எனது நாடக வாழ்க்கை/இல்வாழ்வில் இன்பம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இல்வாழ்வில் இன்பம்

குடந்தை வாணி விலாச சபைத் தியேட்டரில் நாடகம் தொடங்கினோம். மதுரையில் மகத்தான வெற்றி பெற்ற சிவலீலாவையே முதல் நாடகமாக நடித்தோம். அமோகமான ஆதரவு கிடைத்தது. சிவலீலாவே தொடர்ந்து நடைபெற்றது. ஏதேதோ இன்பக் கனவுகள் கண்டு கொண்டிருந்த என் மனைவி மீனாட்சியிடம் ஒய்வாக இருந்து உரையாடி மகிழக் குடந்தையில் தான் எனக்கு நேரம் கிடைத்தது. திருமணம் முடிந்தவுடனேயே சிவலிலா நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டோம். ஏறத்தாழ ஒரு வாரம் என் இல்லத்தரசியின் வீட்டில், சேலம் செவ்வாய் பேட்டையில் தங்கியிருந்தேன். என்றாலும், என் நினைவெல்லாம் சிவலீலாவின் வெற்றியிலேயே குறியாக இருத்தது. மறு வீடு சென்று மனைவியின் வீட்டில் இருந்த போதும் நாடகத்திற்குத் தேவையான குறிப்புகளை எழுதுவதிலேயே பெரும் பொழுது கழிந்தது. மனைவியின் வீட்டில் வரவேற்புக்கும் உபசாரத்திற்கும் குறைவில்லை. அவருடைய தமக்கையும் தங்கை சரசுவும் என்னிடம் மிகுந்த அன்பு காட்டினார். எனக்கோ இருக்கை கொள்ளவில்லை. மனைவியுடன் மதுரைக்குத் திரும்பினேன். இரவு நாடகமாதலால் பகல் வேளை உணவுக்குப் பின் சற்று உறங்குவேன். மாலையிலேயே கொட்டகைக்குப் போய் விடுவேன். நாடகம் முடிந்து வீடு திரும்ப இரண்டு மணி ஆகிவிடும். அதற்குமேல்தான் அன்பு மனே யாளுடன் அளவளாவி மகிழ நேரம் கிடைக்கும்.

மீனாட்சியக்காளின் அன்பு

எங்கள் குடும்ப உறவினார்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கு கூறுவது இன்றியமையாததாகும். எங்கள் தந்தை வழிப் பாட்டனார் திரு சங்கரமூர்த்தியா பிள்ளை திருவனந்தபுரம் புத்தன்

சந்தையில் நல்ல மதிப்போடு வாழ்ந்து வந்தவர். அவர் ஓர் ஆசிரியர். சொந்தத்தில் ஒரு தொடக்கப் பள்ளியினையும் நடத்தி வந்தார். இளம் பருவத்தில் மரத்திலிருந்து விழுந்து காலில் ஊனம் ஏற்பட்டதன் காரணமாக அவரை எல்லோரும் நொண்டி அண்ணாவி என்றே குறிப்பிடுவார்கள். அவருக்கு இரு மனைவியர்; இரண்டாவது மனைவியின் பெயர் முத்தம்மை. அந்த அம்மையாரிடம் பிறந்த்வர்கள் சண்முகம்பிள்ளை, கண்ணாசாமிப்பிள்ளை, செல்லம் பிள்ளை ஆகிய மூவர். இவர்களில் சண்முகம்பிள்ளை எங்களுக்கு அறிவு தெரியுமுன்பே காலமாகி விட்டார். பாட்டனாருக்கு முதல் மனைவியிடம் பிறந்தவர் திரு சுந்தரம்பிள்ளை. அவரது மனைவி தாயம்மையிடம் பிறந்தவர்கள் செல்லம்மை, திரவியம்பிள்ளை, மீனாட்சியம்மை, இராமலிங்கம்பிள்ளை ஆகிய நால்வர். எங்களின் ஒன்றுவிட்ட சகோர-சகோதரியரான இவர்கள் நாகர்கோவிலிலேயே வசித்து வந்ததால்தான் எங்கள் அன்னையார் நாகர் கோவிலில் நிலம் வாங்கவும், அதனையே நிரந்தர இருப்பிடமாகக் கொள்ளவும் நேர்ந்தது. எங்களுக்கு அறிவு தெரிந்தபின் 1924இல் நாங்கள் முதல் முறையாக நாகர்கோவிலுக்குச் சென்றிருந்த போது அன்னையார் முலம் இவர்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். இவர்களில் மூத்த அண்ணா திரவியம்பிள்ளை, கம்பெனியில் சில காலம் மானேஜராகவும் இருந்தார் என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இளையவர் இராமலிங்கம்பிள்ளை வக்கீல் குமாஸ்தா. எங்களிடம் பாசமும் பரிவும் கொண்டவர். இவரோடு நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். மீனாட்சியக்காள் என்மீது மிகுந்த அன்புடையவர். இவருடைய மூத்த மகன்தான் நகைச்சுவை நடிகன் சிவதாணு. எனக்குத் திருமணம் நிகழ்ந்த சில நாட்களிலேயே திரவியம்பிள்ளையின் மூத்த மகள் சுந்தரிக்கும் சிவதாணுவுக்கும் திருமணம் நிகழ்ந்தது. மகளுக்கும் மருமகனுக்கும் இருந்த மன ஒற்றுமையை அறிந்த நான், இவர்கள் திருமணத்தை வற்புறுத்தி, அண்ணாவையும் அக்காளேயும் சம்மதிக்க வைத்தேன். என் திருமணத்திற்காக உறவினார்கள் அனைவரும் மதுரைக்கு வந்திருந்தபோது இந்த ஏற்பாடுகளெல்லாம் நடைபெற்றன. என் திருமணத்தைக் காண வந்திருந்த மீனாட்சியக்காள், நான் மனைவியுடன் தனிக்குடித்தனம் தொடங்கியதும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரண

மாக, என் இல்லத்திலேயே என் மனைவிக்குத் துணையாகத் தங்கி விட்டார். கம்பெனியின் ஒரே நடிகையான திரெளபதியும் வயது வந்த பெண்ணாக இருந்ததாலும், அவளுக்கு துணையாக வேறு யாரும் கம்பெனியில் இல்லாததாலும் வசதியைக் கருதி எங்களுடனேயே இருந்து வந்தாள்.

செல்லக் கோபம்

மதுரையில் நாங்கள் குடியிருந்தவீட்டின் மாடியறையில் நான் மனேவியுடன் தங்கியிருந்தேன். அக்காள் தன் மகனின் திருமணத்திற்குக் கூட நாகர்கோவிலுக்குப் போகவில்லை. மகனும் மருமகளும் மதுரைக்கு வந்து தனிக்குடித்தனம் தொடங்கினார். அப்போதும் அக்காள் என்னைவிட்டுப் போக மறுத்துவிட்டார். மகனிடம் சண்டை எதுவும் இல்லையானலும், அவன் இல்லத்தில் சென்று மருமகளுக்குத் துணையாக இருக்க அவர் ஏனோ விரும்ப வில்லை. அடிக்கடி போய் விசாரிப்பதோடு நிறுத்திக் கொண்டார்.

அக்காள் நல்ல உழைப்பாளி. வீட்டு வேலைகளையெல்லாம் தாமே தலைமேல் போட்டுக்கொண்டு செய்வார். நாடகம் முடிந்து வீடு திரும்பியதும், ஏதாவது சாப்பிட்டுவிட்டு நான் மாடிக்குச் செல்வேன். நான் வரும்வரை பெரும்பாலும் என் மனைவி உறங்கு வதே இல்லை. ஆனால், அயர்ந்து உறங்குவதுபோல் பாவனை செய் வாள். நான் நடிகனல்லவா? எனக்குத் தெரியாதா? சிறிது சல சலப்போடு அருகில் அமர்வேன் நான். கீழேயிருந்து அக்காளின் குரல் கேட்கும்.

“ ஏ சாந்தா, ஏ......சாந்தா”

ஆம், என் மனைவி மீனாட்சியை சாந்தா என்று தான் கூப்பிடுவோம். ஏ. சாந்தா என்றதும் “என்னக்கா?” என்பேன் நான்.

“இந்தப் பாலை வாங்கிகிட்டுப் போகச் சொல்லப்பா சாந்தாவை”

“அவ அசந்து தூங்குரு அக்கா; இதோ நானே வர்றேன்” என்று எழுந்திருப்பேன்.

அதற்குள் என் மனைவி அடித்துப் புரண்டு எழுந்து, வேகமாகக் கீழே ஒடுவாள்.

“மெதுவா...மெதுவா” என்பேன். பாலை வாங்கிக் கொண்டு மேலே வருவாள்.

‘மெதுவாப் போகக் கூடாதா? ஏன் இப்படி ஒடினே?’ என்று வாய்விட்டுச் சிரிப்பேன் நான்.

அவள் செல்லமாக ஒரக்கண்ணால் என்னைப் பார்த்து, ‘ஊம் சிளிப்பு வேறே” என்பாள். படுத்திருந்த தன்னை உரிமையோடு முதுகில் தட்டி எழுப்பவில்லையே என்ற கோபம் அவளுக்கு. அந்தச் செல்லக் கோபத்தையும், ‘சிளிப்பு’ என்று அவள் சொல்லும் அழகையும் ரசிப்பதில் எனக்கொரு தனி மகிழ்ச்சி.

மனையாளின் மனக்குறை

மீனாட்சியம்மன் கோயில், மாரியம்மன் தெப்பக்குளம், திரு மலை நாயகர் மகால், திருப்பரங்குன்றம், அழகர் கோயில் இங்கெல்லாம் என்னோடு தனியாக வந்து பார்க்கவேண்டு மென்பது அவள் ஆசை..எங்கள் திருமணம் நடந்த அன்று மாலை, இராமநாதபுரம் மன்னார் மாளிகைக்கு எதிரேயுள்ள மாரியம்மன் தெப்பக் குளத்தில் நானும் என் மனைவியும் படகில் ஏறி உலா வந்தோம். அப்போது அவள் தமக்கையும் மற்றுஞ் சில பெண்களும் படகில் இருந்தனார். ‘அதைப்போல் ஒருமுறை நாமிருவரும் தனியே அங்கு சென்று படகிலேறி மைய மண்டபம் பார்த்து வரலாம்’ என்றாள் என் மனைவி. ஒன்றன்பின் ஒன்றாகப் புதிய நாடகங்களை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அக்காளோடு போய்வரச் சொல்வேன் எப்போதும் செல்லமாகச் சிணுங்குவாள். நான் பல்வேறுபட்ட பாத்திரங்களை நாடகங்களிலும் நாவல்களிலும் பார்த்தும் படித்தும் அறிந்தவன் தான். என்ன செய்வது? நாடக வேலைகளில் எனக்கிருந்த அன்றைய ஆர்வத்திற்கு முன் மனையாளின் இந்த ஆசைக் கோரிக்கைகள் முதன்மையாகத் தோன்றவில்லை. அதுவே அவளுக்குப் பெரிய மனக்குறையாக இருந்தது. வெளியே எங்கு போவதான லும் கணவன் தன்னோடு வரவில்லையே என்று அவள் கொஞ்சம் வேதனைப்பட்டாள். இரவு நேரங்களில் இதற்கெல்லாம் ஏதாவது சமாதானம் கூறுவேன் நான்.

ஒரு நாள் இரவு திடீரென்று “நாக்கால் மூக்கைத் தொட முடியுமா உங்களால்?” என்றாள். அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை. “முடியாது” என்றேன்.

“முடியாதா? ஊம் ..... முடியவே முடியாதா?” என்றாள்.

“நீ தொடு பார்க்கலாம் என்றேன் நான். அழகான கூரிய முக்கு அவளுக்கு. நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, சட்டென்று நாக்கை நீட்டித் தன் மூக்கின் துனியைத் தொட்டாள். எனக்கு ரோஷம் வந்துவிட்டது. என்னல் முடிந்த மட்டும் நாக்கை நீட்டி நீட்டிப் பார்த்தேன். மூக்கின் பக்கத்தில்கூட நெருங்க வில்லை அது. மனைவி விழுந்து விழுந்து சிரித்தாள். தோல்வியை சமாளிக்க வேண்டுமே, “பெண்களுக்கே நாக்கு நீளந்தான்” என்றேன். வேறு என்ன செய்வது? ...மதுரையில் அவளுக்கு இருந்த மனக் குறையை எல்லாம் வட்டியும் முதலுமாகக் கும்பகோணத்தில் தீர்த்தேன். சிவ லீலாவில் எனக்கு முக்கியமான வேடம் இல்லாத தால் திரெளபதையை முன்னுல் அனுப்பிவிட்டு நான் சாவகாச கொட்டகைக்குப் போவேன். அதில் என் மனைவிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி.