உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/11. மீனவர்கள் பற்றி அண்ணா
11. மீனவர்கள் பற்றி அண்ணா
நகத்திலே அழுக்குப் படாமல் மற்றவர்கள் உழைப்பினை உறிஞ்சி வாழ்பவர்கள், சமுதாயத்தில் உயர்ந்த சாதிக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள்; ஆனால் கட்டுமரத்திலே ஏறி -- கடலில் வெகுதூரம் சென்று வீடு திரும்பும் இவர்கள் செய்யும் தொழிலின் காரணத்தால், அருவருப்புடன் பார்க்கத் தக்கவகையில் இருக்கிறார்கள் -- செம்படவர்கள் என்று கேவலமாக அழைக்கப்படுகிறார்கள்.
இந்தச் சமுதாயத்தில் உள்ள இரண்டொருவர் சுயமரியாதைக் கட்சியிலே சேர்ந்த பின்னர் -- தெளிவு பெற்ற பின்னர், 'இந்தச் சமுதாய மக்கள் கேவலமானவர்கள் அல்லர் செம்படவர்கள் அல்லர்'; 'மீனவர்கள் -- மீனவ சமுதாயத்தினர்' என்று அழைக்கப் பட்டனர்!
இந்த நாட்டிலேதான் இந்தத் தொழில் இவ்வளவு கேவலமாகக் கருதப்படுகிறது; இந்தத் தொழிலை நடத்துகின்ற மக்கள் கேவலமாக --இழிவாக நடத்தப் படுகிறார்கள்; ஆனால் மேலை நாடுகளில் இந்தத் தொழில், மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!
மனைவி, மக்களைவிட்டுப் பிரிந்து -- 'திரும்பி வருவது நிச்சயம்' என்று சொல்ல முடியாத நிலையில் --கட்டு மரத்தில் 50 மைல் 60 மைல் தூரம் ஆழ் கடலில் சென்று, மீன் பிடித்துக் கொண்டு வீடு திரும்புகிறார்கள்; பிடித்த மீனை விற்று வாழ்க்கை நடத்துகின்றார்கள்.
நிலத்திலே விதை விதைத்து--தண்ணீர் பாய்ச்சி--களை எடுத்து--உழைப்பின் பயனை அனுபவிக்கிறார்கள்; ஆனால் உங்களுக்கோ, அப்படி இல்லை; கடலிலே ஏராளமான மீன் வளம் இருக்கிறது; விதைக்காது விளையும் கழனிபோல் கடல் இருக்கிறது; இருந்தும், உங்களிலே எல்லாவித வசதியோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? தலைமுறை தலைமுறையாக இதே நிலையில் நீங்கள் இருக்கிறீர்களே ஏன்?
(1-4-61'ல் தாழம்பேட்டை கூட்டத்தில் அண்ணா)