எக்கோவின் காதல்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

"எக்கோவின் காதல்" என்ற இந்நூல், என் தந்தையார் அவர்களால், 1947 - 48 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். வெறுங் கதைகளாக இல்லாமல் சமுதாயச் சீர்திருத்த நோக்கில் புனையப்பட்டவை இவை. இச்சீர்திருத்தச் சிறுகதைகள், அக்காலத்திய இதழ்கள் பலவற்றில் வெளிவந்தன ஆகும்.1958இல் அச்சு வடிவாயிருந்த இந்நூலுக்கு என் தந்தை எழுதியிருந்த முன்னுரையை அப்படியே கீழே தந்துள்ளேன்

"தொடக்கத்திலிருந்தே கவிதை எழுதிக் கொண்டிருந்த என்னைக் கதை எழுதுமாறு நண்பர் அறிவழகன் திசை திருப்பி விட்டார். இது 1947 ஆம் ஆண்டு நடந்தது. இரண்டாண்டுகள் எழுதினேன். அப்போது பல்வேறு இதழ்களில் இக்கதைகள் வெளி வந்தன. சீர்திருத்தக் கருத்துகளுக்கு வலுவூட்ட வேண்டுமென்று கருதிக் கண்ணெதிரில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையே அடிப்படையாகக் கொண்டு இக்கதைகளைப் புனைந்தேன். மைதாம் அச்சு வடிவம் பெறுகின்றன. பின்னர் இயல்பாகவே என் மனம் விரும்பிக் கொண்டிருந்த கவிதையுலகிற்குத் திரும்பி விட்டேன். அக்கனவுலகம் ஒரு தனி இன்பம் தருவதால், அதனை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறேன். அன்றிருந்த என் மொழி நடைக்கும், இன்றுள்ள நடைக்கும் உள்ள வேறுபாட்டை நன்குணரலாம்."

மார்ச், 1958.

அன்பன்,
முடியரசன்.
இந்நூல், 1958 ஆம் ஆண்டுக்கு முன்னரே அச்சு வடிவம் பெற்றும், என்ன காரணத்தினாலோ, சென்னை, பீட்டர்சு சாலை, 'சண்டே டைம்ஸ்' என்ற அக்காலச் செய்தித்தாள்-அலுவலகத்திலேயே கட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் 1975 ஆம் ஆண்டு சென்னையிலிருந்த பொழுது, மேற்கண்ட 'சண்டே டைம்ஸ்' அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு அறையில், கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த எக்கோவின் காதல் கறையான்களுக்கு இரையாகியிருந்ததைக் கண்ணுற்றேன். அதில் தப்பிப்பிழைத்த ஒரிரு படிகளை மட்டும் கைப்பற்றிக் கொண்ர்ந்தேன். கொணர்ந்தும், மீண்டும் வெளியிட இயலாமல் அது தங்கி விட்டது.

தற்பொழுது என் தந்தையார் இயற்கையடைவிற்குப் பிறகு இந்நூல் வெளி வருகிறது.

இந்நூல் பரவினால், சிறுகதையுலகம் மீண்டும் சமுதாயச் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய கதைகளை அதிகம் தரும் என்று எண்ணுகிறேன்.

என்கோ(எந்தை)வின் மீதான் காதலால் இந்நூல் வெளிவர உதவிய பேராசிரியர் முனைவர் இரா. இளவரசு அவர்கட்கும், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்மொழிக் காவலர், திரு. கோ. இளவழகன் அவர்கட்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் தெரிவித்துக் கொள்கிறேன்.


19, மூன்றாம்.வீதி, அன்பன்,

காந்திபுரம், மு.பாரி

காரைக்குடி - 630 001.