எதிர்பாராத முத்தம்/பாடல் 15

விக்கிமூலம் இலிருந்து


15

அழுதிடுவாள் முழுமதியாள்


“இங்கேதான் இருக்கிறார் ஆதலாலே
இப்போதே வந்திடுவார் என்று கூறி
வெங்காதல் பட்டழியும் என் உயிர்க்கு,
விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து
                                   வந்தேன்.
இங்கில்லை; அடுத்தஊர் தனிலு மில்லை!
இரு மூன்று மா தவழித் தூரமுள்ள
செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி
சென்றுவிட்டார்; என் உயிர்தான் நிலைப்ப
                                      துண்டோ?
செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குத்தும்
சிட்டுப்போல், தென்னையிலே ஊச லாடி
எழுந்தோடும் கிள்ளைபோல். எனதுடம்பில்
இனியஉயிர் ஒருகணத்தில்பிரித்தல் உண்மை!
வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப
வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக்
கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க
"கோமானே பிரிந்தீரா ?" எனத் துடித்தாள்.

தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று
தள்ளாடும் ; விழும் ; எழும்; பின்னிற்கும் ; சாயும்
தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள்;
தோளசத்து தாளசந்து மாடி விட்டுப்
பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து
படுத்திருந்தாள். அவளெதிரில் கூடந் தன்னில்,
நாய்கிடந்து குலைப்பதுபோல் கழுதைக் கூட்டம்
நாவறளக் கத்துதல்போல், பேசலுற்றார்;
வடநாடு செல்கின்றான் அந்தப் பையன்,
உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்!
நடப்பானா? தூரத்தைச் சமாளிப்பானா?
நான் நினைக்க வில்லை என்று மகிழ்ச்சிகொண்டு
திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள்.
சிரிப்போடும் சினத்தோடும், "இதனைக் கேளாய்
வடக்கென்றால் சாக்காடென் றேதான் அர்த்தம்!
மாளட்டும்!" என்றுரைத்தாள் மறை நாய்கன் தான்.
வெள்ளீயம் காய்ச்சிப் பூங்கோதை காதில்
வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை,
கள்ளீயும் பாளைபோல் கண்ணீர் விட்டுக்
கடல்நீரில் சுறப்போலப் படுக்கை தன்னில்
துள்ளி, உடல் துவள்வதன்றித், தந்தை தாயார்
துடுக்குமொழி அடக்குவதற்கு வாய்தா னுண்டா?
தள்ளஒண்ணா முடிவொள்று கண்டாள் அங்குத்,
தனியகன்ற காதலன்பால் செல்வ தென்றே.