உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/17. தொழிலாளி–கரை காணாதவன்
17. தொழிலாளி–கரை காணாதவன்
காடு நிலமானதும், வனம் தோட்டமானதும், மேடு மாளிகையானதும், கரம்பு ஊற்றானதும், பள்ளம் பாதையானதும், பாட்டாளியின் உழைப்பினால்; ஆனால் அவன்--அந்த உழைப்பிற்குப் பிறகு--அதனாலான உல்லாசங்களை அனுபவிக்கின்றானா என்றால் இல்லை!
தோட்டத் தொழிலாளியின் வியர்வை வாடை அவனது உழைப்பால் மலர்ந்த மலரில் இராது! அவனது வாழ்க்கையோ--கசப்பு! அவன் பயிரிட்டுப் பிறருக்குத் தரும் கனியோ--சுவையுள்ளது!
பூமிக்கு அடியில் இருந்து அவன் செல்வத்தைச் செதுக்கி எடுத்துத் தருகின்றான்; பிறகோ, அதன்மீது பணம் படைத்த பிரதாபன் உலவுவதைக் காண அண்ணாந்து பார்த்துவிட்டு. தனது குடிசையில் கூரையின் ஒழுகலைக்கண்டு மனம் கசிகிறான்!
கடலில் குளித்து, சுறாவும்--பிறவுக்கும், இரையாகாது தப்பி முத்து எடுக்கிறான். பின்னர் அது, யாருடைய கழுத்திலோ மாலையாகிறது--கைவளையாகிறது, காதுகளில் நடனமாடுகிறது! ஆனால் அந்த முத்தை எடுத்த தொழிலாளியோ--வறுமைக் கடலில் நீந்தி நீந்தி கரை காணாது கலங்குகிறான். உழைப்பின் உறுபயனை அனுபவிக்க முடியாமல் அல்லற்படுகிறான்.
ஆளவந்தாரே---தயக்கமேன் !
புதிதாக பீடம் ஏறியுள்ளவர்களுக்கு, தங்கள் நாட்களிலே, "மக்களுக்குப் புதிய வாழ்வு பிறக்க வேண்டும்--பஞ்சமற்ற பிணியற்ற, அதிருப்தியற்ற வாழ்வு இருக்க வேண்டும்" என்ற எண்ணம் இருக்கிறதாம்--நெடுநாட்களாக ஆயிரமாயிரம் மேடைகளிலே பேசியிருக்கிறார்கள்--வாக்களித்திருக்கிறார்கள்--சூளுரைத்திருக்கிறார்கள்! ஆனால் மக்களோ, என்றுமில்லாத அளவுக்கு--எங்குமில்லாத அளவுக்குச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! எவ்வளவு பெரிய கதர் சால்வைகொண்டு மூடினாலும் நிலைமை மறையவில்லை. எங்கும் 'இல்லை, இல்லை' என்ற பேச்சுத்தான்--என்ன செய்ய!
மக்கள் கேட்கிறார்கள்--"ஏன் மனச் சோர்வு கொள்கிறீர்கள்? எம்மை ஈடேற்றும் வழி தெரியாது ஏன் திகைக்கிறீர்கள்?" நீங்களே கூறியிருக்கிறீர்களே--'தொழில்களை லாப வேட்டைக்காடு ஆக்கியதனால்தான், நாட்டிலே மிருக உள்ளம் படைத்த மனிதர்கள் தோன்றி விட்டனர்; இனி மக்களுக்குத்தான் தொழில்கள்-- இலாபத்துக்காக அல்ல -மக்களின் நன்மைக்காக' என்றெல்லாம் கூறினீர்களே! திட்டம் தீட்டிக் காட்டினீர்களே! பொது மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழில்களை எல்லாம் சர்க்காரே ஏற்று நடத்தும் என்று சூளுரைத்தீர்களே! நன்றாக கவனமிருக்கிறதே--வெண்கல நாதத்தில், 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று நீங்கள் பாடிய பாரதி கீதம்! ஆற்றல் மிக்கோரே-எமது அன்புக்குரியவர்களே--எம்மை ஆளவந்தாரே--ஏன் தயக்கம், தடுமாற்றம்? திட்டத்தை நிறைவேற்றுங்கள்--தொழில்களை பொதுவாக்குங்கள்--சர்க்கார் உடமையாக்குங்கள்--ஜாரைக் கருவிலேயே அழியுங்கள்" என்று கூறுகின்றனர், மக்களின் குரலில் வேதனையும் ஆத்திரமும் சம எடையில் இருக்கிறது.
மகாஜனங்களே! கொஞ்சம் பொறுமை காட்டுங்கள்; தொழில்களைத் தேசிய மயமாக்கும் திட்டத்தை நாங்கள் விட்டுவிடப் போவதில்லை; இடையிலே உற்பத்தியைப் பெருக்குங்கள்; ஓய்ந்துவிடாதீர்கள்; காய்ந்து கிடக்கும் வயல்களையும் பசுமையுறச் செய்யுங்கள்; தூங்கிக் கிடக்கும் புதை பொருட்களை எழுப்பி வெளியே கொண்டு வாருங்கள்; கட்டுக்கடங்கா ஆறுகளை, ஆற்றல் தரும் வழிகளாக்குங்கள்; உற்பத்தியைப் 'பெருக்குங்கள்' பெருக்குங்கள்' என்று சர்க்கார் கூறுகிறது!
பாட்டாளி சிரித்துக் கொண்டே அழுகிறான், சொல்லாமல் சொல்லிக் கொள்கிறான்-
"நான் வ்யிறாற உண்ண உணவில்லை"-என்று கூறி எனக்கு வாழ்வு அளிக்கச் சொல்லுகிறேன். நீயாகவே, முன்பு வாக்களித்தாயே என்பதால்; நீ, இப்போது என்னை, 'காய்ந்த வயிற்றைப் பிறகு பார்த்துக் கொள்; உற்பத்தியைப் பெருக்கு 'என்று கூறுகிறாயே, அப்பனே! ஆளவந்தானே! உற்பத்தி என்றால் என்ன உத்தியோக உத்தரவு போலவா, எழுதிவிட? உயிரைப் பணயம் வைத்து--உழைத்து--உருக் குலைந்து அல்லவா உற்பத்தியைப் பெருக்க வேண்டும்? அணுவணுவாக எங்களை உழைப்புச் சிதைக்கிறது? மாடி மாடியாக முதலாளி கோட்டை உயருகிறது! நீ மேலும் உழைக்கச் சொல்லுகிறாய்! செய்யலாம் என்றால். சக்தி இல்லையே! உழைத்து அலுத்துக் கிடக்கும் எங்களிடம் அதிகரித்த உழைப்பை எதிர்பார்க்கிறாயே! குமுறும் நெஞ்சினராகிவிட்ட எங்களை, 'குப்புற விழாதே குப்பா... எழுந்திரு-வேலை செய்' என்று கட்டளை இடுகிறாயே - எப்படி எங்களால் முடியும்? சக்தி
- வேண்டுமே உழைக்க! சாந்தி வேண்டுமே மனதில்!
- அதற்கு என்ன வழி"
என்று பாட்டாளிகள் கேட்கின்றனர்--இவ்வளவு தெளிவாக அல்ல-கண்ணீராலும், பெருமூச்சாலும்!
- "கண்ணீர் விடுகிறான்.........
கருணை காட்டாதே"
- "கண்ணீர் விடுகிறான்.........
என்று சர்க்காருக்குக் கூறுகிறது முதலாளித்துவம்! அதற்கு அஞ்சியே டெல்லி ஆட்சியினர் தேசிய மயமாக்கியுள்ள இரண்டொரு தொழில் நிலையங்களை மீண்டும் முதலாளித்துவத்தின் கூட்டு முகாமில் ஒப்படைக்க விரைந்தோடுகிறது; நம் சென்னை அரசியலாரும் அதனைத் தொடர்ந்து திருப்பல்லவியைப் பாடுகின்றனர். தமிழ் நாட்டின் சில மாவட்டங்களிலுள்ள பஸ்களை சர்க்காரே நடத்தும் திட்டம் கைவிடப்பட்டதாம்! தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக இன்று நம்பிக்கைத் துரோகம் செய்யப்படுகின்றது.
நாடாளுவோரின் இந்தப் போக்கு இந்தப் புத்தாண்டிலாவது மாறுமா?
("திராவிடன்" பொங்கல் மலரில்; 1967-க்கு முன் எழுதியது)