உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/15. தொழிலாளிக்கு ஒரு சொல் !

விக்கிமூலம் இலிருந்து

15. தொழிலாளிக்கு ஒரு சொல்!

எனது ஆசை எப்போது நிறைவேறுமென்றால் உழுபவன் உண்மையான வாழ்வு வாழ்கிறான்; நெசவாளி நேர்த்தியாக வாழ்கிறான்; பாட்டாளி பட்டினியின்றி வேலை செய்கிறான் என்ற நிலை எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுதுதான்.

தொழிலாளிகளின் உரிமைகளையும், நலன்களையும் எவ்வளவுக் கெவ்வளவு பாதுகாக்கின்றோமோ அந்த அளவிற்குத் தொழில்வளம் பெருகும்.

தொழிலாளி மிச்சப்படுத்தும் பணத்திலிருந்து புதிய தொழிலுக்கு முதலீடு கிடைக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

தொழிலாளர்கள் ஸ்தாபனம் சில அடிப்படைக் கொள்கைகளின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால் சில குறைபாடுகளை தொழிலாளிகளின் நீக்கிக் கொள்வதற்குத்தான்.

தொழில் வளர்ந்தால்தான் பொதுச் செல்வம் ஏற்படும்; அதன் வாயிலாகத் தனிப்பட்ட மனிதன் வாழ்விலும் வளமுண்டாகும்.

தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு பூங்காற்று வீசும் தோட்டமாக இருக்க வேண்டும்.

இராணுவத் துறையிலும், அரசியல் துறையிலும் வளர்ந்துள்ள இதர நாடுகளின் வரிசையில் நாம் இல்லாதிருக்கலாம்; ஆனால், தொழில்களுக்குத் தேவையான அறிவிலோ, ஆற்றலிலோ நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர்.

தனது உழைப்பினை மனமுவந்து ஈந்திட பலப்பல ஆயிரவர் முன் வந்திடின், சமூகம் பெற்றிடக்கூடிய பயன் பெருமை பெறத் தக்கதாக அமையும். 'எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் செலவிட்டது போக, மிஞ்சியதில் ஒருமணி நேரமாகிலும் நாட்டின் பொது நன்மைக்காகச் செலவிடுவேன்' என்ற உறுதி கொண்ட சில ஆயிரவர் தமது உழைப்புச் செல்வத்தைத் தந்திடின், சமூக மேம்பாடு வளருவது உறுதி!

தொழிற்சாலைகளில் உழைக்கும் தொழிலாளர்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்தால் தான் தொழிலதிபர்கள் வாழமுடியும்--தொழிலிலும் லாபம் வரும்.

தொழிற்சாலையிலுள்ள ஓர் இயந்திரத்தின் சிறிய பல் சக்கரத்தையும் எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறீர்களோ அதைவிட எந்தத் தொழிலாளியும் முக்கியத்துவம் குறைந்தவரல்லர்.

தொழிலாளர்கள் நல்ல பலம் பெற்றால், தாங்கள் ஈடுபட்டுள்ள பணிகளில் மேலும் அவர்கள் தெம்புடன் உழைப்பார்கள்; மனமும், உடலும் மகிழ்ச்சியாக இருந்தால் தான், உற்பத்தியின் அளவு அதிகரிக்கும், செல்வம் வளரும்.

தொழிலாளர் நலனுக்காக எவ்வளவு செலவிட்டாலும், அது சமூகத்துக்கு ஒன்றுக்கு ஒன்பதாகத் திரும்பி வரும்! அவர்களுக்குச் செலவிடப்படும் தொகை ஒரு நாளும் நட்டக் கணக்கில் வருவதில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம், கடமை--கண்ணியம்--கட்டுப்பாடு என்ற மூன்று கோட்பாடுகளை வைத்திருப்பது போலவே தொழிலாளர்களுக்கும் அது தேவை என்று சொல்கின்றார்கள்; உண்மையாகவே, 'தொழிலாளர்களுக்கும் அது தேவை' என்று உணர்ந்திருப்பதை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

கடமை

பாட்டாளிகளுடைய கடமை--சமுதாயத்திற்கு நன்மை செய்வதிலேதான் இருக்கிறது!

கண்ணியம்

அவர்களுடைய கண்ணியம்--தங்களுடைய சக்தியைப் பாழ்படுத்திக் கொள்ளாததிலே தான் இருக்கிறது!

கட்டுப்பாடு

அவர்களுடைய கட்டுப்பாடு--தங்களுடைய ஒற்றுமையை உடைப்பதற்கு யார் எந்த மாதிரி முயற்சி எடுத்துக் கொண்டாலும் ஒரு துளியும் இடம் கொடுக்காத தன்மையிலே இருக்கிறது!

(அறிஞர் அண்ணா--கட்டுரை ஒன்றில்)