எக்கோவின் காதல்/கிருஷ்ணார்ச்சுன யுத்தம்

விக்கிமூலம் இலிருந்து

7
கிருஷ்ணார்ச்சுன யுத்தம்

"அவன் இப்பொழுது மட்டுமில்லை என்னோடு போட்டி போடுவது; எப்பொழுது பார்த்தாலும் போட்டிதான். எதை எடுத்தாலும் போட்டிதான்; பழனி! இனிமேல் அவனைச் சும்மாவிடப் போவதில்லை. என்றைக்காவது ஒரு நாள் என் குணத்தைக் காட்டத்தான் போகிறேன். என்னைவிட அவன் எந்த வகையில் சிறந்தவன். ஏதோ அழகாகப் பேசத் தெரிந்திருக்கிறான். அவ்வளவுதானே! காரியத்திலே ஒன்றையும் காணோமே!” என்று கிருஷ்ணன் தன் நண்பன் பழனியிடம் கூறினான்.

"சேச்சே! அவன் அப்படிப் போட்டி மனப்பான்மை படைத்தவனில்லையே! நிரம்ப நல்ல குணங்கள் படைத்தவன். அதுவும் தொழிலாளர் கழகம் என்றால் அல்லும் பகலும் பாடுபடுகிறான். அவனை இப்படி எல்லாம் சொல்லுகிறாயே!” என்று சமாதானம் கூறினான் பழனி.

"நல்லவனா! போப்பா! உனக்கு அவன் குணம் சரியாகத் தெரியாது; அப்படியானால் நம் கழகச் செயலாளர் தேர்தலுக்கு நான் நிற்கும் போது அவன் ஏன் போட்டியிடுகிறான்?”

"அவன் தேர்தலுக்கு நிற்கவில்லை என்றுதான் சொன்னான். நமது தோழர்கள்தாம் அவனைக்கட்டாயப் படுத்தி நிற்கும்படி சொல்லியிருக்கிறார்கள்”.

"நிற்கட்டும் நிற்கட்டும்! அவனைத் தோற்கடிக்கா விட்டால்......”

மனோகரா மில் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நன்மைக்காக ஒரு கழகம் நிறுவியிருந்தார்கள். அந்த மில் தொழிலாளர்கள்தாம் கிருஷ்ணனும் அவனால் குறை கூறப்பட்ட அர்ச்சுனனும். அர்ச்சுனன் மேடையில் நன்றாகப் பேசுவான். பிழை என்று பட்டதை அஞ்சாது எடுத்துக் கூறுவான். தொழிலாளர் நலனுக்கு எந்தெந்தத் துறைகள் முட்டுக்கட்டையாகத் தோன்றுகின்றனவோ அவற்றையெல்லாம் வன்மையாகக் கண்டிப்பான்; முற்போக்குக் கொள்கையுடையவன்.

கிருஷ்ணனும் தொழிலாளர் நலனுக்குப் பாடுபடுபவன் தான். ஆனால் பழமையில் மோகங் கொண்டவன். பதவியில் ஆசையுண்டு. அந்தப் பதவிப் பித்து இருப்பதால் பொறாமை எண்ணமும் வளர்ந்து வந்தது. முரட்டுத்தனமும் இயற்கையிலேயே உடையவன்.

அவர்களின் கழகத் தேர்தல் வந்தது. தேர்தலுக்குக் கிருஷ்ணன் நின்றான். மற்றவர்கள் வற்புறுத்தலால் அர்ச்சுனனும் நிறுத்தப்பட்டான்.

கிருஷ்ணன் கொள்கை வேறு. அர்ச்சுனன் கொள்கை வேறு. இந்தக் காரணங்களால் ஏற்பட்ட பொறாமையால் தான் கிருஷ்ணன் பழனியிடம் அர்ச்சுனனைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருந்தான்.

பழனி விடைபெற்று வீட்டுக்கு வரும் வழியில் அர்ச்சுனனைக் கண்டான்.

"என்ன அர்ச்சுனா! நாளை நடக்கப் போகும் தேர்தலில் வெற்றி உனக்கா அவனுக்கா!”

"நான் மாட்டேன் என்றேன். கேட்கவில்லை. அதுவும் கிருஷ்ணன் நிற்கும் பொழுது நான் நின்றால் அவர் வருத்தப்படுவார் என்று சொன்னேன். ஒருவரும் என் சொல்லைக் கேட்கவில்லை; வெற்றி யாருக்குக் கிடைத்தாலென்ன? நமக்கு வேண்டியது தொழிலாளர்களின் வெற்றி தானே! அந்த வெற்றிக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அதைத் தான் நான் விரும்புகிறேன்.”

“வணக்கம். நேரமாகிறது. நான் வருகிறேன்”.

♣♣♣♣♣

ஒரு நாள் மாலை, கழகத்தில் கூட்டம் நடைபெற்றது.

"நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் நமது நலனை - உரிமையைப் போராடிப் பெற முடியும். முதலாளித்துவம் நமக்குப் பல வகையில் தீங்குச் ய்து கொண்டு வருகிறது. அத்தீங்குகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே நமது கழகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, அதையறிந்து நாம் வேலை செய்ய வேண்டும். நமது நோக்கத்தை விட்டுக் கழகத்தை வேறு வழிகளில் செலுத்தாமல் இருக்க வேண்டும். அகிம்சை வழியிலே சென்று தொழிலாளர் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகிறேன்” என்று பேசிவிட்டு உட்கார்ந்தான் கிருஷ்ணன்.

அடுத்தபடி அர்ச்சுனன் பேசவேண்டுமென்று தலைவர் குறிப்பிட்டார்.

"தோழர்களே! நமது கழகம் தொழிலாளர் நலனை விட்டு வேறு வழியில் செல்வதாகக் கருதுகிறார் தோழர் கிருஷ்ணன். எந்த வழியில் போனாலும் நமது நலனுக்காகத் தான் செல்கிறதே ஒழியத் தீமைக்காகச் செல்லவில்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் செயலாளன் என்ற முறையில். நாம் வெற்றி பெற வேண்டுமானால் -நமது உரிமையைப் பெற வேண்டுமானால், நாம் மனிதனாக வாழ வேண்டுமானால் நமது முயற்சியில் - ஊக்கத்தில் - உழைப்பில் - ஒற்றுமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை இழந்து விட்டு ஆண்டவன் உதவியை இந்த விடயத்தில் நாடுவது ஆபத்து மட்டுமன்று, தோல்வியும் துயரமும் அடையச் செய்யும். ஆண்டவன், முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர். வைரமுடி, பீதாம்பரம் இவற்றை இறக்கி வைத்துவிட்டுத் தொழிலாளர் குறையைக் கவனிப்பதற்கு அவருக்கு நேரமில்லை. (சிரிப்பு) முதலாளித் துவம் நமது இரத்தத்தை உறிஞ்சி விட்டு இரத்தினத்திற்கு விலை கேட்கிறது. இது ஏன்? என்று கேட்டால் உலகம் 'விதி' என்று விடை தருகிறது. இந்த 'விதியைச் சுயநலமிகளின் சதி என்று முதலில் உணர வேண்டும். அதை முறியடித்தால் தான் நமது முன்னேற்றத்தை நாம் காண முடியும். ஆகவே 'விதி' என்று கூறும் வீணரின் கூற்றை நம்பாதீர்கள். நாம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இரஷ்யாவைப் பார்க்கிறோம். இன்னும் விடுதலை பெற்ற ஒவ்வொரு நாட்டையும் பார்க்கிறோம். எப்படி அவை அந்த நிலை யடைந்தன? அந்த முறையில் நாமும் முயல வேண்டும். அதை விடுத்துப் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தின பழைய முறையைப் பின்பற்றி நடப்பதில் பயனில்லை. ஆகவே நமது உரிமைகளைப்பெற நாம் புரட்சி முறைகளைப் பின்பற்றி வெற்றி காணுவோமாக என்று கூறி நான் விடைபெற்றுக் கொள்கிறேன்” என்று கூறி முடித்தான் அர்ச்சுனன்.

இந்தப் பேச்சு, கிருஷ்ணன் கோபத்தைக் கிளறிவிட்டது. "பார்த்தாயா பழனி! அவன் பேசுவதை. அவன் நான் சொன்னதை அப்படியே தாக்கிப் பேசுகிறான். இருக்கட்டும். இவன் என்கையில் ஒருநாளைக்காவது அகப்படாமல் போக மாட்டான்”. பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கிருஷ்ணன் கோபமாகக் கூறினான்.

அதே சமயத்தில் மாதர் கழகச் செயலாளர் மதுரமும் அங்கு வந் திருந்தாள். அவள் அர்ச்சுனனைப் பார்த்து 'உங்கள் பேச்சு மிக நன்றாக இருந்தது' என்று பாராட்டியதோடு நில்லாமல் கை குலுக்கியதையும் பார்த்து விட்டான் கிருஷ்ணன்.

அதன் பிறகு கேட்க வேண்டுமா? கிருஷ்ணனுக்கு நெற்றிக்கண் இல்லாத குறைதான். இருந்திருந்தால் அர்ச்சுனனை அங்கேயே சுட்டெரித்திருப்பான். சக்கராயுதங் கூட இல்லாமற் போய்விட்டது. என் செய்வான் சட்டென்று எழுந்து சென்று விட்டான்.

அர்ச்சுனன் பேச்சில் மயங்கி, அவன் கை குலுக்கில். இன்பமடைந்த மதுரத்தின் அழைப்பு அடிக்கடி அர்ச்சுனனுக்குக் கிடைத்தது - கழகத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் அவனும் தட்டுவதில்லை.

இச்செயலெல்லாம் கிருஷ்ணனுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அவள் அவனுடைய அத்தை மகள். கொஞ்சம் பணம் படைத்தவள். படித்தவளுங்கூட. முறைமை யால் மணக்க எண்ணங் கொண்டிருந்தான் கிருஷ்ணன். ஆனால் அவள் விரும்பினால்தானே!

அவள் காதல் முழுதும் அர்ச்சுனனிடந்தான். அர்ச்சுனனை விடக் கிருஷணன் எவ்வளவோ அழகில் சிறந்தவன். என்றாலும் அவள் அவனை விரும்பவில்லை. ஆம்! உண்மைக் காதலுக்குச் சாதி வேற்றுமை-ஏழை பணக்காரன் என்ற தன்மை, இவையெல்லாம் கிடையாதென்றால் அழகு மட்டும் என்ன தள்ளுபடியா? அழகையும் அந்தப் பட்டியலிலே சேர்த்து விட்டாள் மதுரம்.

'கிருஷ்ணன் - மதுரமாக' வாழ எண்ணினான் கிருஷ்ணன். ஆனால் அவன் எண்ணத்திற்கு ஓர் அர்ச்சுனன் குறுக்கிட்டான். இந்த எண்ணத்திற்கு மட்டும் யாரேனும் குறுக்கிட்டால் கோழையாயிருந்தாலும் அவனுக்குக் கொஞ்சம் வீரந் தோன்றும். கிருஷ்ணன் இயல்பிலேயே முரடன். பேச்சுத்தான் அகிம்சை செயல் வேறுதான். அவன் 'சந்தர்ப்பத்தை' எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

"நீங்கள் நாளை நடைபெறப் போகும் பொதுக் கூட்டத்தில் கொடியேற்றி வைக்க வர வேண்டும்” என்று அர்ச்சுனன் மதுரத்திடம் கேட்டான்.

“என்ன பொதுக் கூட்டம்?”

"திராவிடர் கழகப் பொதுக் கூட்டம். தலைவர் பட்டுக்கோட்டைப் பக்கிரிசாமி; கிருஷ்ணனும் வருகிறார்”.

"கிருஷ்ணனா! அவர் காங்கிரசில் இருப்பவராயிற்றே!” என்று வியப்புடன் கேட்டாள் மதுரம்.

"நீங்கள் நினைக்கும் அந்தக் கிருஷ்ணனில்லை...நான் சொல்வது நகைச்சுவை மன்னரை”.

"ஓ! அவரா! அதுசரி ....! நான் வேறு கட்சியில் விருப்பங் கொண்டவளாயிற்றே! என்னைத் திராவிடர் கழகக் கொடியேற்ற அழைக்கின்றீர்களே!”

"அம்மையே இரண்டு கழகத்திற்கும் பெரிதும் வேற்றுமையேயில்லை. உங்கள் கட்சி பொருளாதாரத்தில் பொதுமை காண விழைகிறது. திராவிடர் கழகம் பணம்-சாதி-மதம் முதலிய எத்துறையிலும் சமதர்மம் காணப் பாடுபடுகிறது. ஆக இரண்டின் நோக்கமும் சமதர்மந்தான்...”

"அது சரி! அது எப்படியிருந்தாலும் நீங்கள் விரும்பு வதைத் தான் நான் விரும்புகிறேன். அப்படியே ஆகட்டும் இருங்கள் இதோ வருகிறேன்....இந்தக் காப்பியைச் சாப்பிடுங்கள்!” என்று நீட்டினாள்.

அவன் 'டம்ளரை'ப் பற்றினான். அவள் பிடியை விடாமல் அவனையே பார்த்தாள். அவன் 'என்ன' என்று நிமிர்ந்தான். அவள் பார்வையில் ஒரு விதச் 'சோகம்' கப்பிக் கொண்டிருந்தது.

“சகோதரி! ஏன் இப்படி....?”

"இனிமேல் சகோதரி என்று அழைக்காதீர்கள்! எனக் கென்ன பேரா இல்லை?” என்று அவள் நளினமாகப் பேசியதிலிருந்து அவள் கருத்தை நன்கு புரிந்து கொண்டான்.

"மதுரம்! நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள்”

"இல்லை; இனிமேல் அப்படிச் செல்லவில்லை. இன்று முதல் நான் உங்கள் கழகத்தில் சேர்ந்து விடுகிறேன்”.

"அதை நான் சொல்லவில்லை!”

" பின் எதைச் சொல்கிறீர்கள்? நான் இதுவரை தவறிய தில்லையே!”

'இருக்கலாம்! இப்பொழுது என்னளவில் தவறாக...'

"தவறாக நான் ஒன்றும் நினைக்கவில்லை. உங்களுக்கும் திருமணமாகவில்லை எனக்கும்!”

"நீங்கள் மாதர் கழகச் செயலாளர். ஆதலால் நீங்களும் நாட்டிற்காக ஒத்துழைப்பீர்கள் என்றல்லவா நான் இவ்வளவு நெருங்கிப் பழகினேன்!”

"ஆம், அதிலென்ன தவறு. நானும் அதைத்தான் கூறுகிறேன். வெளியிலிருந்து உதவுவதைவிட உடனிருந்து உதவலாம் என்று எண்ணுகிறேன். வாழ்க்கைத் துணைவியாயிருந்து துணை செய்ய எண்ணுகிறேன். ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்?”

'மதுரம் அம்மையே? உங்கள் கையிலும் என் கையிலும் பொறுப்பு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்து பேசுகிறீர்கள். பொறுப்புள்ள நாமே தவறி விட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் !”

"அப்படியானால் பொறுப்பை ஏற்பவர்களுக்குக் காதல் வாழ்வே கிடையாதா?”

"ஆம்; என் வரையில் அப்படித்தான். என் நாட்டு மக்கள்- என் இனத்தவர் அடிமைப்பட்டு, மாற்றான் காலடியில் மடிந்து கிடப்பதைக் கண்டு என் நெஞ்சு கொதிக்கிறது. அவர்களின் நலத்தைக் கருதி விடுதலை வேட்கை ஊறி கிடக்கும் என் நெஞ்சத்தில் காதலுக்கு இடமில்லை. என் கழுத்து மண மாலையைத் தாங்காது. நாட்டின் விடுதலைக்காகத் துக்குக் கயிற்றை வேண்டுமானால் மகிழ்வுடன் தாங்கும். உங்கள் எண்ணத்தை விட்டுவிடுவதுதான் நல்லது” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது அவன் கண்கள் அவள் கன்னத்தைவிட அதிகமாகச் சிவந்திருந்தன.

"சரி! நான் நாளைக் கூட்டத்திற்கு வருகிறேன்; நீங்கள் போய்வரலாம்! என்று விடை தந்தாள். மதுரம் கண்ணீர் சொட்டுவதை அவன் பார்க்கவில்லை. சென்று விட்டான்.

"அப்பப்பா பட்டணத்தில் குடியிருக்க இடம் கிடைத்தாலும் இவர் உள்ளத்தில் இடம் கிடைக்காது போல் இருக்கிறதே" என்று எண்ணிக் கொண்டே படுத்து விட்டாள்.

கிருஷ்ணனுக்கு நல்ல 'சந்தர்ப்பம்' கிடைத்தது. 'காந்தி சங்க'த்தி ற்கு விரைந்து சென்றான். “நாளைக் கருப்புச் சட்டை ஊர்வலம் நடக்கப்போகிறதாம். என்ன அட்டகாசம் செய்கிறார்கள்! நாளைக்கு இவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும். என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று அங்கு இருந்தவர்களோடு 'மந்திரலோசனை' செய்தான்.

ஒருவர் "அவர்கள் கூட்டம் நடத்தினால் நமக்கென்ன? நமக்கு அவர்கள் என்ன கெடுதல் செய்கிறார்கள்?" என்றார்.

“இவன் ஆகஸ்டு துரோகியல்லவா! இப்படித்தான் பேசுவான். அந்தப் பயல்களெல்லாம் கூடிக்கொண்டு நம்மை யெல்லாம் திட்டுகிறார்கள். இவன் என்னடான்னா 'என்ன கெடுதல் செய்கிறார்கள்' என்று கேட்கிறான். இப்படிப்பட்ட ஆள் இருந்தால் நம்ம கட்சி உருப்பட்டமாதிரிதான்” என்றான் கிருஷ்ணன்.

“நான் வருகிறேன், நான் வருகிறேன்” என்று அவருள் சிலர் மார்தட்டிக் கிளம்பினர்.

மறுநாள் செய்ய வேண்டிய வேலைத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதற்கு வேண்டிய முயற்சிகளும் இரவிலேயே நடந்தன.

மாபெரும் ஊர்வலம். வீதியின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை ஒரே அணிவகுப்பு, கருப்புக்கொடி தாங்கி வரும் வீரர்களின் தோற்றம் பாண்டியனின் மறப்படையை நினைப்பூட்டியது. பார்ப்பவரின் மனத்தில் ஒரு புத்துணர்ச்சியைஒரு விதக் கிளர்ச்சியை எழுப்பி விட்டது.

குதிரையில் ஏறி இருபுறத்தும் வீரர் பெருமிதத்தோடு வரும் காட்சி- 'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற முழக்கம் - இவை வடநாட்டு வணிகர்க்கும் வைதிகத் தருக்கினர்க்கும் பெருங்கிலி'யை உண்டாக்கியது.

ஊர் முழுதும் வலம் வந்து கடைசியில் கூட்டம் நடைபெறும் இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தது படை. பெரு வீதியில் வந்து கொண்டிருந்தது மிகுந்த உற்சாகத்துடன். சோடா புட்டிகள், வீதியின் இருபுறத்திலுமுள்ள மாடிகளிலிருந்து குண்டுகள்போல் படையை நோக்கிப் பாய்ந்தன. திரண்டுவரும் படை மருண்டது.

"மருளவேண்டாம், அதோ நமது இடத்தை அணுகிவிட்டோம். உங்கள் முழக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு விரைந்து நடங்கள்” என்ற ஆணை தலைவரிடமிருந்து வந்தது.

“அடைந்தே தீருவோம் திராவிடநாடு” என்ற பேரொலியோடு படைவிரைந்தது.

கண்ணாடித் துண்டுகள் நிரம்பிய போத்தல் ஒன்று குறி பார்த்துக் குதிரைவீரன் தலையில் தாக்கியது.

"அம்மா!” என்று தலையில் கை வைத்தான் வீரன். குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டான். விழுந்ததும் பாட்டில் வந்த திசையை நோக்கினான். கிருஷ்ணன் மறைவதைப் பார்த்து விட்டான். தலையிலிருந்து பீறிட்டுக் கொண்டுவரும் இரத்தம் அவன் அணிந்திருந்த கருப்புச் சட்டையைச் சிவப்புச் சட்டையாக மாற்றியது.

சிலர் அவனருகில் ஓடிவந்து “தலைவரே! உடனே விடை தாருங்கள். அந்தக் காலிகளைப் பழிக்குப்பழி வாங்குகிறோம். அவர்கள் எலும்பைச் சூறையாடி விடுகிறோம். விடை தாருங்கள்” என்றனர்.

"தோழர்களே! வேண்டாம்; நமது குறிக்கோள் அதுவன்று. நம்மைத் தாக்கியவர்களும் நமது இனத்தவரே. பதிலுக்காக நாமும் அவர்களைத் தாக்கினால் நட்டம் யாருக்கு? பதறாதீர்கள். புறப்படுங்கள் நாம் அடைய வேண்டிய இடத்திற்கு”- என்று சொல்லி விட்டு அந்த வீரன் எழுந்து நடந்தான்.

"இந்த அர்ச்சுனன் எப்பொழுதும் இப்படித்தான். நம்மை எதிரி தாக்கும்பொழுதும் நாம் பணிந்து சென்றால் கோழை என்றல்லவா எண்ணுவார்கள்” என்று சில இளைஞர்கள் முணுமுணுத்துக் கொண்டே திருப்பிய கொடியை மீண்டும் உயர்த்திப் பிடித்துக்கொண்டு அணியாகச் சென்றடைந்தனர் கூட்டம் நடக்கும் இடத்தை.

கொடியேற்றி வைக்க வந்திருந்த மதுரம் அடிபட்ட அர்ச்சுனனைப் பார்த்தாள்; பதறிவிட்டாள். செய்தியைக் கேட்டு அறிந்து கொண்டாள். முதல் நாள் ஏற்பட்ட தோல்வியால், என்ன பேசுவதென்று தோன்றாமல் வந்திருந்த மதுரத்தின் நெஞ்சம் கொதித்தது: குதித்தெழுந்தாள்.

“தலைவர் களே! தோழர்களே! திராவிடர் கழகக் கொடியை ஏற்றுமுன் அதைப்பற்றி இரண்டொரு சொற்கள் கூற ஆசைப்படுகிறேன். இக்கொடி திராவிடரின் இழிவு நிலையை அறிவுறுத்தவே அமைக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இழிவு நிலையை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் நடுவில் சிவப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிவப்பு சாதாரணச் சிவப்பன்று. இரத்தச் சிவப்பு. தாலமுத்து - நடராசன் சிந்திய சிவப்பு அது. இதோ நம் கண் முன் காட்சியளிக்கும் வீர அர்ச்சுனன் சிந்திய இரத்தச் சிவப்பு அது. கருங்காலிகள் வீசிய கல்லெறியால் ஏற்பட்ட காயங்களிலிருந்து பெரியார் சிந்திய இரத்தச் சிவப்பு அது. (கைதட்டல்) கை தட்ட வேண்டாம். இப்படிப் பல வீரர்கள் சிந்திய இரத்தத்தால் ஏற்பட்ட சிவப்பு அது. இது மட்டும் போதாது நமது இழிவு நிலை நீங்க. இன்னும் சிந்த வேண்டும்; இரத்தம் மட்டுமன்று, உயிரையுங்கூடத்தான், அப்படிச் சிந்தினால்தான் அந்தச் சிவப்பு இன்னும் விரிவடையும். விரிய விரியக் கருப்பு நீங்கிச் சிவப்புக் கொடியாக மாறும். அவ்வாறு மாற்றுவதற்குரிய வீரர்கள் தாம் நமது கழகத்திற்குத் தேவை. விரைவில் நம் கையாலேயே-அதுவும் என்போன்ற பெண்கள் கையாலேயே கொளுத்தப்பட வேண்டும் இந்தக் கொடி. (கைதட்டல்) ஆம்; இழிவு நீங்கியபின் இந்தக் கொடி ஏன்? ஆகவே தோழர்களே! திராவிட இனத்தவர் அனைவரும் ஒன்று கூடினால் வெற்றி பெறுவது உறுதி. அந்த வெற்றிக்குப்பின் அமைக்கப்போகும் திராவிட அரசியல் கொடியையும் நானே ஏற்றிவைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்று பணிவுடன் கூறி இக்கொடியை ஏற்றி வைக்கிறேன்” என்று வீரவுரையாற்றி அமர்ந்தாள் மதுரம்.

தள்ளாடிக்கொண்டே எழுந்தான் அர்ச்சுனன், “தோழர்களே! வீர இளைஞர்களே! மன்னிக்கவேண்டும். உங்கள் வேகத்தைத் தடுத்ததற்காக. பழிக்குப்பழி என்று துடிக்கும். உங்கள் இதயத் துடிப்பை நான் நன்கு அறிவேன். பதிலுக்குத் தாக்கும்படி நான் கூறியிருந்தால் அதனால் நமது உண்மையான எதிரிக்கு ஒரு சிறு அசைவு கூட ஏற்படப் போவதில்லை . இருபாலும் திராவிட இரத்தமே சிந்தும். அறிவியக்கத்தைச் சேர்ந்த நாம் அவ்வாறு நடந்து கொள்வது அழகன்று. மேலும் அவ்வாறு நடந்திருந்தால் இன்றையக் கூட்டம் குழப்பமாயிருக்கும். நமது குறிக்கோள் - நோக்கம் எல்லாம் பழிவாங்குவதில்லை. உயிரைப் பலிகொடுத்தேனும் இன்பத்திராவிடம் காண்பதுதான் நமது எண்ணம். அதைவிடுத்துச் சிறு சிறு பூசலுக்கு நாம் நமது ஆற்றலை-சக்தியை...” என்று சொல்லிக்கொண்டிருந்தவன் மயங்கி விழுந்து விட்டான்.

மயக்கம் சிறிது தெளிந்து மெதுவாகக் கண்ணைத் திறந்தான்.

"நான் எங்கிருக்கிறேன்.”
"மருத்துவ விடுதியில்”
"யார்? மதுரமா?”
"ஆம்; உங்கள் எதிரி கிருஷ்ணன் கைது செய்யப் பட்டாராம்”
"கிருஷ்ணன்! அய்யோ! பாவம்! அவனா என் எதிரி? அவனுடைய அறியாமையல்லவா என் எதிரி"!
அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.

“இரணியன் - பிரகலாதன், இராவணன் - வீடணன், வாலீ - சுக்கிரீவன் இவர்கள் இந்த நாட்டிலே உலவும் வரையில் ‘கிருஷ்ணார்ச்சுன யுத்தம்’ நடந்துதான் தீரும். நான் யார்? அவன் யார்? என்ற எண்ணம் தோன்றித் தெளிவு பிறக்கும்வரை இந்தக் கதிதான்” என்று எண்ணிக்கொண்டே படுத்திருந்த அர்ச்சுனனுக்கு மதுரம் மருந்தை எடுத்துக் கொடுத்தாள்; தன் எண்ணத்திற்கு அவன் மருந்து தருவான் என்ற உறுதியோடு.

•••