உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/அண்ணாவின் தொழிற்சங்கப் பணி
அண்ணாவின் தொழிற்சங்கப் பணி
தமிழ்நாட்டில் உறங்கிக்கிடந்த தொழிலாளர்களைத் தட்டியெழுப்பி அவர்களுடைய நலன் காக்கும் உற்ற தோழராய் உழைத்தவர்களில் தமிழ்த் தென்றல் திரு. வி. க, திரு. பி. பி. வாடியா, திரு. வி. சக்கரைச் செட்டியார் முதலானோரைத் தலைசிறந்தவர்களாகக் குறிப்பிடலாம். அவர்களுடைய வரிசையில் நீங்காத இடம் பெற்றவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு. சி. பாசு தேவ் ஆவார்.
திரு. பாகதேவ் ஆங்கிலத்தில் அழகு நடையில் பேசுவார். ஆனால் தமிழில் பேசத்தெரியாது. அதனால் அவர் தொழிலாளர் கூட்டங்களில் ஆற்றும் ஆங்கிலச் சொற் பொழிவுகளை அழகுத் தமிழில் இனிமை சொட்ட மொழி பெயர்த்துப் பேசும் ஆற்றல் மிக்கவராக பேரறிஞர் அண்ணா இருந்தார்கள். இதனால் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்திலேயே தொழிலாளர் நெஞ்சங்களில் தனி இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டார்கள்.
திரு. பாசுதேவ் ஆங்கிலத்தில் பேசினால் திரு. அண்ணாதுரை தாம் மொழிபெயர்ப்பார்--என்ற அளவில் வெறும் மொட்டாக அரும்பிய அவர்களுடைய தொடர்பு மலர்ந்து மணம் வீசி இணை பிரியா நட்பாக மாறியது.
1934ல் எம்.ஏ. பட்டம்பெற்று வெளிவந்தார் அண்ணா. வீட்டார் அண்ணாவை ஏதேனும் ஓர் அரசாங்க வேலையில் அமர்த்த வேண்டும் என்பதிலே ஆர்வங்காட்ட, அண்ணாவோ அரசியலில் ஆர்வங் காட்டி வந்தார்கள். திரு. பாசுதேவ் அவர்களிடம் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக அண்ணா அவர்கள் முதன்முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
தொழிலாளர்களின் நிலை உயரவேண்டும்; அவர்களிடையே ஒற்றுமை நிலவவேண்டும்; தொழிற்சங்கம் வலுப்பெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு 1934-35-36 ஆம் ஆண்டுகளில் அயராது பாடுபட்டார்கள். அப்போது திரு. பாசுதேவ், திரு. ஆல்பர்ட் ஜேசுதாசன் ஆகியவர்களோடு சேர்ந்து தொழிற்சங்கப் பணி புரிந்து வந்தார்கள். தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் அந்த நாட்களில் காங்கிரசில் பணியாற்றிய திரு. என்.வி. நடராசன் அவர்களுக்கும், அண்ணா அவர்களுக்கும் தொடர்பு உண்டு ஆனால் அரசியலில் இருவரும் எதிர் எதிர்க் கட்சியினர்.
அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் மாநாடு. லட்சுமணபுரியில் திரு. ஜம்னாதாஸ் மேத்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் திரு. ஆல்பர்ட் ஜேசுதாசன் போன்றவர்களோடு, பிரதிநிதியாகச் சென்றிருந்தார்கள். சென்னைத் தலைவர்கள், மாநாட்டில் அண்ணாவுக்குரிய இடம் அளிக்காமல் தங்கள் பின்னால் ஓடிவரக்கூடிய ‘ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி' போல நடத்தினார்களாம். மாநாட்டுத் தலைவர்களிடம் அண்ணா அவர்களை அறிமுகம் செய்து வைப்பதையும் ஒரு பொருட்டாகக் கருதவில்லையாம்.
மாநாட்டில் அண்ணா அவர்கள் ஒரு தீர்மானத்தின் மீது சிறிது நேரம் பேச வேண்டிய வாய்ப்புக் கிடைத்ததாம். மாநாட்டினர் அண்ணா அவர்களின் பேச்சில் ஒன்றித் திளைத்து, மகிழ்ந்து, தணியாப் பற்றுக் கொண்டு விட்டனராம். பிறகு மாநாடு முடியும்வரையில் தலைவர்கள் அண்ணாவைக் கண்டு பேச விரும்புவதும், தொண்டர்கள் அண்ணாவின் பின் ஓடுவதும் ஆன காட்சிகள், மற்றைய சென்னைத் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் மறக்கடித்து விட்டனவாம்.
மாநாட்டின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அண்ணா அவர்களின் கருத்துக்கு நல்ல மதிப்பும், செல்வாக்கும் இருந்தன. அந்த மாநாட்டில் அண்ணாவின் ஆற்றலை அறிந்து அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
இப்படிப் படிப்படியாக அண்ணாவின் தொழிற் சங்கப் பணி வளர்ந்து வந்தது. அதனால் தாமாக உழைக்கும் வர்க்கத்திடையே அண்ணா அவர்கள் தனிச்செல்வாக்கைப் பெற்றார்கள். "பாடுபட்டவன் உடம்பிலே சேறு இருக்கிறது. பாடுபடாதவன் உடலிலே சந்தனம் இருக்கிறது. நியாயமா?" என்று வினா விடுத்தார்கள். இது உழைக்கும் வர்க்கத்தினை உணர வைத்துச் சிந்திக்க வைத்தது.
தொழிற்சங்கக் காங்கிரசில் ஈடுபட்டுத் தொழிலாளர்களுக்குப் பணியாற்றிய அறிஞர் அண்ணாவை நேரடி அரசியலில் ஈடுபடும்படி செய்தவர்கள் 'ஜன்டிஸ் ஆங்கில ஏட்டின் பொறுப்பாளர் திரு. டி.ஏ.வி. நாதன் அவர்களும் 'சண்டே அப்சர்வர்' ஆங்கில ஏட்டின் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களும் ஆவார்கள். அதன் பின் அண்ணா அவர்கள் நேரடி அரசியலில் ஈடுபட்டார்கள். அதன் பின்னும் கடைசி வரையிலும் தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு உழைத்து, தொழிலாளியின் தோழனாக மறைந்தார்கள்.
(மறைந்த திரு காட்டூர் கோபால் அவர்களை
ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த "உழைப்பாளி" இதழில்
கோ. குலோத்துங்கன் 31-7-74இல் எழுதிய கட்டுரை)