உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/14. கைத்தறி

விக்கிமூலம் இலிருந்து

14. கைத்தறி

"கைத்தறித் தொழிலுக்கு உதவும் வகையில் கூட்டங்களில், 'மாலைகளுக்குப் பதிலாகக் கைத்தறி ஆடைகளை அணிவியுங்கள்' என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னபொழுது பலர் கேலி பேசினர்; ஆனால், இன்றையத்தினம், எல்லா அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், கைத்தறித் துண்டை, மாலைகளுக்குப் பதிலாக அணிவிக்கிறார்கள்.

"இப்படிக் கூட்டங்களில் மாலைகளுக்குப் பதிலாகக் கைத்தறித் துண்டுகளை அணிவிப்பதால், கைத்தறி நெசவாளர் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்பது அல்ல கைத்தறித் துணிகள் அணியப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம், "கைத்தறித் துணிகளுக்கு நாமும் ஆதரவு காட்டிட வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் பரப்பும்" என்பதால்தான்!

"டெல்லியில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்; அக்கூட்டத்தில் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன; எனக்கு மட்டும் கைத்தறித் துணி அணிவிக்கப்பட்டது; 'ஏன் அவருக்குக் கைத்தறித் துணி அணிவித்தீர்கள்' என்று சிலர் கேட்டபோது, 'அண்ணாதுரைக்குக் கைத்தறித் துண்டுதான் பிடிக்கும்' என்று பதில் சொன்னார்கள்.

"இதிலிருந்து, 'தி. மு. கழகம் எதற்கு ஆதரவு காட்டுகிறது' என்று உங்களுக்குத் தெரியும்!"

-சென்னை கைத்தறிப் பொருட்காட்சியில் அறிஞர் அண்ணா.