உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/12. அண்ணாவும் கைத்தறியும்

விக்கிமூலம் இலிருந்து

12. அண்ணாவும் கைத்தறியும்

விஞ்ஞானம் இன்று பெரும் அளவு வளர்ந்துள்ளது; மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் இருந்த இடத்தில்--மோட்டார் போன்ற வாகனங்கள் இடம் பெற்றிருக்கின்றன! உரலும் உலக்கையும் இருந்த இடத்தில்--நெல் அரைக்கும் இயந்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன! இப்படி--இன்று எத்தனையோ எண்ணற்ற விஞ்ஞானக் கருவிகள், நமது வாழ்வில் இடம் பெற்றுள்ளன!

விஞ்ஞானத்தையும்--முற்போக்கையும் வரவேற்கின்ற நாம், 'மக்கள் மிகக் குறைவாக உழைத்து நிரம்பப் பலன்பெற வேண்டும். என்று பாடுபட்டு வருகின்ற நாம்--ஆலைகள் தோன்றிவிட்ட பிறகும், 'கைத்தறி இருக்க வேண்டும்' என்கிறோம்; மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் முரண்பாடு போலத் தோன்றும்; ஆனால் முரண்பாடு அல்ல!

குதிரை வண்டியும்--மாட்டு வண்டியும், மோட்டார் போன்ற வாகனங்களுடன் போட்டி போட முடியாது; உரலும் உலக்கையும் இயந்திரங்களுடன் போட்டியிட முடியாது; மாறாக, ஆலைகளுடன் கைத்தறி போட்டி போட முடிகிறது; ஆலைகள் எந்தெந்த ரகங்களில் துணிகளை நெய்கின்றனவோ, அந்த அளவுக்கு ஏறத்தாழ. எல்லா ரகத் துணிகளையும் கைத்தறியில் நெய்ய முடிகிறது!

விஞ்ஞான வளர்ச்சியை எதிர்த்து வேறு எதுவும் போட்டியிட முடியாமல் இருக்கும்போது, கைத்தறி மட்டும்--ஆலைகளை எதிர்த்து நின்று இன்றுவரை நிலைத்திருக்கின்றது; எதிர்காலத்திலும் நிலைத்திருக்கக் கூடியது! எனவேதான், 'மக்களின் உழைப்பைக் குறைத்து, வசதிகளை அதிகரிக்க விஞ்ஞான வளர்ச்சி தேவை" என்கிற நாம் கைத்தறி மட்டும் வாழ வேண்டும் என்று விரும்புகின்றோம்.

கைத்தறியாளர்ப் பிரச்சினையிலேனும் எல்லாக் கட்சியினரும்--கட்சிகளை மறந்து ஒன்று படுகின்ற ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த கைத்தறி நெசவாளர் சங்கத்தவரின் பெருந்தன்மைக்கு நன்றி செலுத்துகிறேன்!

விழாக்கள்--பொதுவாக மகிழ்ச்சியின் அடிப்படையில் அமைக்கப்படும்; இந்த விழாவில் கூடியிருக்கின்ற நாம், மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்; ஆனால் இந்த விழா யாருக்காக நடைபெறுகின்றதோ அந்த நெசவாளர்கள்--மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறமுடியாது.

அந்தக் கைத்தறித் தொழிலாளர் நிலை இன்று மகிழ்ச்சி தரத்தக்கதாக இல்லை!

இந்த விழாவில் கலந்து கொண்ட முதன் மந்திரி காமராசர் அவர்கள். இன்று நாட்டில் கைத்தறித் துணிகள்--ஒருகோடி ரூபாய் பெறுமானமுள்ளவை--விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது, என்று கூறியிருக்கிறார். அரசு தரும் புள்ளி விபரம் அது; ஆனால், நாட்டில் இரண்டு அல்லது மூன்று கோடிரூபாய் பெறுமானமுள்ள துணிகள் தேங்கிக்கிடக்கக் கூடும்.

இதற்குக் காரணம் என்ன? கைத்தறித் துணிகள்--ஆலைகளிலிருந்து வந்து குவியும் துணிகளுடன் போட்டியிட முடியாதது தானே? "கூட்டாக இருத்தல்" என்ற நிலை அரசியலுக்கு--அதுவும் சர்வதேச அரசியலுக்கு சாதகமானதாக இருக்கலாம்; ஆனால், கைத்தறியும்--ஆலையும் கூட்டாக வாழ்தல் சாத்தியமா என்றால், இல்லையே!

கைத்தறித் துணிகளை விற்பனை செய்ய வேண்டும்; கைத்தறித்துணிகளுக்கு ஏற்படும் கடும் போட்டிகளை சமாளிக்க வேண்டும்--எத்தனை கணைகளைத் தான் நெசவாளி தாங்குவது?

நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்--'இரண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்' என்று; ஆனால், நமது காங்கிரசு அரசு மூன்று மனைவிகளுக்கு அல்லவா கணவனாக இருக்க வேண்டியிருக்கிறது!

கதர்--மூத்த மனைவி
ஆலைகள்--தேசியப் போராட்டத்தின் போது,
'தேவை' எனத் தேடிப் பெறப்பட்ட அவற்றின்
முதலாளிகள்--இரண்டாம் மனைவி.
கைத்தறி--மூன்றாம் மனைவி; அதுவும் கண்ணீரைப்
பார்த்த பின்!

இப்படி, 'கதர் உற்பத்தியும் வேண்டும்--ஆலை அரசர்களின் தயவும் வேண்டும்--கைத்தறியும் வாழ வேண்டும்' என்று கருதுகிறது அரசாங்கம்!

சாத்தியமாகுமா?

அன்பர் ஆச்சாரியார், இதனால்தான்--அவர் ஆட்சிப்பீடத்தில் இருந்த போது--இந்தக் கைத்தறிப் பிரச்சினைக்காக--தெளிவாக ஒரு தீர்மானத்தைச் சட்ட சபையில் நிறைவேற்றினார்.

அன்பர் ஆச்சாரியார் கூறுவனவற்றை எப்போதுமே சற்று சந்தேகத்துடன் உற்று நோக்கும் நானே, இந்தப் பிரச்சினையில் அவர் கருத்தை 'முழுமனதுடன் ஆதரித்தேன்; "சேலை வேட்டிகளின் உற்பத்தியைக் கைத்தறிகளுக்கே ஒதுக்க வேண்டும்" என்ற அந்தத் தீர்மானத்திற்கு--இதுவரை எப்போதும் கிடைக்காத வகையில் எல்லாக் கட்சிகளின் ஒருமுகமான ஒப்புதலைப் பெற்று நிறைவேற்றி--டில்லிக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால் டில்லி மத்திய அரசாங்கத் தொழில் மந்திரியாயிருக்கும் டி.டி. கிருஷ்ணமாச்சாரி கைத்தறியுடன் ஆலைகள் போட்டி போடுவதைத் தடுக்க முடியாது' என்று கூறிவிட்டார்.

போட்டியைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியவர் ஆச்சாரியார்! அதைக் கூடாது என்று கூறுபவரும் ஒரு டி. டி. கிருஷ்ணமாச்சாரி--அவரும் தென்னாட்டுக்காரர்தான்!

தீர்மானத்தை இந்த நாட்டில் உள்ள எல்லாக் கட்சியினரும் ஆதரித்தனர் தலைவர் பி. டி. இராசன் போன்ற இந்த நாட்டை ஆண்டவர்கள் ஆதரித்தனர்; ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள காங்கிரசார் ஆதரித்தனர்; 'நாட்டை ஆளவே கூடாது' என்று சபிக்கப் பட்டிருக்கின்ற என்போன்றவர்கள் ஆதரித்தனர்--இப்படி எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை மத்திய அரசாங்கம் புறக்கணித்து விட்டது!

எனவேதான், இது போன்ற விழாக்களில் என்னைப் போன்றவர்களை அழைப்பதைக் காட்டிலும் 'மத்திய அரசாங்க அமைச்சர்களை அழைத்து வந்து காட்டுங்கள்--இங்கே குவிந்துள்ள கைத்தறித் துணிகளின் உயர்ந்த தரத்தினையும், அவைகளை நெய்யும் கைத்தறியாளர்களின் கைத்திறனையும் அவர்களுக்குப் புலப்படுத்துங்கள்--அப்படியே அந்த அமைச்சர்களைக் கைத்தறியாளர்கள் வாழும் குடிசைகளுக்கு இட்டுச் சென்று, அங்கு அவர்கள் படும் துயரங்களையும் காணச் செய்யுங்கள்--அவர்களது பசி நீங்க அமைச்சர்களிடம் வழிவகை காணுமாறு கூறுங்கள்' என்று கூறுகின்றேன்,

இங்கு பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், 'கைத்தறியாளருக்கு நிரந்தரமான பாதுகாப்புக் கிடைக்க மத்திய அரசாங்கம் தான் வழி செய்ய வேண்டும்; சிலரக துணிகள் நெய்வதைக் கைத்தறிக்கே ஒதுக்க வேண்டும்', என்று கூறியிருக்கிறார்.

'காய்ச்சல் விட்டால் கைகால் பிடிப்பு விடும்' என்பது போல, மத்திய அரசாங்கம் மனது வைத்தால்தான் கைத்தறி வாழும்' என்கிறார் மந்திரி சுப்பிரமணியம்.

காய்ச்சல் விடுவதற்கு செந்தூரமா--பஸ்பமா--பச்சிலையா இன்ஜெக்ஸனா--யுனானி முறையா சித்த வைத்தியமா--ஓமியோபதியா--நாட்டுமுறையா--ஆங்கில முறையா என்பதை நாம் வேறு அரசியல் மேடைகளில் பேசிக் கொள்ளலாம். இப்போது 'காய்ச்சல் விட்டால், கை கால் பிடிப்பு விடும், என்பதை மட்டும் கூறிக் கொள்வோம்!

கைத்தறி நெசவாளர்கள் நெய்த அருமையான துணிகள் இங்கே காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கின்றன; அந்த வண்ணத் துணிகள், கண்ணைக் கவரும் வகையில் ஒளிவிளக்குகளுக்கு மத்தியில் இருக்கின்றன!

ஆனால், அவைகளை நெய்த நெசவாளர்கள், இருள் நிறைந்த குடிசைகளில் வாழ்கின்றார்கள்.

அவர்கள் வாழும் குடிசைகள் மட்டுமல்ல இருள் நிறைந்தது--அவர்களின் வாழ்வே இருள் நிறைந்து கிடக்கிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள துணிகளை நாங்கள் பார்வையிட்டோம்; தலைவர் பி. டி. இராசன் அவர்கள் கூட, 'இவ்வளவு அருமையான துணிகளை நெய்யும் நெசவாளர்கள் இந்தக் காலத்தில் இன்னும் பட்டுப் போகாமல் இருப்பது, ஆச்சரியமாகவே இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.

அத்தகைய கைத்திறனும்--நுணுக்கமும் கொண்ட நெசவாளர்கள் பரிதாபத்துக்குரிய அவல நிலையில் இருக்கிறார்கள்.

எங்களுக்கு இந்தத் துணிகளைச் சுற்றிக் காட்டிக் கொண்டுவந்த சங்கத் தலைவர், ஒவ்வொரு ரகக் கைத்தறித் துணியையும் காட்டி--அதற்கு சமமான ஆலைத் துணியின் பெயரையும் விளக்கினார்; காஷ்மீர் சால்வையா?--திருச்செங்கோட்டு நெசவாளர்கள் நெய்த போர்வை இதோ என்று, ஆலைத் துணிகளில் உள்ள ஒவ்வொரு ரகத் துணியையும் எங்களுக்குக் காண்பித்தார்கள்.

'கைத்தறிக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை, மிக பயங்கரமானதாக இருக்கிறது' என்று வரவேற்றுப் பேசிய நாச்சிமுத்து அவர்கள் குறிப்பிட்டார்கள்—கழகம் கைத்தறித் துணிகளைத் தோளில் தூக்கி விற்றது குறித்து.

திருச்சியில் நானும்--கழகத் தோழர்களும் துணிவிற்பனையில் ஈடுபட்டிருந்த போது, நண்பர் உடுமலை நாராயண கவி அவர்கள் கைத்தறித் துணி விற்பனைக்காக இயற்றியிருந்த பாடல் ஒன்றை நண்பர் அனீபா பாடிக் கொண்டிருந்தார்; அந்தப் பாடலின் "சின்னாளப்பட்டி" என்ற ஊரில் நெய்யப்படும் துணிபற்றியும் ஒரு பாடல் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஒருவர் கூட்டத்திலிருந்து ஓடி வந்து கீழே விழுந்து கும்பிட்டு, 'நீங்கள் பாடியிருக்கிறீர்களே, சின்னாளப்பட்டி நெசவு பற்றி--அந்த சின்னாளப்பட்டியைச் சேர்ந்த நெசவாளன்தானய்யா நான்; தலையில் இருப்பது 15 சேலைகள்--நான் நெய்தவை; கடந்த நான்கு நாட்களாக திருச்சியில் அலையாத தெருவில்லை; கூவாத குரலில்லை, ஒரு சேலையும் விற்கவில்லை; குடும்பமே பட்டினி என்று கதறி அழுதார். அந்தக் காட்சியைக் கண்டவர் எவரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது!

அப்படி நெசவாளர்கள் துன்பப்படுகிற நிலைக்கு மாற்றந் தேடித்தராத எந்த ஓர் அரசாங்கமும், வெட்கத்தால் தலை குனியாமலிருக்க முடியாது!

நெசவாளர்கள் கையேந்தி பிச்சையெடுக்க வெட்கப்பட்டு--அட்டைகளில் தங்களின் அவல நிலையை எழுதி--தெருக்களில் போவோர் வருவோரிடம் காலணா, அரையணா பெற்று வயிறு கழுவினார்களே--அந்தக் காட்சிகளை யாரும் மறக்க முடியாது!

அந்த நிலையை மாற்ற அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்--நன்றி செலுத்துகிறோம்!

நெசவாளர்கள் அன்றுபோல் இன்று பிச்சை எடுக்காவிடினும், ஓரளவு வாழ வழி ஏற்பட்டிருக்கிறது என்றாலும், இப்பொழுது வரும் செய்திகள் நமக்கு அச்ச மூட்டுகின்றன.

ரூ.2 கோடி பெறுமானமுள்ள கைத்தறித் துணிகள் தேங்கிக் கிடக்கின்றன என்றால், என்ன பொருள்? நெசவாளர்களின் கண்களில் நீர் தேங்குகிறது என்பதுதானே அதன் அர்த்தம்?

துணிகள் விற்பனையாகாமல் தேங்கினால்--நெசவாளர் உற்பத்தி செய்ய முடியாது; உற்பத்தி செய்யாவிடின் கூலி கிடையாது; கூலி இன்றேல் சோறு இல்லை; வறுமை வாட்டும்; பசி, அவர்களைப் பிய்த்துப் பிடுங்கும்; எனவே அந்த நிலைமை அவர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்; வாயளவில் அனுதாபம் காட்டுவதுடன் அரசாங்கத்தின் கடமை முடிந்து விடாது--விடக்கூடாது.

கைத்தறியாளர் மீது அனுதாபம் கொண்ட மக்களுக்கு எந்த நேரத்திலும் துணிவாங்கும் சக்தி இல்லை; நாட்டுப் பொருளாதாரம் அப்படி இருக்கிறது; எனவே புதுத்துணி வாங்கப்படும் பொங்கல் நாளையொட்டி, இந்தக் கைத்தறி வார விழாக் கொண்டாடப்பட்டால், ஏராளமான கைத்தறி விற்பனையாகும் மார்க்கம் உண்டு. சென்னை மாநிலத்தைப் பொறுத்தவரையாயினும்--அகில இந்தியாவிலும் இல்லாவிடினும்--இந்தப் பொங்கல் நாளில் விழாக் கொண்டாடப் பட்டால், கைத்தறி விற்பனையில் கணிசமான முன்னேற்றம் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

பொதுமக்கள் மட்டுமே ஆர்வம் கொண்டவர்களாகவும்--ஆதரவு காட்டுபவர்களாகவும் இருந்தால் போதும் என்று அரசாங்கம் கருதிவிடக் கூடாது.

மத்திய அரசாங்கம் இராணுவத்திற்கென்று மட்டும் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் செலவிடுகிறது. அந்த இராணுவத்தினருக்குத் தரப்படும் ஆடைகளைக் கைத்தறி ஆடைகளாகவே மத்திய அராசாங்கம் வாங்க வேண்டும்; அப்படிச் செய்தால், ஒரு ரூபாய் பெறுமானமுள்ள துணிகூடத் தேங்காது விற்பனையாகுமே ? ஆலைத் துணிகளைப் போன்றே நல்ல தரமும்--உழைப்பும் கொண்டவைதானே கைத்தறித் துணிகளும் !

அதைப் போலவே மாநில அரசாங்கமும்--போலிசு இலாக்காவுக்கு துணிகளைக் கைத்தறியாகவே வாங்க வேண்டும்; அவர்களுக்குத் தேவையான முறுக்கும், மினுக்கும் கைத்தறியில் தான் நெய்யப்படுகின்றன; இந்த எனது யோசனைகளைக் கைத்தறி வார விழாவில் கூறுவது பொருத்தமென்றே கருதுகின்றேன்.

இப்படி உருப்படியான துணி விற்பனைக்கு வழியும்--தொழிலுக்கு நிரந்தரமான பாதுகாப்பும் தர அரசாங்கம் முன்வர வேண்டும்.

அதை விடுத்து, 'கைத்தறியும் வாழ வேண்டும்--ஆலைத் துணியும் போட்டியிடும்' என்றால் எப்படி? புலி போல் இருக்கும் ஆலையும், பசுபோல் இருக்கும் கைத்தறியும் எப்படி ஒன்றாக வாழ முடியும்?

சர்க்கஸ் கம்பெனியில் வேண்டுமானால், புலியையும், பசுவையும் ஒன்றாகச் சிறிது நேரம் வாழச் செய்ய முடியும்; அது போலவே சர்க்காரும், சர்க்கஸ்காரரைப் போல ஆலையையும் கைத்தறியையும் வாழவிட நினைக்கிறார்கள்.

சில நேரங்களில் வரும் செய்தி, புலி, சர்க்கஸ்காரன் கையிலிருக்கும் சாட்டையையும்-சர்க்கஸ்காரரையுமே கூட மீறி பசுவின்மீது பாய்ந்து விடுவதாகக் கூறுகின்றன!

சில நேரங்களில், சர்க்கஸ்காரனுக்குக் கூட புலியால் ஆபத்து என்பதைப் போல, இந்த அரசாங்கமும், இந்தக் கைத்தறிப் பிரச்சினையில் செய்துவரும் சர்க்கஸ் வேலையில் ஆபத்துக்கு ஆளாகக் கூடாது என்று ஆசைப்படுகின்றேன்.

(23-3-55ல் சென்னையில் நடைபெற்ற
கைத்திறி வார விழாவில் அண்ணா)