எக்கோவின் காதல்/காக்கையின் கடிதங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
6
காக்கையின் கடிதங்கள்

பாரதிதாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் அன்று. பெருங்கூட்டம் . கடல்கடந்த தமிழர்கள் தமது தாய்நாட்டில் தோன்றிய - ஒப்பற்ற புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழாவைத் தமிழகத்தைவிட உயர்வாகக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தோடு சிங்கப்பூர்த் தெருக்களையெல்லாம் தோரணங்களாலும் காகிதப்பூக்களாலும் ஒரே அழகாக அலங் கரித்திருந்தார்கள். அன்று சிங்கப்பூர் புதுமாதிரியான அழகுடன் விளங்கியது. பலபேர் கவிஞரைப் பாராட்டினர்.

அவருடைய கவிதை நயங்களை-உவமைத்திறங்களையெல்லாம் சுவைபடப் பேசினார்கள். பேசும்பொழுது ஒருவர் “சுயமரியாதை கொள் தோழா!” என்ற பாட்டைப் பாடினார். அவ்வளவுதான் எனக்கு ஒரே குழப்பம். தலை சுழன்றது. முகம் கருத்தது. எனது மாற்றத்தைக் கண்ட என்மனைவி-இல்லைஎன் காதலி ஏன் இப்படிப் பித்து பிடித்தது போல் இருக்கிறீர்கள்? என்றாள். 'ஒன்றுமில்லை' என்று சொல்லி வியர்வையைத் துடைத்துக் கொண்டு வா போகலாம்' என்று புறப்பட்டு விட்டேன்.

அவளும் என்னுடன் வந்தாள். “ஏன் இப்படிப் பாதியிலேயே வந்து விட்டீர்கள்?” என்றாள். “ஒன்றுமில்லை ”.

“ஒன்றுமில்லையா? என்னிடம் கூட மறைத்துப் பேசுகின்றீர்களே" என்று கெஞ்சிக்கேட்டாள் கமலம்.

“அஃது .என் ..சொந்த... ஊரில் ....ஒன்றுமில்லை . கமலா! அங்குப் பாடிய பாட்டு-சுயமரியாதைப் பாட்டு இருக்கிறதே அஃது என் வாழ்நாளில் முக்கிய பகுதியைப் பற்றிக் கொண்டுள்ள பாட்டு. எனது இறந்த கால எண்ணங்களைத் தூண்டிவிட்டது. அதைப் பற்றி ஒன்றுங் கேட்காதே கமலா! பைத்தியம் பிடித்து விடும்போல் இருக்கிறது. சமயம் நேரும்போது சொல்லுகிறேன்”

நான் எனது தமிழகத்தை - சென்னையை விட்டுச் சிங்கப்பூருக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. கடைகளில் கணக்கெழுதி அதனால் வரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தேன். அங்கு நான் இருந்த வீட்டின் எதிர்வீட்டுப் பெண் தான் கமலம். அவளுக்கும் எனக்கும் காதல் எப்படியோ தோன்றி - வளர்ந்து - முற்றிப் பலனளிக்கத் தொடங்கிவிட்டது. இப்பொழுது அவள் என் காதலியில்லை ; மனைவி.

அவள் பல முறை 'சுயமரியாதை'ப் பாட்டு சம்பந்தமாக நிகழ்ந்ததைக் கேட்பாள். கேட்கும் பொழுதெல்லாம் நான் மழுப்பி விடுவேன். அந்தப் பாட்டுத்தான் என்னைக் கொலைக்காரன் ஆக்கியது. நான் கொலைக்காரன் என்று தெரிந்தால் அவள் என்ன நினைப்பாளோ என்ற அச்சத்தால் அதைப் பற்றிக் கூறவேயில்லை.

ஒருநாள் என் கடிகாரத்தைக் காணவில்லை . “கமலம்! கடிகாரத்தைப் பார்த்தாயா?” என்றேன். "இல்லையே! நான் பார்க்கவில்லையே! என்று சிரித்தாள்.

அந்தச் சிரிப்பு அவள் திருட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.

அட அசடே! உள்ளதைச் சொல்லு! இதிலென்ன விளையாட்டு, தங்கச் சங்கிலியல்லவா அது! என்றேன்.

"ஆம், நீங்கள் மட்டும் தங்கச் சங்கிலி போட்டுக் கொள்ளவேண்டும்; நான் போட்டுக் கொள்ளக் கூடாது. எத்தனை முறை உங்களைக்கேட்டேன் தங்க வளையல் வேண்டும் வேண்டுமென்று. அதைப் பற்றிய கவலை கொஞ்சங் கூட உங்களுக்கு இல்லையே. அதனால்தான் நான் அதை எடுத்து ஒளித்து வைத்திருக்கிறேன். என்றைக்கு வளையல் வருகிறதோ அன்றுதான் உங்கள் கடிகாரமும் வரும்” என்று சொல்லி விட்டுச் சமையல் அறைக்கு ஓடிவிட்டாள்.

"ம் ம் இருக்கட்டும். பெட்டியில் தானே வைத்திருப்பாள் என்று எண்ணி அவளுக்குத் தெரியாமல் சாவியை எடுத்து அவளுடைய பெட்டியைத் திறந்தேன். சில சீலைகளை எடுத்தேன். அடியில் கடிகாரம் இருந்தது. அதனடியில் சில கடிதங்களும் இருந்தன. எனக்குப் பல அய்யங்களை எழுப்பின அந்தக் கடிதங்கள். இவளுக்குக் கடிதங்கள் வரக் காரணம் என்ன? யார் எழுதியது? அதை ஏன் இவ்வளவு மறைவாகப் பத்திரப் படுத்தி வைக்கவேண்டும்? என்று எண்ணினேன்.

கடிதங்களைப் பிரித்தேன். சென்னை என்று எழுதியிருந்தது. உடனே இன்னும் என் கவனத்தைக் கவர்ந்தது எல்லாவற்றையும் எடுத்தேன். பிரித்தேன்.

அன்புமிக்க அம்மா?

என்னை இப்படி ஒரு தமிழ் ஆசிரியர் காலில் கட்டி விட்டீர்களே! என் வாழ்வெல்லாம் பாழாகத்தானே இப்படிச் செய்தீர்கள்! என்ன சுகத்தைக் கண்டேன் இவரைக் கட்டி? கலியாணமாவதற்கு முன் என்னவெல்லாம் நினைத்தேன். அந்த ஆசையெல்லாம் மண்ணாயிற்று. நல்ல புடவையுண்டா? நகையுண்டா? ஒன்றுமில்லை! பக்கத்து வீட்டுப் பெண்கள் தங்கள் கணவருடன் சினிமாவிற்குப் போகும்போதெல்லாம் என் மனம் என்ன பாடுபடுந் தெரியுமா? அவர்கள் கூடிச் செல்வத்தைப் பற்றியோ சினிமாவிற்கு நாமும் போகவில்லையே என்பதைப் பற்றியோ நான் பொறாமை கொள்ளவில்லை. அப்பொழுது அந்தப் பெண்கள் உடுத்துள்ள ஆடையும், நகைகளும் என்னை அப்படியே உருக்கிவிடும்.

பாவம்! அவருந்தான் என்ன செய்வார்? அவர் தமிழ் ஆசிரியர்! சம்பளமோ மிகக்குறைவு. சாப்பாட்டிற்கும் வீட்டு வாடகைக்குமே சரியாகிவிடும். அப்புறம் நகைக்கெங்கே போவ து? அஃது என் தலையெழுத்து.

இப்படிக்கு
வள்ளி
சென்னை


அம்மா!

உங்கள் கடிதம் கிடைத்தது. வருத்தப்பட வேண்டாம்; என்று எழுதியிருக்கிறீர்கள். அதன்படியே நடந்து கொள்ளுகிறேன். ஆனால் அவரே என் வருத்தத்தைப் போக்கி விட்டார். நகைகள் செய்தல்ல. அன்பு செய்து என்னை மகிழச் செய்கிறார். என் முகம் சிறிது வாட விடமாட்டார். அவர் செய்யுந் தலையன்பு என்நகைப் பைத்தியத்தை நீக்கி விட்டது. இதமாகப் பேசிப் பேசிச் சிரிக்க வைத்து விடுகிறார். இருந்தாலும் நானும் பெண்தானே! எப்பொழுதாவது புடவை நினைப்பு வந்து விடும். உடனே அவர் கண்டு கொள்வார். கவலைப்படாதே! இன்னும் ஐந்து நாளில் புதுப்புடவை எடுத்து வருகிறேன் என்று சொல்லுவார். அதன்படியே புடவையும் வந்து விடும். பின்னர் என்றைக்காவது சொல்லுவார் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதிக் கொடுத்து, அந்தப்பணத்தால் வாங்கினேன் என்று.

அவரிடம் ஒரே ஒரு கெட்ட குணம் இருக்கிறதம்மா! சும்மா பேசும்பொழுது நல்ல தமிழில் பேசு! நல்ல தமிழில் பேசு! என்று தொந்தரவு செய்கிறார்; சமஸ்கிருதம் என்று கூடச் சொல்லக்கூடாது. வடமொழி என்று சொல்லு என்றெல்லாம் தொந்தரவு செய்கிறார். எனக்குக் கஷ்டமாக - இல்லையில்லை - துன்பமாயிருக்கிறது. மற்ற வகையில் குறைவில்லாமல் இருக்கிறோம்.

வள்ளி

அம்மா! நலம்,

இப்பொழுது உன் மகள் தமிழ்ப் புலமை மிக்காள். என் புலமையைக் காட்டி முடங்கல் (கடிதம்) வரைவேன். ஆனால் உனக்கு விளங்காதே என்று தான் எளிய நடையில் எழுதுகிறேன். முன் கடிதத்தில் அவர் கூறுவதெல்லாம் தொல்லையாயிருக்கிறது என்றல்லவா எழுதியிருந்தேன். அஃது என் அறியாமை. என்போன்ற பெண்களெல்லாம் நமது தாய்மொழியைப் புறக்கணித்ததால்தான் இந்த இழிநிலை வந்துள்ளது.

இப்பொழுது எனக்கு நல்ல தமிழ் அறிவை ஊட்டிவிட்டார். தனித்தமிழில்தான் உரையாடுவோம். இலக்கியங்களை இருவருமே சுவைப்போம். கல்வியழகை உணர்ந்தபிறகே நகையழகை மறந்தேன்.

அவர் பள்ளியிலிருந்து வரும்பொழுது 'காக்கை!' என்று அழைத்துக் கொண்டே வருவார்; 'வருக, வருக' என்று என் சிரித்த முகம் வரவேற்கும்.

காக்கை என்றதும் உனக்கு ஒன்றுமே புரியாது; அஃது என் பெயர். அவர் அருமையாக இட்ட பெயர். வள்ளி - ஆறுமுகம் பொருத்தமான பெயராயிருந்தாலும் அவருக்கு அது பிடிக்கவில்லை. அவர் பெயரை நக்கீரன் என்று மாற்றிக் கொண்டார். எனக்கும் காக்கை பாடினியார் என்ற பெயரைச் சூட்டினார். அதன் சுருக்கமாகத்தான் 'காக்கை! என்று என்னை அன்போடு அழைக்கிறார்.

லில்லி, ரோசு, ரமணிபாய் என்ற இந்தப் பெயர்களை விட எனக்குக் காக்கை என்ற பெயர் மிகமிகப் பிடித்திருக்கிறது.

இங்ஙனம்
காக்கை பாடினியார்.

இந்தக் கடிதங்கள் படிக்கப் படிக்கச் சுவையாக இருந்தன. மேலும் படித்தேன்.

அம்மா!

இருவரும் நலமே. உங்கள் கடிதத்தில் கடவுள் எனக்கு நன்னிலையைக் கொடுத்தார் என்று எழுதியிருந்தீர்கள். அந்த நிலையைக் கடவுளும் கொடுக்கவில்லை, யாருங் கொடுக்கவில்லை. அவருடைய முயற்சியும் என் அறிவுந்தான் எங்கள் மகிழ்ச்சிக்குக் காரணம். கடவுள் கொடுத்ததாயிருந்தால் பணத்தைக் கொடுத்திருக்கலாமே! இன்னும் அவர் சம்பளம் அப்படியேதானே இருக்கிறது. ஒரு சல்லிகூட உயரவில்லை! ஏதோ அவர் ஊட்டிய அறிவாலும் அன்பாலுந்தான் நாங்கள் கவலையற்று இடுக்கண் களைந்து வாழ்கிறோம்.

கடவுட் கொள்கையைப் பற்றியும் அடிக்கடி நாங்கள் பேசிக் கொள்வோம். தன் முயற்சியில் நம்பிக்கையிழந்தவரும், சுயநலத்தாருந்தான் அந்தச் சொல்லைத் துணைக்கழைப்பார்கள். பாரதியார் கூட “சிவலோகம் வைகுந்தம் என்பதெல்லாம் பித்தர்களின் கூற்று” என்று சொல்லியிருக்கிறார். இப்போது உயிரோடுள்ள - சென்னையிலேயிருக்கின்ற வ.ரா. என்ற அறிஞர் கூட, கடவுள், விதி என்பதெல்லாம் "சுத்தப்பொய்” என்று கூறுகிறார்

"கடவுள் நரகம் என்பதெல்லாம் மக்களை ஏய்ப்பதற்காக ஒரு கூட்டத்தால் அமைக்கப்பட்ட எழுத்துக் கூட்டங்கள்” என்று எங்கோ படித்த நினைப்பிருக்கிறது. இப்படியெல்லாம் அறிஞர்கள் தன்னம்பிக்கையில்தான் உறுதி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை எல்லாம் எழுதினால் நீ என்னைப்பற்றித் தவறான எண்ணங் கொள்வாய் என்று இந்த அளவுடன் நிறுத்துகிறேன்.

வணக்கம்.
காக்கை

அம்மா!

இப்பொழுது எழுதும் இந்தக் கடிதம் வீட்டிலிருந்து எழுதவில்லை. சிறைக்குள்ளிருந்து எழுதுகிறேன். அவர் ஒரு பக்கம் சிறையுள் கிடக்கிறார். நான் ஒரு பக்கம் அடைபட்டுக் கிடக்கிறேன். நாங்கள் மட்டுமில்லை; உங்கள் பேரன் - மெய்யழகன் ஆறுமாதம் நிரம்பப் பெறாத கைக்குழந்தையும் சிறைக்குள்ளே என்னுடன் தான் இருக்கிறான்.

குடும்பத்துடன் சிறைப்பட என்ன குற்றம் செய்திருப்பார்கள் என்று எண்ணலாம்; பெருங்குற்றந்தான் செய்தோம். இன்றுள்ள சட்டப்படி அரசாங்கத்தை எதிர்த்தோம் என்ற குற்றம் சாட்டப்பட்டோம். ஆம், அரசாங்கம் இந்தியைத் திணித்தது. தமிழர்கள் எதிர்த்தார்கள். தாய்மொழியே தெரியாத மக்கள் வாழும் நாட்டில் மற்றொரு மொழியைப் புகுத்த ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று. அந்தப் படையில் உங்கள் மருமகனும் சேர்ந்தார். கைது செய்யப்பட்டார். பெண்கள் படையும் திரண்டது. அதில் நானும் பங்கு கொண்டேன். ஆண்மை மிக்க அரசாங்கம் என்னையும் சிறைப்படுத்தியது.

நீ நினைப்பாய் கடவுளைப் பற்றி யெல்லாம் என்னென்னவோ எழுதினாள், நாத்திகம் பேசினாள், அதன் விளைவு தான் இது என்று. அது தவறு. ஆணவம் பிடித்த அதிகாரவர்க்கம் திமிர் கொண்டு இதைச் செய்தால் இதை ஏன் கடவுள் மீது ஏற்றவேண்டும்? தாய்மொழி வளர வேண்டுமென்று சொன்னால் அதற்குத் தண்டனை தரும் அரசு இருந்தாலென்ன இறந்தாலென்ன? ஆனால் சிறைப்பட்டதற்கு மகிழத்தான் செய்கிறேன், தமிழுக்குத் தொண்டு செய்தோமே என்று. அதைவிட என் மகனும் இந்தி எதிர்ப்புப் போரிலே சிறை சென்றான் என்று பெரிதும் மகிழ்கின்றேன். இந்தக் கடிதம் உன் கைக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ, தெரியவில்லை.

காக்கை
சென்னை

அம்மா!

நலம் என்று எழுத என் கைகள் நடுங்குகின்றன. உன் மகள் இப்பொழுது விதவை. யாரோ ஒரு பாதகன் உன் மருமகனைக் கொன்று விட்டான். தமிழாசிரியர்கள் ஒன்று கூடிக் கழகம் ஒன்று நிறுவித் தமிழை முதன் மொழியாக்கவும், சம்பள உயர்வுக்காகவும் பாடுபட்டார்கள். அதில் உன் மருமகன்தான் செயலாளர். அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வந்தார். சில இரவுகளிலே வீட்டிற்குக் கூட வருவதில்லை. அமைச்சர்கள் வீட்டிலே அவருடைய பெயர் அடிக்கடி சொல்லப்படுகிறது என்று கூடக் கேள்வி. உடன் வேலை செய்யும் கூட்டத்திலே கூடப் பொறாமை கொண்ட விரோதிகள் இருந்ததாகவும் சொல்லுகிறார்கள். எப்படியோ தெரியவில்லை. எவனோ பாவி என் அன்பரைக் குத்திக் கொன்றுவிட்டான். வழக்கு ஒன்றுமில்லாது போயிற்று. ஆம்; ஏழைத் தமிழாசிரியனை அதுவும்-சீர்த்திருத்தக்காரனை யார் கவனிக்கப் போகிறார்கள்?

இனிமேல் என்னைக் ″காக்கை!" என்று அன்போடு அழைக்க யார் இருக்கிறார்கள்? இங்குள்ள புறநானூறு- கலித்தொகை அந்தப் புத்தகங்களைப் பார்க்கும்போது நெஞ்சம் குபீர் என்று-பற்றுகிறதே! பாவி! என் உயிரைப்பிரித்து விட்டானே! அவனைத் திட்டுவதால் பலன் என்ன? நாட்டின் மீது உண்மையாகப் பற்றுக் கொண்டு-எதையும் தியாகம் செய்கின்ற - நேர்மையானதொண்டர்களுக்குக் கிடைக்கும் பரிசில் இது தானே!

அம்மா! நான் ஆதரவற்று நிற்கிறேன்.

காக்கை.

படித்துகொண்டிருந்தேன். பூமி சுற்றியது. தடார் என்று பெட்டியின் மீது மயங்கிவிழுந்து விட்டேன். அதன் பின் நடந்த தொன்றும் எனக்குத்தெரியாது. விழித்துப் பார்க்கும் பொழுது என் மனைவி கமலத்தின் மடியில் படுத்திருந்தேன்.

"ஏன் இப்படி மயங்கி விழுந்துவிட்டீர்கள்?" என்று கேட்டாள் கமலம்.

“ஒன்றுமில்லை,சொல்லுகிறேன்; இந்தக் கடிதத்தையும் படி!” என்றேன்.

வாங்கிப்படித்தாள்.

அம்மா!

சென்ற கடிதத்தில் ஆதரவற்று நிற்கிறேன், என்று எழுதியிருந்தேன். ஒரு வகையில் ஆதரவும் ஆறுதலும் கிடைத்தது. அவர் மேற்கொண்ட பொதுநலத் தொண்டில் இறங்கியுள்ளேன். தமிழ்க் கழகத்தார் பெண்பள்ளி ஒன்று நிறுவி அதில் என்னை ஆசிரியை யாக்கியுள்ளார்கள். அதில் பணியாற்றி வருவதால் மன ஆறுதல் அடைந்து வருகிறேன். இலக்கியங்களும் மெய்யழகனும் அவரில்லாக் குறையை நிறைவேற்றுகிறார்கள். என்னை சிங்கப்பூருக்கு வருமாறு எழுதியிருந்தாய். நான் சிங்கப்பூருக்கு வருவதாக இல்லை. இங்கேயே இருந்து இன்னும் பல பொதுப்பணி செய்ய விரும்பியுள்ளேன். தம்பி தங்கை நலனுக்கு அடிக்கடி எழுதிக்கொண்டிருங்கள்.

வணக்கம்
காக்கை

படித்து முடித்தாள்.

"அவள் யார்?”

"அவள் என் அக்காள். நாங்கள் சென்னையிலிருக்கும் பொழுது அவளுக்குக் கலியாணமாகி விட்டது. கலியாணமானவுடனேயே நாங்கள் சிங்கப்பூருக்கு வந்து விட்டோம்” என்றாள்.

அப்பொழுது என் மைத்துனன் "சுயமரியாதை கொள்!" என்று பாடிக்கொண்டே வந்தான்.

"வேலா! அந்தப் பாட்டைப் பாடாதே! நிறுத்து!" என்றேன்.

ஏன் இப்படிச் சொல்லுகிறீர்கள்? அந்தப் பாட்டென்றால் ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை? சொல்லுகிறேன், சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்களே!” என்றாள் கமலம்.

"கமலம்! சொல்லுகிறேன் கேள்! எனது சொந்தஊர் சென்னை. நானும் தமிழ் ஆசிரியன்தான். ஆனால் என் கொள்கை வேறு, அவன் கொள்கை வேறு. இதனால் அவனைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை. மேலும் தமிழாசிரியர் கழகத்திலே செயலாளர் பதவி எனக்குக் கிடைக்க வேண்டியது. அவனுக்குக் கிடைத்து விட்டது. வெறுப்பும் பொறாமையும் சேர்ந்தன.

"ஒரு நாள் அவன் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்தேன். திரும்ப அவன் அதை விளக்கிப் பேசினான். அவனுக்கே வெற்றி கிடைத்தது. தோல்வி, எனக்கு மிகுந்த அவமானத்தை உண்டாக்கியது. அது கோபத்தைக் கிளறிவிட்டது. வெறுப்பு - பொறாமை இவற்றோடு கோபமும் சேர்ந்தது. என்னைப் போலவே கிருஷ்ணமாச்சாரி என்பவனும் ஒருவன் இருந்தான். இருவரும் மந்திராலோசனை செய்தோம். அவன் என்னை ஏவினான். நான் எனது கத்தியை ஏவினேன். நக்கீரன் கொலையுண்டான். நான் கொலைக்காரன் ஆனேன்.

"செய்தி பரவுவதற்கு முன் சென்னையை விட்டுக் கிளம்பினேன். சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன். இங்கு, உன்னை.. யாருக்குப் பெருங்கேட்டை விளைத்தேனோ அவள் தங்கையையே மணந்தேன். அவள் கணவனைக் கொன்று விட்டு அவளுடைய தங்கைக்குக் கணவன் ஆனேன்.

"அவன் அடிக்கடி பாடுகின்ற பாட்டுத்தான் சுயமரியாதைப் பாட்டு. எந்த மேடையிலும் பாடுவான். அதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாகும். இப்பொழுது அந்தப் பாட்டைக் கேட்கும் பொழுது கொலை நினைவு வந்து விடுகிறது. அதனால் தான் அதைப் பாடவேண்டாம் என்கிறேன். அன்று பாரதிதாசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாதியில் எழுந்துவரக் காரணமும் இதுதான்.

'இப்பொழுதுதான் உணருகிறேன்’ கருத்துவேற்றுமைக்காக மனிதத் தன்மையை இழந்தோமே என்று.அதிலும் பிறன் ஏவலால் அறிவையிழந்து இந்தக் கொடுஞ்செயலைச் செய்துவிட்டேனே! இன்னும் என்னைப் போல எத்துணைப்பேர் தமிழகத்தில் இருக்கிறார்களோ? இனப்பற்று என்றுதான் வருமோ?

"கமலம்! உன் குடும்பத்தாருக்கும் உன் அக்காளுக்கும் இத்தகைய பெருந்தீங்கை இழைத்த என்னை மன்னிப்பாயா?” என்று கதறிவிட்டேன்.

அவள் அங்கிருந்தாலல்வா என்னை மன்னிக்க முடியும்?

¤¤¤