உள்ளடக்கத்துக்குச் செல்

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி/19. தொழிலதிபர்கள் பற்றி அண்ணா

விக்கிமூலம் இலிருந்து

19. தொழிலதிபர்கள் பற்றி அண்ணா

திருவொற்றியூர் இம்பீரியல் டுபாக்கோ கம்பெனி தொழிலாளர்களின் குடியிருப்புகளை, 14-4-67 அன்று, அண்ணா அவர்கள் திறந்து வைத்து ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

".......இங்கு 50க்கும் மேலான அழகான இல்லங்களைத் தொழிலாளர்கட்குத் திறந்து வைக்கும் வாய்ப்பினை எனக்கு நல்கியமைக்காக நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழிலாளர் நலன் கருதியே இதுபோன்ற காலனிகளை அமைத்துத் தருகின்றார்கள்-தொழிலதிபர்கள்!

தருகின்ற உள்ளங்கள்தான் மீண்டும் மீண்டும் தந்து கொண்டே இருக்கும்; அதனால்தான் இப்படிப்பட்ட வசதிகளைச் செய்துள்ள இந்த நிறுவனத்தின் நிர்வாக உரிமையாளரையே மீண்டும் மீண்டும்-தொழிலாளர்களது வேண்டுகோளான திருமண மண்டபத்திற்கான செலவையும் ஏற்று- அதனை முடித்துத் தரும்படிக் கேட்டுக் கொண்டுள்ளனர். தொழிலாளர் நலனில் இத்துணை அக்கறை காட்டுபவர் நிச்சயம் அதையும் முடித்துத் தருவார் என்று நம்புகிறேன்.

இந்தக் காலனிக்கு அரசின் உதவி எந்த அளவுக்குக் கிட்டும் என்பதை, அதிகாரிகளைக் கலந்து கூறுகிறேன்.

"அரசு உதவும்" என்று சொன்னேன்; மத்திய அரசு எந்த அளவிற்கு நம் மாநில அரசுக்கு உதவ முன்வருகிறது என்பதைப் பொருத்துத்தான் சொல்ல முடியும்.

எனவே இந்தத் தொழிற்சாலை அதிபர் மித்ரா அவர்களுடனும், தொழிற்சங்கத் தலைவர் டி.எஸ். இராமானுசம் அவர்களுடனும் கலந்து, 'யார் யாரிடம் எவ்வளவு பெறமுடியும்' என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு--கட்டடக்கலை நிபுணரை அழைத்துக் கலந்து பேசி, எவ்வளவு மலிவாக, இந்தக் கட்டடங்களை நேர்த்தியாகவும், உறுதியாகவும் கட்டித்தர முடியும் என்பதையும் தெரிந்துகொண்டு--பிறகு தமிழக அரசின் உதவியை நாடினால், நிச்சயம் இன்றைய தமிழக அரசு தொழிலாளர்களின் குடியிருப்புக்கு நிதியுதவிட-ஒத்துழைத்திட பின்வாங்காது என்று உறுதி கூறுகின்றேன்.

இப்படிப்பட்ட குடியிருப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதால், தொழிலாளர்களுக்குச் சுறுசுறுப்பும்-உற்சாகமும்-ஊக்கமும் தொழிலின்பால் உண்டாகிறது; அதனால் ஏற்படும் உற்பத்திப் பெருக்கத்தினால், முதலாளி உள்பட தொழிலாளர்களும் மேலும் நன்மைபெற வழி ஏற்படுகிறது.

ஒரு முதலாளி ரூ. 2 லட்சம் கொடுத்து வாங்கிய இயந்திரம் திடீரென்று கெட்டுவிட்டதாகக் கூறினாலும், அல்லது உள்ளபடியே பல்சக்கரத்தில் உள்ள ஒருபல் உடைபட்டு ஒரு விதமான சத்தம் வருவதைக் கண்டாலும், எப்படிப் பதை பதைத்துப்போய்-நடுநடுங்கிப்போய், அந்த இயந்திரத்தை உடனே சரிசெய்வாரோ-அதே போன்று தொழிலாளர்களில் யாராவது ஒருவர் எப்போதாவது சோர்வுற்றிருந்தாலோ-கவலை கொண்டிருந்தாலோ-நோய்வாய்ப் பட்டிருந்தாலோ-வாழ்க்கைத்தரம் குறைந்து கொடுமைக்கு ஆளாகியிருந்தாலோ-முதலாளிகளாக இருப்பவர்கள், உடனே அத்தொழிலாளியின் குறையைப் போக்கிட முன் வருதல் வேண்டும்-துயர் களைதல் வேண்டும்.

அதே போன்று, தொழிலாளர்களும் நன்கு உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

இந்த நேச மனப்பான்மை இருவரிடையேயும் வளர வேண்டும்; அப்போதுதான் நாடு நலம் பெறும்; நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள்.

ஒவ்வொரு நிறுவனத்தின் முதலாளியும், தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் பாடுபட வேண்டும்!

இம்பீரியல் டுபாக்கோ கம்பெனியில் திறமைசாலிகளைத் தொழிலாளர்களாக வைத்துக் கொண்டுள்ளனர்; அவர்களது உழைப்பை மதிக்கின்ற வகையில் வீடுகட்டித் தந்துள்ளார்கள்; இது போன்ற குடியிருப்பு அமைத்துத் தந்து ஒவ்வொரு முதலாளியும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.