உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/அணிந்துரை

விக்கிமூலம் இலிருந்து

அணிந்துரை


சோழன் குலோத்துங்கனுக்குக் 'கலிங்கத்துப் பரணி பாடினார் ஜெயங்கொண்டார். அவரது திருப்பெயரைக் கொண்ட ஜெயங்கொண்டத்தில் அண்ணாவுக்குத் தம் இளம் வயதிலேயே பரணி பாடி அண்ணாவால் எழுத்து வேந்தனாக வருவார் என வாழ்த்துப் பெற்ற தோழர் கோ. குலோத்துங்கன் எழுத்துலகில் மட்டுமல்ல; தொழிற்சங்கத் துறையிலும் தனி முத்திரை பதித்து சிம்சன் தொழிற்சங்கப் பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். அதனாலேயே முதலாளித்துவ சுழுகின் கூறிய நகங்களாலும், கொத்தும் அலகாலும் தாக்கப்பட்டவர். இடையறாத போராட்டத்தில் துவளாமல் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் பத்தாண்டுகளுக்கு மேல் ஏறி வெற்றிக் கனியைப் பெற்றவர். இப்படி எழுத்திலே மட்டுமின்றி இயல்பிலும் வாழ்விலும் போராளியாக உலா வரும் குலோத்துங்கன் அறிஞர் அண்ணாவின் எழுத்துக்களில் இருந்தும், பேச்சுக்களிலிருந்தும் பாட்டாளிகள் பற்றிய வரிகளைத் தொகுத்து 'பாட்டாளிகள்பற்றி அண்ணா என்ற உன்னத நூலைக் கொணர்ந்துள்ளார்.

1987-இல் முதற்பதிப்பாக வந்த இந்நூல் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருவது மகிழ்ச்சிக் குரியதாகும். பாட்டாளிகள் பற்றிய எண்ணற்ற செய்திகளையும், அண்ணாவின் சிந்தனைகளையும் அழகுறத் தொகுத்து வழங்கியுள்ள முறை ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்குத் தக்க சான்றாகும்.

ஆசிரியரின் அரும்பணிக்குத் தமிழகப் பாட்டாளிகள் தந்துள்ள அங்கீகாரத்திற்கு அடையாளமாக மேலும் பல பதிப்புகள் இந்நூல் வெளிவரவும் மேலும் இதுபோன்ற எண்ணற்ற தொகுப்புகளைத் தோழர் குலோத்துங்கன் கொணர்ந்து எழுத்துலகில் தனிச் சிறப்பு பெறவும் என் இதய வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

'தாயகம்'
20-07-1999.

வைகோ,
பொதுச்செயலாளர்,
ம.தி.மு.க.