உள்ளடக்கத்துக்குச் செல்

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை/நிறைப்புகழ் எய்திய உரைவேந்தர்

விக்கிமூலம் இலிருந்து

7
நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

“இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து
வரவு செலவறியான் வாழ்வில்-உரமுடையான்
தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே
முன்கடன் என்றுரைக்கும் ஏறு!”


என, உரைவேந்தரின் தெள்ளுதமிழ்த் தொண்டு குறித்துப் பாராட்டுகின்றார் பாவேந்தர் பாரதிதாசனார்.

பொதுவாக, ஒருவர் வாழ்ந்து மறைந்த பின்பே, அன்னாரைப் போற்றுவதும், சிலையெடுப்பதும், தமிழர்களின் நீண்ட நாட் பழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்நிலை மாறி, வாழும் காலத்திலேயே சீரும் சிறப்பும் செய்து போற்றும் நிலை வந்துள்ளது! உரைவேந்தர், தாம் வாழ்ந்த காலத்திலேயே பெரும்புகழ் எய்தியவர்! அதற்குப் பல காரணங்கள் உண்டு.

எளிய குடும்பத்தில் பிறந்தவர்தாம் உரைவேந்தர்; ‘இடைக்கலை’ வகுப்பைத் தொடர்ந்து முடிக்க முடியாத வீட்டுச் சூழலிலும், மனம் தளராமல், கரந்தை சென்று, தமிழ் பயின்று, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என்றெல்லாம் படிப்படியாகப் பணிபுரிந்தவர் என்பது முன்பே சுட்டப்பட்டது! பொருள் வருவாய் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அவரது வாழ்வு, வேறுதிசையில் திரும்பியிருக்கும். குடும்பமோ மிகப்பெரியது; வருவாயோ போதிய நிலையில் இல்லை. நாள் ஒன்றுக்குப் பல நேரம் இரவு கண்விழித்து எழுதி எழுதிக் கையும் தேய்ந்துபோனது; பேருரைகள் பல எழுதிய அறிஞர்களின் வாழ்க்கையைக் கவனித்தால், அவர்களில் பலர், பணி ஏதும் பார்க்காமல், இரவு பகல் முழுவதுமே வீட்டிலிருந்து எழுதியவர்கள். ஆனால், உரைவேந்தரோ, தாம் ஓய்வு பெறுங்காலம் வரை, பணியிலிருந்து கொண்டே, தமது கடமை தவறாமலேயே, ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்த மாண்பாளர். இதற்கெல்லாம் இவருக்கு உறுதுணையாக இருந்த பெருமை துணைவியார் உலோகாம்பாளுக்கு உரியது. ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்று வள்ளுவர் மொழிந்த சொல்லுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தமையால்தான், வீட்டுக் கவலையை அத்துணையளவு பொருட்படுத்தாமல், தொண்டு செய்ய இவரால் முடிந்தது. மதுரைத் தியாகராசர் கல்லூரிப் பணிக்கு வந்த பிறகே இவரது பொருளாதார நிலை, சிறிது உயர்ந்தது எனலாம். ஆலை அதிபர் கருமுத்துச் செட்டியாரின் கருணை உள்ளமும், அருட்செலவர் நா. மகாலிங்கனாரின் பேருதவியும், பிற்காலத்தில் உரைவேந்தருக்குக் கிடைத்தன எனலாம். பெற்ற பிள்ளைகள் அனைவருமே உயர்கல்வி கற்பதற்கும் வழிவகுத்தவர். இறுதிக் காலம் வரை கடுமையாக உழைத்தார் உரைவேந்தர்.


“பிள்ளையவர்கள், உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு. அவர் வாழ்வு ஓயா உழைப்பினால் உருவானது... ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில் எளிய குடும்பம் ஒன்றில் தோன்றினார். இளமையில் பல்வேறு இன்னல் இடையூறு - கட்கிடையில் உழைத்துப் படித்து, இண்டர் மீடியட் முதலாண்டு மட்டும் பயிலத் தொடங்கித் தொடர்ந்து படிக்கக் குடும்ப நிலை இடந்தரவில்லை... இயற்கையில் அறிவும் ஆற்றலும் சிறக்கப் பெற்ற இளைஞராகிய பிள்ளையின் வளமை கண்ட தமிழன்னை அவர்மீது தன் அருள் நோக்கைச் செலுத்தி அவரை ஆட்கொண்டாள். அவர் உள்ளத்தில் தமிழார்வம் ஊறிச் சுரக்கலுற்றது!”


என்று, மாணவர் ம.வி. இராகவன், உரைவேந்தரின் தொடக்க கால வாழ்வைச் சித்திரிக்கின்றார்.

‘இடைக்கலை’ வகுப்பில் ஓராண்டே படித்தார்; என்றாலும், அப்போது படித்த ஆங்கில அறிவைத் தம் உழைப்பினால், மென்மேலும் வளர்த்துக் கொண்டார். பெரும்பாலான தமிழாசிரியர்க்கு வாய்க்காத ஒன்று இது. அவ்வாறு அவர் ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டதால்தான், தாம் எழுதிய நூல்களிலெல்லாம் ஆங்கில நூற்கருத்தை மேற்கோளாகக் காட்ட முடிந்தது!

கடுமையான உழைப்பு ஒருபுறமிருக்க, உயர்ந்த பண்புகளைக் கொண்டொழுகிய சான்றோர் என்றும் கூறலாம். அவரது வாழ்வு, எளிமையிலும், வளமை கண்ட வாழ்வு! குறைந்த வருவாயைக் கொண்டு நிறைந்த உள்ளத்தோடு, நேர்மை தவறாமல், சங்ககாலப் புலவரைப் போல், நிமிர்ந்து வாழும் நெறியாளராகத் திகழ்ந்தவர். உடுத்தும் உடையோ மிக மிக எளியது; எட்டு முழ வேட்டி ‘ஜிப்பா’ எனும் நீண்ட கைச் சட்டை; பையில் ஒரு பொடிடப்பா; முகத்தில் கண்ணாடி; சிறிதே வளர்ந்து காணப்படும் தலைமுடி. எளிய உடை என்றாலும் எடுப்பான தோற்றம்! கவலை சிறிதுமின்றி எப்போதும் கலகலப்பாகச் சிரித்து உரையாடும் சிறந்த பண்பு! வாழ்வு எளிமையே எனினும், புலமைத்திறமோ மிகமிக வலியது! அதனால், எந் நிலையிலும் தம் கொள்கைகளை விட்டுக் கொடுக்கவோ, கருத்துக்களை மாற்றிக் கொள்ளவோ ஒரு போதும் இசையமாட்டார்!

இவ்வாறு, உரைவேந்தர், கடல் போன்ற கல்வியாளரானாலும் தருக்கோ, தற்பெருமையோ, தலைகாட்டக் கண்டாரிலர். தன்னடக்கத்திலும், நன்னடக்கையிலும், ‘ஆன்றவிந்தடங்கிய சான்றோர்’ வரிசையில் வைத்து மதிக்கத் தக்க மாண்பினர். ‘அச்சம்’ என்பது இவர் அறியாத ஒன்று. ‘அவையஞ்சாமை’ இவருக்குக் கருவிலே வாய்த்த ‘திரு’!

உரைவேந்தரின் உயர்வுக்கும் புகழுக்கும் அவர்பால் அமைந்திருந்த நற்பண்புகளும் காரணம் எனலாம்.

                 “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
                  செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

(குறள்-110)

எனச் செய்ந்நன்றியின் சிறப்பை ஆணித்தரமாக எடுத்துரைப்பார் வள்ளுவர். இத்தகைய ‘செய்ந்நன்றியறிதல்’ உரைவேந்தரிடம் காணப்பட்டமைக்குப் பல நிகழ்ச்சிகள் கூறலாம்.

தொடக்க காலத்தில் கரந்தைத் தமிழ்ச்சங்கமும் அதன் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரும் உரைவேந்தர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.


“கரந்தைத் தமிழ்ச்சங்கம் என் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி, வளமான புலமைக்கும் நலமான வாழ்வுக்கும் வழிகோலியது. கரந்தையில்

மூவர் எனக்கு உறுதுணை யாயினர். ஒருவர், என்னைப் போற்றிப் புரந்த-தமிழவேள்; மற் றொருவர் என் பேராசான் ‘கரந்தைக் கவியரசு’; மூன்றாமவர், என் வாழ்விலும் தாழ்விலும் பங்கேற்று நானும் எனது நிழலும் போல, நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும் உள்ளத்தால் இணைந்திருந்த சிவ. குப்புசாமிப் பிள்ளை(இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆசிரியர்)


என்பது உரைவேந்தர் கூற்று.

தன்னை ஈன்ற அன்னையார் இறந்தபோது கூடக் கண்ணீர் சிந்தாத உரைவேந்தர், தமிழவேள் உமாமகேசுவரனார் வடபுலப்பயணம் மேற்கொண்டபோது, ‘பைசாபாத்’ என்னுமிடத்தில் திடீரென இயற்கை எய்தினார் என்று கேட்டதுமே கண்ணீர் சிந்தித் தன் உள்ளத்திலிருந்த துயரை வெளிக்காட்டினார். அப்போது உரைவேந்தர் பாடிய இரங்கற்பாக்களில் ஒன்று:

                         “தாயாகி உண்பித்தான்; தந்தையாய்
                                அறிவளித்தான்; சான்றோ னாகி
                          ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான்;
                                அவ்வப்போதயர்ந்த காலை,
                          ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்;
                                 இனியாரை யுறுவேம்; அந்தோ!
                          தேயாத புகழான்தன் செயல் நினைந்து
                                 உளம்தேய்ந்து சிதைகின் றேமால்!”

அன்றியும், உமாமகேசுவரனாரின் நினைவை என்றும் போற்றும் வகையில் ‘உமாமகேசுவர விரதமும்’ கடைப்பிடித்து வந்தார் உரைவேந்தர்.

தமது ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த கல்வெட்டுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார்க்கும், வித்துவான் க.வெள்ளை வாரணனாருக்கும் நன்றி கூறுவார். மேலும்,

“அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து பணிபுரிந் தொழுகிய எனக்குப் பல நல்ல வசதி யினைச் செய்து என் தமிழ்ப் பணிக்கு வேண்டும்

ஆதரவும் அன்பும் நல்கும் மதுரை மீனாட்சி மில் உரிமையாளர் பெருந்தமிழ்ச் செல்வ வள்ளல் உயர் திரு. கருமுத்து. தியாகராசச் செட்டியார் அவர்களது பெருநலம், புலவர் பாடும் புகழுடையதாகும்”

(புறநா. உரை)

என்று கருமுத்துச் செட்டியாரின் உதவியையும் நன்றியுடன் போற்றுகின்றார். தக்க அறிஞர்களைப் பாராட்டும் பண்பும் உரைவேந்தர்பால் உண்டு!

“சங்க இலக்கியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற நூற்றொகுதி என்பது இன்று யாவரும் அறிந்தது. நெடுங் காலம் வரை ஏட்டிலிருந்த இவற்றை அச்சேற்றி வெளியிட்ட அறிஞருள் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் தலையாயவர்”

(கட்டுரை: சங்க இலக்கியத் தனிச்சிறப்பு)

என்று உ.வே.சா. வைப் போற்றுவார்!

உரைவேந்தரின் ‘ஞானவுரை’ நூலுக்கு ஆங்கிலத்தில் ஓர் ‘அணிந்துரை’ வழங்கியர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியாராவர்! அவரைப் பற்றி இந்நூல் முன்னுரையில்,


“சென்னை இந்து அறநிலைய ஆணையாளராய் இருந்து சமயப் பணியும் தமிழ்ப் பணியும் மேன்மையுற்றுச் சிறக்கவும், திருக்கோயில்கள் செம்மையும் தூய்மையும் எய்தி, வழிபாடியற்றவரும் நன்மக்கட்கு வழிபாட்டிலும், திருவருட் பேற்றிலும் உள்ளம் நன்கு சென்று திளைக்குமாறு, பெருநலங் கொண்டு விளங்கவும், ஏற்புடைய பல நன்முறை - களை வகுத்தவரும், தமிழாராய்ச்சியும் சமயப் பணியும் தம் வாழ்வின் உயரிய நோக்கமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் பல புரிந்து வருபவர் - களுமான சைவத் திரு. ராவ்பகதூர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார்...!

என்று பாராட்டுகின்றார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், உரைவேந்தர், பணி புரிதற்காக முயற்சி செய்தவர் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்! இதனை அறிந்த உரைவேந்தர், கழக ஆட்சியாளர் வ.சுப்பையா பிள்ளைக்கு எழுதிய மடல் ஒன்றில், ‘அருளண்ணல் நம் அருமைப் பண்டிதமணியர்வர்களே...!’ என்று போற்றுதலைக் காணலாம்.

தம்மைவிட அனுபவத்திலும், புலமைத் திறத்திலும் சிறியவராயிருந்தாலுங்கூடத் தமிழ்த்தொண்டு புரிபவராயின், அவரைப் பெரிதும் பாராட்டி ஊக்குவிக்கும் உயர் பண்பும் உரைவேந்தர்பால் உண்டு:

ச.சாம்பசிவனார். பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்துபோது, ‘தமிழிலக்கியத்தில் நெய்தல் திணை’ என்றதோர் ஆராய்ச்சி நூலினை எழுதினார். அது 1964ஆம் ஆண்டில் வெளிவந்தது. அந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய உரைவேந்தர், பாராட்டும் பண்பை இயற்கையாகவே கொண்டிருந்த காரணத்தால் நூலின் சிறப்பை ஆறு பக்க அளவில் விளக்கி, இறுதியாக,


“நெய்தலிற் காணப்படும் உயிரினங்களையும், பிறவற்றையும் தனித்தனியாகக் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமான செயலாகும். சிறந்த தமிழாசிரியராதலால், மாணவர்களும் பிறரும் பொருளியல்பை நன்கு உணரத்தக்க வகையில் எடுத்துரைக் கின்றார்....இயற்கை உயிர்களின் இயல்பு கூறற்கண்ணும், உரிப் பொருளின் உயர்ந்த கருத்துக்களை விளக்குதற்கண்ணும் நண்பர் திரு. சாம்பசிவம், எளிய முறையில் யாவரும் நயந்து மகிழுமாறு இனிமை கமழ எழுதுவது அவரது புலமை நயத்தை நன்கு வெளிப்படுத்து கிறது. இதனைக் காணும் என் உள்ளம் இவர் ஏனைத் திணைகட்கும் இவ்வாறு எழுதவேண்டுமென விரும்புகிறது!”

என்று கூறுவது, இவரின் உயரிய பண்பைக் காட்டுவதாம்!

தமிழ்ப் பேராசிரியர்கட்கும், தமிழ்த் தொண்டு செய்பவர்கட்கும் பேருதவி புரிவதிலும் தலைசிறந்தவராக விளங்கியவர் உரைவேந்தர்.

உரைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது, பேராசிரியர் கா.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். திடீரென்று அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது; எனவே 1-7-1944 இல், அவர் பணியினின்று விலக வேண்டியதாயிற்று. அவரது உடல்நிலைக்குப் பெரிதும் இரங்கிய உரைவேந்தர், கழக ஆட்சியாளர் வ.சுப்பையாபிள்ளைக்கு ஒரு மடல் வரைந்தார். அதில்,


‘அவர்கட்கு(கா.சு. பிள்ளை)ச் சிறிதுநேரம் பேசவோ, எழுதவோ,நடக்கவோ முடியாது. கைநடுக்கம் மிகுதியாய் விட்டது. அவரைக் காணுந்தோறும் கவலை பெரிதாகிறது. அவர்கள் தாம் இப்போதிருக்கும் நிலையில் எங்கே போவது? எவ்வாறு வாழ்வது? என்ற கவலையில் செய்வ தறியாது திகைத்த வண்ணம் இருக்கின்றார். சிதம்பரத்தை விட்டுப் போவதற்கே உடல் இடந் தருமோ என்ற கவலையும் அச்சமும் அடைகின்றார்!”

என்று இன்னும் பல செய்திகளை மிக்க வருத்தத்துடன் எழுதியிருந்தார். கழக ஏற்பாட்டின்படி, கா.சு.பிள்ளையை அழைத்துக் கொண்டு, உரைவேந்தர் நெல்லையிற் சேர்ப்பித்தா ரெனில் உரை வேந்தரின் காலத்தினாற் செய்த உதவிக்கு ஈடு சொல்ல இயலாது!

தமிழவேள் பி.டி. இராசனார், ‘அறநெறியண்ணல்’ கி. பழநியப்பனார் ஆகியோரின் நட்புக்குரியவராக விளங்கியவர் உரைவேந்தர். அவர்கள் இருவரும், கோலாலம்பூரில் நடந்த, ‘முதல் உலகத் தமிழ் மாநாட்’டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பேராளராகக் கலந்து கொண்டனர். மாநாட்டில், தமிழவேள், கட்டுரை ஒன்று வழங்க முடிவு செய்திருந்தார். ‘தமிழ்நாட்டில் பெண்கள் நிலை’ (Status of Women in Tamilnadu) என்பது, ஆய்வுத் தலைப்பு. இதைச்சிறந்த முறையில் தயாரிக்க எண்ணிய தமிழவேள், பி.டி.இராசனார், உரைவேந்தரையும், சாம்பசிவனாரையும் தமது மாளிகைக்கு வரவழைத்துத் தமது கருதுக்களைக் கூறி, இதற்கு முழு வடிவம் தரவேண்டுமென்றார். அவ்வாறே பல நாட்கள் முயன்றதன் பயனாகக் கட்டுரை உருப்பெற்றது. மாநாட்டின்போது பலராலும் பாராட்டப்பெற்றது!

சிவஞான முனிவர், மறைமலையடிகளார் போன்ற சான்றோர்கள்பால் அளவிறந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் உரைவேந்தர். எனினும் அவர்களுடைய உரையில் தவறு என்று தமக்குத் தெரிந்தால் நயம்பட மறுப்பது உயர் பண்பாகும்.

சிவஞானபோதச் சிற்றுரையில், ஓரிடத்தில், சிவஞான முனிவர், ‘மான் என்பது வடசொல் திரிபு’ என்பார். இதனை உரைவேந்தர் மறுக்கும் திறம் வருமாறு:

“மஹான்’ என்னும் வடசொல், ‘மான்’ எனத் திரிந்தது என்பார். ‘வடசொற் றிரிபு’ என்றார். பெருமையுணர்த்தும் ‘மா’ என்னும் தமிழ்ச்சொல்’ ‘னகர’ வீறு பெற்றுப் ‘பெரியோன்’ என வந்த வகையினை இவ்வுரைகாரர்(முனிவர்) மறந்துபோய் இவ்வாறு கூறுகின்றார்!”

‘சிவஞானபோதம்’ அருளிய மெய்கண்டாரின் தந்தையார் அச்சுதக்களப்பாளர் என்பது முன்னரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைக் குறித்துக் கூறவந்த மறைமலையடிகளார்,

“திருவெண்ணெய் நல்லூரில் அந்நாளில் சடையப்ப வள்ளல் என்பார் வாழ்ந்தாராதலின் சிறப்புடைய அவருடைய மகளையே நம் அச்சுதக் களப்பாளர் மணந்து கொண்டார்!”

என்பார்.இதனை உரைவேந்தர்,

“திருவெண்ணெய் நல்லூரில் சடையப்பர் வாழ்ந்த காலம், மெய்கண்டார் காலத்துக்குப் பெரிதும் முற்பட்டதாகலின், அடிகள் கூற்றுப் பொருந்து வதாக இல்லை!”

(சிவஞான போதச் சிற்றுரை-குறிப்புரை)

என்று நயமாக மறுக்கின்றார்!

‘பணியுமாம் என்றும் பெருமை’, ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பன வள்ளுவர் வாய்மொழிகள் உரைவேந்தரிடம், பணிவும் உண்டு; அடக்கமுடைமையும் உண்டு.

தூத்துக்குடி சைவசித்தாந்த சபை, மிகமிகப் பழைமை வாய்ந்தது. தென் தமிழ்நாட்டில் தமிழையும் சைவத்தையும் பரப்புவதில் பெருமை பெற்றது. அதன் 65ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை யேற்றபோது, தமது முன்னுரையில்,

“யான் தமிழறிவும் சைவவுணர்வும் பெற்ற நாள்முதல் இச் சைவ சித்தாந்த சபையின் நிகழ்ச்சி களையும், இதன் ஆண்டு விழாக்களில் தலைமை தாங்கிச் சிறப்பித்த சான்றோர்களின் சால்புகளையும், இதன் உறுப்பினர்களின் தமிழன்பு சைவ மெய்த் திருவுடைமைகளையும் நினையும் போதெல்லாம் நேரிற் பன்முறை கண்டறிந்துள்ள என் நெஞ்சம் இத்தலைமைப் பணிவந்த போது ஏற்றற்கு அஞ்சுதலே செய்தது. பெரும்பணி எய்தவரும் போழ்து அதன் பெருமை, முன்னே தோன்றும். அது, காண்பவர் உள்ளத்தில் அச்சம் தோன்றும். அஃது இயல்பு. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. சுருங்கச் சொல்லுமிடத்து அச்சத்தோடு இப்பணியை மேற்கொள்ளுகின்றேன்!”

என்று அடக்கத்துடனும் பணிவுடனும் கூறியவரே எனினும், ஏறத்தாழ முக்கால் மணிநேரத்திற்கும் குறையாமல் பேருரை யாற்றியுள்ளார்.

அனைத்திற்கு மேலாக, ஆழ்ந்த சமயப் பற்றுடையவர் உரைவேந்தர் என்பதை அவருடைய நூல்கள் பறைசாற்றும். பெரும்பாலான நூல் முன்னுரை மூலம் இவரின் இறைப்பற்றை உணரலாம்.

“...அறிவு, செயல் வகைகளில் ஒருபொருளாகாத எளியனாகிய என்னை, இப்பெரும் பணியில் ஈடுபடுத்தி, இயலும் தொண்டினைப் புரிதற்கு வாய்ப்பளித்து, எனது எண்ணத்தில் என்றும் அகலாது நிலவும் அங்கயற்கண்ணி தன்னோடும் அமர்ந்த ஆலவாய் அண்ணலின் திருவடிகளை மனமொழி மெய்களால் பரவுகின்றேன்!”

(சிவ. சிற்றுரை-குறிப்புரை)

என்று கூறுவது எண்ணத்தகும்.

உரைவேந்தர், கண் மூடித்தனமான பழக்கவழக்கங்கட்கு ஒருபோதும் ஆட்பட்டதில்லை. சைவநெறியில் ஆழ்ந்து தோய்ந்தவரே யெனினும் அதனையும் அறிவியல் கண்கொண்டே ஆராய்ந்து, உண்மை வெளிப்படுத்தியவர். இத்தகைய உள்ளம் கொண்டவராயிலங்கியமையால், தந்தை பெரியாரிடமும் ஈடுபாடு கொள்ள இவரால் முடிந்தது.

‘இன எழுச்சிக்குப் பாடுபட்டுவரும் தமிழின முனிவர்’ என்று பெரியாரைக்குறிப்பிடும் உரைவேந்தர், போளூரில் பணிபுரிந்தபோது, பெரியாரின் படம் ஒன்றினை வாங்கிக் கண்ணாடிச் சட்டமிட்டுச் சுவரில் மாட்டியிருந்தார். அவ்வூரினின்றும் மாறுதல் பெற்றுப் போகும் போது, அப்படம் தவறி உடைந்து விடக் கூடாதே என்ற உயர் நோக்கத்தால், அவ்வூரில் சோடாக்கடை வைத்திருந்த மாணிக்கம் என்பவரிடம் ஒப்படைத்துச் சென்றார்.

அனைத்திற்கு மேலாக ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ எனும் குறள் நெறிப்படி வாழ்ந்து காட்டிய நல்லொழுக்க சீலர் இவர் என்பதும் குறிப்பிடத்தகும்.

உரைவேந்தர்பால் இத்தகைய உயர் பண்புகள் குடிகொண்டிருந்தமையால்தான், தாம் வாழ்ந்த காலத்திலேயே, பட்டங்களையும், பாராட்டுக்களையும் பெற முடிந்தது.

உரைவேந்தர், பல்வேறு தமிழ் அமைப்புக்கள், ஆதீனங்கள் முதலானவற்றில் உறுப்பினராக அல்லது தலைவராக இருந்து தமிழ்த் தொண்டுக்கும் சைவத் தொண்டுக்கும் ஆக்கமளித்த சிறப்பினர். தருமையாதீனப் புலவர்; தமிழகப் புலவர் குழு உறுப்பினர். மதுரைத் திருவள்ளுவர் கழகம், தமிழ் எழுத்தாளர் மன்றம், இவற்றில் பொறுப்பான பதவிகள் வகித்தவர். இவரிடம் பயின்ற மாணவர்களில் பலர் உயர் பதவிகளில் உள்ளனர். புகழ்பெற்ற கவிஞர்களும் உண்டு.

உரைவேந்தருக்கு, இயல்பாகவே ஊர்ப்பெயரால் ‘ஔவை’ எனும் பெயர் அமைந்தது. ஔவையாராக நடித்துப் புகழ் பெற்ற நடிகர் டி.கே.சண்முகம், ‘ஔவை சண்முகம்’ எனப் பெயர்பெற்றது நாடறிந்த உண்மை. உரைவேந்தர், கவிதை பாடுவதிலும் வல்லவரே! அவ்வப்போது அரிய கவிதை பல யாத்துள்ளார். ஆயினும் இவரது உள்ளம், உரைநடை எழுதுவதிலே- ஆராய்ச்சி செய்வதிலேதான் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது! ‘ஔவையார்’ என்னும் புலவரைப் போல் உரைவேந்தரும் தமிழ்ப்புலமை நலம் சிறக்கப் பெற்றிருந்தமையால், ‘ஔவை துரைசாமிபிள்ளை’ என்று பலரும் போற்றத் தலைப்பட்டனர். இது குறித்து அவரின் மாணவரும் நல்ல கவிஞருமான மீ. இராசேந்திரன் (மீரா) பாடிய கவிதை அற்புதமானது:

                  
                       “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால்
                              அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே
                         புதியதொரு ஆண்ஔவை’ எனவி யப்பான்!
                               பூரிப்பான்; மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர்
                         அதிமதுரக் கருநெல்லிக் கனிகொ ணர்ந்தே
                               அளித்துங்கள் மேனியினைக் காதலிக்கும்
                         முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி
                                மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்தி ருப்பான்!”

கற்பனை நயம் செறிந்த புகழ்ப் பாட்டு இது!

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடத்துப் பெருமதிப்புக் கொண்டவர் உரைவேந்தர். அதனால் கவிஞர் எழுதிய ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் குறுங்காப்பியத்தின் சிறப்பினை ஆராய்ந்து, பாவேந்தரைப் பாராட்டிப் ‘பாரதிதாசன் மலரில்’ கட்டுரை எழுதியுள்ளார். அவ்வாறே புரட்சிக் கவிஞரும், உரைவேந்தர்பால் அளவற்ற மதிப்புக் கொண்டிருந்தார். ஒரு முறை நாகர்கோயிலில், ‘புலவர் குழு’ கூடியிருந்தது. பாரதிதாசன், தம் நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தார். அப்பக்கமாக உரைவேந்தர் வரக் கண்ட கவிஞர், தம் நண்பர்களிடத்து, ‘தமிழ் மணம் வீசுகிறதே...ஓ!..... ஔவை துரைசாமி பிள்ளையவர்கள் வருகிறார்களோ?’ என நகையும் உவகையும் கலந்து பாராட்டினார்!

“பள்ளிமுதல் பல்கலைச்சாலைவரைபாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடை மழை-வெள்ளத்தேன் பாயாத ஊருண்டோ! உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்!”

என்று. வாயார வாழ்த்துகின்றார் புரட்சிக் கவிஞர்!

மூதறிஞர் முனைவர் வ.சுப.மாணிக்கனார்,

“கடவுட் பற்றும், சைவத்தெளிவும், பொது நோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், முதுமை மறப்பிக்கும் இளைய வீறுபெற்று இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரை கண்ட பெருஞ்செல்வம்-தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணாச்-

செல்வமாகும். நூலுரை-திறனுரை- பொழிவுரை என முவ்வரம்பாலும் தமிழ்க்கரையைத் திண்ணிதாக்கிய உரை வேந்தர் ஔவை துரைசாமி நெடும்புகழ் என்றும் நிலவுவதாக!”

என்று போற்றிப் புகழ்கின்றார்!

“சென்ற நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்குத் துணைபுரிந்தவர் ஔவை துரைசாமி அவர்கள். தம் காலத்து மக்களிடம் தமிழ் சிறந்தோங்க உழைத்தவர்”

என்று முன்னாள் துணைவேந்தர் சை.வே.சிட்டிபாபு பாராட்டுகின்றார்.

        “ஆசிரியப் பணியாலே இளைய ரெல்லாம்
             அறிவோடும் ஆற்றலொடும் வாழ வைத்தார்!
         பேசுகின்ற திறனாலே தமிழர் நெஞ்சில்
             பிறங்குமொரு தனியிடத்தில் அமர்ந்து கொண்டார்!
         நேசமிகும் உளத்தாலே எந்தப் போதும்
             நீலமணி மிடற்றானைத் தொழுதி ருந்தார்!
         வாசமுறு நற்றமிழே உயிராய் எண்ணி
             மாசறியாப் பொன்னேபோல் வாழ்ந்தி ருந்தார்!”

என்பது திருமதி செளந்தரா கைலாசத்தின் புகழ்க் கவிதை.

               “எழுத்தினொடு பேச்சாலும் இனியதமிழ்
                     சிவநெறியென் றிரண்டும் எங்கும்
                முழக்கிவரும் நாவலனே! முடுக்குமிகு
                     தமிழ்வீறு முதிர்ந்த வீர!”

என ந.ரா. முருகவேளும்,

“வாயில் தமிழ்முழக்கம் வாழ்வில் தமிழியக்கம் பாயில் துயில்போதும் பைந்தமிழே-நோயில் படுப்பினும் பண்டமிழின் பண்பார் பணிசெய்து

எடுத்ததுரை சாமிபுகழ் ஏற்று!”

எனக் கவிஞர் தி.நா அறிவொளியும்,

                               “உரையும் பாட்டும் உடையவராய்
                                      உள்ளந் தன்னில் ஆட்சிசெயும்
                                உரையின்வேந்தர் புகழ்பாடி
                                      உள்ளத் துவகை கொள்வோமே!”

என்று மகாவித்துவான் ம.அமிர்தலிங்கனாரும்,

                             “சங்கநூற் கடலில் தோய்ந்தெழு கொண்டல்
                                   சைவசித் தாந்தத்தின் திலகம்;
                              மங்கலத் தமிழ்த்தாய் இதயத்தை மலர்த்தும்
                                   வான்சுடர், வள்ளலார் நூலின்
                             இங்கிதம் தேரும் அஞ்சிறைத் தும்பி
                                   இமயத்தைப் புலமையால் தாழ்த்தும்
                             துங்கமார் ஔவை நம் துரைசாமித்
                                   தோன்றல்...!”

என்று பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரும், உரைவேந்தரின் புகழ் பாடுவர்!

சித்தாந்த சைவத்தை உரையாலும், கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய் அருமை நோக்கி உரைவேந்தருக்குத் தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையார், “சித்தாந்த கலாநிதி” (சித்தாந்தக் கலைக்கூடம்) என்னும் சமயப் பட்டமளித்துப் பாராட்டினர்.

மதுரை மாநகரில், 1941 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘மதுரைத் திருவள்ளுவர் கழகம்’ தமிழுக்குச் சிறப்பாகத் தொண்டு செய்து வருவது. ஆண்டுதோறும் தக்க தமிழ்ப் புலவர்களைப் பாராட்டு முகமாகப் பட்டம் வழங்கிச் சிறப்பித்து வருவது. அவ்வகையில், ச.சாம்பசிவனார், செயலராக இருந்த போது, உரைவேந்தர், சில ஆண்டுகள் தொடர்ந்து,வாரந்தோறும் ‘சைவசித்தாந்தச் சொற்பொழிவு’ நிகழ்த்தி வந்தார்; எந்த விதக் கைம்மாறும் கருதாமல் இதனை ஆற்றி வந்தார். நூற்றுக் கணக்கானோர், சைவசித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள இவரது சொற்பொழிவு பெரும் பயன் விளைவித்தது. அதே வேளையில் இவரது அறுபதாம் ஆண்டு நிறைவெய்தியது. இம் ‘மணிவிழா’ வைச் சிறப்பாகக் கொண்டாட விரும்பிய கழகம், 1964ஆம் ஆண்டு சனவரி 14,15,16 ஆகிய நாட்களில் நிகழ்ந்த ‘தமிழ்த் திருவிழா’வோடு ‘மணிவிழா’வையும் இணைத்துக் கொண்டது.

இவ்விழாவை முன்னிட்டு, இவரின் தொண்டுகள் குறித்துத் ‘துண்டறிக்கை’ ஒன்று செயலரால் தயாரிக்கப்பட்டுப் பலர்க்கும் வழங்கப்பட்டது.

“செந்தழிழ்த் திறனும், பன்னூற் பயிற்சியும், ஆராய்ச்சி யாற்றலும், உரைகாணும் உரனும், மாணவர்க்கு விளங்கக் கற்பிக்கும் வன்மையும், சிவநெறித் தேர்ச்சியும், நூலியற்றும் நுண்ணறிவும், நிரந்தினிது சொல்லும் நெஞ்சுறுதியும், உலகியல் உணர்வும், ஆங்கில மொழியறிவும் ஆகிய இவை ஒருங்கே அமையப் பெற்ற பேராசிரியர்; தோலா நாவின் மேலோர்; புலத்துறை முற்றிய புலவர்!”

என்பன போன்ற பாராட்டுரைகள் அவ்வறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

மணிவிழா நாளாகிய 16-1-1964 அன்று, மாலை பேராசிரியர், குதிரை பூட்டப்பட்ட ‘சாரட்டு’ வண்டியில், மதுரை மீனாட்சி திருக்கோயில் அம்மன் சந்நிதியிலிருந்து நான்கு சித்திரை வழியாக, நாதசுர இன்னிசையுடன், ஊர்வலமாகக் கழகமன்றத்திற்கு அழைத்து வரப்பெற்றார்.

கழகப் புரவலர் கி.பழநியப்பனார் ‘வரவேற்புரை’ நிகழ்த்த, செயலர், ச.சாம்பசிவனார், ‘வாழ்த்துரை’ படித்து வழங்கக் கழகப் பெருமைதரு தலைவர் தமிழவேள் பி.டி. இராசனார், பேராசிரியருக்குப் ‘பொன்னாடை’ போர்த்திச் சிறப்பித்தனர். ‘கலையன்னை’ இராதா தியாகராசனார், தம் ஆசிரியப் பெருந்தகையின் உயர் பண்புகளைப் பலபடப் பாராட்டி ‘உரைவேந்தர்’ எனும் பட்டம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கம் ஒன்றினை அளித்தனர். அப்போது, கூடியிருந்த மக்கள் அனைவரும், ‘உரைவேந்தர் வாழ்க!’ என வாழ்த்தொலி முழங்கினர். உரைவேந்தரின் இன்னுயிர்த் தோழர் பேராசிரியர் க.வெள்ளை வாரணனாரும், பொறியர் சி. மணவாளனாரும், உரைவேந்தரைப் பாராட்டிச் சிறப்புரையாற்றினர். இறுதியில், உரைவேந்தர் தமக்கு அளித்த இச்சிறப்புக்குத் தமக்கே உரிய செந்தமிழ் நடையில் நன்றி தெரிவித்தார்.

இவ் ‘உரைவேந்தர்’ எனும் ஒப்புயர்வற்ற பட்டமே, இவருக்கு இறுதிவரை நின்று நிலவுவதாயிற்று!

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் துணைவேந்தராக இருந்தபோது, 29-3-1980 அன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் மேதகு. பிரபுதாசு பி.பட்வாரி, உரைவேந்தருக்குத் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ எனும் பட்டத்தைப் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி அளித்துப் பாராட்டினார். துணைவேந்தர் மாணிக்கனார், உரைவேந்தர் குறித்துத் ‘தகுதியுரை’ படித்தளித்தார்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், ‘தமிழ்த்தொண்டு செய்த பெரியார்’ என்ற வகையில், உரைவேந்தருக்குக் ‘கேடயம்’ பரிசாக வழங்கப்பட்டது. அப்போது அதனைப் பெறுதற்காக மேடைக்குத் தளர்ந்த நிலையில் வந்தவர், “தமிழ்த் தொண்டாற்றிய எனக்கு நீங்கள் ‘வாள்’ அல்லவா தந்திருக்க வேண்டும்! எவரிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளக் கேடயம் தந்திருக்கிறீர்கள்!” என்று நகைச்சுவை படப் பேசினார்.

1981 ஆம் ஆண்டு மதுரையில் ‘ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு’ நடந்தபோது உரைவேந்தருக்கு இந்தியப் பிரதமர் பெருமைசால் திருமதி. இந்திரா காந்தி அம்மையார் வழியாகத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.ஆர். பத்தாயிர ரூபாய் பொற்கிழி வழங்கிச் சிறப்பித்தார்!

மா.சு. சம்பந்தன், தாம் எழுதிய ‘சிறந்த பேச்சாளர்கள்’ என்ற நூலில், தமிழ்த்தென்றல் திரு.வி.க., நாவலர் பாரதியார், தந்தை பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், ப. ஜீவானந்தம் முதலியோரைக் குறிப்பிடும் சிறப்புப் பேச்சாளர் பதின்மரின் பட்டியலில், செந்தமிழ் நலம் துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளர்களாகச் ‘சொல்லின் செல்வர்’ ரா. பி. சேதுப் பிள்ளையையும், உரைவேந்தரையும் குறிப்பிட்டுள்ளார் என்பதும் இங்குச் சுட்டத்தகும்.

இவ்வாறு உயர்பண்புகள் ஒருங்கே கொண்ட ‘உரைவேந்தர்பால் குறை ஏதும் இல்லையா?’ என்று சிலர் கேட்கக் கூடும். ஆம்! ஒரே ஒரு குறை. அது, ‘மறதி’ என்னும் குறை. இளமைக் காலத்தே கற்ற நூற்கருத்தையும் மறவாமல், முதுமைக் காலத்தும் மறவாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் உடையவராயிருந்தாலும், தம்மிடம் உள்ள கண்ணாடியையும், ‘பொடி டப்பி’யையும் எங்காவது ஓரிடத்தில் வைத்துவிட்டு, ‘எங்கே கண்ணாடி?’ ‘எங்கே’, ‘பொடி டப்பி’ என்று நீண்ட நேரம் தேடி, ஒரு வகையாகக் கண்டெடுப்பது பெரு வழக்கமாகிவிட்டது!

தம் வீட்டின் பொருளாதார நிலை குறித்துச் சிந்தித்ததே இல்லை. நூல் பல எழுதியவரேயாயினும், அதனாலெல்லாம் பொருள் வருவாய் பெற இயலாத காலம்! அந்நிலையிலும் தம் குழந்தைகளை, ஓரளவு பொருள் சம்பாதிக்குமளவுக்குக் கல்வி வாய்ப்புக்கு உறுதுணை புரிந்துள்ளார். அவ்வளவே!

‘உரைப் பணிகளின் சிகரம் - திருவருட்பா உரை!’ என்று சொல்லுமளவுக்குப் பணியிலிருந்து கொண்டே 5818 பாடல்களுக்கு உரை கண்டவர் உரைவேந்தர். எப்படி இவரால் இத்துணைப் பக்கங்கட்கு உரை எழுத முடிந்தது என்றே பலரும் வியந்து போற்றுவர். அருட்செல்வர் நா. மகாலிங்கனாரின் பல்வேறு வகையான உதவிகள், உரைவேந்தருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன எனில் மிகையாகாது!

அன்னைத் தமிழுக்காகவும், ஆன்ற சைவத்திற்காகவும், தமக்கு நினைவு தோன்றிய நாள் முதல், வாழ்நாளின் இறுதிவரையிலும் பாடுபட்ட தமிழ்ச் சான்றோராம் ‘உரைவேந்தர்’, தமது 79ஆம் அகவையில், 3.4.1981ஆம் நாளன்று, மதுரையிலுள்ள தமது இல்லத்தில், ‘சிவப்பேறு’ எய்தினார். மதுரை நகர் இடுகாட்டில் இவர்தம் பூதஉடல் ‘சமாதி’யில் வைக்கப்பட்டு, அவ்விடத்தில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.

“கற்றவர்தாம் கண்ணிர்க் கடல்மூழ்கச் சாய்ந்துதமிழ்
உற்றகடல் மூழ்கி ஒளிந்ததே!-பெற்றநிலம்
எங்கும் ஒளிசெய் திறந்ததுரை சாமியெனும்
பொங்கு தமிழ்ச்சுடரிப் போது!”

என்று கூறுமாப் போல், கற்றவர்கள் கண்ணீர்சிந்த, மன்றங்கள் மனம் வருந்த, மாணவர்கள் உளம் வெதும்ப, நண்பர்கள் நலிவடைய - இங்ஙனம் பல்திறத்தாரும் துயர்க்கடலில் ஆழ, உரைவேந்தர், பொன்றாப் புகழை இவ்வுலகில் நிறுவித் தம் பொன்னுடல் நீத்தார்!

உரைவேந்தரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் விழா ஒன்று, ‘அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை’யின் சார்பில், 25.9.2003 அன்று, சென்னையில் ‘அருட்செல்வர்’ நா. மகாலிங்கம் தலைமையில், மிகச் சிறப்புற நிகழ்ந்தது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட அறிஞர் பலர், உரைவேந்தருக்குப் புகழ் மாலை சூட்டினர்!

காரைக்கால் அம்மையார், இறைவனிடம்,

                  “இறவாத இன்பஅன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
                   பிறவாமை வேண்டும்!”

என்று வேண்டியது போன்று, உரைவேந்தரும் இறைவனிடம் அவ்வாறே வேண்டியிருப்பார். ஆம்! இவர் செய்த - பழுதிலாத் தூய தமிழ்த்தொண்டும் சிவத்தொண்டும் அந்நிலைக்கே ஆக்கியிருக்கும். உரைவேந்தரின் நீடுபுகழ், வளமை குன்றாத கன்னித்தமிழ் போல நெடிது நிற்கும் என்பது ஒருதலை!

                 “ஔவை துரைசாமி ஆன்ற பெரும்புலவர்
                 கவ்வை சிறிதுமின்றிக் கன்னித் தமிழ்வளர்த்தார்!
                 இந்நாளில் யாம்காணோம்; ஈடில்லா வேந்தரிவர்!
                 என்னும் புகழே இவர்க்கு!”


வாழ்க உரைவேந்தர்!