எதிர்பாராத முத்தம்/பாடல் 2
2
நீராடு பெண்ணினத்தாரோடு, பூங்கோதை
வள்ளியூர்த் தென்புறத்து
வசனப் பூம் பொய்கை தன்னில்
வெள்ள நீர் தளும்ப, வெள்ள
மேலெலாம் முகங்கள், கண்கள்;
எள்ளுப் பூ நாசி, கைகள்
எழிலொடு மிதக்கப், பெண்கள்
தெள்ளு நீ ராடு கின்றார்!
சிரிக்கின்றார்! கூவுகின்றார்!
பச்சிலைப் பொய்கை யான
நீலவான் பரப்பில் தோன்றும்
கச்சித முகங்களென்னும்
கறையிலா நிலாக்கூட்டத்தை
அச்சமயம் கிழக்குச்
சூரியன் அறிந்து நாணி
உச்சி ஏறாது நின்றே
ஒளிகின்றான் நொச்சிக் குப்பின்!
படிகத்துப் பதுமை போன்றாள்
நீந்துவாள் ஒருத்தி! பாங்காய்
வடிகட்டும் அமுதப் பாட்டை
வானெலாம் இறைப்பாள் ஓர்பெண்!
கடிமலர் மீது மற்றோர்
கைம்மலர் வைத்துக் கிள்ளி,
மடி சேர்ப்பாள் மற்றொருத்தி!
வரும்; மூழ்கும் ஓர் பொன் மேனி!
புனலினை இறைப்பார்! ஆங்கே
பொத்தென்று குதிப்பார் நீரில்!
“எனைப்பிடி” என்று மூழ்கி
இன்னொரு புறம்போய் நிற்பார்!
புனை உடை அவிழ்த்துப், பொய்கைப்
புனலினை மறைப்பார் பூத்த
இனமலர் அழகு கண்டே
'இச்' சென்று முத்தம் ஈவார்.
மணிப்புனல் பொய்கை தன்னில்
மங்கைமார் கண்ணும், வாயும்,
அணிமூக்கும், கையும் ஆன
அழகிய மலரின் காடும்,
மணமலர்க் காடும் கூடி.
மகிழ்ச்சியை விளைத்தல் கண்டோம்?
அணங்குகள் மலர்கள் என்ற
பேதத்தை அங்கே காணோம்!
பொய்கையில் மூழ்கிச், செப்பில்
புதுப்புனல் ஏந்திக், காந்த
மெய்யினில் ஈர ஆடை
விரித்துப், பொன் மணி இழைகள்
வெய்யிலை எதிர்க்கப், பெண்கள்
இருவர் மூவர்கள் வீதம்
கைவீசி மீள லுற்றார்
கனிவீசும் சாலை மார்க்கம்!