உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/சைவசித்தாந்தச் செம்மல்

விக்கிமூலம் இலிருந்து
6 சைவ சித்தாந்தச் செம்மல்


“தத்துவ ஞானத்துறையில் பெரும்புலமை கொண்டு விளங்கிய பேராசிரியர் ‘ஈட்டன் கில்சன்’ என்பார், ‘சிவமாகிய செம் பொருள், தனது உண்மையினை உலகியல் வாழ்வில் சில காலங்களில் நமக்கு உணர்த்துகின்றது’ என்று கூறுகின்றார். ஒருவன் அடுக்கிவரும் இடுக்கண்களால் நெருக்குண்டு, நெஞ்சு சோருங் காலத்துக் கடவுளுண்மை அவன் உணர்வில் காட்சி யளிக்கின்றது. அவன், தன்னந் தனியனாய் இருக்குங்காலும், ஆழ்கடலின் ஆழமும்; மால்வரையின் மாண்பும், வேனிற் காலத்து நள்ளிரவில் விசும்பிடை வயங்கும் விண் மீன் கூட்டத்தைக் காணுங்காலும்,தன் வாழ்நாள் தனக்குரிய எல்லையை நெருங்குங்காலும் செம் பொருளாகிய கடவுள் உண்மை அவன் உணர்வில் தோன்றுகின்றது என்று கூறுகின்றார்!”

இவ்வாறு தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை 65ஆம் ஆண்டுவிழாவின் போது உரைவேந்தர், தமது தலைமைப் பேருரையைத் தொடங்கி, நீண்டதோர் சொற்பொழிவாற்றியதை அனைவரும் பாராட்டினர்.

உரைவேந்தர், சைவக் குடும்பத்தில் தோன்றியவராதலின், இயல்பாகவே சைவசமயப் பற்றுடையவராய்த் திகழந்ததில் வியப்பில்லை. தமிழையும் சைவத்தையும் தமதிருகண்களாகக் கொண்டொழுகிய சான்றோர் இவர். ‘தமிழ்க்கடல்’ எனப் போற்றப்படும் மறைமலையடிகளிடத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட உரைவேந்தரும், அவரைப் போலத் தாமும் தமிழிலும் சைவத்திலும் நிறை புலமை பெற்றுத் திகழவேண்டும் என்று கருதினாராதால் வேண்டும்!

சைவ சமயத்தைப் பற்றித் தாமாகவே படித்து அதன்கண் போதிய புலமையுடையவராக இருந்தபோதும், முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், உரைவேந்தர், கந்தசாமி தேசிகர்பாலும், தவத்திரு. வாலையானந்த அடிகள்பாலும் சைவ சமயக் கல்வியைக் கற்றுத் தெளிந்தார்.

அன்னைத் தமிழின் ஆக்கத்திற்கு எவ்வாறெல்லாம் பாடுபட்டு உழைத்தாரோ, அவ்வாறெல்லாம் சைவ சமயத்திற்கும் உழைத்த பெருமை உரைவேந்தருக்கு உண்டு. ‘சைவ சித்தாந்தம்’ என்பது பெருங்கடல்; அதில் மூழ்கி, நன்முத்துக்களைப் பலர்க்கும் வாரிவழங்கிய அருள் வள்ளல் என்றும் இவரைக் கூறலாம்.

‘சைவசித்தாந்தம்’ என்றதுமே ‘அஃது ஒரு குறிப்பிட்டவர்க்கே உரியது’ என்று சிலர் தவறாக எண்ணுகின்றனர். உண்மையில் அஃதன்று. ‘இறை, உயிர், தளை’(பதி, பசு, பாசம்) எனும் முப்பொருள் உண்மைகளை முறைப்படி உணர்த்துவது. ஆழ்ந்து நோக்கின் தொல்காப்பியம், திருக்குறள்,சங்க இலக்கியங்கள் முதலானவற்றிலெல்லாம் இச் சித்தாந்தக் கருத்துக்கள் இயம்பப் பட்டுள்ளன. இது, மனிதர் அனைவர்க்குமே பொதுவானது.

               “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
                இறைவன் அடிசேரா தார்”

(குறள்:10)

என்று வள்ளுவர் கூறியதற்கு ஏற்ப, இப் பிறவியாகிய பெரிய கடலிலிருந்து விடுபட்டு, இறைவனது திருவடியை எய்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியதுதான் ‘சைவ சித்தாந்தம்’!

‘சைவ சித்தாந்தம்’ என்பதற்கு உரைவேந்தர் தரும் விளக்கமே தனித்தன்மை வாய்ந்தது.

“இத் தொடரைப் பிரித்து நோக்கின், ‘சைவ சித்தாந்தம்’ என்ற இருசொற்கள் தோன்றக் காண லாம். ‘சைவம்’ என்பது ‘சிவசம்பந்தம்’ என்று பொருள்தரும் ‘சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது’ என்பது திருமந்திரம். ‘சிவம்’ என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லாகும். ‘கடவுள்’ என்பது ‘இறைவன்’ என்ற ‘அன்’ ஈற்று உயர்தினைப் பெயராகவும் வழங்கும். அவ்வாறே ‘சிவம்’ என்பது

‘சிவன்’ எனவும் வழங்கும். இறைவன் எனக் கடவுளைக் குறிக்கும் சொற்பொருள், இந்த உலகிலுள்ள எல்லா உயிர்கட்கும் உரியது. எந் நாட்டு எத்திறத்து உயிர்கட்கும் உரியவனாகிய இறைவனைத் தென்னாட்டவரான செந்தமிழர் ‘சிவன்’ என வழங்குவர்... சிவம் என்பதன் பொதுப் பொருள் உண்மையை உணர்ந்தே சயினச் சான்றோரும், கிறித்தவச் சான்றோரும் பேரின்ப நிலையைச் ‘சிவகதி’ எனத் தம் நூல்களில் வழங்கி யிருக் கின்றனர். வேற்றுச் சமயத்தவரும் விரும்பிக் காதலித்து மேற்கொண்டொழுகும் வீறு சிறந்தது ‘சிவம்’ எனும் இந்தச் செந்தமிழ்ச் சொல்!”

இவ்வாறு கூறும் உரைவேந்தர், ‘சிவம் -உயிர்- உலகு’ இவற்றிற்கிடையே உளதாகும் தொடர்பை இனிது விளக்குகின்றார்:


“சிவ சம்பந்தம், சைவம், ஆதலால் சிவத்துக்கும் உயிர்கட்கும் உள்ள சம்பந்தம்-சைவம்; சிவத் துக்கும் உயிரில்லாத உலகிற்கும் உள்ள தொடர்பு - சைவம்; ஆகவே உயிர்கட்கும் அவ் வுலகிற்கும் உள்ள தொடர்பு சைவமாம். உயிரின் வேறாய் அதற்கு நிலைக்களமாய் விளங்கும் உடம்பு உலகியற் பொருளாய் விடுதலால் உயிர்க்கும் உடம்புக்கும் உளதாகிய தொடர்பும் சைவமாம். உயிர்க்கும் உடம்புக்கும் தொடர்பாவது ‘அன்பு’ என்றார் திருவள்ளுவர் ‘சிவம்’ எனக் கண்டார் திருமூலர் இச் சம்பந்தத்தை அறிந்தொழுகும் திரு நெறி ‘சைவம்’ ஆயிற்று. இதனை அளவைகளாலும், பொருந்தும் நெறியாலும், ஆராய்ந்து தெளிந்து முடிவுகண்டு, அன்பர் பணி செய் தொழுகுவது ‘சைவ சித்தாந்தம்’ எனப் படுவதாயிற்று!”


என்பது உரைவேந்தர் தரும் அரியதோர் விளக்கம்!

சைவசித்தாந்தச் செம்மலாக விளங்கிய உரைவேந்தர், சமயமேடைகள் தோறும் சைவ முழக்கமிட்டார் என்பதோடு, சமய - சாத்திர நூல்களையும் எழுதியுள்ளார் என்பது முன்னரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சிவஞானபோதமும் சிவஞானமுனிவர் அருளிச் செய்த சிற்றுரையும்’ என்னும் அரியதொரு நூல், 1953 ஆம் ஆண்டில் வெளி வந்தது. முனிவரது நடை, கடினமானது; இலக்கணச் செறிவுடையது; வடமொழிக் கருத்தும் கொண்டது. இந்த நூலினைப் படிப்பதற்கே சைவப் பெருமக்கள் அஞ்சுவர். அத்தகைய நூலுக்குச் செம்பாகமான குறிப்புரை தந்த பெருமை உரைவேந்தருக்கு உரியது.

இந்நூல் முன்னுரையில் ‘சைவநெறி’ பற்றி அரிய விளக்கம் தருகின்றார் உரைவேந்தர்:

“சிவாகம நெறி பற்றித் தெளிவுபெற்றோர் மேற் கொண்ட ஆகமநெறி ‘சைவ நெறி’ என்றும்; வேத வேதாந்தங்களுக்குத் தம் கலைப்புலமையே துணையாகக் கொண்டு காட்டினோர் காட்டிய வற்றை மேற்கொண்டோரது நெறி ‘வைதிக நெறி’ என்றும் இருவகை நெறிகள் இயலுவவாயின. இவற்றுள் ‘வைதிக நெறி’ வேதமோதும் உரிமை யுடையோர்பாலும், ‘சைவ நெறி’ ஆகமநெறி நின்றோர்பாலும் இருந்து வந்தன! சில காலத்துக்குப் பின்னர், சிற்றறிவினர் சிலர், தமது கலைப் புலமையைப் பெருங்கருவியாகக் கொண்டு, வைதிக நெறியே உயர்ந்தது என்றும்; ஆகமநெறி தாழ்ந்தது என்றும், உண்மை உணர்வுக்குச் சிவாகமங்கள் ஆகா என்றும் குழறுபடை செய்தனர். சமயத் துறையில் இவ்வுயர்வு, தாழ்வு கற்பித்து ஒழுகுவது, புறச் சமயங்கட்கு ஆக்கமாவதையும் அவர்கள் உணராதுபோயினர். புறச்சமயத்தால் ‘கடவுள் ஒருவர் உண்டு’ என்ற கொள்கையும் ஐயப்படுவதாயிற்று! வைதிக ஒழுக்கம் இறந்து படுவதற்கேற்ற இடம் உண்டாயிற்று!... சிவஞானப் பாலுண்டு சைவநெறியை நிலைபெறச் செய்த திரு ஞான சம்பந்தர் முதலிய சான்றோர்கள் தோன்றி, வைதிக நூல்களும் சிவாகமங்களும் இறைவன் அருளிய மெய்ந்நூல்களே என்றும், இரண்டும்

வேறல்ல என்றும் அறிவுறுத்தினர்... ‘வேதாந்தத் தெளிவே சைவ சித்தாந்தம்’ என்று விளம்பினர்!”

மெய்கண்டாரால் அருளப்பெற்ற ‘சிவஞானபோதம்’ நூலுக்குச் சிவஞான முனிவர், ‘குறிப்புரை’ தவிரப் ‘பாடியமு’ம்(அதாவது பேருரை) எழுதியுள்ளார். கற்றுவல்லார்க்கே புரியும்படி அமைந்த உரைகள் அவை. ஆனால் உரைவேந்தரோ, ஆங்காங்கே புரியும் படியான விளக்கம் தருகின்றார்.

முனிவர், “கடவுளை ‘அந்தம்’ என்றது ‘உபசாரம்’ என்பார். உரைவேந்தரோ, “உபசாரமாவது, காரண காரியங்கள், குண குணிகள், பொருள் வினைகள், பொருளிடங்கள்,சினைவினை முதல் வினைகள், பண்பு புலன்கள் ஒன்றினொன்று மாறிவரும் இலக்கண விசேடம்!” என்று விளக்குவார். இப்படி, நூல் முழுவதும் காணலாம்.

உரைவேந்தர், மதுரையில் நடந்த சைவசித்தாந்த சமாச ஆண்டுவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவை, ‘ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை’ என்னும் நூலாகத் தருமை ஆதீனம் வெளியிட்டுள்ளது.(1945)

திருஞான சம்பந்தப் பெருமானின் தோற்றம் குறித்துக் குறிப்பிடுமபோது,

“பகவதியார்(சம்பந்தரின் அன்னை) இவரைக் கருக் கொண்டிருந்த போதே, தம் நினைவு செயல் முழுவதும் சிவபரம்பொருளின் திருவருளிலே ஈடுபடுவதாயிருந்தனர்.... ஞானசம்பந்தப் பிள்ளை - யாரை மனங்குளிரப் பெற்றுப் பாலூட்டியபோதும், அப் பகவதியார், சிவபெருமான் திருவடிக்கண் பதித்த அன்போடு பாலூட்டினார்!”

என்று கூறியதனோடமையாது, உரைவேந்தர், வரலாற்றுச் சான்றொன்றையும் தருகின்றார்:


“ஒரு தாய், கருவுற்றிருக்குங் காலத்தே, எத்தகைய நினைவு, செயல்களை மேற்கொள்ளுகின்றாளோ,

அவற்றிற்கேற்பவே அவள் வயிற்றிற் பிறக்கும் குழந்தையின்பால் அத்தகைய நினைவு செயல் கட்குரிய குணஞ்செயல்கள் உண்டாகும் என்று இக்காலத்தறிஞர் கூறுவர். மேனாட்டில், முற் காலத்தில் நிகரற்ற வீரனாய்த் திகழ்ந்த நெப் போலியன் என்பானை, அவன் தாய் கருவுற்றிருந்த போது, உயரிய வீரர் வரலாறுகளைப் படித்துக் கொண்டிருந்தாள்; அதனால் அந்த நெப்போலியன், உலகு முற்றும் உட்கத்தக்க உயர்வீரனாய் விளக்கமுற்றானென்று சான்றும் காட்டுவர்...!”

இதனைப் படிக்கும் தாய்மார்கள், மகப்பேறு காலத்தில் தாமும் நன்னெஞ்சமுடையோராய், நல்ல சைவ நூல்களில் மனத்தைச் செலுத்துவோராய் விளங்குவரன்றோ?

‘சிவஞானபோதம்’ அருளிய மெய்கண்டாரைப் பற்றியும், ‘சைவ சித்தாந்தம்’ பற்றியும் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், இதோ உரைவேந்தர் கூறுகின்றார்:

“தத்துவஞானமும் சமயஞானமும் ஒன்றுக்கொன்று படிமுறையில் இருப்பது கண்டே, ‘மெய்கண்ட தேவர்’ தாம் அருளிய சிவஞான போதத்தில் முன் ஆறு சூத்திரங்களால் ‘தத்துவ ஞானமு’ம்; பின் ஆறு சூத்திரங்களால் ‘சமய ஞானமு’ம் வழங்கியுள்ளார்... “நம் தமிழ்நாட்டில் திருமூலர் கால முதலே இரண்டும் ஒன்றாய்ப் பிரிப்பறப் பிணைந்து வந்திருக்கின்றன. இடைக்காலத்தே முதலில் சமய ஞானமும், பின்னர்த் தத்துவஞானமும் சிறப்பு நிலை பெற்றன. ஞான சம்பந்தர் முதலிய சமய குரவர் காலத்தில், சமய ஞானமும், மெய்கண்டார் முதலிய சந்தான குரவர் காலத்தில், தத்துவ ஞானமும் சிறப்புற்று நின்றன என்பது வரலாறு அறிந்தோர்க்குத் தெரிந்த செய்தி

யாகும்”!

என்று இவ்விரு ‘ஞானம்’ பற்றிக் கூறும் இவர்,

“இறைவன், உயிர், உலகிற்கு முதற்காரணமாகிய மாயை என்ற மூன்றும், அனாதி நித்தியப் பொருள்- கள் எனவும்; இறைவனாகிய சிவம், தன் சத்தி சங்கற்பத்தால் மாயையைக் கலக்கி, உடல், கருவி, உலகுகளாகச் செய்வது ‘படைப்பு’ எனவும்; உயிர் கள் அனாதியே மலத்தொடக்கு உடையவை எனவும்; மலத்தின் மறைப்பு நீங்குதற் பொருட்டு உடல் கருவிகள் படைக்கப்படுகின்றன எனவும்; ‘உயிர்கள் பல’ எனவும்; பல எனவே உயிர்கள் ஒன்றினொன்று வேறு பாடுடையவெனவும்; வேறு பாட்டுக்கேற்பப் பிறப்புவேறுபடுகின்றனவெனவும்; உயிர்கட்கு அறிவு, விருப்பு,தொழில் என்ற மூன்று ஆற்றல் உண்டெனவும்; அவற்றைத் தொழிற் படுத்தி உண்மை ஞானம் எய்துதற் பொருட்டே உலகத் தொடர்பு உயிர்கட்கு உண்டாகிறதெனவும்; இங்ஙனம் உயிர்கட்கு உதவும் வகையில் சிவபரம் பொருள் உயிரோடு உடனாய் இருக்கின்றது எனவும் நம் சைவசித்தாந்தம் கூறுகிறது!”

என்று சிவஞான போதத்தின் திரண்ட கருத்தை - சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையை இனிதெடுத்துரைக்கும் இவரின் திறமே திறம்!

உரைவேந்தர், சைவசித்தாந்தத்தை மிகமிக எளிய முறையில், சாதாரண அறிவு படைத்தோரும் தெரிந்து கொள்ளுமாறு இனிய சான்றுகளால் விளக்குவதில் வல்லவர். பல்வேறு ஊர்களில், ‘சிவஞான போத’த் தைப் பல நாட்கள் தொடர்ந்து பாடமாகவும் நடத்தியுள்ளார்.

“சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கிச் ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப் பட்டத்தை அறிஞர் வழங்கிச் சிறப்பித்தனர்!”

என்று வ.சுப. மாணிக்கனார் போற்றுவர். ‘சைவசித்தாந்தச் செம்மலா’க விளங்கிய உரைவேந்தருக்குக் ‘கலாநிதி’ முதலான எத்துணைப் பட்டங்கள் கொடுத்தாலும் தகும், தகும்!