‘ஊழ்வினை’ என்ற தலைப்பாகவும்; தமிழ்ப் பொழிலில் வெளிவந்த கட்டுரை ஒன்று(1930) ‘ஆர்க்காடு’ என்ற தலைப்பிலும் சிறுசிறு வெளியீடுகளாக ஔவை நடராசனால், உரைவேந்தரின் நினைவு நாட்களின்போது வெளிக் கொணரப்பட்டன.

உரைவேந்தரின் பன்னூற் புலமையும் ஆங்கில அறிவும்; ஏடுகள் கல்வெட்டுக்களிலுண்டான மிகுந்த ஈடுபாடும், அனைத்திற்குமேலாக ஆழ்ந்த தமிழ்ப்பற்றும் சைவப்பற்றும் ஆகியன பற்றி இவற்றால் அறியலாம். ஒவ்வொரு நூலைப் பற்றியுமே தனித்தனியாக ஆராய இடனுண்டு. விரிவஞ்சி இவ் இயலில் சுருக்கமாகவே தரப்பட்டது!